கடையெழு வள்ளல்கள்(Part-1)

சங்க கால இலக்கியமான பத்துப் பாட்டில் மூன்றாம் பாடல் சிறுபாணாற்றுப் படை ஆகும். இந்தச் சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் ஈகை செயல்கள் பற்றியும் பாடியுள்ளார். இவர்களின் கொடைமடம் செயல்களே அவ்வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்தன என்பதும் உண்மையாகும். இந்த வள்ளல்களைப் பற்றிய செய்திகளை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும் கூறுகின்றன. கொடைமடம் என்றால் சற்றும் யோசித்து பாராமல் பகுத்தறியாது மடமையோடு கொடை செய்வது ஆகும்.

பேகன்

இவர் பொதினி மலைக்குத் தலைவர். தற்போது இந்த இடம் பழனி மலை என்று அழைக்கப்படுகிறது. மழை வளம் மிக்க அந்த மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று பேகன் நினைத்தார். மயில் குளிரில் இருந்து காத்துக்கொள்ள தான் அணிந்திருந்த போர்வையை அம்மயிலுக்குப் போர்த்தினார். மயில் போர்வையைப் போர்த்திக் கொள்ளுமா எனச் சிறிதும் யோசித்துப் பாராமல் இத்தகைய செயல் செய்தார். இதனையே ‘கொடைமடம்’ எனச் சான்றோர் போற்றிக் கூறினர்.

பாரி

பறம்பு மலையை ஆண்ட குறுநில மன்னர். வேள்பாரி என்றும் வழங்கப்படுகிறார். இவர், தாம் சென்ற வழியில், தம் தேரைத் தடுத்த முல்லைக் கொடி, தேரை விரும்பியதாகக் கருதி, அது படர்வதற்குத் தனது பெரிய தேரையே அளித்தார். முல்லைக்குத் தேர் தந்த பாரி வள்ளலின் பெண்கள்தான் அங்கவை, சங்கவை. மாட மாளிகையில் வாழ்ந்த இவர்கள் தங்கள் தந்தையை இழந்து தவித்த போது அடைக்கலம் தந்து மணமுடித்து வைத்தவர் வள்ளல் பாரியின் நண்பரான புலவர் கபிலர் என்றும் கூறப்படுகிறது.

கபிலர் பாடியது
பாரி பாரி’ என்று பல ஏத்தி,
ஒருவற் புகழ்வர், செந் நாப் புலவர்;
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே.
(புறம் 107)

ஒரு புலவர் பாரி பாரி என்று சொல்லி அவனை மட்டுமே புகழ்ந்துகொண்டிருக்கிறார். பாரி ஒருவன் மட்டுந்தானா கொடையாளி? மழையும் இருக்கிறதே. அதாவது மழைபோல் வேள் பாரி கொடை வழங்குபவன் என்பது பொருள்.


பரணர் பாடியது
அறு குளத்து உகுத்தும், அகல் வயல் பொழிந்தும்,
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்,
வரையா மரபின் மாரிபோல,
கடாஅ யானைக் கழல் கால் பேகன்
கொடைமடம் படுதல் அல்லது,
படைமடம் படான், பிறர் படை மயக்குறினே.
(புறம் 142)

மழையானது நீர் இல்லாத குளத்தில் பொழியும், அகன்ற வயலில் பொழியும், காயும் இடத்தில் பெய்யாமல் விளையாத களர் நிலத்திலும் பெய்யும், இது சரிதானா? இப்படி வரையறை இன்றி எங்கும் பொழியும் மழை போல யானை மேல் வரும் பேகன் வழங்குவான் இப்படிக் கொடை வழங்குவதில் மடத்தனமாக நடந்துகொள்வானே தவிர, படை வந்து தாக்கும்போது மடங்கமாட்டான் (வளைந்து கொடுக்க மாட்டான்).

to be continued…

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: