ஆசிய சாதனை புத்தகத்தில் காஞ்சி மாணவி

காஞ்சிபுரத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி எஸ்.பாக்கியலட்சுமி ஒரு நிமிடத்தில் 59 விலங்குகளின் வாழ்நாள் குறித்து தெரிவித்து இளம் சாதனையாளராக ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்.

காஞ்சிபுரம், டெம்பிள் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. இவர் ஒரு நிமிடத்தில் பல்வேறு விலங்குகளின் வாழ்நாள் குறித்து தெரிவிக்கும் சாதனையை நிகழ்த்துவதற்காக விண்ணப்பித்திருந்தார். குறைந்தபட்சம் 40 விலங்குகளின் வாழ்நாள் குறித்து ஒரு நிமிடத்தில் தெரிவிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதற்கான நிகழ்வு நேற்று நடைபெற்றது.

ஆசிய சாதனை புத்தகத்தின் தென்னிந்திய பொறுப்பாளர் விவேக் இந்த நிகழ்வுகளைக் கண்காணித்தார். இதில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் பாக்கியலட்சுமி பங்கேற்று விலங்குகளின் வாழ்நாள் குறித்து தெரிவித்தார். ஒரு நிமிடத்தில் 59 விலங்குகளின் வாழ்நாள் குறித்து தெரிவித்து சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்.

இதுகுறித்து ஆசிய சாதனை புத்தகத்தின் தென்னிந்திய பொறுப்பாளர் விவேக் கூறும்போது, “இப்பிரிவில் இதுவரை யாரும் சாதனை நிகழ்த்தவில்லை. புதிய சாதனை என்பதால் சாதனை புத்தகத்தில் ஒரு நிமிடத்தில் 40 விலங்குகளின் வாழ்நாள் குறித்து தெரிவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த மாணவி 59 விலங்குகளின் வாழ்நாள் குறித்து தெரிவித்து சாதனை படைத்தார். இச்சாதனை வரும் ஆண்டு சாதனை புத்தகத்தில் இடம்பெறும்” என்றார்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: