கீழடியில் அருங்காட்சியகம் அமையுமா? எப்போது அமையும்?

கீழடியில் அருங்காட்சியகம் அமையுமா? எப்போது அமையும்?

கல்வெட்டுகளும், எண்ணற்ற ஓலைச்சுவடிகளும், அரண்மனைகளும், கோயில்களும், கோட்டை கொத்தளங்களும் தமிழரின் தொன்மைக்கு ஆதாரமாக இருந்தும் மூவேந்தர், சங்க காலம் என்றெல்லாம் கற்பனையில் அடித்து விடுகிறார்கள் என்று தமிழர்களைப் பற்றி, தமிழகத்தில் இருந்து கொண்டே சிலர் ஏளனமாக பேசிக்கொண்டிருந்தார்கள். தமிழர்களை, `வேறொரு நாகரிகத்தின் கலப்பு’ என்றும் சிலர் புதிய கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்படி ஏட்டிலும் கல்வெட்டிலும் ஆவணமாக இருந்த தமிழர்களின் பெருமை, கீழடி அகழாய்வில் நேரில் கண்ட பிறகுதான் தமிழனுக்கென்று தனி வரலாறு உண்டு; தொன்மையான நாகரிகத்தைக்கொண்டவன் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். ஆம், உலகமே வியக்கும் வகையில் பல ஆச்சர்யங்களை வெளிக்கொண்டு வந்தது சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகிலுள்ள கீழடி.

ஆரம்பத்தில் மத்திய தொல்லியல்துறையும், தற்போது மாநிலத் தொல்லியல்துறையும், கீழடியில் ஐந்தாம்கட்ட அகழாய்வுப் பணியை நடத்திக் கொண்டிருக்கும் இந்நாள் வரை தோண்டத் தோண்ட விதவிதமான அரிய பொருள்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொன்றும் தமிழரின் தனித்தன்மையை பறைசாற்றுகின்றன. `கீழடியியில் தொடங்கி வைகை நதி கடலில் சேரும் ராமநாதபுரம் ஆற்றங்கரைவரை தமிழர் நகர நாகரிகத்தின் அடையாளங்கள் இருக்கும்’ என்று சொல்கிறார்கள். இன்று உலகத் தமிழர்களால், தமிழர் நாகரிகத்தின் தாய் மடியாக கீழடி பார்க்கப்பட்டுவருகிறது.

அதேநேரம், `கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்’ என்று அரசுத் தரப்பில் முன்பு சொல்லப்பட்டது. ஆனால், அதற்கான வேலைகள் நடக்கின்றனவா என்பது பலருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில், `கீழடியில் கள அருங்காட்சியம் அமைப்பதாகச் சொன்ன அமைச்சர் பாண்டியராஜனின் அறிவிப்பு எந்த நிலையில் உள்ளது?” என்று பார்ப்போம்.

கீழடியில் மத்திய தொல்லியல்துறை மூன்றுகட்ட ஆய்வை முடித்த நிலையில், மாநில தொல்லியல்துறை ஐந்தாம் கட்ட அகழாய்வு கீழடி அருகில் கொந்தகையில் தற்போது நடந்து வருகிறது.

ஆய்வுகள் பற்றி பேசிய தொல்லியல்துறைப் பணியாளர் ஒருவர், “ஐந்தாம்கட்ட ஆய்வுப்பணி தொடங்கிய சில நாள்களிலேயே இரட்டைச்சுவர், உறைகிணறு, மணிமாலைகள், சுட்ட மண்ணால் செய்யப்பட்ட குவளைகள் எனப் பல்வேறு அரிய பொருள்கள் என்று தொடர்ந்து கிடைத்துவருகின்றன. இவற்றின் வயதை அறிந்துகொள்ள இவற்றை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது.

வைகைக் கரையோரங்களில் அகழாய்வு நடத்த வேண்டுமென்று மத்திய அரசின் தொல்லியல் துறைதான் திட்டம் தயாரித்து ஆய்வைத் தொடங்கியது. அதன் கண்காணிப்பு அதிகாரியாக மதுரையைச் சேர்ந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் இருந்ததால், மிக ஆர்வமாகவும், அறிவியல்பூர்வமாகவும், வரலாற்றுப் பார்வையோடு ஆய்வுகளை நடத்தினார். முதல் வருடத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் மூலம், `இது தமிழரின் தனித்த நாகரிகம், வட இந்திய நாகரிகத்தின் சாயல் ஏதுமில்லை, மத அடையாளமில்லை’ என்று அவர் சொன்னவுடனேயே மக்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். அதே நேரம் ஒற்றைக் கலாசாரத்தை புகுத்த நினைப்போரும், மத்திய அரசும், `ஆய்வு தொடரக் கூடாது’ என்று நினைத்தனர்.

இரண்டாம்கட்ட ஆய்வுக்கு நிதி ஒதுக்காமல் காலம் தாழ்த்தினார்கள். இந்த நேரத்தில்தான் தமிழக அரசியல் தலைவர்கள் கீழடிக்கு கிளம்பி வரத் தொடங்கினார்கள். போராட்டங்கள் நடத்தப்பட்டன. வேறு வழியில்லாமல் இரண்டாம்கட்ட ஆய்வு தொடங்கப்பட்டது. அதிலும் பல்வேறு பொருள்கள், நீராவித் தொட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில் அனைத்து தொல் பொருள்களையும் மைசூர் ஆய்வகத்துக்கு கொண்டு செல்ல முயன்றபோது, வழக்கறிஞர் கனிமொழி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

`அனைத்துப் பொருள்களும் இங்கேயே காட்சிக்கு வைக்கப்பட வேண்டும், தொடர்ந்து ஆய்வுப்பணி நடக்க வேண்டும்’ என்று அவர் கோரியிருந்ததில், உயர் நீதிமன்றமும் சில உத்தரவுகளை விதித்தது. அதனால், அந்தப் பொருள்கள் தமிழகத்திலேயே வைக்கப்பட்டன. ஆனால், அதிரடியாக மத்திய தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அஸ்ஸாமுக்கு மாற்றப்பட்டு ஸ்ரீராம் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் மூன்றாம்கட்டப் பணியைத் தொடங்கி நடத்தியபோதும் ஏகப்பட்ட பொருள்கள் கிடைத்தன. ஆனால், அதோடு மத்திய அரசு ஆய்வை நிறுத்திக்கொண்டது.

இதை, தமிழகத்திலுள்ள பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் கண்டிக்கத் தொடங்கின. அந்த நேரத்தில்தான் தமிழக தொல்லியல்துறை, ஆய்வுப்பணியை மீண்டும் தொடங்கி மக்களின் கோபத்திலிருந்து தப்பித்தது. அந்த வகையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கீழடி ஆய்வில் ரொம்ப ஆர்வமாகச் செயல்பட்டு வருகிறார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். ஆனால், கீழடி இருக்கும் சிவகங்கை மாவட்டத்தில் முன்னர் இருந்த எம்.பி.செந்தில்நாதனோ, இப்போது இருக்கும் கார்த்தி சிதம்பரமோ, அ.தி.மு.க அமைச்சர் பாஸ்கரனோ, மானாமதுரை எம்.எல்.ஏவோ கொஞ்சமும் ஆர்வம் காட்டுவதில்லை. அருங்காட்சியகம் அமைக்க இடம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியதாவது:

“அதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இன்னும் ஏழு மாதங்களுக்குள் அமைக்கப்படும். இதற்காக தமிழக அரசு ஒரு கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. மத்திய அரசிடமும் நிதி கேட்கவிருக்கிறோம். கண்டிப்பாக அருங்காட்சியகம் திறக்கப்படும்’’ என்றவர், தொடர்ந்து, “கீழடியில் தற்போது நடைபெற்றுவரும் ஐந்தாம்கட்ட அகழாய்வில் ஆரம்ப நாள்களிலேயே அதிக அளவில் அரிய பொருள்கள் கிடைத்திருக்கின்றன. அதோடு, தற்போது டெக்னாலஜியைப் பயன்படுத்தி ஆய்வை புதிய முறையில் செய்துவருகிறோம். புவியீர்ப்பு விசை மூலம் பூமிக்கு அடியில் இருப்பவற்றைக் கண்டறியும் கருவியைப் பயன்படுத்தி ஆய்வுசெய்கிறோம். இதனால், எல்லா இடங்களையும் தோண்ட வேண்டிய அவசியமில்லை. ஆய்வு செய்ய வேண்டிய இடத்தைத் துல்லியமாக கணிக்க முடிகிறது. அதனால், தமிழகத்தில் அகழாய்வுகள் தொடரும். கீழடியில் மக்கள் அனைவரும் பார்த்துச் செல்லும் வகையில் அருங்காட்சியம் அமைக்கப்படும்’’ என்றார்.

  • விகடன்
Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: