கடையெழு வள்ளல்கள்(Part-2)

காரி

திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர் இவர். திருக்கோயிலூர்க்கு மேற்கே தென்பெண்ணையாற்றின் தென்கரை அடங்கிய பகுதியே “மலாடு” ஆகும். இவர் மலையமான் திருமுடிக் காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் அழைக்கப்படும் வள்ளலாவார்.

கொடை கேட்டு வருபவர்களிடம் எப்போதும் அருள் நிறைந்த சொற்களைப் பேசும் இயல்பு உடையவன். ‘தலையாட்டம்’ என்ற அணியைத் தலையிலும், ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் அணிந்து ஆடுகின்ற குதிரையையும் மற்றும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் கொடை கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாது அல்ல வழங்கினான்.காரியைப் போற்றிப் பாராட்டிப் புலவர்களான கபிலர், பெருஞ்சாத்தனார், நப்பசலையார் ஆகியோர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.

ஆய்

பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர். இவனை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் அழைத்தனர். ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் (நஞ்சுடைய கொடிய பாம்பு) ஒன்று இவருக்கு ஓர் அரிய ஆடையை அளித்ததாம். நாகம் அளித்த ஒளிமிக்க ஆடையை இவன், ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தானாம்.

வேள் ஆயைப் போற்றி ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடல்களும், துறையூர் ஓடைகிழார் பாடிய பாடலும் புறநானூற்றில் உள்ளன.

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது

களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ்ப்
பாடு இன் பனுவல் பாணர் உய்த்தென,
களிறு இலவாகிய புல் அரை நெடு வெளில்,
கான மஞ்ஞை கணனொடு சேப்ப,
ஈகை அரிய இழை அணி மகளிரொடு
சாயின்று’ என்ப, ஆஅய் கோயில்;
சுவைக்கு இனிது ஆகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி,
உரைசால் ஓங்கு புகழ் ஒரீஇய
முரைசு கெழு செல்வர் நகர் போலாதே
(புறம் 127)

ஆய் யானைகளைப் பாணர்க்கு வழங்குவான். அதனால் அவன் அரண்மனை முற்றத்தில் யானை இல்லை. யானை கட்டியிருந்த வெளில் என்னும் கட்டுத்தறியில் காட்டு மயில் கூட்டம் திரிகிறது. அவனது மனைவிமார் பிறருக்குத் தர முடியாத தாலியுடன் உள்ளனர். “ஈகை அரிய இழை அணி மகளிரொடு சாயின்று” இதுதான் ஆய் அரசன் அரண்மனை நிலைமை.

இவன் வாழும் அரண்மனை, முரசு முழங்கும் செல்வம் படைத்த செல்வர் வாழும் மாளிகை போல் இல்லை. சுவைக்கு இனிதாகத் தாளித்த உணவை, ஈவு இரக்கம் இல்லாமல் தன் வயிற்றுக்கு மட்டும் உண்ணும் செல்வர் வாழும் மாளிகை போல் இது இல்லை.

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது

மன்றப் பலவின் மாச் சினை மந்தி
இரவலர் நாற்றிய விசி கூடு முழவின்
பாடு இன் தெண் கண், கனி செத்து, அடிப்பின்,
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்,
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் 5
ஆடுமகள் குறுகின் அல்லது,
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே.
(புறம் 128)

ஆய் மன்னனைப் பாடிக்கொண்டு அவன் அரண்மனை செல்லும் இரவலர் (கொடை கேட்டு செல்பவர்) தம் முழவினை (முரசு) முழக்குவர். பின்னர் முழவினை பொதியமலையில் இருக்கும் பலா மரத்தின் கிளைகளில் தொங்க விடுவர் இரவலர் முழக்கும்போது பார்த்த பெண்குரங்கு அந்த முழவினைப் பலாப் பழத்தைத் தட்டிப் பார்ப்பது போலத் தட்டும். அந்த ஓசையைக் கேட்டு அங்குள்ள நீர்க்கரையில் அன்னச் சேவல் எழுந்து குதித்து ஆடும்.

மழை மேகம் தவழும் இந்தப் பொதியில் நாட்டு அரசன் ஆய். இந்த நாட்டில் ஆடிக் காட்டும் மகளிர் தடையின்றிச் செல்வர். பெருமை மிக்க மன்னராயினும் யாரும் போரிட நுழைய முடியாது.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: