தமிழ்(Part-2)

விருந்தோம்பல்

விருந்தும் சிறக்க வேண்டும், விருந்தினரும் முகமகிழ வேண்டும் என்றால் தன் முகம் திரியாமல், முகமலர்ச்சியோடு வரவேற்று உபசரிக்காவிட்டால் அது சிறந்த விருந்தாகாது என்ற ஒரு பண்பாட்டு அடையாளத்திற்கு இலக்கணம் சொன்னது தமிழும் தமிழரும் தவிர வேறு யாரும் இல்லை.

இன்றைக்கு உறவினர்களைக்கூட விருந்தினராக அழைப்பதற்கு தயங்குகிறோம். ஆனால் அன்று வாழ்ந்த நம் மூதாதையர் வந்து செல்லும் வழிப் போக்கர்களுக்காக திண்ணை அமைத்து இல்லம் கட்டினார். வந்து அமர்ந்து உணவுண்டு உறங்கிச் செல்லவே அந்தத் திண்ணைகள். இன்றைக்குத் திண்ணை வீடுகள் இல்லை. வீட்டைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டி வாயிலில் பெரிய பூட்டை தொங்கவிட்டு பாதுகாப்புத் தேடுகிறோம்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்கிறார் சங்கப் புலவர். எல்லா ஊரும் நம் ஊரே எல்லா நாடும், இனமும், நம் நாடே, நம் இனமே, அனைவரும் நம் உறவுகளே என்று உரக்கச் சொல்லிய பரம்பரை நம் தமிழ்ப் பரம்பரை.

ஆனால் இன்று தாய்மொழியில் பேசுவதைக்கூட தரம் தாழ்ந்ததாக இந்தச் சமூகம் நினைக்கிறது. நுனிநாக்கு ஆங்கிலத்தில் பெருமை கொள்கிறது. இது உண்மையிலேயே வெட்கப்பட வேண்டியது, வேதனைப்பட வேண்டியது. தாய்மொழிவழியில் பயின்றவர்கள் அரசின் உயர்ந்த பதவிகளில் உள்ளனர்.

தாய்மொழிக் கல்வி

ஆங்கிலம் கலக்காத தனித்தமிழை இன்று நம்மால் பேசவும், எழுதவும் முடியவில்லை,அப்படியே துாய தமிழில் பேசினாலும் ஏற இறங்க இந்தச் சமூகம் நம்மை பார்க்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும். காந்தி தனது வாழ்க்கை வரலாற்று நுாலான சத்திய சோதனையை தன் தாய்மொழியான குஜராத்தியில் தான் எழுதினார்.

நோபல் பரிசு பெற்ற கீதாஞ்சலியை இரவீந்தரநாத் தாகூர் தாய்மொழியான வங்க மொழியில்தான் எழுதினார். தாய்மொழித் தமிழால் நாமும் தலைநிமிர்ந்து வாழலாம்.வாழ்வியல் சிந்தனைகளை நம் தாய்மொழித் தமிழ் சொல்லிக் கொடுத்தது. இந்தச் சமூகம் வாழ வழி காட்டியது. நம் தமிழ் இனத்தின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றது தமிழ். “தீதும் நன்றும் பிறர் தர வாரா”என்று உலகத்திற்கே வாழ்வியல் கோட்பாட்டை கோடு போட்டுக் காட்டிய நம் தாய்மொழித் தமிழை வாழ்த்தி வணங்குவோம்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: