கீழடி 5-வது கட்ட அகழாய்வு 30-ம் தேதி நிறைவடைகிறது: விரைவில் 6-வது கட்ட அகழாய்வு தொடக்கம்!

கீழடி 5-வது கட்ட அகழாய்வு 30-ம் தேதி நிறைவடைகிறது: விரைவில் 6-வது கட்ட அகழாய்வு தொடக்கம்!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடை பெற்று வரும் 6-வது கட்ட அகழாய்வு பணி இம்மாதம் 30-ல் நிறைவடைகிறது. விரைவில் 6-வது கட்ட அகழாய்வு நடைபெற வாய்ப்புள்ளதாக தொல்லியல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015-ல் அகழாய்வு மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து 2 மற்றும் 3-வது கட்ட அகழாய்வை நடத்தியது. இந்த மூன்று அகழாய்வு மூலம் 7,818 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதன் பிறகு, நான்காம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டதில் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

5-வது கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 13-ம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இப்பகுதியைச் சேர்ந்த முருகேசன், கருப்பையா, மாரியம்மாள், போத குரு, நீதி ஆகியோரது நிலங்களில் 33 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இதில், இரட்டை மற்றும் வட்டச் சுவர், கால்வாய், தண்ணீர் தொட்டி, உறை கிணறுகள் கண்டறியப்பட்டன. மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், சுடுமண் சிற்பங்கள், இரும்பு பொருட்கள், செப்பு, வெள்ளி காசுகள், தண்ணீர் குவளை, சூதுபவளம், எழுத்தாணி உட்பட 750-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. தற்போது தொல்பொருட்களை ஆவணப்படுத்தும் பணியில் தொல்லியல் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஐந்தாம் கட்ட அகழாய்வு பணி செப்.30-ம் தேதி முடிவடைகிறது. தொடர்ந்து 6-வது கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் போன்ற இடங்களில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தொல்லியல் துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் 4-வது கட்ட அகழாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில், கீழடி நகர நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. இதனால் கீழடி அகழாய்வு மீதான ஆர்வம் பொது மக்கள் மற்றும் தொல்லியல் ஆர்வலர்களிடையே அதிகரித்துள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: