திருச்சி அருகே இராஜேந்திரசோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே இராஜேந்திரசோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே இராஜேந்திரசோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருச்சி மாவட்டம், கிளியூர் அருகிலுள்ள கோட்டாரப்பட்டி கிராமத்தில் இராஜேந்திரசோழர் கால கல்வெட்டுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி டாக்டர் மா.ராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய இயக்குநர் டாக்டர் இரா. கலைக்கோவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிளியூருக்கு அருகிலுள்ள பத்தாளப்பேட்டை ஊராட்சி கோட்டாரப்பட்டி கிராமத்தில் நீர் வற்றிய குளத்தின் கரையைச் சீரமைத்த போது, கல்வெட்டெழுத்துகள் உடன் கற்பலகை ஒன்று கிடைத்தது. அந்த கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ள அக்கற்பலகை 69 செ.மீ. உயரம், 48 செ.மீ. அகலம் கொண்டது. அதில், 10 வரிகளில் தமிழ் எழுத்துகளில் செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. சிற்சில எழுத்துகளைத் தவிர கல்வெட்டுச் சிதைவின்றி முழுமையாக உள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


கல்வெட்டுப் பொறிப்பின் கீழ் உள்ள பகுதியில் கல்வெட்டுக் காலத்தோடு தொடர்பில்லாத கோட்டுருவமாக நாய் ஒன்றின் வடிவம் நடக்கும் பாவனையில் செதுக்கப்பட்டுள்ளது. இக்கற்பலகை அருகே மண்ணுக்குள் பாதி புதைந்த நிலையில் சூலம் பொறிக்கப்பட்ட கனமான கல்லொன்றையும் காண முடிகிறது. இது சிவன் கோயில் ஒன்றுக்குக் கொடையளிக்கப்பட்ட நிலத்துண்டின் எல்லைக் கல்லாக இருந்திருக்கலாம்.
கல்வெட்டைப் படித்த பேராசிரியர் மு. நளினி, இராஜேந்திரசோழரின் முதன்மை அரசு அலுவலர்களுள் ஒருவரான மனசய தண்டநாயக்கர் சோழ அரசரின் மூன்றாம் ஆட்சியாண்டின்போது, கரணப்பற்றின் கீழிருந்த கீழைச் செந்தாமரைக்கண்ண நல்லூரில் பாசன வசதிக்காக வாய்க்கால் ஒன்றை வெட்டியதாகவும், அந்த வாய்க்கால் கிராமத்தில் வடக்கு நோக்கிப் பாய்ந்தது சூழ இருந்த நிலங்களை வளப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

பெரியகோயில் என்று கல்வெட்டுகளில் அழைக்கப்படும் திருவெள்ளறை புண்டரிகாட்சப் பெருமாள் கோயில் இறைவன் சோழர் காலத்தில் செந்தாமரைக்கண்ணன் என்றழைக்கப்பட்டதாகவும் அக்காலத்தே காவிரியின் இருகரைகளிலும் இருந்த ஊர்கள் சில இப்பெயரையேற்று செந்தாமரைக்கண்ண நல்லூர் என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கான சான்றுகள் திருப்பைஞ்ஞீலி, திருவரங்கம் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இதன் பின்னணியின் மனசய தண்டநாயக்கர் வாய்க்கால் வெட்டிய செந்தாமரைக்கண்ண நல்லூரும் திருவெள்ளறைப் பெருமாள் பெயரிலேயே அமைந்தது எனக் கொள்ளலாம். திருவெள்ளறைக் கோயில் இறைவனுக்கு அளிக்கப்பட்ட நிலத்துண்டுகள் அவ்வூரில் இருந்தமையை ஊர்ப் பெயரின் இறுதிப்பகுதியான நல்லூர் நிறுவுகிறது.

திருச்சிராப்பள்ளியிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் சோழர் அரசர்களின் கல்வெட்டுகள் பலவாகக் கிடைத்த போதும் அம்மரபின் இறுதி மன்னரான மூன்றாம் இராஜேந்திரசோழரின் கல்வெட்டுகள் மிகக் குறைவாகவே கிடைத்துள்ளன. அந்தவகையில் இப்புதிய கல்வெட்டு முக்கியத்துவம் பெறுவதுடன் ஒய்சளர் ஆதிக்கம் பெற்றிருந்த இப்பகுதியில் சோழ அரசரின் மேலாண்மையும் இணைய இருந்ததை உறுதிப்படுத்துவதாகக் கொள்ளலாம்.

முக்கியத்துவம் வாய்ந்த இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ள கற்பலகையைக் காப்பாற்றும் விதமாக இதைத் திருச்சி அருங்காட்சியகத்தில் சேர்க்க வேண்டும் என ஊர் மக்கள் தம்மிடம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அருங்காட்சியகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கலைக்கோவன் தெரிவித்துள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: