வள்ளல் பாரி வேள் வரலாறு!

வள்ளல் பாரி வேள் வரலாறு!

வள்ளல் பாரி வேள் வரலாறு!

வேள்பாரி பறம்பு மலையை தலைமை இடமாய் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர். கடைச்சங்கக் காலத்தைச் சார்ந்தவர். வேளிர் குலத்தில் பிறந்ததால் வேள்பாரி என அழைக்கப்பட்டார். இவரதுக் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு. பாரி பறம்பு மலையையும் அதனைச் சூழ்ந்த பகுதிகளையும் ஆண்டவர். பறம்புநாடு முந்நூறு (300) ஊர்களைக் கொண்டதாகும்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இவர் கடையேழு வள்ளல்களில் ஒருவராகச் சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர். புலவர் கபிலர் பாரியின் நண்பர். திருச்சியிலிருந்து மதுரை செல்லும் வழியில் கொட்டாம் பட்டியிலிருந்து விலகிச் செல்லும் சாலையில் கிழக்கு நோக்கிச் சென்றால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது பிரான்மலை. பாண்டிய நாட்டில் உள்ளது திருவாதவூர். அவ்வூரில் பிறந்தவர் கபிலர் எனும் புலவர்; இவர் சங்கத்தமிழ் இலக்கியப் பரப்பில் மிக அதிகமான பாடல்களைப் பாடியவர் என்ற பெருமைக்குரியவர். இவர் கலையழகுமிக்க கவிதைகளைப் பாடியவர்; ‘பொய்யாநாவிற்கபிலர்’ என்று புகழப்படுபவர். இவர் பாரியின் மிக நெருங்கிய நண்பராவார். பாரியைப் பற்றி இறவாப் புகழுடைய பாடல்களைப் பாடியவர் கபிலர்.

பாரி ஒரு மலையக மன்னர் ஆவார், அவரது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 300 கிராமங்களே இருந்தது. அப்படி இருந்தப் போதிலும் அவர் மூவேந்தர்களை விட பெரும் புகழ் பெறக் காரணம் அவரது கொடைத் தன்மையே. கேட்போருக்கு இல்லை எனாது அளிப்பவர்.

பாரியின் பால்யகால நண்பர் தமிழ் புலவரான கபிலர் ஆவார். இவர் குறித்து கபிலர் பல பாடல்களை பாடியுள்ளார். நறுமுகையே… நறுமுகையே எனத் துவங்கும் பாடலில் பாரி மகள்கள் பாடுவதாக எழுதியதும் கபிலர் தான்.

வள்ளல்கள் எல்லாரையும் விட உயர்ந்தவனாகப் பாரியைத் தமிழ்ச் சான்றோர்கள் போற்றுவர். அதற்குக் காரணம், அப்பெருமன்னன் படர்வதற்குக் கொழு கொம்பின்றித் தவித்த முல்லைக் கொடிக்குத் தான் ஏறி வந்த தேரினையே ஈந்த புகழ்ச் செயலே காரணம் என்பர். ஒரு முல்லைக் கொடிக்காகத் தான் ஊர்ந்து வந்த தேரை ஈந்த சிறப்பால் பாரி வள்ளல்களிலேயே தலை சிறந்தவராகப் போற்றப்படுகின்றார். இதனைக் கபிலர் சிறப்பித்துப் பாடுகின்றார். ஆளுடைய நம்பி என்று புகழ் பெற்ற சுந்தரர் – ‘திருத்தொண்டத் தொகை’ என்ற புகழ் பெற்ற பதிகத்தைப் பாடியவர் – பாரியையே கொடைக்கு எல்லையாகச் சுட்டுவர். பாரியைப் பற்றிய பாடல்கள் புறநானூறு என்னும் சங்கத் தொகை நூலுள் பல உள்ளன.

பாரியின் புகழ் மூவேந்தர்களை விட அதிகம் பரவியதால் அவர்கள் பாரி மீது கோபம் கொண்டு ஒன்றாக சேர்ந்து வந்து படை எடுத்து பறம்பு மலையை முற்றுகை இட்டார்கள், பல காலம் முற்றுகை இட்டும் வெற்றிக் கிடைக்கவில்லை அவர்களுக்கு.

முற்றுகை இட்டக் காலத்தில் உணவுத் தேவையை சமாளிக்க கபிலர் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு பயிற்சி அளித்து அவற்றை அனுப்பி வயல்களிலிருந்து நெற் கதிர்களை எடுத்து வர செய்து மக்களுக்கு உணவளிக்க செய்ததாக ஒரு கதை உண்டு. அதே கபிலரே பின்னர் பாரி வீழ்ச்சிக்கும் காரணம் ஆனதாகவும் சொல்கிறார்கள்.

மன்னர்கள் முற்றுகை இட்டிருந்தாலும் புலவர்கள் வந்து செல்ல தடை இல்லாத நிலை. மூவேந்தர்கள் போர்க் களத்திலும் புலவர்களை மதித்தார்கள் போலும். அப்படி ஒரு முறை கோட்டைக்குள் இருந்து வெளியில் வந்த கபிலரிடமே அவர்கள் பல மாதங்களாக முற்றுகையிட்டு வெளியில் காத்திருந்து தோற்கடிக்க வழி தெரியாமல் பாரியின் நண்பரிடமே உதவிக் கேட்டார்கள்.

நாங்களும் பலக் காலமாக முற்றுகை இட்டு காத்திருக்கிறோம், எப்படி பாரிக் கோட்டைக்குள் இருந்துக் கொண்டு சமாளிக்கிறார் என்று கேட்டார்கள், மேலும் பாரியை எப்படி வெல்வது என்று வழிக் கேட்டார்கள்,

கபிலர், பாரியின் பறம்பு மலையில் தேனடைகள் அதிகம் உள்ளது, வேரில் பழுத்த பலா முதலிய பழங்களும்,கிழங்குகளும் உள்ளது, மேலும் மூங்கில் நெல் உள்ளது அவற்றைக் கொண்டே உணவுத் தேவையை சமாளித்துக் கொள்ள முடியும், நீங்கள் ஆண்டுக் கணக்கில் முற்றுகை இட்டாலும் வெல்ல முடியாது என்றார்.

அப்படி எனில் எப்படி தான் வெல்வது என்றுக் கேட்டதர்கு, போரில் அவரை வெல்ல முடியாது, ஆனால் நீங்கள் அவரிடம் யாசகமாக தேசத்தைக் கேட்டாலும் கொடுத்து விடுவார், அதற்கு நீங்கள் இரவலர்கள் போல் சென்று பாட்டுப் பாடி அவரை மகிழ்விக்கவும், முடிந்தால் உங்கள் துணைவியர்களையும் அழைத்து சென்று பாணர்கள் வேடத்தில் பாடினால் மனம் மகிழ்ந்து கேட்டதை பரிசாகக் கொடுப்பான் பாரி என்று அவர்களுக்கு வழிக் காட்டினார் கபிலர். மேலும் சீக்கிரம் போய் கேட்டால் நல்லது பாரி ஏற்கனாவே அவரது ஆட்சிக்குட்பட்ட 300 ஊர்களையும் தானம் அளித்து விட்டார், இப்போது இருப்பது இந்த மலையும் , அரண்மனையும் மட்டுமே என்றார்.

ஆரம்பத்தில் மூவேந்தர்களும் தயங்கினாலும் வேறு வழி இல்லாமல் பாட்டுப் பாடும் பாணர்கள் போல மாறு வேடத்தில் பாரி அரண்மனைக்கு சென்று ஆடிப்பாடி அவரை மகிழ்வித்தார்கள்.

மனம் மகிழ்ந்த பாரி என்ன வேண்டும் தயங்காமல் கேளுங்கள் , என்னிடம் இருப்பது எதைக் கேட்டாலும் தருவேன் என்றார். மூவேந்தர்களும், உங்கள் நாடும் , உங்கள் உயிரும் வேண்டும் என்று தயங்காமல் கேட்டார்கள். அவையில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து தானம் கேட்பதற்கும் எல்லை உண்டு நாட்டைக் கேட்டாலும் எப்படி உயிரைக் கேட்கலாம் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

பாரிக்கும் வந்திருப்பது பாணர்கள் அல்ல மூவேந்தர்கள் என்பது தெரிந்தாலும், சொன்ன சொல்லை மீறக் கூடாது என்று வாளை எடுத்து வைத்து விட்டு அவர்கள் முன் நின்று உயிரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று அளித்துவிட்டார்.

இப்படி ஒருவன் உயிரையும் தானம் அளிக்க முன் வருகிறானே எனப் பாராட்டாமல் அவர்கள் நோக்கத்தில் உறுதியாக இருந்த மூவேந்தர்கள், தங்கள் வாள்களை பாரி மீது பாய்ச்சி அவர் உயிரை மாய்த்தார்கள்.

பாரி இறக்கும் தருவாயில், அவரது மகள்கள் அங்கவை, சங்கவை ஆகிய இருவரையும் கபிலரிடம் ஒப்படைத்து ஒரு தந்தையாக என்னால் இவர்களுக்கு மணம் முடித்து வைக்கும் கடமையை நிறைவேற்ற முடியவில்லை, நீங்கள் தந்தையாக நின்று அவர்களுக்கு மணம் முடித்து வைக்க வேண்டும் என்றுக் கேட்டுக் கொண்டார்.

இல்லை எனாது, கேட்டவர்களுக்கு கொடுக்கும் கொடை உள்ளம் கொண்ட பாரி தன் உயிரையும் அளித்து இரவாப்புகழ் பெற்றார்.

பாரிவள்ளல் ஆண்டு கொண்டிருந்த பறம்பு நாடு எத்தகைய மக்களைப் பெற்றது, எத்தகைய செல்வத்தைப் பெற்றது? பாரி இறந்த பின் பாரியின் இரு பெண்களையும் தன்னுடன் அழைத்துச் செல்ல வந்த கபிலர், இப்புறநானூற்றுப் பாடல் வழி, தனது கலக்கத்தை கூறுமிடத்து, பறம்பு நாட்டின் செல்வத்தைப் பற்றிப் பாடுகிறார். (புறம்: 113)

தன்னால் தான் பாரியின் உயிர்ப்போயிற்று என்று வருந்தி, இனி உயிரோடு இருக்கக் கூடாது என்று கபிலர் நினைத்தாலும், பாரிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முயன்றார்.

மூவேந்தர்கள் மீது இருந்த பயத்தால் எந்த மன்னர்களும் பாரி மகள்களை மணம் முடிக்க முன் வரவில்லை. மூவேந்தர்களைக் கண்டு பயப்படாத மற்றொரு கடை ஏழு வள்ளல் மலையமான் திருமுடிக்காரி என்பவர் மட்டும் முன்வந்தார்.

இருவரில் ஒருவரைக் காரிக்கு மணம் முடித்து வைத்து விட்டு, மற்றப் பெண்ணுக்கு மணம் முடித்து வைக்க இயலாமல் மனம் உடைந்த கபிலர், அப்பெண்ணை சில அந்தணர்கள் வசம் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளும் படி ஒப்படைத்து விட்டு காட்டுக்கு சென்று பட்டிணி இருந்து தாமே உயிரைப் போக்கிக் கொண்டார்.

காரி, பாரி மகளை மணந்துக் கொண்டது அறிந்து கோபம் கொண்ட மூவேந்தர்கள் காரியின் மீதும் படை எடுத்து வந்து, போரில் அவரையும் கொன்று விட்டார்கள். காரி இறந்ததும் அவருடன் சேர்ந்து பாரியின் மகளும் உயிரை மாய்த்துக் கொண்டாள்.

ஆதரவின்றிருந்த பாரியின் மகள்களுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணி ஔவையார் முயன்ற போது அதனைத் தடுக்க மூவேந்தர்கள் முயன்றனர். ஆனால் ஔவையார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கரபுரநாதர் கோவிலில் மணம் செய்து வைத்தார். அந்தக் கோவில் தற்போது சேலத்தில் உத்தம சோழபுரம் (சோழன் இருந்த இடம்) என்ற பகுதியில் உள்ளது. மேலும் அருகில் வீரபாண்டி (பாண்டியன் இருந்த இடம்), சேலம் (சேரநிலம்-சேரன் இருந்த இடம்) உள்ளது. பாரியை ஒளவைப் பெருமாட்டியும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

வள்ளல் பாரி வேள் வரலாறு!

வள்ளல் பாரி வேள் வரலாறு!

பறம்பு மலை என்ற பிரான்மலை :

இவர் ஆண்ட இடம் பறம்பு மலை எனப்படும் , அப்போதைய பாண்டிய அரசின் கீழ் வரும். அது தற்போது பிறான் மலை எனப்படுகிறது. இதற்கு இன்னொரு பெயர் கொடுங்குன்றம் என்றும் உள்ளது. இம்மலை மேரு மலையின் ஒரு பகுதி என்ற புராணம் உண்டு, இங்கே ஒரு சிவன் கோவில், முருகன் கோவில் உள்ளது.

பறம்பு மலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது. காரைக்குடியிலிருந்து மேற்கே 42 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து வடக்கே 63 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து தென்மேற்கே 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சிங்கம்புணரியிலிருந்து கிருங்காக்கோட்டை வழியாக 7 கி.மீ தொலைவில் உள்ளது.

இம்மலை கபிலர் முதலான புலவர்களால் பாடப் பெற்ற புகழுடையதாகும். சங்க காலத்தில் பறம்பு மலை எனவும், பின்னர் திருநெலக்குன்றம் எனவும் சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும், பெயர் பெற்ற இம்மலை தற்போது பிரான்மலை எனவும் வழங்கப்படுகிறது.

“ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும் சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும்” என்று கபிலர் பாடல் குறிப்பிடுவது போலவே 2450 அடி உயரத்துடன் நெடுந்தூரத்திலிருந்து பார்க்கவும் தெரிவதாக இம்மலை அமைந்துள்ளது.

மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை வட்டார வழக்குகள் கலந்த இவ்வூர் கிராமியத்தோடு கூடிய நகரமாக விளங்குகிறது. விவசாயம் முதல் தொழிலாகவும், பனையும் தென்னையும் சார்ந்த தொழில்கள் பணத் தொழில்களாகவும் விளங்குகின்றன. நிலக்கடலை அதிகம் விளைவதால் இவ்வூரில் எண்ணெய் ஆலைகள் மிகுதியாக உண்டு.

சிங்கம்புணரிக்கு நெடிய இலக்கிய வரலாறு உண்டு. இவ்வூரின் பெருமையைச் சிங்காபுரிப் பள்ளு என்னும் இலக்கியம் தெளிவுற விளக்குகிறது. ஸ்ரீசேவுகமூர்த்தி ஐயனார் கோயில், ஸ்ரீ சித்தர் முத்துவடுகேசர் கோயில் ஆகியன இங்கு புகழ் மிக்கவையாகும்.

பறம்பு மலையைத் தலைமையிடமாகக் கொண்டது பறம்பு நாடு. இது பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. இந்நாடு பறம்புநாடு, பாரிநாடு, பறநாடு எனவும் வழங்கப்படும். இது சங்க காலத்திலிருந்து புகழ் பெற்றிருந்தது. இந்த நாட்டை வேள்பாரி. கி.பி 2ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆண்டான். வேளிர் குலத் தலைவனாக விளங்கிய இவன் ஈரத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவன் பாரி மன்னன். அதனுடைய எல்லைகளாக,

தென்னெல்லை – திருமோகூர் முதல் கீழ் மேலோடிய வையையாற்றங்கரை – பறம்புக்குடி
கிழக்கெல்லை – பறம்புக்குடி- காளையார் கோயில் – முத்து நாடு – அனுமந்தக் குடி- பறம்பு வயல்
வடவெல்லை – பறம்பு வயல் – கானாடுகாத்தான், சோனாபட்டு – திருக்கோளக்குடி – பூலாங்குறிச்சி – இடையாற்றூர் குடுமியான் மலைப்புறம் – பறம்பூர்

மேற்கெல்லை – பறம்பூர் – மருங்காபுரி – துவரங்குறிச்சி – நத்தம் மலைகளின் கிழக்குப் பகுதி – அழகர் மலைக் கிழக்குப் பகுதி – பறம்புக் கண்மாய் – திருமோகூர்

எனக் கொள்வர். பிற்காலத்தில் இப்பறம்பு நாடு பாண்டி மண்டலத்தின் ஒரு பகுதியாக மாறியது.

பாரி வேட்டை என்ற பெயரில் ஒரு வேட்டை இப்போதும் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இம்மலையிலிருந்து 15 கி.மீ. எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் இந்த வேட்டையை மரபாக நடத்தி வருகின்றனா்.

இம்மலைக்குத் தெற்கே கூத்துப் பாரிப் பொட்டல் என்று ஓர் இடம் இருக்கிறது. இப்பெயர் கூத்தையும் பாரியையும் தொடர்புபடுத்தி உணர்த்துவதாய் உள்ளது. பாரிவேட்டைக்குச் சென்று திரும்பும் போதில் இங்கு கூத்து நடக்கும்.

முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்ததை நினைவுபடுத்தி இன்றும் இப்பகுதிகளில் கொடி தளும்பினால் குடி தளும்பும் என்னும் சொலவடை வழக்கில் இருந்து வருகிறது. இப்பகுதியில் குழந்தைகளுக்கு பாரி, கபிலன், முல்லைக்கொடி, நல்லமங்கை, அங்கவை, சங்கவை என்னும் பெயர்கள் வைக்கப்படுகின்றன.

பெரும் புகழை உடையதாம் பறம்பு நாடு. அந்நாட்டு மக்களும் பாரியைப் போலவே கொடைத் தன்மையில் சிறந்திருந்தனராம். விருந்தினர்கள் தங்களுக்கு வேண்டும் அளவு அருந்துவதற்காக, அவர்கள் வீடுகளில் உள்ள மதுச் சாடிகள் திறந்தே இருக்குமாம். வருபவர்கள் பசியாற, ஆட்டுக் கிடாய்களை வெட்டிய வண்ணம் இருப்பராம். கொழுந்துவையலையும், ஊன் கலந்த சோற்றையும் எப்பொழுதும் சமைத்த வண்ணம் இருப்பராம். ‘இத்தகைய செல்வம் நிறைந்தது பாரி நாடு. ஆனால் இப்பொழுது அவனில்லாமல் மக்கள் அனைவரும் கலங்கியிருக்கின்றனர். பாரியின் மக்களை உரிய கணவரிடம் சேர்ப்பிக்க அழைத்துச் செல்கிறேன்’ என்று தனது கையறு நிலையை விளக்கியிருக்கிறார் கபிலர்.

பின்குறிப்பு:

பாரி அரண்மனைக்குள் பாணர்கள் வேடம் போட்டு மூவேந்தர்கள் உட்புகுந்தார்கள், ஆனால் கபிலர் சொன்னப்படி தானம் கேட்டு எல்லாம் உயிரை எடுக்கவில்லை என்றும் சொல்கிறார்கள், ஆனால் அத்தகைய ஒரு சூழ்ச்சி மூலமே பாரியை வென்றார்கள் என்பது மட்டும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது.

Tags: 
Subscribe to Comments RSS Feed in this post

4 Responses

  1. Pingback: dr.priya krishnan

  2. Pingback: Senthilraja

Pingbacks/Trackbacks

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: