‘ரெட்டைமலை சீனிவாசன்’ – சாதி ஒழிப்புக் குறியீடு!

'ரெட்டைமலை சீனிவாசன்' - சாதி ஒழிப்புக் குறியீடு!

‘ரெட்டைமலை சீனிவாசன்’ – சாதி ஒழிப்புக் குறியீடு!

‘ரெட்டைமலை சீனிவாசன்’ – சாதி ஒழிப்புக் குறியீடு!

அது அதிகம் வளர்ச்சிப் பெறாத பழைய சமூகம். உழைப்பால் சுரண்டப்படும் விளிம்பு நிலை மக்கள், சுரண்டல் சுமையில் இருந்து தங்களைத் தற்காலிகமாக விடுவித்துக் கொள்ள, மதுவின் பாதையைத் தேர்ந்தெடுத்தனர். இதையே எதிர்பார்த்திருந்தது போல, அப்போதைய பிரிட்டிஷ் அரசு இதைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால், அவரால் அப்படி பொறுத்துக் கொண்டு இருக்க முடியவில்லை. அப்போதைய சென்னை மாகாண சட்டமன்றத்தில் உறுப்பினராக அங்கம் வகித்தவர், தமது வரம்புக்குள் இருந்து ஒரு முக்கியத் தீர்மானத்தை முன்வைத்தார். “ஏழை எளிய மக்கள் ஓயாமல் உழைத்து, சிறுகச் சேர்ந்த கூலியையும் இந்த மதுவில் இழந்து விடுகின்றனர். வருமானம் மட்டுமல்லாமல் உடல் நலச் சீரழிவால் வாழ்க்கையையும் இழந்து, ஒரு கட்டத்தில் உயிரையும் இழந்து விடுகிறார்கள். எனவே பூரண மதுவிலக்கு வேண்டும்” என்பதே அத்தீர்மானத்தின் சாரம்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இதற்கு, இப்போதைய தமிழ்நாடு அரசு போலவே, அப்போதைய பிரிட்டிஷ் அரசு, “இதனால் வருமான இழப்பு ஏற்படும்” என்றது. இந்தப் பதிலில் திருப்தியடைவில்லை அவர். விடாப்பிடியாக வாதாடினார். இறுதியில் ‘விடுமுறை நாட்களில் பூரண மதுவிலக்கு அமல்படுத்துவோம்’ என்று ஒப்புக் கொண்டது பிரிட்டிஷ் அரசு. இது, குறைந்தபட்ச வெற்றி என்றாலும் தமிழ்நாட்டு வீதிகளில் மதுக்கடைக்கு எதிரான இன்றையப் போராட்டங்களுக்கு அவர் 24.09.1929 அன்று கொண்டு வந்த தீர்மானமே முன்னோடி. அவர்தான் ‘தாத்தா’ என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் ‘ரெட்டை மலை சீனிவாசன்’.

தம் சிந்தனை, செயல் அனைத்தையும் மக்களுக்காகவே அர்ப்பணித்த ரெட்டைமலை சீனிவாசனின், 1859-ம் ஆண்டு, ஜூலை 7-ம் தேதியான செங்கல்பட்டு மதுராந்தகம், கோழியாளம் எனும் கிராமத்தில் சடையன் என்ற ஏழை விவசாயிக்கு மகனாகப் பிறந்தார். ஒடுக்கப்பட்ட – தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒருவர் எதிர்கொள்ளும் அத்தனைவிதமான தீண்டாமைக் கொடுமைகளையும் அனுபவித்தார். சாதிய துவேஷம் காட்டிய சமூகத்துக்கு தமது கல்வியின் மூலம் பதிலடி கொடுத்தார். அகில இந்தியளவில் சட்டம் பயின்று கம்பீரமாக உயர்ந்து நின்ற அண்ணல் அம்பேத்கர் போல், தமிழ்நாட்டில் பி.ஏ பட்டதாரியாக உயர்ந்தார் ரெட்டைமலை சீனிவாசன். தொடக்கத்தில் பொதுவான ஒரு மாணவராக இருந்தாலும், கோவை அரசினர் கலைக் கல்லூரியில் படித்த அயோத்திதாச பண்டிதர் காலத்தில், அரசியல் ரீதியாக பண்பு மாற்றமடைந்தார். அதற்கு புறக்காரணமில்லாமல் இல்லை. அங்கே பயின்ற நானூறுக்கும் மேற்பட்ட மாணவர்களில் 10 மாணவர்கள் மட்டுமே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள். ஏனையோர் அனைவருமே மேட்டுக்குடி சமூகத்தில் பிறந்தவர்கள் எனும்போது, ரெட்டைமலை சீனிவாசன் எதிர் கொண்ட சமூக ஒதுக்குதலை உணர்ந்து கொள்ளலாம். அதை முறியடிக்க கல்வியைக் கடந்து, ‘ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை அரசியல்’ அவசியம் என்பதை நோக்கி நகர்ந்தார். அந்த காலக்கட்டத்திலேயே அறிஞர் அயோத்திதாச பண்டிதரின் அறிமுகமும் கிடைத்தது. ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலை அரசியல் குறித்தான கல்வியை கோட்பாடு அடிப்படையில் அவரிடமே பயின்றார். பிற்காலத்தில் தமது தங்கை தனலட்சுமியை அயோத்திதாச பண்டிதருக்கு மணம் முடித்து மைத்துனருமானார்.

‘சூத்திரரைத் தொட்டால் தீட்டு, பஞ்சமரைப் பார்த்தாலே தீட்டு’ என கொடூரமாக வெளிப்பட்ட சாதியத்துக்கு எதிராக, தமது எழுத்துக்களையே ஆயுதமாக ஏந்தினார். எந்த சாதியின் பெயரால் மக்களை தாழ்த்தினார்களோ, அதே பெயரில் பத்திரிகை தொடங்கி கலகக்காரராக மிளிர்ந்தார். 1893-ம் ஆண்டு அவர் தொடங்கிய ‘பறையன்’ இதழ், ஒடுக்கப்பட்ட மக்களை ஒரு முகாமாகத் திரட்டியது. தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையை மைய்யக் கூறாக வைத்து இயங்கிய பத்திரிகையில், கல்வெட்டுகள், அரசு குறிப்பேடு ஆய்வுகள் ஆகியவற்றின் மூலம் சமத்துவ சமூகத்துக்கான முன்னெடுப்புகளைத் தொடர்ந்தார். தமது ‘பறையர் மகாஜன சபை’ என்ற அமைப்பின் மூலம், சாதிக் கொடுமைகளை எதிர்த்துப் போராட்டங்களைக் கட்டியமைத்தார். தேர்ந்த மொழி புலமை உள்ளவர் ரெட்டைமலை சீனிவாசன். அண்ணல் காந்தியடிகளுக்கும், மாபெரும் எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய்க்கும் உள்ள நட்பு அனைவரும் அறிந்ததே. இதில் அதிகம் வெளியே தெரியாத, அல்லது பதிவு செய்யப்படாத முக்கிய விடயம் ஒன்று உள்ளது. ஒருமுறை காந்தி, லியோ டால்ஸ்டாய் எழுதிய கடிதத்தில், ‘தம்மை துன்புறுத்துபுவரிடமும் தண்டிக்காமல் மன்னிக்கும் குணம் குறித்து நீங்கள் எழுதிய வரிகள் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது’ என்று சிலாகித்தார். அதற்குப் பதிலளித்த லியோ டால்ஸ்டாய், ‘இந்தப் பெருமையெல்லாம் உங்கள் நாட்டில் உள்ள சிறப்புமிக்க தமிழ் மொழியின் திருக்குறளையேச் சாரும். அதுவே மானுடத்தை எனக்குள் மெருகேற்றியது’ என்று ‘இன்னா செய்தாரை’ குறளையும் எழுதி அனுப்புகிறார்.

அதில், உருகிய அண்ணல் காந்தி, ‘ஆங்கிலத்தில் படித்தபோதே திருக்குறள் சிறப்பானதாக இருக்கிறதே… அதன் மூலமொழியான தமிழ் மொழியில் பயின்றால் எந்தளவு சுக அனுபவமாக இருக்கும்’ என்று தமிழ் படிக்க ஆர்வப்படுகிறார்.

இப்படி பன்முக ஆளுமையாக ஒளிர்ந்த அவர், அப்போதைய மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தப்படி நியமன சட்டமன்ற உறுப்பினராக சென்னை சட்டமன்றத்தில் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் பல. அதில் முக்கியமானவை, 22.08.1924-ல் சட்டமன்றத்தில் மொழியப்பட்டு, 24.02.1925 அரசிதழில் (கெசட்) வெளியிடப்பட்ட தீர்மானமாகும்.

‘பொதுக்கிணறு, பொது இடம்’ போன்றவை தாழ்த்தப்பட்ட மக்களால் பயன்படுத்த முடியாமல் இருந்த தடையைத் தகர்த்தெறிந்தது அந்தத் தீர்மானம்தான்! ‘எங்கள் கால்கள் படாமலே எத்தனையோ குளங்கள் வறண்டு போயின’ என்று ‘தீண்டாத வசந்தம்’ நாவலில் குமுறியிருப்பார் எழுத்தாளர் ஜி.கல்யாணராவ். அந்த வலியை தாழ்த்தப்பட்ட மக்களைப் போன்று ரத்தமும், சதையுமாக புரிந்து கொள்ள, ஏனைய பொது சமூகத்தால் இயலாது. ரெட்டைமலை சீனிவாசனின் தீர்மானத்தினால் பொதுக்கிணறு, பொதுக் குளங்களை பயன்படுத்தத் அண்ணல் அம்பேத்கர் தொடங்கி தங்கள் மீது சுமத்தப்பட்டிருந்த சாதியத் தீண்டாமைக் கறைகளை துடைக்கத் தொடங்கினர் ஒடுக்கப்பட்ட மக்கள். அரசாணை எண் 817 மூலம் 25.03.1922-ல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ‘ஆதிதிராவிடர்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ‘அரசாணை வெளியிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் கூட பல பத்திரப்பதிவு அலுவலகங்களில் பறையன், பஞ்சமன் என்றே பதிவு செய்கிறார்கள். இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்’ என ரெட்டைமலை சீனிவாசன் 25.08.1924-ல் சட்டசபையில் முறையிட்டார்.

1930–32 ஆண்டுகளில் லண்டனில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாடுகளில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக அண்ணல் அம்பேத்கருடன் இணைந்து பயணித்தார். அங்கு, ‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரட்டை வாக்காளர் தொகுதி வழங்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களின் விகிதாச்சார அளவுக்கு ஏற்ப கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் உரிய பங்கு அளிக்கப்பட வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார் ரெட்டைமலை சீனிவாசன். பத்திரிகையாளர், கல்வியாளர், சட்டமன்ற உறுப்பினர் என எந்த வடிவத்தில் பயணித்தாலும் ‘சாதி ஒழிப்பு’ என்ற கொள்கையையே உயிர் மூச்சாகக் கொண்டிருந்த தாத்தா ரெட்டைமலை சீனிவாசன், 1945 செப்டம்பர் 18-ம் தேதியன்று தமது சிந்தனையை முழுமையாக நிறுத்திக்கொண்டார். ஆம், இம்மண்ணைவிட்டு மறைந்தார் அந்த மகத்தான மனிதர்!

அதிகாரமென்பது மேலிருந்து கீழே திணிக்கப்படக் கூடாது. கீழிருந்து மக்களை மேம்படுத்தும் சமத்துவத் திட்டமாகப் பரவ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன். “நாங்க கோட் போடுறதுதான் உங்களுக்குப் பிரச்சனைனா நாங்க கோட் சூட் போடுவோம்டா” இது கபாலியில் ரஜினி ஒலித்த வசனம். 2016-லேயே இந்த நிலை என்றால், 1,900-வது ஆண்டு காலகட்டத்தைப் புரிந்து கொள்ளலாம். ‘தாழ்த்தப்பட்ட மக்கள் செருப்பு அணியக் கூடாது, தோளில் துண்டு போடக்கூடாது’ என்பது போன்ற ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கோட் சூட் அணிந்து ஒடுக்கப்பட்ட மக்களின் ஐகானாக தலை நிமிர்ந்து நடந்தவர் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன். இந்த கணிப்பொறி காலத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இரட்டை டம்ளர் முறை, குடிசை எரிப்பு என சாதிய அமிலம் பரவி வரும் சமூகத்தில், முறுக்கு மீசையோடு கம்பீரமாகக் காட்சி தரும் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன், சாதி ஒழிப்பு அரசியலின் குறியீடு!

  • விகடன்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: