பிராமணரல்லாதோர் இயக்கம் தோன்றிய பின் தமிழகம்!

பிராமணரல்லாதோர் இயக்கம் தோன்றிய பின் தமிழகம்!

பிராமணரல்லாதோர் இயக்கம் தோன்றிய பின் தமிழகம்!

இந்திய அரசுச் சட்டம், 1919 இன் விளைவாக 1920 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை உருவாக்கப்பட்டு முதன்முறையாக நேரடித் தேர்தல் நடைபெற்றது. இவ்வாட்சிமுறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளும் ஆளுநரின் நிருவாகக் குழுவும் இணைந்து மாகாணத்தை நிருவகித்தன.

பிராமணரல்லாதோரின் முன்னேற்றத்துக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி முதல் தேர்தலில் வெற்றி பெற்று அரசமைத்தது. அ.சுப்பராயலு ரெட்டியார் சென்னை மாகாணத்தின் முதல் முதல்வரானார். ஆனால் உடல்நலக் குறைப்பாடு காரணமாக விரைவில் பதவி விலகினார்.

அவரைத் தொடர்ந்து பனகல் அரசர் முதல்வரானார். அவரது ஆட்சியில் அரசுப்பணிகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அளிக்க முதல் அரசாணை வெளியிடப்பட்டது. இது தான் இந்தியாவில் இட ஒதுக்கீடு பற்றிய முதல் அரசு நடவடிக்கையாகும். இரண்டாம் மாகாணத் தேர்தலிலும் நீதிக்கட்சி வெற்றி பெற்றது. ஆனால் உட்கட்சிப் பூசல் காரணமாக விரைவில் பிளவடைந்தது. 1926 தேர்தலில் நீதிக்கட்சி தோற்கடிக்கப்பட்டது. பெரும்பான்மை இடங்களை வென்ற சுயாட்சிக் கட்சி அரசமைக்க மறுத்து விட்டதால், ஆளுனர் ஜார்ஜ் கோஷன், ப. சுப்பராயன் தலைமையிலான சுயேச்சைகளின் அரசை உருவாக்கினார்.

1930 தேர்தலில் மீண்டும் நீதிக்கட்சி வெற்றி பெற்று பி. முனுசாமி நாயுடு முதல்வரானார். உட்கட்சிப் பூசல் காரணமாக நவம்பர் 1932 இல் அவர் பதவியிறக்கம் செய்யப்பட்டார்; அவருக்கு பதில் பொபிலி அரசர் முதல்வரானார். இந்திய அரசுச் சட்டம், 1935 இன் படி இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு மாநில சுயாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1937 தேர்தலில் நீதிக்கட்சி தோல்வியடைந்து இந்திய தேசிய காங்கிரசு ஆட்சியைக் கைப்பற்றியது.

1920களிலும் 30களிலும் சென்னை மாகாணத்தில் பிராமண எதிர்ப்பு இயக்கம் உருவாகி வலுவடைந்தது. மாகாண காங்கிரசுக் கட்சியில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்துவதை விரும்பாமல் காங்கிரசிலிருந்து வெளியேறிய பெரியார் ஈ. வே. ராமசாமி இதனைத் தொடங்கினார். பார்ப்பனர்கள், இந்து சமயம், சாதிப் பாகுபாடுகள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றை தமது எழுத்துகளால் சாடினார்.

பிரித்தானிய ஆட்சியின் இறுதி நாட்கள்;

ராஜாஜி, இந்திய தேசிய காங்கிரசு 1937 இல் ஆட்சியமைத்த போது முதல்வரானார். 1937 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி வெற்றி பெற்று சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரி சென்னை மாகாண முதல்வரானார். தாழ்த்தப்பட்ட மக்கள் இந்துக் கோயில்களில் நுழைந்து வழிபடும் வகையில் ஆலய நுழைவுச் சட்டத்தை இயற்றினார். மதுவிலக்கு விற்பனை வரி ஆகியவற்றையும் சென்னை மாகாணத்தில் அறிமுகப்படுத்தினார். இந்தி மொழியைச் சென்னை மாகாணப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கினார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


இக்கொள்கைக்கு மாகாண மக்களிடையே பரவலான எதிர்ப்பு இருந்தது; இதனை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்றன. அவற்றைப் பெரியாரின் பகுத்தறிவு இயக்கமும், அ. தா. பன்னீர்செல்வத்தின் தலைமையில் நீதிக்கட்சியும் இப்போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றன. போராட்டங்களில் ஈடுபட்ட 1,200 ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் சிறையிலடைக்கப்பட்டனர். தாளமுத்து, நடராசன் எனும் இரு போராட்டக்காரர்கள் மரணமடைந்தனர்.

1939ம் ஆண்டு இந்தியா முழுவதும் பதவியிலிருந்த காங்கிரசு அமைச்சரவைகள் பதவி விலகின. இந்தியர்களைக் கலந்தாலோசிக்காமல் இரண்டாம் உலகப் போரில் இந்தியாவைக் காலனிய அரசு ஈடுபடுத்தியது இம்முடிவுக்குக் காரணமாக இருந்தது. இதன் பின்னர் சென்னை மாகாணம், சென்னை ஆளுநரால் நேரடியாக நிருவாகம் செய்யப்பட்டது. பிப்ரவரி 21, 1940 இல் ஆளுநர் கட்டாய இந்தி அரசாணையை நீக்கினார்.

வெள்ளையனே வெளியேறு;

காங்கிரசின் பெரும்பான்மையான தலைவர்கள் 1942 இல் தீவிரமாக நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றனர். 1944 இல் நீதிக்கட்சி பெரியாரின் கட்டுப்பாட்டில் வந்தது. திராவிடர் கழகம் என அதன் பெயரை மாற்றிய பெரியார், தேர்தல் அரசியல் ஈடுபாட்டிலிருந்து அதை விலக்கிக் கொண்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மீண்டும் காங்கிரசு தேர்தல்களில் போட்டியிட்டது. 1946 தேர்தலில் எளிதில் வெற்றியடைந்து ஆட்சியமைத்தது.

த.பிரகாசம் 11 மாதங்கள் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தார். அவருக்குப் பின்னர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வரானார். இந்தியா ஆகஸ்ட் 15, 1947 இல் விடுதலையடைந்தது.

சென்னை மாகாணம் சென்னை மாநிலம் என்று பெயர் மாற்றம் பெற்றது. ஜனவரி 26, 1950 இல் இந்தியா குடியரசான பின்னர் குடியரசின் மாநிலங்களில் ஒன்றாக மாறியது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: