நக்ஸல் இயக்கத்தின் தமிழகத் தூண்களில் ஒருவரான கோவை ஈஸ்வரன்!

நக்ஸல் இயக்கத்தின் தமிழகத் தூண்களில் ஒன்றான கோவை ஈஸ்வரன்!

நக்ஸல் இயக்கத்தின் தமிழகத் தூண்களில் ஒருவரான கோவை ஈஸ்வரன்!

தமிழகத்தின் செங்கொடி வரலாற்றில் வீரத்தால், தியாகத்தால் எழுதப்பட்ட பெயர்… அப்பு. அன்று அவரின் பெயரைக் கேட்டாலே ஆண்டைகள் அஞ்சி நடுங்குவார்கள். அவ்வளவு போர்க் குணம் கொண்ட போராளி. நக்ஸல்பாரிகளின் தியாகங்களைத் தவிர்த்துவிட்டு, தமிழக அரசியல் மற்றும் பொருளாதார வரலாற்றை நேர்மையாக எவராலும் எழுத முடியாது. அப்பு, சீராளன், பாலன், இருட்டுப் பச்சை… போன்ற எண்ணற்ற பெயர்கள், இன்றைய தலைமுறை அறியாதவை; ஆனால், அறிந்து கொள்ள வேண்டியவை. இன்றைய தலைமுறை அனுபவித்துக் கொண்டிருக்கும் சரிபாதி உரிமைகளுக்காக, இதற்கு முந்தைய தலைமுறையிலேயே உயிர்விட்டவர்கள் இவர்கள்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


தமிழக நக்ஸல்பாரிகளின் பயணம், எங்கிருந்து தொடங்கியது, எப்போது தள்ளாடத் தொடங்கியது? கோவை ஈஸ்வரன், நக்ஸல்பாரி இயக்கத்தில் அனுபவம் மிக்க தோழர்; அப்பு, பாலன் ஆகியோரோடு பழகியவர். ஆயுத வழி அரசியலில் முரண்பட்டு விலகியிருந்தாலும், இன்று வரை மாவோயிஸ்ட்களின் அரசியல் கோட்பாடுகளுக்கு ஆதரவாளர். சென்னையில் வசிக்கும் ஈஸ்வரன், ரத்தம் படிந்த அந்தச் சிவப்பு நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

”கோபிசெட்டிபாளையம்தான் என் சொந்த ஊர். ‘பிராமணர்கள், கடல் கடந்து போகக் கூடாது; சிறை செல்லக் கூடாது’ போன்ற கடும் கோட்பாடுகளைக் கொண்ட பிராமணக் குடும்பத்தில் பிறந்தவன் நான். அப்பா ஜி.வி.வெங்கட்நாராயணன், சுதந்திரப் போராட்ட வீரர். 1921-ம் ஆண்டிலேயே ஒரு வருடம் சிறைக்குச் சென்று வந்ததால், எங்கள் குடும்பத்தை சாதிப் புறக்கணிப்பு (சாதிப் பிரஷ்டம்) செய்தனர். சாதி மீது இருந்த பற்றை விட, நாட்டின் விடுதலை மீது இருந்த பற்று அதிகம். சுதந்திரப் போராட்டங்கள் பலவற்றில் பங்குபெற்றார். நாடு விடுதலை அடைந்த அடுத்த வருடமே, உடல் சுகவீனமடைந்து இறந்துட்டார்.

அப்புறம் நான் சொந்த ஊரைவிட்டு வெளியேறி, சென்னை மேற்கு மாம்பலத்தில் மாமா வீட்டில் தங்கிப் படிச்சேன். பள்ளி மாணவனா இருந்தப்போ, ம.பொ.சிவஞானத்தின் தமிழரசுக் கழகத்தில் இணைந்தேன். 1956-ம் ஆண்டில் நடந்த தேவிகுளம், பீர்மேட்டை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டம் தொடங்கி, மொழிக்காக நடந்த எல்லா போராட்டங்களிலும் இணைந்தேன். அப்புறம் மார்க்சியத்தில் ஈடுபாடு வந்து, அரசியல் ரீதியாகச் செயல்பட ஆரம்பிச்சோம். போராட்டம், சிறைவாசம் எல்லாம் சேர்ந்து படிப்பை என்னிடம் இருந்து பறிக்க, முழு அரசியல் வாழ்க்கைக்கு வந்தேன். அப்போ கம்யூனிஸ்ட் தலைவர்களாக இருந்த ஜீவா, பாலதண்டாயுதம் போன்றோருடைய தொடர்பு இருந்ததால், கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தோம். அதன் பிறகு மார்க்சிஸ்ட்டுகளுடன் முரண்பட்டு, நக்ஸல்பாரி இயக்கம் உருவானபோது அதன் தமிழக கிளையில் நான், அப்பு, பாலன்… போன்றோர் உறுப்பினர்கள் ஆனோம். இங்கே நக்ஸல்பாரி கிளர்ச்சியைப் பற்றி சொல்லிடுறேன். 1967-ம் ஆண்டில் மேற்கு வங்கத்தின் நக்ஸல்பாரி கிராமத்தில் விவசாய எழுச்சி உருவானது. அதை சாரு மஜூம்தார் உள்ளிட்ட பல தோழர்கள் முன்னெடுத்தார்கள். மேற்கு வங்கம் நக்ஸல்பாரி கிராமத்தில் உருவான அந்தக் கிளர்ச்சி, இந்தியா முழுக்கப் பரவியது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கட்சி தொடங்கப்பட்ட புதிதில் நகரம் – கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல், வெகுசன மக்களைத் திரட்டி நாங்கள் பணி செய்தோம். முதலில் ‘ஒருங்கிணைப்புக் குழு’ என்றுதான் செயல்பட்டோம். அதன் இந்திய அளவிலான பொதுச் செயலாளராக சாரு மஜூம்தாரும், தமிழக ஒருங்கிணைப்பாளராக தோழர் அப்புவும் இருந்தனர்.

1969-ம் ஆண்டில் முறைப்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்ற பெயருடன் செயல்பட்டோம். எங்களுக்கு விவசாயிகள், ஆலைத் தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பல தரப்பிலும் செல்வாக்கு கிடைத்தது. ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் குசேலர், கோதண்டராமன் போன்றோர் தலைமையில் கட்சி பலமாக இருந்தது. பெண்ணாடத்தில் புலவர் கலியபெருமாள் தலைமையிலான தோழர்கள் பிரமிக்கத்தக்க வகையில் கட்சியை வளர்த்தனர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தது.

நக்ஸல் இயக்கத்தின் தமிழகத் தூண்களில் ஒன்றான கோவை ஈஸ்வரன்!

நக்ஸல் இயக்கத்தின் தமிழகத் தூண்களில் ஒருவரான கோவை ஈஸ்வரன்!

கூட்டாளி

1969-ம் ஆண்டுக்கு பிறகு, சாரு மஜூம்தார் ‘வர்க்க எதிரிகளை அழித்தொழிப்போம்’ என அறிவித்தார். மக்களுடன் நாங்கள் கொண்டிருந்த உறவை அப்படியே கைவிட்டுவிட்டு, தலைமறைவு இயக்கம் ஆனோம். ‘கொடுமை செய்யும் நிலப்பிரபுகள், கந்துவட்டிக்காரர்கள், ஏழை மக்களை அடிமைகளாகத் துன்புறுத்துவோரைக் கொல்வதன் மூலம் வர்க்க விடுதலையை அடையலாம்’ என்பது அழித்தொழிப்பு அரசியல். ‘நீரை ஆதாரமாகக் கொண்ட மீனைப் போல, மக்களை ஆதாரமாகக் கொண்டு புரட்சியாளர்கள் இருக்க வேண்டும்’ என்றார் மாவோ. ஆனால், நாங்கள் மக்களிடம் இருந்து அந்நியமாகிவிட்டோம். அன்றைக்கு இந்த அழித்தொழிப்புக் கொள்கையை என் போன்றோர் ஏற்கவில்லை. ஆனால் அழித்தொழிப்பு வழிமுறை தவறு என்றால், அதற்கு மாற்றாக இன்னொரு வழிமுறையைச் தோழர்களுக்குச் சொல்ல வேண்டும். அந்தப் பக்குவம் அன்று எங்களிடையே இல்லை. எனவே, விரும்பியோ விரும்பாமலோ அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் தோழர்கள் ஈடுபட்டார்கள்
தமிழகம் முழுக்க முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். பலர் தலைமறைவு ஆனார்கள். அப்போது அகில இந்திய அளவில் கட்சி ‘அறுவடையைக் கைப்பற்றுவோம்’ என்ற புதிய கிளர்ச்சியை அறிவித்தது. நிலச்சுவான்தார்களின் விளைந்துகிடக்கும் நிலங்களில் புகுந்து, நெல்லை அறுத்து ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுப்பதுதான் ‘அறுவடையைக் கைப்பற்றுவோம்’ கிளர்ச்சி. பெண்ணாடம், தஞ்சைப் பகுதிகளில் கலிய பெருமாள் உள்பட பல தோழர்கள் இதைச் செய்தார்கள். அப்போது கடுமையான காவல் துறையினர் தொல்லை இருந்தது. ‘காவல் துறையிடம் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள ஆயுதம் வேண்டும்’ எனத் தீர்மானித்தவர்கள், தோட்டத்தில் வைத்து நாட்டு வெடிகுண்டு செய்ய முயற்சித்தனர். அது தவறுதலாக வெடித்து, மூன்று தோழர்கள் உயிர் இழந்தார்கள். புலவர் கலியபெருமாள் காயங்களோடு தப்பினார். தமிழகம் முழுக்க நடைபெற்ற அழித்தொழிப்பு நடவடிக்கையில், 20-ல் இருந்து 25 நிலபிரபுகள் வரை கொல்லப்பட்டனர்.

ஒரு இடத்தில் வர்க்க எதிரி அழிக்கப்படும்போது, மக்கள் அதைத் தற்காலிகமாகக் கொண்டாடுவார்கள். அதன் பின்னர் காவல் துறையினர் வந்து மக்களைத் துன்புறுத்த ஆரம்பிக்கும். நக்ஸல்பாரி தோழர்களுக்குத் தண்ணீர் கொடுத்தவர்கள், சாப்பாடு போட்டவர்கள் என அத்தனை பேரையும் சித்ரவதை செய்தது காவல் துறை. இதனால் நாங்கள் மீண்டும் அந்த மக்களிடம் செல்ல முடியவில்லை. காவல் துறையிக்குப் பயந்து மக்களும் எங்களிடம் இருந்து அந்நியப்பட ஆரம்பித்தனர். இன்னொரு பக்கம் காவல் துறையின் கண்காணிப்பும் நெருக்குதலும் அதிகரித்தன.

அதே காலகட்டத்தில் திருப்பத்தூரில் சில தோழர்களைக் கைது செய்த காவல் துறையினர், அவர்களை ஜீப்பில் வைத்து அழைத்துச் செல்லும்போது எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்ததில், ஐந்து பேர் மரணமடைந்தனர். இதுவும் தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்க, நக்ஸல்பாரிகள் மீதான வேட்டை தொடங்கியது. நாங்கள் வேட்டையாடப்பட்டோம்’ என இடைவெளி விடும் கோவை ஈஸ்வரன், சிறிய மௌனத்துக்குப் பிறகு பேச ஆரம்பிக்கிறார்.

”நக்ஸல்பாரிகள் மீதான அழித்தொழிப்பின் முதல் பலியே எங்கள் தோழர் அப்புதான். அவர், கோவை கோட்டைமேடு பகுதியில் பிறந்தவர். அடிப்படையில் கல்வி அறிவற்ற அவர், தானாகப் படித்து ஆங்கிலமும் கற்று ஏழைகளுக்குக் கல்வி புகட்டினார். சாதி வெறியர்களுக்கு எதிராகவும், கந்துவட்டிக் கொடுமைகளுக்கு எதிராகவும் போராடியதால், அவருக்கு மக்களிடையே பெரும் செல்வாக்கு இருந்தது. நக்ஸல்பாரி அமைப்புக்கு வந்த பிறகு அழித்தொழிப்பு நடவடிக்கைகள் சிலவற்றில் ஈடுபட்டதற்காக, அவரை காவல் துறையினர் தேடியது. 1970-ம் ஆண்டில் கல்கத்தாவில் நடைபெற இருந்த கட்சியின் மையக் குழுக் கூட்டத்துக்குச் செல்ல வேறு ஒரு பெயரில் ரயில் பயணச்சீட்டு எடுத்துவிட்டு, தான் தங்கியிருந்த வேலூர் விடுதிக்குச் சென்றார். அங்கிருந்த ஒரு காவல் துறை உளவாளி ‘அவர்தான் அப்பு’ என்பதை உறுதிசெய்து, காவல் துறைக்குத் தகவல் சொல்லிவிட்டார். விடுதி அறையில் இருந்த அப்புவை போலீஸ் பிடித்துச் சென்றுவிட்டது. அதன் பின்னர் தோழர் அப்புவின் உடலை இன்று வரை எவருமே பார்க்கவில்லை. அன்றில் இருந்து இப்போது வரை, அவர் அரசு ஆவணங்களில் தேடப்படும் குற்றவாளிதான்.

அப்புவுக்கு அடுத்து சீராளன் என்னும் தோழரை அடித்தே கொன்றார்கள். சீலையம்பட்டியில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த பாலனை அழைத்துச் சென்றவர்கள், அவரை அடித்து முக்கால் பிணமாக்கி அரசு மருத்துவமனையில் சேர்த்த பின், அவர் அங்கு இறக்கிறார். அதன் பின்னர் போலீஸார் அவருடைய சாம்பலைத்தான் கொடுத்தார்கள்.

தேவாரம் தலைமையிலான காவல் துறை நடத்திய வேட்டையில், சுமார் 30-க்கும் மேற்பட்ட நக்ஸல்பாரி இளைஞர்கள் கொல்லப்பட்டனர். மேற்கு வங்கத்தில் சாரு மஜூம்தாரும் கொல்லப்பட, எங்கள் இயக்கம் பின்னடைவைச் சந்தித்தது. 1975-க்குப் பிறகு, கட்சி மூன்றாகப் பிளவுபட்டது. அந்தப் பின்னடைவில் இருந்து பாடம் கற்றுக் கொண்டவர்கள், புதிய அரசியல் பாணியில் இன்றும் மக்களோடு பயணிக்கிறார்கள்.

அப்பு காணாமல் போனது தொடர்பாக, காதர் கமிஷனை அப்போது அமைத்தது தமிழக அரசு. ஆனால், காவல் துறைக்குப் பயந்து எவரும் சாட்சியம் சொல்ல முன்வரவில்லை. அப்பு காணாமல் போனவராகவே, காதர் கமிஷனால் அறிவிக்கப்பட்டார். சீராளன் கொல்லப்பட்டது தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டதில், சீராளனை காவல் துறை கொன்றது உறுதியானது. இதனால், சீராளன் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.
1970-ம் ஆண்டுக்குப் பிறகு கூட, ரவீந்திரன், சிவா என்கிற பார்த்திபன், நவீன் பிரசாத் என, தோழர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டனர். அந்தக் காலத்தில் அமைப்பில் இருந்து செயல்பட்டவர்கள் இன்றும் வழக்கு, வாய்தா என அலைகிறார்கள். சாரு மஜூம்தாரை அழித்துவிட்டால் நக்ஸல்பாரி இயக்கம் அழிந்துவிடும் என்றார்கள். ஆனால், இன்றும் மத்திய இந்தியாவின் காடுகளில் பரந்து விரிந்திருக்கும் மாவோயிஸ்ட் இயக்கத்தை, ‘சிவப்புத் தாழ்வாரம்’ என அடையாளப்படுத்துகிறார்கள்.

பல முரண்பாடுகள் இருந்தாலும், முதலில் அப்பு-பாலனுக்கு செவ்வணக்கம் சொல்லிவிட்டுத்தான், தன் (கம்யூனிஸ்ட்) கட்சி வேலைகள் தொடங்கப்படுகின்றன. ஆண்டுகள் பல ஓடிவிட்டன. அன்று ‘துப்பாக்கிக் குழாயில் இருந்து அரசியல் அதிகாரம் பிறக்கிறது’ என்ற மாவோவின் கோட்பாட்டை முன்வைத்தோம். இன்று ‘மக்கள் திரள் போராட்டங்கள் மூலமே புரட்சியைச் சாதிக்க முடியும்’ என நம்புகிறோம். 70-களில் நாம் பார்த்த கிராமங்களுக்கும் இன்றைய கிராமங்களுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. பெரிய நில உடைமையாளர்களே சுயமாக விவசாயம் செய்ய முடியவில்லை. நிலம், மக்களிடம் இருந்து அந்நியமாகிவிட்டது. முன்னர் விதர்பாவில் மட்டுமே நடந்த விவசாயிகள் தற்கொலை, இப்போது நாடு முழுக்க விரிவடைந்திருக்கிறது. ‘தற்கொலைக்கு எதிராக வழக்குப் பதிய வேண்டாம்’ என்பதுபோன்ற சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர விரும்புவதின் நோக்கமும் இதுதான்.

தமிழகத்துக்கே உணவு அளித்த தஞ்சையில் கூட, வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இன்னொரு பக்கம், கிராமப்புற மக்களை கூலி அடிமைகளைப் போல நடத்துகின்றன பன்னாட்டு நிறுவனங்கள். பன்னாட்டு மூலதனக் குவிப்பாலும், அதன் தொழில் முறைகளாலும் புதிய மத்திய தரவர்க்கம் ஒன்று உருவாகியிருக்கும் அதே வேளையில், ஏழ்மையும் வேலை இழப்பும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. ‘இந்த மக்களின் பிரச்னைகளுக்காகப் போராடுகிறவர்கள் யார்?’ என்பதே இப்போதுள்ள கேள்வி. இந்தக் கேள்விகளில் இருந்துதான் அதற்கான பதிலும் கிடைக்கிறது. அந்தப் பதிலில் நாங்கள் ஒரு சிறு துளியாக இருப்போம்!”

2015ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் வெளியான கட்டுரை

Tags: 
Subscribe to Comments RSS Feed in this post

One Response

  1. Pingback: Aranga Gunasekaran

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: