நீதி மன்றத்தில் தமிழில் வாதிட குரல் எழுப்பிய முதல் தமிழர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த நாள் (11.10.1826)!

Vedanayagam Pillaiஆங்கிலம் ஒன்றையே கற்றார்; தங்கள்
ஆவியோடு ஆக்கையை விற்றார்
தாங்களும் அந்நியர் ஆனார் இன்பத்
தமிழின் தொடர்பற்றுப் போனார்”

மேற்கண்ட பாடலானது ஒரு நூற்றாண்டுக்கு முன்பே நீதிமன்றத்தில் ஆங்கில மோகங் கொண்டு திரிந்த வழக்கறிஞர்களை நோக்கி ஒரு நீதிபதி எழுதிய பாடலாகும்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இக்காலத்தில் உயர்நீதி மன்றத்தில் தமிழ் வேண்டிப் போராடி வருகிறோம். அதற்கு வழக்கறிஞர்களின் ஆதரவோ, தமிழ் நீதிபதிகளின் ஆதரவோ நமக்கு முழுமையாக இன்னும் கிடைக்கவில்லை. இக்காலத்திலே இப்படி என்றால் அக்காலத்தில் கேட்கவும் வேண்டுமோ, மாவட்ட நீதி மன்றத்தில் தமிழில் வாதிட எவரும் முன்வராத நிலையில், ஒரு நீதிபதியாய் இருந்து குரல் எழுப்பியவர்தான் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை (அக்டோபர் 11, 1826 – சூலை 21, 1889) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் 1878இல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புதினம் தமிழில் வெளியான முதல் புதினம். இவர் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் பிறந்தார். இவரின் பெற்றோர், திருச்சிராப்பள்ளியில் இருந்து மதுரைக்கு தொடர்வண்டியில் செல்கையில் குளத்தூர் தொடர்வண்டி நிலையத்தில் இவர் பிறந்தார். தந்தையார் சவரிமுத்துப் பிள்ளை, தாயார் ஆரோக்கிய மரி அம்மையார்.

1876-1888 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது தமது சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாக கோபாலகிருஷ்ண பாரதியார் நீயே புருஷ மேரு என்ற பாடலை எழுதினார்.

இவரின் தந்தையார் செல்வந்தரும் சிறந்த கல்விமானும் ஆவார். சிறு வயதிலேயே கிறித்துவ வேதக் கதைகள், பாட்டுக்கள், விளையாட்டுகள் ஆகியவற்றை தமது தந்தையாரிடமிருந்து கற்றுக் கொண்ட வேதநாயகம் பிள்ளை குளத்தூரில் தொடக்கக் கல்வியை முடித்தார். அதன் பிறகு தமது பத்தாம் வயதில் நீதிமன்றத்தில் அலுவல் புரிந்த தியாகப் பிள்ளை என்பவரிடம் தமிழ், ஆங்கில மொழியைக் கற்றுக் கொண்டார். இயல்பிலேயே எதையும் ஆர்வத்தோடு கற்கும் திறனுடையவராக வேதநாயகம் பிள்ளை விளங்கியதால் தமிழ் இலக்கண இலக்கியங்களில் புலமைப் பெற்று பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். ஆங்கில மொழியிலும் சரளமாகப் பேசுவதில் சிறந்து விளங்கினார்.

சிறு வயதிலேயே திருமணங்கள், விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளின் போது நகைச்சுவையான கவிதைகளை எழுதினார். தமது 25ஆம் வயதில் 1851ல் காரைக்காலைச் சேர்ந்த பாப்பம்மாள் என்ற மங்கையை திருமணம் செய்தார்.

இவர் நீதிமன்றங்களில் பதிவாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய பின் 1856இல் தரங்கம்பாடியில் முனிசீஃப் வேலையில் அமர்ந்தார். மாயவரம் மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி புரிந்தமையால் இவரை மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கலாயினர். மாயவரத்தின் நகர் மன்ற தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

அந்தக் காலகட்டத்தில் 16 புத்தகங்கள் எழுதினார். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும் அப்போதே எழுதினார். வீணை இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தார்.

அவரது சமகாலத்தோரான தமிழறிஞர்கள் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, இராமலிங்க வள்ளலார், திருவாவடுதுறை மடத்தின் மகாசன்னிதானம் சுப்பிரமணிய தேசிகர், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகியோருடன் நட்பு பாராட்டி நெருங்கியிருந்தார்.

அக்காலத்தில் ஆங்கிலேயர்கள் மட்டுமே நீதிமன்றங்களில் நீதிபதியாக அமர்த்தப்படுவார்கள். அவர்கள் தமக்குக் கீழே தமிழ், ஆங்கிலம் தெரிந்தவர்களை வைத்துக் கொள்வது மரபு. வேதநாயகம் பிள்ளை இரண்டு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்ததால் திருச்சிராப்பள்ளி தென் மாநில நீதிபதி கார்டன் (Mr. Gorden) என்பவரின் மூலம் ஆவணங்கள், கணக்குப் புத்தகங்கள் இவற்றைப் பராமரிக்கும் காப்பளாராக நியமிக்கப்பட்டார்.

1850 -ஆம் ஆண்டில் திருச்சிராப் பள்ளி மாவட்ட நீதி மன்றத்தில் மொழி பெயர்ப்பாளர் வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவ்வேலைக்கு பலரும் போட்டியிட்டதால் நீதிபதி மேஸ்தர் பாய்லோ என்பவர் தேர்வு முறையை கடைபிடித்தார். இதில் பங்கேற்ற வேதநாயகம் பிள்ளை முதலிடம் பெற்று மொழி பெயர்ப்பாளர் பணிக்கு அமர்த்தப் பட்டார்.

மாவட்ட நீதி மன்றத்திற்கு மேலாக இயங்கிய நீதி மன்றங்களுக்கு சதர் கோர்ட்டு (Suddar court) என்று பெயர். இந்த நீதி மன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளை மாவட்ட நீதிமன்றங்கள் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு தீர்ப்பு வழங்கி வந்தன. இத்தீர்ப்புகள் அனைத்தும் ஆங்கில மொழியில் இருந்ததால் வழக்கறிஞர்கள் பலரும் திணறி வந்தனர். இந்நிலை அறிந்து வேதநாயகம் பிள்ளை மிகவும் வருத்தமுற்றார். உடனடியாக ஆங்கிலத் தீர்ப்புகள் அனைத்தையும் தமிழில் மொழி பெயர்க்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அத்தோடு, அன்றாட நிகழ்வுகளை பாடல் வடிவில் எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டார்.

சிறந்த மொழி பெயர்ப்பாளராக வழக்கறிஞர்கள் மத்தியில் புகழ்ப் பெற்ற வேதநாயகத்திற்கு தரங்கம்பாடியில் மாவட்ட நீதிபதி பதவி கிடைத்தது. அங்கு எளிய மக்களுக்கு நீதி பெற்றுத் தந்த காரணத்தால் “வேதநாயகர் நல்ல நீதி நாயகர்” எனப் புகழப்பட்டார். அதன் பின்னர் அங்கிருந்து சீர்காழிக்கு மாற்றப்பட்டார்.

வேதநாயகம் மேற்கண்ட இடங்களில் நீதிபதியாக பணியாற்றிய காலங்களில் வழக்கறிஞர்கள் நீதி வேண்டி வரும் மக்களிடம் அதிகமாகப் பணம் வாங்குவது, பொய் வழக்கு தொடுத்து வாதிடுவது, பொய் சாட்சிகளை கூண்டில் ஏற்றுவது போன்ற செயல்கள் மூலம் நீதிமன்றத்தை களங்கப்படுத்துவது கண்டு மிகவும் வருந்தினார். பின்வரும் பாடலொன்றில் மிக வருத்தத்தோடு இதனைக் குறிப்பிடுகிறார்.

“எப்போதும் பொய் வழக்கர் கூட்டம்- அவர்க் (கு)
இந்திர லோகம் கிடைத்தாலும் இன்னமுந்தான் வாட்டம்
தப்புச் சாட்சிகள் வாய் நீட்டம் -பொய்ச்
சத்தியம், ஆணையென்றால் அவர்க்குக் கொண்டாட்டம்” (அப்பா)

வழக்கறிஞர்களோடு மட்டும் அவர் நிற்கவில்லை. நீதிபதிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு முறைகேடாக தீர்ப்புகள் வழங்குவதைக் கடுமையாகக் கண்டித்தார். அதனையும் பாடலாகவே எழுதினார். அவை பின்வருமாறு:

“ஏதுக்கோ வாங்குகிறீர் லஞ்சம் – உமக்
கிதைவிட வேறுண்டோ பஞ்சம்
வாதுக்கு வீணே வழக்குகள் பேசி
வாங்குகிறீர் என்ன பிழைப்பது சீச்சீ (ஏது)

1860 -ஆம் ஆண்டில் அவர் இறுதியாக மயிலாடுதுறை நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பொறுப்பு ஏற்றார். அங்குதான் பதிமூன்றாண்டுகள் அதிக காலம் பணியாற்றினார். இவரோடு பணிபுரிந்த நீதிபதிகளெல்லாம் உயர் நீதி மன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்றனர். ஆனால், இவர் எளிய மக்களிடம் தொடர்பு கொள்வதற்கு மாவட்ட நீதிபதிப் பொறுப்பே போதுமானதாகக் கருதினார். அங்கு இறுதிக்காலம் வரை வாழ்ந்ததால் “மாயூரம் வேதநாயகம்” என்று மக்கள் அழைக்கத் தொடங்கினர்.

நீதித்துறையில் தமிழில் வாதிடாமல் ஆங்கிலத்தில் வாதிடுபவர்களை வன்மையாகக் கண்டிப்பதில் அவருக்கு இணை எவருமில்லை என்றுதான் கூற வேண்டும்.

திருச்சிராப்பள்ளியில் மொழி பெயர்ப்பாளாராக இருந்த காலத்திலிருந்தே 1805 முதல் 1861ஆம் ஆண்டு முடிய உள்ள நீதிமன்றச் சட்டங்கள், தீர்ப்புகள் ஆகியவற்றை தொகுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அவற்றை தமிழில் அச்சாக்கி 1863ஆம் ஆண்டில் வெளியிட்ட போது தமிழில் சட்டம் எழுத முடியாது என்று வாதிட்ட ஆங்கில மேதாவிகளின் வாதம் சுக்குநூறாக உடைந்து போனது.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை நீதித்துறையில் செய்தத் தொண்டு ஒரு புறமெனில், மறுபுறம் தமிழ்த்துறையில் அவர் செய்த தொண்டும் போற்றுதலுக்கு உரியதே.

வேதநாயகம் கிறித்துவ மதத்தில் பிறந்திருந்த போதிலும், அவரின் தமிழுணர்வானது சைவ மதத்தின்பாலும் நட்புறவோடு விளங்கியது. மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் அவர்களின் தமிழ் மீது பற்று கொண்டு அவருக்கு உற்ற சீடராகவும், நண்பராகவும் சிறந்து விளங்கினார்.

இசை அரங்குகளில் தமிழில் பாடாமல் தெலுங்குக் கீர்த்தனைகள் பாடப்பட்டு வருவது குறித்து கடும் சினம் கொண்டார். இவரே இசைப்பாட்டுகளை தமிழில் எழுதி வெளியிட்டு இசையரங்குகளில் அரங்கேற்றினார்.

கடவுளைத் துதிப்பது போல் வாய்பாடும்
கண்ணுங் கருத்துங் கண்ட இடமெல்லாம் ஓடும்
திடமாகக் கோவிலுக்குள் தேகம் போய்க் கூடும்
சிந்தனை வெளியிலே திரிந்து திண்டாடும்
புண்ணியம் போல் பாவம் – மனமே
புரிந்தோம் தினமே

மேற்கண்ட பாடலில் மனதை ஒரு நிலைப்படுத்தாமல் இறைவனைப் பாடுவதும், கோயிலுக்குச் செல்வதும் புண்ணியச் செயல் ஆகாது என்பதை விளக்கி எல்லோருக்கும் புரியும் வகையில் எழுதிக் கொடுத்தார். இது போன்ற பாடல்கள் இசை அரங்குகளில் வரவேற்பைப் பெற்றதோடு தமிழிசையை பாடகர்கள் போற்றும் நிலை உருவானது.

நான்கு சொற்களால் பாடப்பெறும் சர்வசமய சமரசக் கீர்த்தனைகளை எழுதியும் வெளியிட்டார். இதில் எந்தமத கடவுள்களையும் குறிப்பிட்டு எழுதாமல், எல்லா சமயத்தினரும் பாடும்வகையில் எழுதப்பட்டது இதுவே இசை வரலாற்றில் முதன்முறையாகும்.

அவர் காலத்தில் தமிழில் உரைநடை நூல்கள் எதுவும் வெளிவராத காலம். 1876ஆம் ஆண்டில் “பிரதாப முதலியார் சரித்திரம்” எனும் புதின நூலை எழுதி வெளியிட்டார். இப்புதினத்தின் முன்னுரையில் , “தமிழில் உரைநடை நூல்கள் இல்லை என்னும் குறைபாட்டை நீக்குவதற்காகவே இந்த கற்பனைக் கதையை எழுதினேன்” என்று குறிப்பிட்டார்.

மேலும் அதில் ”வசன ( புதின) காவியங்கள் எனும் ஞான தீபங்களை ஏற்றி , நாட்டில் அறியாமை எனும் அந்தகாரம் நீங்கும்படி செய்வதே தமது விருப்பம்” என்றும் தெரிவித்தார். இந்நூல் மிகுந்த வரவேற்பை பெற்றதால் “தமிழ்ப் புதின இலக்கியத்தின் தந்தை” என்றும் அழைக்கப்பட்டார்.

மேலும் அவர் தமிழ்மொழிக்கு ஆக்கம் செய்யும் வகையில் செய்யுள் இலக்கிய, சமய இலக்கிய, இசைத்தமிழ் இலக்கிய, உரைநடை, மற்றும் மொழி பெயர்ப்பு என்று நூல்களை வகைப்படுத்தி வெளியிட்டார்.

பெண் கல்வி (1869),
பெண் மானம் (1870),
சுகுணசுந்தரி (1887),
நீதிநூல் (1858) ,
பெண்மதி மாலை (1869),
பொம்மைக் கலியாணம், சோபனப் பாடல்கள் (1862),
தனிப் பாடல்கள் (1908),

திருவருள் மாலை (1873),
திருவருள் அந்தாதி (1873),
தேவமாத அந்தாதி (1873)
தேவ தோத்திர மாலை( 1889),
பெரிய நாயகி அம்மை பதிகம் (1873),
சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் (1878),
சத்திய வேதக் கீர்த்தனைகள் (1889)
சித்தாந்த சங்கிரகம் (1862) ஆகியவை இவர்தம் கைவண்ணத்தில் உருவான நூல்களாகும்.

வேதநாயகம் பிள்ளை, மாயூரம் நீதிமன்றத்தில் பணியாற்றிய போது உடல்நலம் குன்றி விடுப்பில் இருந்தார். அப்போது சட்டத்துறை அதிகாரி நெல்சன் என்பவர் விசாரணை வழக்குகள் தேக்கமுற்றதைக் காரணங்காட்டி அவரை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நீதிக்கு மட்டுமே தலை வணங்கி வந்த வேதநாயகம் பிள்ளை அநீதியான முடிவுக்கு எதிராக தானாகவே நீதிபதி பதவியை விட்டு விலகினார்.

அவர் இறுதிக்காலத்தில் பல்வேறு நூல்களை தொகுத்து வெளியிட்டு வந்த நிலையில் நோய் அவரை மீண்டும் வாட்டி வதைத்தது. இந்நிலையில், அவர்
21. 7. 1889ஆம் ஆண்டு தமது அறுபத்து மூன்றாம் வயதில் காலமானார்.

நூல் தேடல்:

1.நல்லூர் நாகலிங்கம் எழுதிய “மேதை வேதநாயகம்”
2. குன்றக்குடி பெரிய பெருமாள் எழுதிய “தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள்”

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: