திருப்பத்தூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிற்பங்கள் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிற்பங்கள் கண்டுபிடிப்பு!

திருப்பத்தூர் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கள ஆய்வில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த விஷ்ணு சிற்பமும் கழுமரம் ஏறியதை குறிப்பிடும் நடுகல் ஒன்றும் கண்டுபிடித்தனர்.

இதுகுறித்து வரலாற்று ஆராய்ச்சியாளர் பிரபு கூறியதாவது: திருப்பத்தூர் மாவட்டம் கல்நார்சாம்பட்டி சுற்று வட்டாரத்தில் எங்கள் குழுவினர் கடந்த ஐந்து நாட்கள் மேற்கொண்ட கள ஆய்வில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அதில், விநாயகபுரம் பகுதியில் உடைந்த நிலையில் ஒரு சிற்பம் கண்டுபிடித்தோம். உடைந்த அந்தப் பகுதிகளை உருவ அமைப்பிற்கு ஏற்றாற்போல் அடுக்கிப் பார்த்தபோது, தவக்கோலத்தில் உள்ள தொன்மையான விஷ்ணு சிற்பம் என அறிய முடிந்தது.

இச்சிற்பத்தின் தலையானது இன்னும் கிடைக்கவில்லை. தோற்ற அமைப்பில் தவம் செய்யும் புத்தர் சிலை போன்று இருந்தாலும் இது புத்தர் சிலை அல்ல. இந்த சிற்பம் அழகிய மேடை அமைப்புடன் 3 அடி உயரமும் 2 அடி அகலம் கொண்டது. நான்கு கரங்களில் இரண்டு உடைந்த நிலையில் உள்ளது. இந்த சிற்பத்தின் பின் வலக்கையில் உள்ள ஆயுதத்தை வைத்தே இச்சிற்பம் விஷ்ணு சிற்பம் என அடையாளம் காண முடியும். அந்த ஆயுதத்தம் ‘கவுமோதகி’ என அழைப்படும். தண்டாயுதம், கதாயுதம் எனவும் இது அழைக்கப்படுகிறது. பூதத்தாழ்வார் இந்த ஆயுதத்தின் அம்சமாகக் கருதப்படுகிறது. இங்கு கண்டறியப்பட்ட இச்சிற்பத்தின் காலமானது கி.பி. 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த கலைபாணியைக் கொண்டதாக அமைந்துள்ளது. சிற்பம் அமைந்துள்ள இந்த பகுதி முன்பு துளுக்கலூர் என அழைப்பட்டு தற்போது விநாயகபுரம் என அழைக்கப்படுகிறது. அதேபோல், கல்நார்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மணல்கொல்லி என்ற இடத்தில் வானத்துப்பாறை என்ற சிறு குன்றின் எதிரே உள்ள விவசாய நிலத்தில் கழுமர நடுகல் உள்ளது. தரைக்கு மேல் இரண்டரை அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்டதாக இக்கல் அமைந்துள்ளது.

கூர்மையான கழுமரத்தில் தனது இடது காலினை மடக்கி அமர்ந்த நிலையில் ஒருவரின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அவர் தனது வலது கையினை மேல் நோக்கி உயர்த்திவாறும் இடது கையினை மார்பின் மீது வைத்த நிலையிலும் காணப்படுகிறது. நீண்ட காதுகளில் குண்டலமும், இடது புறமாக கொண்டையினையும் வைத்துள்ளார். இந்த கல் இவ்வட்டாரத்தில் நிகழ்ந்த சமயப்பூசல் அல்லது எதேனும் தவறு செய்த ஒருவருக்காக நிறைவேற்றப்பட்ட தண்டனையினைக் குறிப்பதாகும். இக்கல்லினை இவ்வூரைச் சுற்றியுள்ள ஏழு கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள் வழிபட்டு வருகின்றனர். இக்கல்லானது கி.பி. 10ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக் கூடும். இக்கல் குறித்து மேலும் ஆய்வு செய்து வருகின்றோம். இந்த இரண்டு சிற்பங்களும் திருப்பத்தூர் மாவட்டத்தின் முக்கியமான அடையாளங்களாக விளங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: