வாணியம்பாடி அருகே சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள உடன்கட்டை முத்திரை நடுகல் கண்டுபிடிப்பு!

வாணியம்பாடி அருகே நிம்மியம்பட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடன்கட்டை ஏறும் நடுகற்கள்!

வாணியம்பாடி அருகே நிம்மியம்பட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடன்கட்டை ஏறும் நடுகற்கள்!

வேலூர் மாவட்டம், நிம்மியம்பட்டு கிராமத்தில், அரசு பள்ளி வளாகத்தில், உடன்கட்டை முத்திரை நடுகல்லை, பேராசிரியர் மோகன் காந்தி தலைமையில், ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வாணியம்பாடி அருகே சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள உடன்கட்டை (சதி) ஏறுதல் நிகழ்வை குறிக்கும் நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து க.மோகன்காந்தி கூறியதாவது: வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு கிராமம் ஏலகிரிமலையும், ஜவ்வாதுமலையும் சூழப்பெற்ற அழகிய காடுகளைக் கொண்ட முல்லை நில ஊராகும். முல்லை நிலத்தில் ஆநிரை வளர்த்தல் பெரு வழக்கமாக இருந்தது.

நிம்மியம்பட்டும் முல்லை நில ஊர் என்பதால் ஆநிரை (மாடுகள்) வளர்க்கப்பட்டிருக்கும். மாடுகளை பகைவர்கள் கவர்ந்து சென்றபோது அவ்வூரைச் சேர்ந்த வீரர்கள் போரிட்டு உயிரிழந்திருப்பர். அவ்வாறு உயிரிழந்த 2 வீரர்களுக்கு நடுகல் எடுத்துள்ளனர். அருகில் அவ்வீரர்களின் மனைவிகளும் கணவரோடு உயிர்விட்டதற்கான அடையாளங்களோடு படைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. 4 அடி உயரமும், 3.5 அடி அகலமும் கொண்டதாக நடுகற்கள் உள்ளன.

கிழக்குப் பார்த்த நிலையில் வீரன் அமர்ந்த நிலையில், வலது கால் மடக்கியும், இடது கால் தொங்கவிட்டும், இடது கை தொடையின் மீதும் வலது கையில் தாமரை மொட்டு போன்ற குறியீட்டுடன் சற்று பெருத்த உருவத்துடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.

முதல் நடுகல் அருகே உடன்கட்டை ஏறிய பெண் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். வடக்கு பார்த்த நடுகலில் வீரனின் இடது கையில் ஒரு பொருளும், வலது கையில் கத்தி ஒன்றும் உள்ளன. தலையில் கொண்டையும், காதுகளில் குண்டலங்களும் அணிந்துள்ளான்.

அருகே கற்குடமும், பெண் ஒருவர் உடன்கட்டை ஏறியதற்கான அடையாள முத்திரையோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நடுகல்லின் அமைப்பை வைத்துப் பார்க்கும் போது விஜயநகர கால நடுகற்களாக தெரிகிறது. விஜயநகர காலத்தில் பெண்கள் உடன்கட்டை ஏறுவது பெரும் அளவில் இருந்ததை பல நடுகற்கள் சான்று பகர்கின்றன.

விஜயநகர காலத்தில் பெண்கள் உடன்கட்டை ஏறும் சடங்கு வழக்கில் இருந்ததை இதன் மூலம் அறிய முடிகிறது. இந்நடுகல் கற்திட்டை வடிவில் அதாவது மூன்றுபக்கமும் கல்லை வைத்து ஒரு பக்கம் திறந்த நிலையில், மேலே பலகைக் கல்லைக் கொண்டு மூடி வைத்துள்ள நிலையில் உள்ளது. உடன்கட்டை ஏறுதல் சங்க இலக்கிய நூலான புறநானூறு பதிவு செய்துள்ளது. உடன் கட்டை ஏறிய இக்கல்லை தீப்பாய்ந்தாள் கல், சதி கல் என்றும் அழைப்படும் என்று மோகன்காந்தி தெரிவித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: