பிணமாக வாழ மறுத்த மக்கள் கவிஞர் இன்குலாப்!

பிணமாக வாழ மறுத்த மக்கள் கவிஞர் இன்குலாப்!

பிணமாக வாழ மறுத்த மக்கள் கவிஞர் இன்குலாப்!

சொற்களை நெருப்புத் துண்டங்களாக்க முடியுமா? ஆயிரம் அறிவுரைகளால் தலை நிமிராத மக்களை ஒரு பாடலால் உசுப்பிவிட முடியுமா? முடியும் என நிரூபித்தவர் கவிஞர் இன்குலாப்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


திராவிட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு 1965 ல் தமிழ்நாட்டின் அரசியல் களத்தைப் புரட்டிப்போட்ட மொழிப் போராட்டத்தில் பங்கேற்றுத் தனது கருத்தியல் பிரச்சாரத்துக்கு உவப்பான கல்லூரி ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈர்க்கப்பட்ட பலர் 1967ல் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு அதிகார அமைப்பின் ஆதரவாளர்களாகத் தேங்கிப்போயினர். ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகளுக்குள் கீழ் வெண்மணியில் 44 தலித்துகள் உயிரோடு எரித்துப் படுகொலை செய்யப்பட்டபோது அதைக் கண்டிக்காமல் மௌனம் காத்தனர். ஒரு சிலர் அந்த சம்பவத்தால் மார்க்சியத்தை நோக்கித் திரும்பினர். அத்தகைய சிலரில் ஒருவராக இருந்தவர் இன்குலாப்.

‘இந்தியாவின் ஆளும் வர்க்கம் என்பது காலனியமும் நிலப்பிரபுத்துவமும் கலந்து உருவானது. இங்கே ஓர் அதிகார மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் அது பாராளுமன்ற அரசியலால் மட்டும் சாத்தியமாகாது’ என்ற புரிதலோடு கிராமப் புறங்களில் நிலமற்ற கூலி விவசாயிகளிடையே அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டவர்களை இன்குலாப் ஆதரித்தார்.

1970களின் முற்பகுதியில் உருவெடுத்த வானம்பாடி கவிதை இயக்கத்தில் ஒருவராகத் துவக்கத்தில் அறியப்பட்ட இன்குலாப் மிகக் குறுகிய காலத்திலேயே அதிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டார். ஆனால்,

“இதயம் குமுறும் நீக்ரோ – கையில்
ஏந்தும் கறுப்புத் துப்பாக்கியால்
ஆஞ்சலா டேவிஸ் புகைகின்றாள் – வெள்ளை
ஆதிக்க முகத்தில் உமிழ்கின்றாள்”

என அவரது ‘வெள்ளை இருட்டு ‘ தொகுப்பில் இடம் பெற்ற துவக்க காலக் கவிதைகளில் வானம்பாடி இயக்கத்தின் தடம் பதிந்தே இருந்தது.

விடுபட்ட பிரச்சனைகளை எழுதியவர் திராவிட இயக்கத்தால் உந்தப்பட்டவர் என்றாலும் அந்த இயக்கத்தின் கவனத்திலிருந்து விடுபட்டுப்போன பெண் விடுதலை, தலித் பிரச்சனை முதலானவை குறித்து ஆரம்ப காலம் தொட்டே கவிதைகளை எழுதி வந்தவர் இன்குலாப். அவரது அந்தக் கருத்தியல் சார்புதான் ‘கண்மணி ராஜம்’ ஸ்ரீ ராஜராஜேச்சுவரம்’ முதலான கவிதைகளை அவர் எழுதக் காரணமாக அமைந்தது.

‘கண்மணி ராஜம்’ கவிதை பாடநூல் ஒன்றிலிருந்து நீக்கப்பட்டபோது பெரும் சர்ச்சை எழுந்தது. அதுபோலவே ராஜராஜ சோழனின் ஆயிரமாவது பிறந்த நாளை தமிழக அரசு விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடு செய்தபோது அதை விமர்சித்து இன்குலாப் எழுதிய ’ராஜராஜேச்சுவரம்’ கவிதையும் போராட்டங்களுக்குத் தூண்டுகோலானது. அக்காலங்களில் திமுக ஆட்சியின் கடுமையான விமர்சகர்களில் ஒருவராக இன்குலாப் அறியப்பட்டார்.

ஈழப் பிரச்சனையும் இன்குலாப்பும் 1980களின் முற்பகுதியில் ஈழப் பிரச்சனை தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது. ‘கறுப்பு ஜூலை’ என ஈழத் தமிழர்களால் அடையாளப்படுத்தப்படும் 1983ஆம் ஆண்டு கலவரத்தைப் பற்றிய செய்திகள் தமிழ்நாட்டுத் தமிழர்களைக் கொதித்தெழச் செய்தன.

அந்த நேரத்தில் சிங்களப் பேரினவாத வன்முறையைக் கண்டித்த தமிழகத்து மரபான இடதுசாரிக் கட்சிகள் அந்த வன்முறைக்கு எதிர்வினை புரிவதாக ஈழத் தமிழரிடையே முகிழ்த்த ஆயுதக் குழுக்களை ஆதரிக்க மறுத்தன.

அதனால் தமிழ்த் தேசியத்துக்கு இடதுசாரிகள் எதிரானவர்கள் என்பது போன்ற கருத்து பரவியது. அந்த அவப்பெயரை மாற்றும் விதமாக தேசிய சுய நிர்ணய உரிமை குறித்த மார்க்சிய லெனினிய கருத்தாக்கங்களை முன்வைத்து ஈழத் தமிழர் பிரச்சனையில் ஆதரவான நிலைபாட்டை எடுத்த இடதுசாரிகள் மிகச்சிலரில் இன்குலாப்பும் ஒருவர்.

இட ஒதுக்கீடும் இன்குலாப்பும்:

ஈழப் பிரச்சனைக்கு அடுத்ததாக தமிழ்நாட்டு இடதுசாரிகளின் கருத்தியலை சோதிப்பதாக ‘மண்டல் பரிந்துரை அமலாக்கம்’ அமைந்தது.
பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என வலதுசாரி சக்திகள் பெரும் கலவரங்களில் இறங்கின. அந்த நேரத்திலும்கூட இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நிலைப்பாட்டையே மைய நீரோட்ட இடதுசாரிகள் மேற்கொண்டனர்.

ஆனால் மார்க்சிய லெனினிய அரசியலை ஏற்றுக்கொண்ட இன்குலாப் முதலான சில இடதுசாரி அறிவுஜீவிகள்தான், மண்டல் குழு பரிந்துரை அமலாக்கப்பட்டத்தை ஆதரித்துக் களமிறங்கினர்.

தமிழ்நாட்டில் திராவிட இயக்கப் பற்றாளர்களும் இடதுசாரி அறிவுஜீவிகளும் ஒன்றுபட்டு நிற்பதற்கு வழிவகுத்த அபூர்வமான தருணம் அது. அந்தப் பிணைப்பு பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு மேலும் வலுப்பெற்றது. தமிழ்நாட்டில் இந்துத்துவ அரசியல் வேரூன்ற இடம் தராமல் இன்றளவும் தடுத்துக்கொண்டிருப்பது அந்தப் பிணைப்புதான்.

இன்குலாப் செவ்வியல் இலக்கியம் முதல் நவீனத் தமிழ் இலக்கியம் வரை ஆழ்ந்த புலமை கொண்டிருந்தார். ஆனால் தமிழுக்கு உரிமை கொண்டாடிய புலவர் மரபைச் சேர்ந்தவர்களைப் போல மொழியின் வழிபாட்டாளாரக இல்லாமல் தமிழ் மொழியையும், இலக்கிய மரபுகளையும், பண்பாட்டையும் கேள்விக்குட்படுத்துகிற விமர்சன குணம் அவரிடம் இருந்தது.

1980களின் பிற்பகுதியில் ஈழத் தமிழ்க் கவிதைகள் தமிழ்நாட்டில் அதிகம் பதிப்பிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அரசியல் கவிதைகளை அழகியலோடு எழுத முடியும் என அவை உணர்த்தின.

அதற்கு முன்னதாகவே வானம்பாடிக் கவிஞர்களின் ‘ரொமாண்ட்டிக்’ பாணியிலிருந்து விடுபட்டு அரசியல் கவிதைகளை அழகியலோடு சொல்ல முற்பட்டவர் இன்குலாப்.

மத அடையாளம் தவிர்த்த பகுத்தறிவாளர்:

அது மட்டுமின்றி ஒரு படைப்பாளி அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்கும் போராளியாகவும் இருக்கவேண்டும் என்பதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். தான் பிறந்த இஸ்லாமிய மத அடையாளத்தைத் தவிர்த்து ஒரு பகுத்தறிவாளராகவே வாழ்ந்தவர். அதனால்தான்,

“சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளி தோறும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!” – என்று அவரால் பாட முடிந்தது.

பெரியாருக்குப் பிறகான திராவிட இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட பென்ணுரிமை, தலித் பிரச்சனை – ஆகிய இரண்டையும் தொடர்ந்து முக்கியத்துவம் தந்து பேசி வந்தவர் இன்குலாப். அவர் எழுதி கே.ஏ.குணசேகரன் அவர்களால் இசையமைத்துப் பாடப்பட்ட ‘மனுசங்கடா’ என்ற பாடல் இப்போது தலித்துகளின் புரட்சி கீதமாக போற்றப்படுகிறது. அவரால் எழுதப்பட்டு மங்கை அவர்களால் மேடையேற்றப்பட்ட ஔவை, மணிமேகலை ஆகிய நாடகங்கள் பெண்ணியப் பிரச்சனையை மிகவும் நுட்பமாகப் பேசுபவை.

மரபான இடதுசாரிகளால் புறக்கணிக்கப்பட்ட ஈழத் தமிழர் பிரச்சனையில் சரியான நிலைபாட்டை மேற்கொண்டிருந்தவர் அவர். தமிழ்த் தேசியவாதிகளில் ஒருவராக அடையாளம் காணப்படக் கூடிய அளவுக்கு அதில் ஈடுபாடு காட்டியவர். ஆனால் இப்போது அடிப்படைவாதமாக சுருக்கப்படும் தமிழ்த் தேசியத்துக்கும் அவரது செயல்பாடுகளுக்கும் தொடர்பில்லை. அவர் எழுதிய ‘ என் பெயர் மருதாயி ‘ என்ற கவிதையைத் தமிழ்த் தேசிய அடிப்படைவாதிகள் ஒருபோதும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.

“அய்யா ஆன்றதமிழ்ச் சான்றோரே!
உங்கள் பண்பாட்டை நீங்கள் பிடித்த
காலகாலமாய் நானும் நடக்கிறேன்
கற்புத் தோன்றிய அன்றைக்கே
நானும் தோன்றிவிட்டேன் –
தாய்மொழி – தமிழ்
பெயர் – மருதாயி
தொழில் – பரத்தை”

என்று முடியும் அக்கவிதையைப் பண்பாட்டுக் காவலர்களால் எப்படி சகித்துக்கொள்ளமுடியும்?.

தமிழ்நாட்டில் அரசவைக் கவிஞர்கள் இருக்கிறார்கள், தன் முன்னேற்றக் கவிஞர்கள் இருக்கிறார்கள், இலக்கியமே எமது குறி என்று அரசியல் வாடைபடாத புனிதக் கவிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே அரசாங்கத்தால் பாராட்டி அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இன்குலாப் எந்தவொரு அரசு அங்கீகாரத்தையும் பெறவில்லை.

“வாழ்ந்து பிணமானால் உன் போன்றோரை
பிணமாக வாழ்ந்தால் என் போன்றோரை”

அரசு அங்கீகரிக்கும் என பாரதியை நோக்கி எழுதுவதுபோல ஒரு கவிதையில் இன்குலாப் எழுதினார். அரசு அங்கீகாரம் அவருக்குக் கிடைக்கவில்லை என்பதன் பொருள் அவர் பிணமாக வாழவில்லை என்பதுதான்.

– கட்டுரையாளர் : கவிஞர், மணற்கேணி, ஆய்விதழின் ஆசிரியர்

Tags: 
Subscribe to Comments RSS Feed in this post

One Response

  1. Pingback: Right Response (@right_response)

Leave a Reply to Right Response (@right_response) Cancel reply