சேவை மனிதர் கோவை சுப்பிரமணியம்

ஒருவர் இறந்தால் அந்த குடும்பத்தை தாண்டி அதிகபட்சமாக அந்த தெருவில் உள்ளவர்களில் சிலர் அழுவர் ஆனால் இந்த மனிதர் இறந்துவிட்டாரே என்று ஊரே கூடி அழுதது கோவை சாந்தி சமூக சேவை அறக்கட்டளை நிறுவனர் சுப்பிரமணியத்தின் மறைவிற்குதான்.

எப்படி எல்லாம் ஒரு மனிதன் வாழலாம் என்று இலக்கணம் வகுக்கப்பட்டு இருக்கிறது ஆனால் அந்த இலக்கணத்தை எல்லாம் தாண்டி இப்படி எல்லாம் கூட ஒரு மனிதன் வாழமுடியுமா? என்று வியக்கவைத்த மாமனிதர் இவர்.
இவரைப்பற்றி எழுதும் போது ஒரு படம் போடலாம் என தேடு தேடு என்று தேடியபோதும் கிடைத்ததெல்லாம் அவர் குனிந்தபடி போனில் எதையோ தேடிக்கொண்டு இருக்கும் படம்தான் கிடைத்தது அது கூட அவருக்கு தெரியாமல் யாரோ ஒருவர் மொபைலில் எடுத்த படமாகும்.

இந்த உலகிற்கு என் அகம் தெரிந்தால் போதும் முகம் எதற்கு என்று இறக்கும் வரை வெளி உலகிற்கு புகைப்படம் மூலமாக தன் முகம் வருவதை தவிர்த்துவிட்டவர்.அவர் இறந்த பிறகு பத்திரிகைக்கு கொடுக்கப்பட்ட காலமானார் விளம்பரத்தின் போதுதான் அவரது படத்தை பலரும் பார்க்க நேர்ந்தது.

ஐந்து ரூபாய்க்கு தரமான டிபன் அதே போல பத்து ரூபாய்க்கு சாப்பாடு முப்பது ரூபாய்க்கு மருத்துவம் சலுகை விலையில் மருந்து மாத்திரைகள் ஏழை எளிய முதியோர்களுக்கு இலவச உணவு என்று கடந்த முப்பது ஆண்டுகளாக சத்தம் இல்லாமல் தந்து வருபவர்.

இவரைப்பற்றி கேள்விப்பட்டு உள்ளூர் முதல் உலக ஊடகங்கள் வரை இவரை பேட்டி காண அணுகியபோது,‛ இங்கு இருந்து பெற்றதை இங்கேயே கொடுக்கிறேன் இதற்கு எதற்கு விளம்பரம் தம்பட்டம்’எல்லாம் வேண்டாம் என்று கூறி பேட்டிகளை தவிர்த்தவர் செய்யும் சேவைக்காக எந்த விருதும் தேவையில்லை என்று மறுத்தவர்.

இன்ஜீரிங் படித்துவிட்டு ஒரு கல்லுாரியில் பேராசிரியராக வேலை பார்த்தார் கொஞ்சநாளில் அந்த வேலையை விட்டுவிட்டு செகண்ட்ஹாண்ட்டாக வந்த லேத்தை விலைக்கு வாங்கி சாந்தி கியர்ஸ் என்ற பெயரில் கியர் பாகங்களை தயாரிக்க ஆரம்பித்தார்,அபாரமான வெற்றி பெற்றார் உலக சந்தையில் இவரது பொருள்களுக்கு தனி கிராக்கி ஏற்பட்டது.

ஒரு முறை கோவையில் உள்ள இன்னோரு பெரிய நிறுவனம் தனது உற்பத்தி தேவைக்கு ஒரு கியர் தேவைப்படுகிறது என ஜெர்மனுக்கு எழுதி கேட்டது அவர்கள் ஒரு வாரம் கழித்து அவருக்கு தேவைப்பட்ட கியரை அனுப்பினர் அதைப்பிரித்து பார்த்தால் தயாரிப்பு ‛சாந்தி கியர்ஸ் கோவை’ என்று இருந்தது கூடவே நீங்கள் கேட்ட உலகத்தரமான உலகில் நம்பர் ஒன் கியர் இதுதான் என்ற குறிப்பும் இருந்தது.அந்த அளவிற்கு இவரது தயாரிப்புகள் சிறப்பு வாய்ந்தவையாக இருந்தது.

தொழிலில் இவர் கடைப்பிடித்த நேர்மை அபாரமானது சாந்தி கியர்சில் இருந்து பணம் பாக்கி வரவேண்டியிருக்கிறது என்று யாராலும் சொல்லமுடியாது அந்த அளவிற்கு பொருள் சப்ளை செய்தவர்களுக்கு விரைவாக பணத்தை செட்டில் செய்வார்.நிறைய சம்பாதித்தார் அதில் பெரும்பகுதியை மக்கள் தொண்டிற்கு செலவு செய்தார்.

எல்லோருக்கும் தெரிந்தது அவரது குறைந்த விலை உணவுக்கூடமும் மலிவு விலை மருந்தகமும் மருத்துவமனையும் நியாய விலை பெட்ரோல் பங்கும்தான் ஆனால் வெளியே தெரியாமல் நிறைய செய்துள்ளார்.

அரசு பள்ளிக்கூடத்திற்கு ஒரு வகுப்பறை கட்டவேண்டும் என்று போய் நின்றால் ஒரு வகுப்பறை கட்டினால் போதுமா அந்தப் பள்ளிக்கு எத்தனை வகுப்பறை தேவை என்று சொல்லுங்கள் என்று கேட்டு அத்தனை வகுப்பறைகளையுமே கட்டிக் கொடுத்தவர்.கல்விக்காக அள்ளி அள்ளி கொடுத்தவர் வலது கை கொடுப்பது வலது கைக்கே தெரியக்கூடாது என்பது போல கொடுப்பார்,கேட்டால் வாங்குபவரின் சுயமரியாதைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பார்.

காலையில் எளியவர்களுக்கு இலவச உணவை தந்து கொண்டிருப்பார் பகலில் தனது தொழிற்சாலையில் தானும் ஒரு தொழிலாளியாக நின்று வேலை பார்த்துக் கொண்டு இருப்பார் இரவில் மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளுக்கு உதவி செய்து கொண்டிருப்பார்.இப்படி ஏதாவது துறு துறுவெறு செய்து கொண்டிருப்பாரே தவிர ஒரு நிமிடம் சும்மாயிருக்க மாட்டார் அது அவரால் முடியவும் முடியாது.

பெரும் தொழிலதிபர் என்ற பந்தாவும் ஒரு நாளிலும் இருந்தது இல்ல விலை உயர்ந்த கார்கள் வீட்டில் நின்று கொண்டிருந்தாலும் தன் மகளை பொது பஸ்சில்தான் படிக்க அனுப்பினார் அவரது திருமணத்தை போட்டோ வீடியோ ரிசப்ஷன் என்று எதுவும் இல்லாமல் எளிய முறையில்தான் நடத்தினார்.

78 வயதில் இறந்து போன சுப்பிரமணியம் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தன்னை முழுமையாக தொண்டு செய்வதற்கே அர்ப்பணித்துக்கொண்டார்.சுற்று வட்டார கிராமங்களில் உள்ள அரசுப்பள்ளி மற்றும் அதன் மாணவர்களின் தரத்தை உயர்த்த நிறைய பாடுபட்டார்.

மனைவி இறந்த பிறகு அவருக்கு அவரது அலுவலகம்தான் வீடு, தரையில் ஒரு பாயை விரித்துதான் துாங்குவார்,விடுமுறை தினங்களில் உழைக்கும் தொழிலாளர்களைப் பார்த்தால் சந்தோஷப்பட்டடு அவர்கள் எதிர்பாரத வெகுமதி அளித்து மகிழ்விப்பார்.

எல்லோரும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக வெளிநாட்டில் இருந்து தொழில்கருவிகளை இறக்குமதி செய்வர் இவரும் அப்படிச் செய்யக்கூடியவர்தான் ஒரு முறை இவர் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்த எந்திரம் என்னவாக இருக்கும் என்று ஆளாளுக்கு யோசித்துக் கொண்டு இருக்கும் போது அந்த எந்திர பார்சல் பிரிக்கப்பட்டது அதனுள் என்ன இருந்தது தெரியுமா? குறைந்த விலையில் ஏழைகளுக்கு கண்கண்ணாடி உற்பத்தி செய்யும் எந்திரம்தான் உள்ளே இருந்தது.இப்படி எப்போதும் எளியவர்களுக்கு உதவுவது பற்றி சிந்தித்தார் அதற்காக எந்த எல்லைக்கும் சென்று வந்தார்.

இப்படி உணவின் விலையை குறைத்துக் கொடுத்தால் நாங்கள் எல்லாம் எப்படி பிழைப்பது என சுற்று வட்டாரத்தில் இருந்த ஒட்டல் அதிபர்கள் எல்லாம் ஒருமுறை இவரிடம் முறையிட்டபோது நீங்கள் இது போல இன்னோரு முறை இப்படி அழுத்தம் கொடுத்தால் இன்னும் விலையைக் குறைத்துவிடுவேன் விலையே இல்லாமல் கூட கொடுத்துவிடுவேன் என்னால் அதுவும் முடியும் என்றவுடன் வந்தவர்கள் பேசாமல் சென்றுவிட்டனர்.

தான் நலமாக இருந்தவரை தனது நிறுவன ஊழியர்கள் ஒவ்வொருவரின் நலனிலும் அக்கறை காட்டியவர் தனது நலனில் போதிய அக்கறை காட்டதவறியதன் விளைவாக 78 வயதிலேயே இறந்துவிட்டார்,தர்மத்திற்கும் அறத்திற்கும் கருணைக்கும் எளிமைக்கும் வள்ளல் தன்மைக்கும் அடையாளமாக விளங்கிய சுப்பிரமணியம் என்றென்றும் கோவையின் அடையாளமாக மக்கள் மனதில் வாழ்வார்.

-credits to எல்.முருகராஜ்(dinamalar)

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: