“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்”

சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்

சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்

1980களில், ஒரிசாவில் நான் பார்த்த ஒரு ஊரின் பெயர்ப் பலகை என்னை தடுத்து நிறுத்தியது. அந்த பெயர் ‘தமிழி’. குவி என்கிற திராவிட மொழி பேசும் பழங்குடிகள் வசிக்கும் அந்த ஊருக்குள் என் கால்கள் என்னையும் அறியாமல் சென்றன. அதிலிருந்து ஊர்ப் பெயர்கள் மீது காதல் கொண்டேன். எங்கு மாறுதலாகிச் சென்றாலும் ஊர்ப் பெயர்கள் அடங்கிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் புத்தகங்களைத் தூக்கிச் சென்றேன்.மானுட வரலாறு என்பது பயணங்களால், இடப் பெயர்வுகளால் ஆனது. மனிதன் ஒரு ஊரை விட்டு இடம்பெயரும்போது, அவனது நினைவுகளைச் சுமந்து செல்கிறான். புதிய இடத்தில் குடியேறும்போது, பழைமையுடன் தொடர்புகொள்ளும் விதத்தில் தன் ஊர்ப் பெயரை அங்கே வைக்கிறான். இது ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருகிற சமூக உளவியல். அப்படி அவன் விட்டுச் சென்ற ஊர்ப்பெயர்களும், சுமந்து சென்ற ஊர்ப் பெயர்களும் சொல்வது மனித குலத்தின் வரலாறு.ஈரானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள ஏராளமான ஊர்ப் பெயர்கள், அப்படியே ஒரிசாவில் கொனார்க்கில் உள்ள சூரியக்கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களில் இருப்பதைக் கண்டேன். இதன் சாத்தியம் என்னை ஆச்சரியப்படுத்தியது.


உலகத் தமிழர் பேரவை-யில் உறுப்பினராக….. இங்கு அழுத்தவும்


பின்னர், தமிழ்நாடு – கேரள எல்லையில் உள்ள இடுக்கி, பழனி, குமுளி, தேனி, தேக்கடி, கம்பம், போடி போன்ற ஊர்ப் பெயர்கள், மத்தியப்பிரதேசம் மற்றும் வடமாநிலங்களில் இருப்பதைக் கண்டேன்.இன்னொரு ஆச்சரியமான விஷயம் – ஒரிசாவுக்கும் நைஜீரியாவுக்கும் உள்ள ஒற்றுமை. ஒரிசா – ஆந்திர எல்லையில் உள்ள கொராபுட் மாவட்டத்தில் உள்ள சுமார் 463 ஊர்களின் பெயர்கள் அப்படியே நைஜீரியாவில் உள்ளன. ஆதிமனிதன் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றினான் என்றும், பின்னர் அங்கிருந்து பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தான் என்றும் இன்றைக்கு நவீன மரபியல் ஆய்வுகள் சொல்வது, இந்த இடப் பெயர்வுடன் பெரிதும் பொருந்துகிறது. இது பற்றிய எனது கட்டுரை உலக அளவில் பலராலும் எடுத்தாளப்படுகிறது.சுமார் 9ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் இரவு. சிந்து சமவெளி நாகரிகம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு ஈரான் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில்) உள்ள பல்வேறு ஊர்களின் பெயர்களை கணினியில் சேமித்து, அவற்றில் தமிழகத்தின் பழங்கால ஊர்ப்பெயர்கள் ஏதேனும் இருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன்.நான் முதலில் தேடிய பெயர் ‘கொற்கை’.  ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ‘கொற்கை’ என்ற பெயரில் ஊர்ப்பெயர் இருக்கிறது என்றது கணினி. முதலில் இதை ஒரு விபத்து என்றே கருதினேன்.அடுத்து ‘வஞ்சி’ என்ற ஊர்ப்பெயரைத் தேடினேன். அதுவும் அங்கே இருந்தது. எனக்குள் சுவாரஸ்யம் பெருகிற்று.தொண்டி, முசிறி, மதிரை(மதுரை), பூம்புகார், கோவலன், கண்ணகி, உறை, நாடு, பஃறுளி… என பழந்தமிழ் இலக்கியத்தில் வரும் பெயர்களை உள்ளிட்டுக் கொண்டே இருந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட அத்தகைய பெயர்கள் இப்போதும் பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தானில் இருப்பதை கணினி காட்டிக் கொண்டே இருந்தது…4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்து விளங்கி, பின் காணாமல் போன சிந்து சமவெளி நாகரிகம், 1924-ல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாகரிகம் விளங்கிய இடத்தில் வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் என்ன மொழி பேசினார்கள்? ஏன் அந்த நாகரிகம் மண்ணோடு மண்ணானது? யாருக்கும் தெரியாது. ஆனால், அந்த நாகரிகம் விளங்கிய பகுதிகளில் இருக்கும் ஊர்கள் இன்றும் தமிழ்ப் பெயர்களை தாங்கி நிற்கின்றன. எனில், சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும், சங்கத் தமிழ்ப் பண்பாடு தொட்ட இடமும் ஒன்றுதான். சுமார் 4ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சிந்துவெளிப் பண்பாடு அழிந்தது. தமிழகத்தில் கிடைத்துள்ள அகழாராய்வு முடிவில் கி.மு.800 வரையிலான சான்றுகள் கிடைத்துள்ளன. அதற்கு முந்தைய ஒரு 1000 ஆண்டுகள் இடைவெளியை பின்னோக்கி ஆய்வுகள் மூலம் சென்று நிரப்பினால் சிந்துவெளிப் புதிரை அவிழ்த்து விடலாம்.பழந்தமிழர் வாழ்வுடன் தொடர்புடைய அவர்களின் தொன்மங்களுடன் தொடர்புடைய பெயர்கள் இன்று சிந்துவெளியில் கிடைத்திருப்பது ஏதோ விபத்தால் நிகழ்ந்தது அல்ல என்றே கருதுகிறேன். கிடைத்திருப்பது ஓர் ஊர்ப்பெயர் மட்டுமல்ல; சங்க இலக்கியத்தில் உள்ள அவ்வளவு பெயர்களும் அங்கு இருக்கின்றன. (வரைபடத்தைக் காண்க.) இடப்பெயர்வு நடந்திருக்கலாம். அங்கிருந்து இங்கு மனிதர்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கலாம். கொஞ்சம் பேர் அங்கிருந்து புலம் பெயர்ந்த பின், மிச்சம் இருந்தவர்கள் அங்கே வந்தவர்களுடன் கலந்து தங்கள் மொழியை, தனி அடையாளங்களைஇழந்திருக்கலாம். ஆனாலும் இன்னமும் அந்த ஊர்ப்பெயர்கள் மட்டும் தப்பிப் பிழைத்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம். அங்கிருந்து கிளம்பி வந்தவர்கள் புதிதாக குடியேறிய இடத்தில் பழைய நினைவுகளை தங்கள் ஊர்ப்பெயர்களாக வைத்திருக்கலாம். கொற்கை, வஞ்சி, தொண்டி, காஞ்சி எல்லாமே இப்படி இருக்கலாம்.சங்ககாலப் புலவர்கள் சமகால நிகழ்வுகளை மட்டும் இலக்கியத்தில் பதிவு செய்யவில்லை. அவர்களது காலத்திற்கு முற்பட்ட காலத்து பழைய நிகழ்வுகளையும் வாய்மொழி மரபுகளையும் தங்களது பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள். அவை வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் என்கிற பரப்புக்குள் தமிழர் இருப்பைச் சொல்கிறவை மட்டுமல்ல. அவை சொல்லும் தொன்மங்கள் இந்த எல்லையைக் கடந்தவை.சங்க இலக்கியத்தில் “வான் தோய் இமயத்து கவரி” என்று வரும். கவரி என்பது இமயத்தின் உச்சியில் திபெத் பக்கமாக வாழும் யாக் என்கிற விலங்கு. இந்த கவரி ஒரு வகை வாசனை மிகுந்த புற்களைத் தேடித்தேடி உண்ணும் என்றும் சங்க இலக்கியம் சொல்கிறது. இன்று இந்த யாக் விலங்கின் பால், ஒரு வகைப் புல்லை உண்பதால் மிகுந்த வாசனையுடன் இருப்பதாகவும், அதை ‘யாக் தேநீர்’ என்று விளம்பரப்படுத்தி திபெத்தில் விற்கிறார்கள் என்றும் அறிகிறோம். எங்கோ குளிர் பிரதேசத்தில் இருக்கும் யாக் விலங்கு பற்றி சங்ககால கவிஞனுக்கு எப்படித் தெரிந்தது? பழைய நினைவுகள், கதைகள், தொன்மங்களின் எச்சங்கள் அவனுக்கு இதை சாத்தியமாக்கி இருக்கலாம்.(வள்ளுவர் “மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான்” என எழுதியிருப்பதாக பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அவர் “கவரிமான்” என்று சொல்லவில்லை. “கவரிமா” என்றுதான் சொல்கிறார். மா என்பது விலங்குகளைக் குறிக்கும் பொதுச் சொல். கி.பி.535 வாக்கில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த காஸ்மாஸ் இண்டிகோப்லுஸ்டெஸ் என்ற ஐரோப்பியப் பயணி, “வால்முடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தனது உயிரையே விடத் தயாராக இருக்கும் விலங்கான கவரி” பற்றி தனது நூலில் குறிப்பிடுகிறார்.)தமிழர்களின் ஐந்திணைகளில் பாலையும் ஒன்று. நம்மிடம் அந்த நிலப்பரப்பு இல்லை. ஆனால் அகநானூற்றில் மருதன் இளநாகனார், “உணவுக்கே வழியில்லாத பாலையில் ஒட்டகம் எலும்பைத் தின்னும்” எனக் குறிப்பிடுகிறார். இது ஒட்டகம் வளர்க்கும் தார் பாலைவனத்தில் உள்ளவர்களுக்கே தெரிந்த செய்தி. தொல்காப்பியர், ஒட்டகத்தின் குட்டியை கன்று என்று சொல்ல வேண்டும் என இலக்கணம் வகுக்கிறார். உறையூர் மணல்மாரியால் மூடியதால் சோழர்கள் இடம் பெயர்ந்ததாக பழந்தமிழ் மரபுகள் சொல்கின்றன. மணல்மழை பாலைவனத்தில் தான் சாத்தியம்.இன்னொரு உதாரணம் சொல்கிறேன். “பொன்படு கொங்கானம்” என்ற வரி. கொங்கணம் அதாவது கோவா, மகாராஷ்டிரப் பகுதி. இப்போதைய கொங்கண் பகுதியில் உள்ள டைமாபாத் என்ற இடத்தில் சிந்துவெளி நாகரிகக் கூறுகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.ஆக, சிந்துவெளி நாகரிகம் விட்ட இடமும் தமிழ்ச் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாக இருக்கக் கூடும் என்றே கருதுகிறேன்.தமிழனின் பழைய வரலாறு என்ன என்கிற கேள்வியும், சிந்துவெளியில் வாழ்ந்தவர்கள் யார் என்கிற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.ஊர்ப் பெயர்கள் சாகா வரம் பெற்றவை. அவை புலம்பெயரும் மனிதனின் நினைவோடு சென்று உயிர் பெறுகின்றன. பிறதுறை ஆய்வுகளின் உதவியுடன் செய்யப்படுகிற அறிவுப்பூர்வமான ஆய்வுகள், இந்திய வரலாற்றை உண்மையின் ஒளி கொண்டு மீட்டெடுக்க வழி செய்யும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.

(– ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். : ஒரிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன். கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர். இவரது வீடு சென்னை பெருங்குடியில் இருக்கிறது. இடப் பெயர்களின் ஆய்வில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் இவர், சிந்துவெளி ஆய்வு பற்றிய தன் கட்டுரையை முதலில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் ஐராவதம் மகாதேவன், அஸ்கோ பர்ப்போலா போன்ற அறிஞர்கள் முன்னிலையில் சமர்பித்தார். தனது ஆய்வுகளை முடிப்பதற்காக தன் அரசுப் பணிக்கு 2ஆண்டுகள் விடுமுறை சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.)


உலகத் தமிழர் பேரவை-யில் உறுப்பினராக….. இங்கு அழுத்தவும்

Tags: 
Subscribe to Comments RSS Feed in this post

23 Responses

  1. Pingback: Sheshadri

  2. Pingback: கருப்பையா சந்தானம்

  3. Pingback: Ravi-Swiss

  4. Pingback: R.Kailai Rajan

  5. Pingback: சி

  6. Pingback: ஜெயசந்திரா டதி

  7. Pingback: Mohamed

    • Pingback: Bala

  8. Pingback: Preetha

  9. Pingback: Raja baskar

  10. Pingback: Preetha

    • Pingback: Shree Varshan

  11. Pingback: Rajabather Sampath Kumar

  12. Pingback: vignesh

    • Pingback: Bala

  13. Pingback: Dhilipkumar

  14. Pingback: R.Kailairajan

  15. Pingback: சி.சதிஷ்

  16. Pingback: Dsanthaseelan

  17. Pingback: Thavabalachandran Kasipillai

  18. Pingback: Sivaprakash

  19. Pingback: ஆ.தேவதாஸ்

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: