பைந்தமிழ் வளர்த்த பரிதிமாற் கலைஞர்!

பைந்தமிழ் வளர்த்த பரிதிமாற் கலைஞர்!

பைந்தமிழ் வளர்த்த பரிதிமாற் கலைஞர்!

ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ‘சூரிய நாராயண சாஸ்திரி’ எனும் வடமொழிப் பெயர் நீக்கி ‘பரிமாற்கலைஞர்’ என்று தனித் தமிழில் சூட்டிய பெருமகனார்.

உயர்தனிச்செம்மொழி தமிழென்றும், வடமொழிக்கு முந்திப் பிறந்தது தமிழென்றும் உலகுக்கு அறிவித்தவர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


அது மட்டுமின்றி, பிரித்தானியரால் திணிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கு தமிழர்கள் அடிபணியக் கூடாது என்றும் ஆணித்தரமாக வாதுரை செய்தவர் நம் பைந்தமிழ் வளர்த்த பரிதிமாற் கலைஞர்
ஆவார்.

இவர் 6.7.1870 ஆம் ஆண்டு மதுரைக்கு அருகில் உள்ள விளாச்சேரி எனும் சிற்றூரில் பிறந்தார். பெற்றோர் இவருக்கு சூரியநாராயணன் என்று பெயரிட்டனர். இவர் தமது தந்தையார் கோவிந்த சிவன் அவர்கள் மூலம் வடமொழி கற்றதோடு, தொடக்கப் பள்ளியில் சேர்ந்து தமிழும், கணிதமும் கற்றார். பசுமலையில் படித்துக் கொண்டிருக்கும் போதே, பாலகிருஷ்ண நாயுடு என்பவரிடம் சிலம்பம், மல்யுத்தம் போன்ற கலைகளைக் கற்றுக் கொண்டார்.

அதன்பின்னர், 1885இல் மதுரை நகரில் உள்ள மாவட்ட உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். அங்கு மகாவித்துவான் க.சபாபதி முதலியாரிடம் பழகி தமிழறிவை முதன்முதலில் அவரிடமிருந்து வளர்த்துக் கொண்டார்.

தமது பத்தொன்பதாவது வயதில் முத்துலெட்சுமி அம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார்..அவருக்கு ஆனந்த வல்லி என்ற மகளும், நடராசன், சுவாமி நாதன் என்ற இரு மகன்களும் உண்டு.

பின்னர் சென்னை சென்று அங்குள்ள கிறித்துவக் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. படித்து வந்தார். அப்போது அங்கு கல்லூரி முதல்வராக டாக்டர் வில்லியம் மில்லர் என்பவர் பணியாற்றி வந்தார். வில்லியம் மில்லர் ஸ்காட்லாந்துக்காரர். இவர் பெரும் செல்வந்தர். தானீட்டிய வருவாயை கல்விக்காக செலவிடுபவர். இவர் ஆங்கில இலக்கியப் பாடம் நடத்துவதை மாணவர்கள் அனைவரும் விரும்பிக் கேட்பது வழமை.

ஒருமுறை, டாக்டர் மில்லர், டென்னிசன் எழுதிய “ஆர்தரின் இறுதி” (Morte D’ Arthur) என்ற பாடலின் பகுதியில் வரும் உவமையை எடுத்துக் கூறினார். துடுப்புகள் இருபுறமும் தள்ள, நீரில் மிதந்து போகும் படகு , பறவை தன் சிறகுகளை விரித்து விசிறியபடி நீந்துவது போல் உள்ளது என்று குறிப்பிட்டு விட்டு, இது போன்ற உவமையை உமது தமிழ் இலக்கியத்தில் காட்ட முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது, சிறிதும் தாமதியாமல் பரிதிமாற் கலைஞர் எழுந்து, “நீங்கள் போற்றும் டென்னிசன் பிறப்பதற்கு ஒன்பது நூற்ற்றாண்டுகளுக்கு முன்பே எங்கள் கவிச்சக்கரவர்த்தி கம்பர் இந்த உவமையை கையாண்டுள்ளார்.” என்றார். அத்தோடு, அயோத்தி காண்டத்தில், கங்கை படலத்தில் வரும்

“விடுநதி கடிதென்றான் மெய்யுயி ரனையானு
முடுகின நெடுநாவாய் முரிதிரை நெடுநீர்வாய்க்
கடிதினின் மடவன்னக் கதியது செலநின்றா
ரிடருற மறையோரு மெரியுறு மெழுகானார்”

பாடலை பாடிக் காட்டியவுடன் மில்லர் எழுந்து வந்து கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தார். அன்றிலிருந்து பரிதிமாற் கலைஞர் மீது டாக்டர் மில்லருக்கு அளவு கடந்த அன்பும், மரியாதையும் ஏற்பட்டது.

மேலும், அக்கல்லூரியிலேயே தத்துவத்துறைக்கு ஆசிரியராக பரிதிமாற் கலைஞரை நியமிக்க மில்லர் முடிவு செய்தார். இதனை ஏற்க மறுத்து பரிதிமாற் கலைஞர் தமிழ்த்துறையில் ஆசிரியராக தன்னை நியமிக்கும்படி கேட்டுக் கொண்டார். இதற்குக் காரணம் அன்றைய நிலையில் மாணவர்கள் வேலை பெறும் நோக்கோடு தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்தைப் படித்து வந்தனர். இந்நிலையை மாற்றி தமிழின் பால் மாணவர்களை ஈர்ப்பதற்கு தமிழாசிரியப் பணியே சிறந்ததாகக் கருதினார். அப்போது தமிழாசிரியருக்கு சம்பளம் வேறு குறைவு.

பரிதிமாற்கலைஞரின் தமிழார்வத்தைப் புரிந்து கொண்ட டாக்டர் மில்லர் தமிழ்த்துறையை அளித்ததோடு, தத்துவத்துறை பேராசிரியர் பெறும் சம்பளத்தை அளிக்கவும் உத்தரவிட்டார்.

ஒருமுறை, அக்கல்லூரியில் தமிழில் முதலிடம் வந்த வ.சு.செங்ககல்வராய பிள்ளை என்ற மாணவருக்கு பரிசு தராமல், ஆங்கிலத்தில் முதலிடம் வந்த ஆர்.வி. கிருஷ்ணய்யர் என்ற மாணவருக்கு பரிசு அளிக்கப்பட்டது. இதைக் கண்டித்து டாக்டர் மில்லரிடம் நேரில் வாதாடி, தமிழில் முதலிடம் வந்த மாணவருக்கே பரிசினைப் பெறும்படிச் செய்தார்.

அதேபோல், தமிழ்ப்பாடத்தில் மனம் ஒட்டாது கவனமின்றி இருக்கும் மாணவர்களிடம் கண்டிப்போடு நடந்து கொள்வார். ஒருமுறை வகுப்பறையில் பாடம் நடத்தும் போது இதுபோன்ற மாணவனொருவன் சிக்கினான். அப்போது அவனிடம், “நமது சொற்பொழிவை பொருட்படுத்த விரும்பாத நீ இங்கிருந்து எழுவாய், நீ இங்கிருப்பதால் உனக்கோ பிறர்க்கோ பயனிலை, இங்கிருந்து உன்னால் செயப்படுபொருள் இல்லை, ஆதலால் வகுப்பில் இருந்து வெளியேறுக” என நயம்பட உரைத்து வெளியேற்றினார்.

டாக்டர் மில்லரிடம் மாணவர் பருவத்திலிருந்து உறவு வைத்திருந்ததைப் போலவே, யாழ்ப்பாண அறிஞர் சி.வை.தமோதரனார் அவர்களிடமும் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். சி.வை.தமோதரனார் தமிழ் ஓலைச்சுவடிகளை அச்சில் ஏற்றியதில் உ.வே.சா.விற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். இவர் 1892இல் பரிதிமாற் கலைஞர் பி.ஏ. தேர்வில் தமிழிலும், தத்துவத்திலும் முதலிடம் பெற்ற போது வீட்டிற்கு அழைத்து வந்து பாராட்டினார்.

செந்தமிழ் நடையில் எழுதுவதிலும், சேக்சுபியர் நாடகங்களை தமிழில் மொழிபெயர்த்து தருவதிலும் பரிதிமாற் கலைஞரின் ஆற்றலைக் கண்டு வியந்த தாமோதரனார் ” சாஸ்திரியென்னும் பட்டம் புனைந்திருந்தும், வடமொழி பயில்வதையே தமது குலக் கடமையாகக் கொள்ளும் வகுப்பில் பிறந்திருந்தும், திராவிடமொழியில் ஆழ்ந்த பற்றுக் கொண்டு, அதன் மேன்மையை உலகுக்கு உணர்த்துவதில் உயரிய குறிக்கோள் பெற்றிருக்கும் உம்மைத் ‘திராவிட சாஸ்திரி’ என்று அழைத்தல் சாலப் பொருந்தும்” என்றார்.

எப்போதும் பரிதிமாற் கலைஞரின் கவிதை நடை எளிமையாகவும், உரைநடை கடினமாகவும் இருக்கும். சி.வை.தாமோதரனார் உயர் செந்தமிழ் நடையில் ஒரு நூலினை எழுத வேண்டுமாறு கேட்டுக் கொள்ளவே, பரிதிமாற் கலைஞரும் ‘மதிவாணன் – புதுவது புனைந்ததோர் செந்தமிழ்க் கதை” என்ற புதின நூலினை எழுதி வெளியிட்டார். தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன்முதலாக உயர் செந்தமிழ் நடையில் எழுதப்பட்ட நூல் இதுவேயாகும்.

1897இல் “ஞானபோதினி” இதழின் மூலமாக நவீன காலத்திற்கேற்ற வகையில் செய்யுள் வடிவில் தனிப்பாசுரங்களை எழுதி வெளியிட்டார். இதில்தான் முதன்முறையாக சூரிய நாராயண சாஸ்திரி எனும் வடமொழிப் பெயரை விடுத்து, பரிதிமாற் கலைஞன் எனும் புனைப் பெயரில் எழுதினார். (சூரியன்=பரிதி, நாராயணன்= திருமால், சாஸ்திரி= கலைஞன்)

1901ஆம் ஆண்டு மே24 இல் மதுரையில் பாஸ்கர சேதுபதியார் தலைமையில் பாண்டித்துரைத் தேவர் மேற்பார்வையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது. இச்சங்கம் ‘செந்தமிழ்’ எனும் திங்களேட்டை வெளியிட்டது. அதன் முதல் ஏட்டில் தான் பரிதிமாற் கலைஞர் “உயர்தனிச் செம்மொழி தமிழே!” என்று தலைப்பிட்டு கட்டுரை வெளியிட்டார்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட ஆரிய மொழிகள்தான் எல்லா மொழிகளுக்கும் மூலமொழி என்றும், அதிலிருந்துதான் மற்ற மொழிகள் எல்லாம் பிறந்ததாக ஆரியர்கள் கதை கட்டி வந்தனர். இதை மறுத்து பரிதிமாற் கலைஞர் ‘தமிழ்மொழி வரலாறு’ என்ற நூலினை எழுதி வெளியிட்டார்.

அந்நூலில், “ஆரியர்கள் தமிழரிடமிருந்து பல அரிய விசயங்களையும் மொழிபெயர்த்து தமிழர் அறியும் முன்னரே அவற்றை தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டிவிட்டனர். தமிழருக்கு ஆரியர் இந்தியாவிற்கு வரும் முன்னரே எழுதப் படிக்கத் தெரியும். எழுத்து சுவடி யென்பன தனித்தமிழ் சொற்களாதலுங் காண்க!” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலக்கல்வியை அன்றும் பலர் பொருளீட்டுவதற்குப் பயன்படுத்தி தமிழைப் புறக்கணித்து வந்தனர். ஐந்து வமதுக்கு முன்பே குழந்தைகள் மீது ஆங்கிலக்கல்வி திணிக்கப்பட்டதால் அக்குழந்தைகள் வாடி வதங்கி நிற்பதை பரிதிமாற் கலைஞர் பின்வருமாறு தெரிவிக்கிறார்:

“ஐந்து வயதாகுமுன்னர் ஆங்கிலம் கற்கத் தொடங்குகின்றவர், தமிழ் வாசமும் ஏற்காமல் ஆங்கிலக் கல்வி தொடங்கும் மாணவர் உடல் தேய்ந்து கண்பூத்து மனமிற்று நாளடைவில் யமனுக்குணவாகின்றனர்”

குழந்தைகள் பன்னிரெண்டு வயது வரை தமிழ் மொழியில்தான் கல்வி கற்க வேண்டுமென்பதை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே கூறியவர் பரிதிமாற் கலைஞர் ஒருவரேயாம்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. பட்டப்படிப்பிற்கு ஆங்கிலமொழியை கட்டயாமென்றும், இலத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் ஆகியமொழிகள் விருப்பமொழி என்றும் அறிவிக்கப்பட்டது. அதிலிருந்த தமிழ், தெலுங்கு மொழிகள் வட்டார மொழிகள் என்று நீக்கப்பட்டது. தமிழை நீக்குவதன் மூலம் அவ்விடத்தில் வடமொழி நிலைபெற்று, அம்மொழி பயிலும் பிராமணரே பயனடைவர் என்பதாக பரிதிமாற் கலைஞர் கருதினார்.

தமது படைப்புகளை வெளியிட்டு வரும் “ஞான போதினி” ஆசிரியர் மு.சி. பூரணலிங்கனார் அவர்களுக்கு இதனைத் தெரிவித்ததோடு, உடனடியாக சென்னை செல்வதற்கு தந்தி அடித்தார். இருவரும் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

இரண்டு நாட்களுக்குள் ஆசிரியர் சங்கக் கூட்டம் நடப்பதால், உடனடியாக அனைத்து ஆசிரியர் பெருமக்களையும் சந்திக்க முடிவு செய்தனர். இருவரும் வாடகை வண்டி அமர்த்திக் கொண்டு ஒவ்வொரு ஆசிரியர் வீட்டுக்கதவையும் தட்டி தமிழைக் காப்பாற்றும்படி வேண்டினர்.

இதோடு நில்லாமல் மதுரைக்குச் சென்று பாண்டித்துரை தேவரவர்களை நேரில் கண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக தீர்மானம் நிறைவேற்றும் படி கேட்டுக் கொண்டனர். பாண்டித்துரை தேவரும் இருவரின் முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கினார். பரிதிமாற் கலைஞரும், பூரணலிங்கனாரும் பட்டபாடுக்கு பலன் கிடைத்தது. ஆசிரியர் சங்கக் கூட்டத் தீர்மானமும், மதுரை தமிழ்ச்சங்க தீர்மானமும் சென்னை பல்கலைக் கழகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இறுதியில் தமிழே வெற்றி பெற்றது.

அதுமட்டுமல்லாது தமிழறிஞர் கால்டுவெல் அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலிய மொழிகளை “திராவிட மொழிகள்” என்று அழைத்ததைப் போல, அன்றைக்கு சென்னைப்பல்கலைக்கழகம் தமிழோடு மற்ற மொழிகளை ஒன்றாக இணைத்து “உண்ணாட்டு மொழிகள்” என்று அழைத்து வந்தது. இந்தச் செயலை வன்மையாகக் கண்டித்தும், தமிழ் ஆர்வலர்கள் வாய்மூடி நின்றதையும் குறிப்பிட்டு பின்வருமாறு எழுதினார்:

“தமிழ்நாட்டில் ஆங்கிலவரசாட்சி யேற்பட்ட பின்னர்த் தாய்மொழியாகிய தமிழை அதன் வழிமொழிகளாகிய தெலுங்கு, கன்னட, மலையாள துளுவங்களோடு அடக்கி “உண்ணாட்டு மொழிகள்” என வகைப்படுத்தினர் சிலர். தனிமொழி யொன்றை அதன் வழிமொழிகளோடு வகைப்படுத்தலாமோ? அது முன்னதனை இழிவு படுத்த தாகாதோ? ஆரிய மொழிகளுள் தலை நின்ற வடமொழியை அதன் பாகதகங்களோடு ஒருங்குவைத்து எண்ணத் துணியாமை போலத் தமிழ்மொழியையும் அதன் வழிமொழிகளொடு ஒருங்குவைத்தெண்ணத் துணியாதிருத்தலே அமைவுடைத்தாம்.

இவ்வாறாகவும் சென்னை சர்வகலாசாலையார் மேற்கூறியாங்கு, தமிழை இழிவுபடுத்தி வகுத்த போதே, தமிழராயினார் முற்புகுந்து அவ்வாறு வகைப்படுத்தல் சாலாதென மறுத்திருக்க வேண்டும். அப்போழ்தெல்லாம் வாய்வாளாமை மேற்கொண்டிருந்து விட்டனர் தமிழ் மொழியாளர்”
என்றார்.

தம் வாழ்நாளின் இறுதியில் சென்னை லிங்கிச் செட்டித் தெருவில் வசித்து வந்தார். அப்போது எலும்புருக்கி நோய் மிகுந்து துன்பப் பட்டார். தன்னை வந்து காண்போரிடம், இருமல் எம்முடன் பெருமல் செய்கிறதே! (பெருமல்= பெரிய மற்போர்) என்று துன்பநிலையிலும் விளையாட்டாகக் கூறுவார்.

தனது அருமை மாணவனின் பிணித்துயரம் கேட்டு டக்டர் மில்லர் ஓடோடி வந்தார். பரிதிமாற் கலைஞரின் விரல்களைப் பற்றியபடி, “எனது புருவத்து ரோமங்கள் என் கண்களை மறைக்கின்றன. அவ்வாறு வயது முதிர்ந்தும் நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன். உலக இன்பங்களை அனுபவிக்காத நீர், குறுகிய காலத்தே தமிழ்ப்பணி செய்த நீர் , பலநாள் உலகில் வாழ வேண்டியிருக்க, எமன் உம்மைக் கொண்டு போவது எத்துணைக் கொடுமை ” எனக் கதறி அழுதார்.

பரிதிமாற் கலைஞர் இளம்வயதில் 2.11.1903ஆம் ஆண்டு் காலமானார்.

பரிதிமாற்கலைஞரது ஆசிரியத்தன்மையை பேராசிரியர், உரையாசிரியர், நூலாசிரியர், பதிப்பாசிரியர், இதழாசிரியர் என்று ஐவகையாகப் பிரிக்கலாம்.

33 வயது வரை மட்டுமே வாழ்ந்து மறைந்த பரிதிமாற்கலைஞர் எழுதிய நூல்கள் பின் வருமாறு:

1.ரூபாவதி அல்லது காணாமற்போன மகள், 2.கலாவதி, 3.மானவிஜயம், 4.தனிப்பாசுரத் தொகை, 5.பாவலர் விருந்து முதல் நாள், 6.நாடகவியல், 7.மதிவாணன், 8.தமிழ்மொழியின் வரலாறு, 9.மணிய சிவனார் சரித்திரம்
10. சித்திரகவி விளக்கம் 11.தமிழ் வியாசங்கள் 12. தமிழ்ப் புலவர் சரித்திரம்
13.மாலா பஞ்சகம் (கிடைக்கவில்லை) ஆகியவை.

முப்பத்தி மூன்று வயதுவரை வாழ்ந்தலென்ன, தமிழுக்கு உண்மையாகத் தொண்டு செய்வோன் என்றும் சாவதில்லை!

1.வி.சு. கோவிந்தன் எழுதிய “பரிதிமாற் கலைஞர்”
2. தேனி பொன்.கணேஷ் எழுதிய “தமிழ் வளர்த்த சான்றோர்கள்”
3. குன்றக்குடி பெரிய பெருமாள் எழுதிய
“தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள்”
4. பனிரெண்டாம் வகுப்பு “பொதுத்தமிழ்” பாடநூல்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: