ஓலை திருட்டு(Part-2)

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ், தெலுங்கு உட்பட அனைத்து மொழிச் சுவடிகளையும் சேர்த்து, கிட்டத்தட்ட 8,000 ஓலைச்சுவடிகள் சேகரித்து வைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, பல மொழிகளில் எழுதப்பட்ட 39,000 ஓலைச்சுவடிகள், 69,000 புத்தகங்களுடன் தஞ்சை சரஸ்வதி மகால் இயங்கி வருகிறது. இங்கு மட்டுமல்ல, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் எனத் தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்ச்சுவடிகள் மட்டும், தோராயமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுவடிகள் தமிழகம் முழுவதும் பாதுகாக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கிறார், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், ஓலைச்சுவடிகள் துறையின் தலைவர் கோவை மணி. ஆனால், தமிழ் மக்களிடம் இன்னும் சேகரிக்கப்படாத பல்லாயிரக்கணக்கான சுவடிகள் இருப்பதாகவும் ஓலைச்சுவடிகள் சேகரிப்பு ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஒரு சில தமிழ் ஆர்வலர்களைத் தவிர, தொன்மை வாய்ந்த ஓலைச்சுவடிகள் குறித்து தமிழர்களிடம் எந்தவொரு விழிப்புணர்வும் இல்லாமல் இருந்துவருகிறது. ஏராளமான தமிழ் ஓலைச்சுவடிகள் தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு, வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன.

தஞ்சை சரஸ்வதி மகாலில், ஜெர்மானியப் பாதிரியார் சீகன் பால்குவால் உருவாக்கப்பட்ட, முதலாம் வேத ஆகமம் எனும் நூல் ஜெர்மனியைச் சேர்ந்தவர்களால் திருடப்பட்டது. அது 18 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் தமிழ் ஓலைச்சுவடிகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் தகவல்கள் வெளியாகி தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை உண்டாக்கியது. தொடர்ந்து, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஓலைச்சுவடி சேகரிப்புப் பணியில் ஈடுபட்ட தமிழ் மரபு அறக்கட்டளையின் மீதும் அடுக்கடுக்கான புகார்கள் முன்வைக்கப்படுகின்றன.

                                                                                                         

 

 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: