தமிழ் பிராமி கல்வெட்டுகளைப் படித்து அசத்திய அரசுப் பள்ளி மாணவிகள்!

 தமிழ் பிராமி கல்வெட்டுகளைப் படித்து அசத்திய அரசுப் பள்ளி மாணவிகள்!

தமிழ் பிராமி கல்வெட்டுகளைப் படித்து அசத்திய அரசுப் பள்ளி மாணவிகள்!

சென்னை அகிம்சை நடை, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம், திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் ஆகியவை இணைந்து மதுரையில் நடத்திய சமண சமய பயிலரங்கத்தில் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தமிழ் பிராமி கல்வெட்டுகளைப் படித்து அசத்தினர்.

தமிழகம் முழுவதும் உள்ள பழைமையான சமணத்தடயங்கள் பற்றி மாணவர்கள், பொதுமக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தி உள்ளூர் மக்களைக் கொண்டு அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அகிம்சை நடை அமைப்பு, ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு அன்று, மாநிலம் முழுவதும் உள்ள சில சமண சமயச் சின்னங்களைப் பார்வையிடும் விழிப்பு உணர்வுப் பயணத்தை நடத்தி வருகிறது. இம்மாத நிகழ்வு “மதுரையில் சமண சமயப் பாரம்பர்யம்” என்ற தலைப்பில் பயிலரங்கமாக நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்த அமைப்பின் நிறுவனர் ஸ்ரீதரன், ”2000 ஆண்டுகளுக்கு முன்பு, இயற்கையான மலைக் குகைகளில் தங்கியிருந்து சமணம் போதித்தவர்களுக்கு கற்படுக்கைகள் அமைத்துக் கொடுத்த தகவல்களை இங்குள்ள தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் கூறுகின்றன. கி.பி. 9-ம் நூற்றாண்டில் அச்சணந்தி என்ற சமண முனிவர் கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் முதல் மதுரை வரையிலான இடங்களில் சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்களை அமைத்து சமண சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்” என்ற தகவலை எடுத்துரைத்தார்.

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ”சமணர்கள் தானங்கள் செய்வதை சிறந்த அறமாகக் கருதியதால் சமணப்பள்ளிகள் உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி வழங்கும் இடமாக இருந்தன. தமிழ் மொழிக்கு சமணம் வழங்கிய இலக்கியக் கொடை அளப்பரியது. பள்ளி மாணவர்களிடம் தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்கும் ஆர்வத்தை உருவாக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார். கீழக்குயில்குடி சமணர்மலை, முத்துப்பட்டி பெருமாள்மலை, கொங்கர்புளியங்குளம், திருப்பரங்குன்றம், சித்தர்மலை, விக்கிரமங்கலம் ஆகிய இடங்களுக்குச்சென்று சமணமுனிவர்கள் தங்கி இருந்த இயற்கையான மலைக்குகைகள், தமிழ் பிராமிக் கல்வெட்டுகள், கற்படுக்கைகள், தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்ட திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவிகள் மு.விசாலி, மு.அபிநயா, ரா.கோகிலா, மு.ஆர்த்தி ஆகியோர் கல்வெட்டுகளில் இருந்த தமிழ் பிராமி எழுத்துகளைப் படித்துக் காட்டினர். கல்வெட்டு, ஓலைச்சுவடிகள் படித்த அனுபவங்களை நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டனர். அவர்களுக்கு அகிம்சை நடை அமைப்பினர் சமணமும் தமிழும், நடுநாட்டில் சமணம், முக்குடை உள்ளிட்ட நூல்களைப் பரிசாக வழங்கிப் பாராட்டினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அகிம்சை நடையின் நிர்வாகிகள் தனஞ்செயன், ராஜேந்திரப்பிரசாத், நாகேந்திரன், சௌதர்மேந்திரன், மதுரை சமண பண்பாட்டு மையச் செயலாளர் அனந்தராஜ் ஆகியோர் செய்திருந்தனர். வேளானூர் பள்ளி ஆசிரியர் கு.முனியசாமி நன்றி கூறினார். 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: