அரிய வகை ஆநிரை நடுகல் மற்றும் சதிகல் சேலத்தில் கண்டுபிடிப்பு!

அரிய வகை ஆநிரை நடுகல் மற்றும் சதிகல் சேலத்தில் கண்டுபிடிப்பு!

அரிய வகை ஆநிரை நடுகல் மற்றும் சதிகல் சேலத்தில் கண்டுபிடிப்பு!

ஓமலூர் வட்டம் அழகுசமுத்திரம் கிராமத்தில், சீரான்கரடு என்ற இடத்தில், சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், அரியவகை ஆநிரை நடுகல் ஒன்றும், கருக்கல்வாடி என்ற இடத்தில் ஒரு சதிகல்லையும் கண்டறிந்தனர்.

சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அடங்கிய குழு, நடுகல்லையும், சதிகல்லையும் ஆய்வு செய்தனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

சங்க காலத்தில், ஆநிரைப் போர்கள் நடைபெற்று வந்துள்ளன. மன்னர்களும் ஆநிரைப் போரில் ஈடுபட்டதை `புறநானூறு’, `பதிற்றுப்பத்து’ நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆநிரைப் போரை `பூசல்’ என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். பசுக்கூட்டங்களைப் பகைவர்கள் கவர்ந்து சென்றதைத் `தகடூர் யாத்திரை’ என்ற நூலில் ஒரு பாடல் விளக்குகிறது. பசுக்கள், எருமைகள், ஆடுகள் போன்ற கால்நடைகளைக் கவர வந்தவர்கள், வெட்சிப்பூவை அணிந்துவந்தனர். அதைத் தடுத்துக் காக்கும் முயற்சியில் ஈடுபட்ட வீரர்கள், கரந்தைப்பூவை அணிந்தனர். அக்கால கட்டங்களில் கால்நடைகளே மக்களின் பெரும் சொத்தாக இருந்துவந்தது. ஆநிரை கவர்தல் அல்லது மீட்டலின்போது நடக்கும் சண்டைகள், `தொறுபூசல்’ என அழைக்கப்பட்டது. சில போர்கள் துவங்கும் முன் முன்னோட்டமாக எதிரி நாட்டிலிருந்த கால்நடைகள் கவர்ந்து வரப்பட்டன.பெரும்பாலும் கால்நடைகளை மீட்கும்போது, உயிழந்த வீரர்களுக்கே நடுகல் எடுக்கப்பட்டது. சில பல்லவர் கால நடுகற்களில் மாடுகளின் உருவமும், வட்டெழுத்தில் கல்வெட்டும் காணப்படுகிறது.

அழகுசமுத்திரம் என்ற கிராமத்தில், சீரான் கரடு என்ற இடத்தில் இந்த நடுகல் உள்ளது. இந்த இடத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை மிகப் பெரும் மாட்டுச் சந்தை நடந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நடுகல்லானது 125 செ.மீ உயரமும், 40 செ.மீ அகலமும், 24 செ.மீ தடிமனும் உடையதாக உள்ளது. ஒரு பலகைக்கல்லில் புடைப்புச்சிற்பமாக உருவங்கள் வெட்டப்பட்டுள்ளன. மூன்று படிநிலைகளில் நடுகல் அமைந்துள்ளது. முதல் நிலையில், நான்கு பசுக்கள் காட்டப்பட்டுள்ளன. தலையை சற்று உயர்த்திய நிலையில் இடதுபக்கம் இரு பசுக்களும், வலது பக்கம் இரு பசுக்களும் ஒன்றை ஒன்று பார்த்த நிலையில் உள்ளன. இரண்டாம் நிலையில் இரு இடையர்கள் மேய்ச்சல் கழிகளின் மீது சாய்ந்து கொண்டு புல்லாங்குழல் ஊதுகின்றனர்.அவர்களின் இடது பக்கம், இசையில் மயங்கிய நிலையில் ஒரு பசு காட்டப்பட்டுள்ளது. மூன்றாம் நிலையில் இருவர் காட்டப்பட்டுள்ளனர். நேராக நின்ற நிலையில், வீரன் ஒருவன் கோதண்டம் போன்ற உயரமான வில் ஒன்றைப் பற்றியுள்ளான். வலது கையில் அம்பைப் பிடித்துள்ளான். முதுகில் அம்புக்கூடு, கைகளில் தோள்வளையம், காலில் காப்பு காட்டப்பட்டுள்ளன. ஆநிரையைக் காத்து போரிட்டபோது, இறந்த வீரனாக இவன் இருக்கலாம். இவனின் இடது பக்கம் கொங்காணி அணிந்த நிலையில் ஒருவர் உள்ளார். இவர், இடையர் கூட்டத்தின் தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல்லின் பக்கவாட்டில் ஒன்றன் கீழ் ஒன்றாக 6 பசுக்கள் காட்டப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் இந்த வகை நடுகல் கண்டறியப்படுவது இதுவே முதன் முறையாகும்.

தமிழகத்தில், இதற்கு முன் ஆனைமலையில் மட்டுமே இதுபோன்று ஒரு நடுகல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நடுகல் பற்றி தொல்லியல் ஆய்வாளர்கள் இடையே சற்று மாறுபட்ட கருத்து நிலவுகிறது. தமிழக தொல்லில்துறையில் இணை இயக்குநர்களாக இருந்து ஓய்வு பெற்ற ஆய்வாளர்கள் பூங்குன்றன், சாந்தலிங்கம் ஆகியோர், இது ஆநிரை மீட்டலின்போது உயிரிழந்த வீரனுக்கு வைக்கப்பட்ட நடுகல் எனக் கருதுகின்றனர்.

தமிழக தொல்லியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆய்வாளர் சு.ராஜகோபால் அவர்கள், “இது வழிபாட்டுக் கல்லாகவோ அல்லது நினைவுக்கல்லாகவோ இருக்கலாம். நிறைய மாடுகளும், மேய்சல் நிலமும் காட்டப்பட்டிருப்பதாலும் ஆயுதங்கள் காட்டப்படாததாலும், சண்டை நடந்திருக்க வாய்ப்பில்லை. மேலே மூன்றாம் நிலையில் வில் அம்புடன் காணப்படுபவர் ராமனாக இருக்கலாம்” என்று கூறுகிறார். இதன் காலம், 15-ம் நூற்றாண்டாக இருக்கலாம்.

ஓமலூர் வட்டம் கருக்கல்வாடி என்ற ஊரில் மாதேஸ் என்பவர் நிலத்தில் ஒரு சதிகல்லானது காணப்படுகிறது. ஒரு பலகைக்கல்லில் புடைப்பு சிற்பங்களாக உருவங்கள் வெட்டப்பட்டுள்ளன. இதன் உயரம் 110 செ.மீ அகலம் 83 செ.மீ. ஏக பங்க நிலையில் வீரன் காட்டப்பட்டுள்ளான். நாயக்கர் கால கொண்டை, மீசை, காதுகளில் குண்டலம், கழுத்தில் சவடி, சரபளி, மார்பில் சன்ன வீரம், தோளில் வாகு வளையம், இடையில் அரையாடை, இடுப்பில் குறுவாள், இடது காலில் தண்டையுடன் வீரன் காட்டப்பட்டுள்ளான். வலது கையில் உள்ள நீண்ட வாளானது பூமியை நோக்கி உள்ளது, இடது கையானது கேடயத்தின் மீது தங்கியுள்ளது. வீரனின் வலது புரம் அவன் மனைவி காட்டப்பட்டுள்ளார். இடது பக்க கொண்டை , காதில் அணிகலன்கள் கழுத்தில் இரட்டைச்சரம் உள்ளது. மார்புகச்சை காட்டப்படவில்லை. இடது கையை உயர்த்திய நிலையில் மலர் ஒன்றை ஏந்தியுள்ளார். வலது கையில் மதுக்குடுவை காணப்படுகிறது. நடுகல் வீரர்களுக்கு கள் வைத்து படைக்கும் வழக்கம் பல்லவர் காலம் முதலே இருந்து வந்துள்ளது. கைகளில் வளையல் , முழு ஆடை காட்டப்பட்டுள்ளது. இவர்களை சுற்றி கரடு வெட்டப்பட்டுள்ளது. இந்தப் பகுதியை 16-ம் நூற்றாண்டில் கெட்டிமுதலி மன்னர்கள் ஆண்டு வந்தனர். அப்போது நடந்த போரில் இந்த வீரன் இறந்திருக்க கூடும். கணவன் இறந்தவுடன் மனைவியும் உடன்கட்டை ஏறி இறந்துள்ளார். எனவே இது சதிகல்லாகும். இதன் காலம் 16-ம் நூற்றாண்டாக இருக்கலாம்.

கருக்கல்வாடி ஊரிலுள்ள மாரியம்மன் கோயிலுக்கு அருகே விளைநிலத்தில் மிகவும் சிதைந்த நிலையில் துண்டு கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. அதில் இந்த ஊரை கல்பாடி எனவும், இங்குள்ள இறைவனை காகதீஸ்வரமுடையார் எனவும் குறிப்பிடுகிறார்கள். “இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல வரலாற்று தடயங்கள் கிடைக்கலாம்’’ என சேலம் வரலாற்று ஆய்வுமைய குழுவினர் தெரிவித்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: