காற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவி கண்டுபிடித்து சாதனை படைத்த தமிழக மாணவர்கள்!

காற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவி கண்டுபிடித்து சாதனை படைத்த தமிழக மாணவர்கள்!

காற்றிலுள்ள மாசை கண்டறியும் கருவி கண்டுபிடித்து சாதனை படைத்த தமிழக மாணவர்கள்!

நாகரீக உலகில் நாம் வேகமாக இழந்து வரும் வளங்களில் மண், நீருக்கு அடுத்து நாம் சுவாசிக்க அத்தியாவசியமான சுத்தமான காற்றும் ஒன்று. உயிரியல் ஆதாரங்களில் காற்று மிக முக்கிய பங்காற்றுகிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


காற்றானது பல்வேறு வகைகளில் மாசடைகிறது. குறிப்பாக தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகை, பிளாஸ்டிக் எரிப்பதனால் வரும் நச்சு புகை உள்ளிட்ட பலவகைளில் மாசடைகிறது. ஆனால், நாம் அன்றாட பயன்படுத்தும், நம்மிடமிருந்து பிரிக்க முடியாத, அத்தியாவசியமாகிவிட்ட பைக், கார் ஆகியவற்றிலிருந்து வரும் புகை காற்றை பெருமளவு மாசுபடுத்துகிறது.

வாகனப்புகையில் கலந்துள்ள சல்பர் டையாக்ஸைடு, கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட நச்சுக்கள் காற்றில் கலந்து நாம் சுவாசிக்கக்கூடிய காற்றை விஷமாக மாற்றுகின்றன.

நாம் சுவாசிக்கும் காற்று எவ்வளவு மாசடைந்துள்ளது. அதில் என்னென்ன நச்சுக்கள் கலந்துள்ளன என்பதை நாம் கண்ணால் கண்டதுண்டா என்றால் இல்லையென்று தான் பதில் வரும். இதை மாற்றி யோசித்த திருச்சியை சேர்ந்த பொறியியல் மாணவர்களான முத்துக்கருப்பன், லியோ ஆல்டர்ன்ராஜ், மதன்ராஜ், மனோரஞ்சன் ஆகியோரது கண்டுபிடிப்பு தான் “ஃபால்கான்”.

இந்த கருவி காற்றில் உள்ள நச்சுக்களை படம்பிடித்து அதை அப்படியே கணினியில் காட்டுகிறது. இக்கருவியானது (Air pollution control and traffic management Drone for smart city application) எனும் திட்டத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும். இந்த ஃபால்கான் கருவியானது கண்காணிப்பு கேமரா மற்றும் இணைய இணைப்பு கொண்ட கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

ஃபால்கானை ட்ரோனுடன் இணைத்து பறக்கவிடும் போது பறக்கும் பகுதியில் எவ்வளவு வாகனங்கள் உள்ளன. அவற்றிலிருந்து வெளிவரும் புகையால் காற்றில் என்னென்ன நச்சுக்கள் எவ்வளவு விகிதத்தில் கலந்துள்ளன என்பதை இணைய இணைப்பு கொண்ட கணினியில் நேரிடையாக பார்க்கலாம். மேலும் கணினியின் வாயிலாகவே இந்த கருவியை கட்டுப்படுத்தவும் முடியும். மேலும் இந்த ஃபால்கான் கருவியினை கூகுளுடன் இணைத்துக் கொண்டு வாகனம் நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் பொருத்தினால் போக்குவரத்து நெரிசல் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிவிப்பதோடு, அந்த இடத்தில் காற்றில் ஏற்பட்டுள்ள மாசுக்கள், நச்சுக்கள் குறித்தும் தெரிந்து கொள்ள முடியும். இந்த காற்று மாசு தகவலை அருகிலுள்ள காற்று மாசுபாடு தர கண்காணிப்பு நிலையத்திற்கு தெரிவித்து காற்று மாசினையும் சரி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். இந்த ஒரு கருவியின் மூலம் நாம் இரண்டு பயன்களை பெறமுடியும் என்கின்றனர் இதனை வடிவமைத்த மாணவர்கள்.

இது குறித்து பேசிய நான்கு மாணவர்களுள் ஒருவர் கூறுகையில், “இந்தியாவில் காற்று மாசானது தொழிற்சாலை புகைகளுக்கு அடுத்து நாம் பயன்படுத்தும் வாகனங்களிலிருந்து வெளிவரும் புகையினால் தான். அதிலும் குறிப்பாக வாகன நெரிசலின் போது மட்டுமே இந்தியாவில் சுமார் 22% காற்று மாசடைகிறதாக இந்திய காற்று மாசுபாடு தர கண்காணிப்பு நிலையங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மொத்தமாக 39 காற்று மாசுபாடு தர கண்காணிப்பு நிலையங்கள் உள்ளன. அதில் 90% அதாவது சுமார் 23 நிலையங்கள் மனித சக்தியால் இயங்கக் கூடியவையாக உள்ளன.

இங்கு பயன்படுத்தக் கூடிய கண்காணிப்பு கேமராக்களானது சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பிலானது. இந்த கேமராக்களால் பதிவுகளை சேமிக்க முடியும், நேரலையாக பார்க்க முடியாது. ஆனால் நாங்கள் உருவாக்கியுள்ள ஃபால்கான் கருவியால் தகவல்களை சேமிப்பதோடு நேரலையாக பார்க்கவும் முடியும். இதனை நாங்கள் வெறும் இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு உருவாக்கியுள்ளோம்”, என்கிறார் மகிழ்வுடன்.

இந்திய மனிதவள மேம்பட்டு அமைச்சகத்தின் ஆதரவோடு பாம்பே ஐஐடி நிறுவனமானது National mission of Education through Information and Communication Technology (NMEICT) எனும் அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய ஆலோசனைகளை அளிக்க கோரியது. அதாவது பொறியியல் படிக்கும் மாணவர்களிடமிருந்து உலக பிரச்சனைகளுக்கு நடைமுறை தீர்வுகளை வழங்கி அவற்றை காட்சிபடுத்தலாம் என்று கோரியிருந்தது. அதில் ஃபால்கான் கருவியோடு சாரநாதன் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் இந்தியா முழுவதிலுமிருந்து சுமார் 256 கல்லூரிகள் கலந்து கொண்டன. அவற்றில் முதல் சுற்றில் 105 கல்லூரிகள் தேர்வாகின. இக்கல்லுரிகளில் 72 கல்லூரிகள் மட்டுமே தங்களது ஆய்வு ஆலோசனைகளை, கருவிகளின் மாதிரிகளோடு சமர்பித்தன. இந்தியாவை ஐந்து மண்டலங்களாக பிரித்து 72 கல்லூரிகளுக்குக்கிடையே போட்டிகள் நடைபெற்றது.

தென்மண்டலத்திலிருந்து தேர்வான இரண்டு கல்லூரிகளும் தமிழகத்தை சேர்ந்தவை. அதில் எங்களது கல்லூரியும் ஒன்று. எங்களது ஆய்வுகளையும், ஆலோசனைகளையும் மாதிரிகளோடு செயல்முறை படுத்திக்காட்டினோம்.

இந்த போட்டியில் எங்களது தயாரிப்பான ஃபால்கான் முதல் பதினெட்டு இடங்களுக்குள் தேர்வாகியுள்ளது. இதனை மேலும் செம்மைபடுத்தி, நவீனப்படுத்த முயன்றுவருகிறோம். எங்களது அனைத்து முயற்சிகளுக்கும் எங்களது பெற்றோர், கல்லூரி நிர்வாகம், முதல்வர், துறைத்தலைவர், பேராசிரியர் என அனைவரும் முழு ஆதரவளித்து, ஊக்கப்படுத்தினர்”, என்றார்.

இம்மாணவர்களின் வழிகாட்டியாக செயல்பட்டு வரும் மின் மற்றும் மின்னணுவியல் துறை உதவி பேராசிரியை காயத்ரி கூறுகையில், “ஃபால்கான் எனும் இந்த கருவியை அவர்களாகவே யோசித்து உருவாக்கியது. அவர்களை சுதந்திரமாக யோசிக்க விட்டதால் பல கல்லூரிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் முதல் பதினெட்டு இடங்களுக்குள் வர முடிந்தது. இதற்கு அவர்களின் முயற்சியே காரணம்.

அடுத்த கட்டமாக இந்த கருவிக்கு காப்புரிமை பெரும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறோம். இந்த கருவி எதிர்காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். திறமையும், உழைப்பும் நூறு சதவீதம் மாணவர்களுடையதே. நாங்கள் அவர்களை ஊக்கப்படுத்தி, முன்னேறும் வழியை காட்டும் வழிகாட்டிகளாக மட்டுமே உள்ளோம்,” என்கிறார் இந்த உதவிப் பேராசிரியை.

மண் மற்றும் தண்ணீர் மீதான விழிப்புணர்வை பெற்ற அளவிற்கு மக்கள் மத்தியில் காற்றை பற்றிய விழிப்புணர்வானது குறைவாகவே உள்ளது. அடுத்த தெருவிற்கு கூட நடக்காமல் வாகனத்தில் செல்வதால் காற்றில் என்ன மாதிரியான நச்சுக்கள் கலந்து மாசடைகிறது என்பதை கண்முன்னே காட்சிப்படுத்தி காட்டுகிறது ஃபால்கான்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: