திருத்தணிகை தமிழகத்தோடு இணைந்த நாள்!

Tiruttani

வடக்கெல்லை மீட்புக்காக போராடிய மங்கலகிழார், ம.பொ.சி., தளபதி விநாயகம், மேயர் செங்கல்வராயன், கோல்டன் ந.சுப்பிரமணியம், திருத்தணிகை பஞ்சாயத்து தலைவர் சரவணய்யா, என்.ஏ.ரசீது மற்றும் சிறை சென்ற ஈகியர்களை நினைவு கூறுவோம்! (படத்தில் உள்ள நான்கு தலைவர்கள் சிலைகள் திருத்தணியில் நிறுவப்பட்டது)

“திருத்தமிழ்க்கு உயர் திசைச் சிறப்புடைத் திருத்தணிகை” என்று திருப்புகழ் பாடியவர் அருணகிரி நாதர்.

தமிழர்களின் வரலாற்றுத் தாயகமாக விளங்கிய வடக்கெல்லையான திருப்பதியை இழந்து தமிழர்கள் பரிதவித்து நின்ற போது சற்று ஆறுதலான தீர்ப்பொன்று 1957ஆம் ஆண்டில் எல்லை ஆணையர் எச்.வி. படாஸ்கர் என்பவரால் அளிக்கப்பட்டது. அது என்னவெனில், தமிழகப் பகுதிகளாக விளங்கிய திருத்தணி, திருவாலங்காடு, வள்ளி மலை, ஆகியவை தமிழகத்தோடு இணைக்கப்படும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. விசால ஆந்திரம் கேட்டு தெலுங்கர்கள் 1953ஆம் ஆண்டு தீவிரமாக போரடிய போது சித்தூர் மாவட்டத்தில் ஆறு தமிழகப் பகுதிகளை தெலுங்கர்கள் அபகரித்து கொண்டனர். அதில் தமிழர்கள் இருகண்களெனப் போற்றும் மாலவன் குன்றமும், வேலவன் குன்றமும் அடங்கும்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


1946ஆம் ஆண்டிலிருந்து-
“வேங்கடத்தை விட மாட்டோம்,
வேங்கடமே தமிழகத்தின் எல்லை,

தணிகை தமிழருக்கே” – என்று தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சிவஞானம் விடாது முழங்கி வந்தார். அப்போது தமிழ்நாட்டில் திராவிடநாடு முழக்கத்தை பெரியார், அண்ணா போன்றவர்கள் எழுப்பிய காரணத்தாலும், காங்கிரசு கட்சியில் தலைவராக விளங்கிய காமராசரின் தமிழின உணர்வற்ற போக்காலும் ம.பொ.சி.யின் குரல் ஒற்றை தனி மனிதரின் குரலாகவே பார்க்கப்பட்டது.

அன்றைய சென்னை மாகாணத்தில் தமிழின உணர்வு இந்திய திராவிடக் கட்சிகளால் மழுங்கடிக்கப்பட்ட காரணத்தால் ஆந்திரர்கள் தமிழர்களின் தலைநகரான சென்னையைக் கூட தயக்கமின்றி உரிமை கொண்டாடி கேட்க முடிந்தது. நல்ல வேளையாக சென்னை மீட்புப் போரிலும், “தலையிட்டு தலையைக் கொடுத்தேனும் தலை நகரை காப்பேன்” என்று ம.பொ.சி. முழக்கமிட்டார். அந்த முழக்கத்திற்கு நல்ல பலனும் கிடைத்தது. சென்னையை அரசியல் தளமாகக் கொண்டு இயங்கிய தமிழகக் கட்சிகள் எல்லாம் வேறு வழியின்றி சென்னை மீட்புக் கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டன. முதல்வர் இராசாசி துணையோடு சென்னை தமிழர் வசமானது. ஆனால், சென்னையை மீட்க ஒத்துழைத்த பேராய, பொதுவுடைமை, திராவிட இயக்கக் கட்சிகளெல்லாம் வட வேங்கட மீட்புக் கிளர்ச்சிக்கு ம.பொ.சி. அழைத்த போது ஒதுங்கியே நின்று வேடிக்கை பார்த்தன. இதில் ம.பொ.சி. போற்றி வந்த இராசாசியும் உள்ளடக்கம்.

ம.பொ.சி. வடக்கெல்லைப் போராட்டக் குழுவை உருவாக்கி சித்தூர், புத்தூர், திருத்தணி ஆகிய இடங்களில் அரசு அலுவலகங்கள் முன்பும், தொடர் வண்டி முன்பும் மறியல் போராட்டங்களை நடத்தி வந்தார். இராசாசி ஆட்சியில் நீதிமன்றம் இவருக்கு ஆறுமாத சிறை தண்டனை விதித்தது. அவர் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக 3.7.1953இல் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப் பகுதிகள் குறித்து ஆராய எல்லை ஆணையம் அமைக்க நேரு ஒப்புக் கொண்டார். இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் நேரு ஒப்புக் கொண்டபடி எல்லை ஆணையம் அமைக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் சூலை 3ஆம் நாள் வடக்கெல்லை பாதுகாப்பு குழு சார்பாக எல்லை ஆணைய நாள் கொண்டாடப்பட்டது. நேரு அரசாங்கம் இதையெல்லாம் பொருட்படுத்த மறுத்தது. இதற்கிடையில், 1.11.1954இல் தமிழில் கூட்ட நடவடிக்கைகளை நடத்தியதாகக் கூறி தமிழர்களால் ஆளப்பட்டு வந்த திருத்தணிகை பஞ்சாயத்து சபையை ஆந்திர அரசு கலைத்தது.

தில்லி அரசும், ஆந்திர அரசும் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு தமிழர் மீது வஞ்சனை காட்டி வருவதைக் கண்டித்து ம.பொ.சி. தலைமையில் வடக்கெல்லை பாதுகாப்புக் குழு மீண்டும் கூடியது. அது மீண்டும் வடக்கெல்லைப் போராட்டத்தின் இரண்டாம் கட்டப் போரை தொடங்கப் போவதாக அறிவித்தது. போராட்டத் தளபதியாக விநாயகம் அறிவிக்கப்பட்டார்.

15.10.1956இல் தமிழகமெங்கும் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ஆயிரக் கணக்கில் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். அதுபோல் தொடர்வண்டி சங்கிலியை இழுத்து தொடர் வண்டி நிறுத்தப் போராட்டம் நடத்தியதால் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பி.கோவிந்தசாமி என்பவர் இராஜ மந்திரி சிறையிலும், மாணிக்கம் என்பவர் பழனி சிறையிலும் மாண்டனர். போராட்டத்தைக் கண்டு அச்சமுற்ற தமிழக காங்கிரசு அரசும், ஆந்திர அரசும் தங்களுக்குள் ஒப்புக்கு பேச்சு வார்த்தை நடத்தி வந்தன. இதனையே காரணமாக காட்டி எல்லை ஆணையம் அமைக்க முடியாது என்று நேரு அரசு கைவிரித்தது. பேச்சு வார்த்தை நாடகம் தோல்வியுற்ற நிலையில் 1956ஆம் ஆண்டு திசம்பர் மாதம் படாஸ்கர் என்பவர் தலைமையில் எல்லை ஆணையம் அமைக்கப்படுவதாக நேரு அறிவித்தார்.

1957ஆம் ஆண்டு வெளி வந்த படாஸ்கர் ஆணையத் தீர்ப்பை உடனடியாக ஏற்றுக் கொண்டு திருத்தணிகையை தமிழகத்தோடு இணைப்பதற்கு நேரு அரசு வழக்கப் போல் காலம் கடத்தியது. நாடாளுமன்றத்தில் சட்டம் ஆக்குவதற்கு திருத்தணிகை தெலுங்கு உறுப்பினர்கள் பல முட்டுக்கட்டைகளை போட்டு வந்தனர். அன்றைய சபாநாயகர் அனந்த சயனம் அய்யங்கார், வட நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் பண்டிட் தாகூர்தாஸ் பார்கவா ஆகியோர் மூலம் திருத்தணி இணைப்பு மசோதாவை தடுக்க முற்பட்டனர்.

1959ஆம் ஆண்டு செப்டம்பரில் கொண்டு வரப்பட்ட இணைப்பு மசோதா நவம்பருக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதைக் கண்டித்து திருத்தணிகை பஞ்சாயத்து சபை கண்டன தீர்மானம் நிறைவேற்றியது. ம.பொ.சி. தில்லிஅரசை வன்மையாகக் கண்டித்து கடிதம் எழுதினார். அதன் பிறகு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் 1.4.1960இல் நடைபெற்றது. அப்போது எவ்வித திருத்தமும் இன்றி திருத்தணி இணைப்பு மசோதா சட்டமாக்கப்பட்டது.

வடக்கெல்லை மீட்புக்காக போராடிய மங்கலகிழார், ம.பொ.சி., தளபதி விநாயகம், மேயர் செங்கல்வராயன், கோல்டன் ந.சுப்பிரமணியம், திருத்தணிகை பஞ்சாயத்து தலைவர் சரவணய்யா, என்.ஏ.ரசீது மற்றும் சிறை சென்ற ஈகியர்களை நினைவு கூறுவோம்! (படத்தில் உள்ள நான்கு தலைவர்கள் சிலைகள் திருத்தணியில் நிறுவப்பட்டது)

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப் பகுதிகள்!... தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப் பகுதிகள்! நம் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டாததால் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப் பகுதியின் அளவு சு...
ஐம்பெரும் காப்பியங்களுள் “கம்பராமாயணம்”... ஐம்பெரும் காப்பியங்களுள் "கம்பராமாயணம்" ஏன் இடம்பெறவில்லை ? ஐம்பெரும் காப்பியங்களுள் "கம்பராமாயணம்" ஏன் இடம்பெறவில்லை? கால மாறுபாடும் நோக்க வேறுபாடு...
பல்லவ கால பழுதடைந்த மண்டபம் ஆய்வு செய்த தொல்லியல் ... பல்லவ கால பழுதடைந்த மண்டபம் ஆய்வு செய்த தொல்லியல் துறை ! திருத்தணி : திருத்தணி ஒன்றியம், அகூர் ஊராட்சிக்குட்பட்ட நத்தம் கிராமத்தில், பல்லவ கால வழிப...
உ. வே. சாமிநாதையர் வாழ்க்கை வரலாறு!... தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதையர்! உ. வே. சாமிநாதய்யர் (பெப்ரவரி 19,1855 – ஏப்ரல் 28, 1942) உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே...
Tags: 
%d bloggers like this: