சீக்கியரின் `திருக்குறள் ஓலைச்சுவடி’

பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர், ஜஸ்வந்த் சிங். இவரது தாய்மொழி பஞ்சாபி. இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் புலமை பெற்றிருக்கும் அவருக்கு தமிழ் மொழி சார்ந்த பெரும் லட்சியக் கனவு ஒன்று இருந்திருக்கிறது.

திருக்குறளை தெளிவாக கற்றறிந்து, 1330 குறளையும் பாடம் செய்த பனைஓலையில் தனது கையாலே எழுத்தாணியால் எழுத வேண்டும் என்பதுதான் அவரது கனவு. ஒன்றரை வருட உழைப்பின் பயனால் அந்த கனவு நனவானது.

‘‘ஜாதி, மதம், இனம், நாடு போன்ற அனைத்து எல்லைகளையும் கடந்து, உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களின் வாழ்க்கைக்கும் தேவையான அற்புதமான கருத்துக்களை திருக்குறளாக்கி திருவள்ளுவர் நமக்கு தந்திருக்கிறார். காலத்திற்கு ஏற்ற கருத்துக்கள் இல்லாததால் பல படைப்புகள் வழக்கொழிந்து போயிருக்கின்றன. ஆனால் திருக்குறள் அன்றும் இன்றும் என்றும் நிலைத்து நின்று மனித சமூகத்திற்கு வழிகாட்டும் பொதுமறையாக இருந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் காலம் கடந்தும் உருமாறாமல் அது நிலைத்திருக்க வேண்டும் என்ற எனது நோக்கத்தை வெளிப்படுத்தும் விதத்தில் ஓலைச்சுவடியில் திருக்குறளை படைக்க திட்டமிட்டேன்.

திருக்குறளை பழங்காலத்தில் ஓலைச்சுவடியில்தான் பதித்தார்கள். பின்பு 1812-ம் ஆண்டு முதன்முதலில் அது அச்சு வடிவம் பெற்றது. அச்சிட ஆரம்பித்ததும் ஓலைச்சுவடியில் எழுதுவதை நிறுத்தி விட்டார்கள். அதன் பின்பு டிஜிட்டல் முறை வழக்கத்திற்கு வந்தது. காகிதத்தில் இருக்கும் பதிவுகள் 60 முதல் 70 ஆண்டுகளே நிலைத்திருக்கும். ஆனால் ஓலைச்சுவடிகளின் ஆயுள் காலம் 600 முதல் 700 ஆண்டுகள். பலவிதங்களில் பலன் தரும் தமிழகத்தின் மாநில மரமான பனை மரத்தில் இருந்து சுவடிகளுக்கு தேவையான ஓலை கிடைக்கிறது. அதனால்தான் நானும் ஓலைச்சுவடியில் திருக்குறளை உருவாக்க திட்டமிட்டேன்’’ என்கிறார், ஜஸ்வந்த் சிங்.

ஓலையின் ஒரு பகுதியில் இரண்டு திருக்குறள் வீதம் இரு பக்கங்களிலும் எழுதியுள்ளேன். அதன் படி ஒரு ஓலையில் நான்கு குறள்கள் இடம் பிடித்துள்ளன.

‘‘நமக்கு சொந்தமான லட்சக்கணக்கான அரிய ஓலைச்சுவடிகளை வெளிநாட்டினர் திருடிச் சென்று விட்டனர். அவைகளை மீட்டுக்கொண்டு வந்தால் அற்புதமான மருத்துவ குறிப்புகள் நமக்கு கிடைக்கும். அதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அதுபோல் அனைத்து பள்ளிகளிலும் ஒரு குறிப்பிட்ட பாட நேரத்தில் மட்டும் ஓலைச்சுவடி எழுத மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யவேண்டும்’’ என்றும் கூறுகிறார்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: