தீக்கரையாக்கப்பட்ட தமிழரின் அறிவுப் புதையலான யாழ்ப்பாணப் பொது நூலகம் ஒரு வரலாற்றுத் தொகுப்பு!

தீக்கரையாக்கப்பட்ட தமிழரின் அறிவுப் புதையலான யாழ்ப்பாணப் பொது நூலகம் ஒரு வரலாற்றுத் தொகுப்பு!

தீக்கரையாக்கப்பட்ட தமிழரின் அறிவுப் புதையலான யாழ்ப்பாணப் பொது நூலகம் ஒரு வரலாற்றுத் தொகுப்பு!

தமிழர்களின் அறிவுப் புதையாலாக விளங்கிய யாழ். நூலகத்தை சிங்கள காடையர் கும்பல் தீக்கரையாக்கி 35 ஆண்டுகள் சாம்பலாகிவிட்டது. தென் கிழக்காசியாவிலேயே மிகப்பெரும் நூலகமாக 97000 புத்தகப் புதையல்களைக் கொண்டு தமிழரின் அறிவுக் கருவூலமாக திகழ்ந்த யாழ் பொது நூலகம் சிங்கள காடையர்களால் 1981 மே 31ஆம் நாள் நல்லிரவிற்கு மேல் எரித்து சாம்பலாக்கப்பட்டது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


ஒருசிலரது முயற்சியால் சிறு நூலகமாக 1933 இல் ஆரம்பிக்கப்பட்டிருந்த யாழ் நூலகம் காலப்போக்கில் தனிப்பட்ட ரீதியில் நூல்ளை சேகரித்து வைத்திருந்தவர்களது பங்களிப்புடன் வளர்ச்சியடைந்தது. பல்வேறு பழமையான நூல்கள் பழங்காலத்து ஓலைச்சுவடிகள் பத்திரிகைகள் என சேகரிக்கப்பட்டு நூலகம் மேம்படுத்தப்பட்டது.

திட்டமிட்டு தமிழர்களை இனச் சுத்திகரிப்பு செய்து வந்த சிங்கள இனவாதத் தலைமைகளின் கண்ணை உறுத்திக் கொண்டிருந்த தமிழரின் அறிவுப் புதையல்களின் பாதுகாப்பிடமாகத் திகழ்ந்த யாழ் பொது நூலகத்தை முற்றிலுமாக அழத்துவிட தீர்மாணித்து முடித்தும் விட்டார்கள். தமிழர்களது விடுதலைப் போராட்டம் தீவிரம் பெற பல்வேறு காரணங்கள் இருந்தாலும் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நிகழ்வானது முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. கல்வித் தரப்படுத்தல் சட்டத்தை கொண்டு வந்து தமிழர்களது உயர்கல்வி வாய்ப்பிற்கு சாவுமணியடித்த சிங்கள இனவாத அரசு ஒட்டுமொத்தமாக தமிழர்களின் அறிவுக் கருவூலத்தை தீக்கிரையாக்கிய சம்பவம் தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகத்தை சிங்கள இனவெறி பாசிச அரசின் பேய்யாட்டத்திற்கு பறிகொடுத்து 35 ஆண்டுகள் வரலாற்றில் சாம்பலாகிப் போய்விட்டன.

அந்த நெஞ்சைப் பிளக்கும் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார் பேரறிஞனும் ஆராய்ச்சியாளருமான வண. டேவிட் அடிகள்.

அந்த நூலக எரியூட்டலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு இலக்கியவாதி “சுஜாதா” 1981-ம் ஆண்டு டிசம்பர் மாத ஆனந்த விகடன் இதழில் “ஒரு இலட்சம் புத்தகங்கள்” என்கிற தலைப்பில் பாரதி நூற்றாண்டு சிறப்புச் சிறுகதை ஒன்றை எழுதியிருந்தார்.

அதே நிகழ்வில் பெரிதும் கவலையுற்ற வெளிநாட்டு ஆங்கிலேய அறிஞர் ஒருவர் யாழ்ப்பாண பொது மக்கள் நூலகம் எரிந்து கருகி நீறாகிக் கிடந்த சாம்பர் மேட்டிலே நின்ற வண்ணம் ஆங்கிலக் கவிதை ஒன்றை எழுதினார். இந்தக் கவிதையை பேராசிரியர் கைலாசபதியிடமிருந்து பெற்றுத் தமிழாக்கம் செய்து “கிருதயுகம்” என்ற ஈழத்து சிற்றிதழ்களிலே கைலாசபதியின் மறைவுக்குப் பின்னர் கவிஞர் சோ.ப. பிரசுரித்திருந்தார்.

இத்தகைய அறிவுலகச் சிறப்புக்கள் வாய்ந்த யாழ்ப்பாணப் பொது மக்கள் நூலகம் எரியூட்டலின் 20வது ஆண்டு நிறைவின்போது அதன் வரலாற்றுத் தொகுப்பை எழுதிப் பிரசுரித்தார் திரு. என்.செல்வராஜா. இந்த நூல் எரியூட்டலின் 20வது வருடப் பூர்த்தியை நினைவு கூரும் வண்ணமாக வெளியிட்டு இருந்தார் இது அவருடைய பிரசுராலயமாகிய அயோத்தி நூலக சேவைகள் என்ற நிறுவனத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது.

அர்ப்பணிப்பும், வினையாற்றலும் உடைய உண்மையான நூலகர் ஒருவராலேயே இம்மாதிரி வரலாற்றுத் தொகுப்பு நூல் சாத்தியப்படும். மதிப்புக்குரிய என். செல்வராஜா யாழ்ப்பாணத்தின் தலைசிறந்த நூலகமாகிய “ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின்” நூலகராகச் சேவை செய்தவர். நூற் பெறுமதி உணர்ந்தவர். நூற்பயன்பாடு அறிந்தவர். அதுமட்டுமன்றி பழம்பெரும் நூலகரும் அறிஞருமாகிய டாக்டர் வே.இ.பாக்கியநாதன் அவர்களின் நூலக நெறிப்படுத்தலின் ஊடாக பயிற்சியும் பக்குவமும் பெற்றவர். அத்தகைய நூலகவியல் அறிஞர் ஒருவர் தொகுத்து அளித்திருக்கும் வரலாற்றுத் தொகுப்பு ஆவணப் புதையலாக இந்த நூல் விளங்குகின்றது.

127 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் யாழ்ப்பாணப் பொது நூலகம் பற்றியும் அதன் அழிவு பற்றியும் பொது நூலகத்தின் சேவையின் சிறப்பும் பெருமையும் பற்றியும் கட்டுரைகள் காணப்படுகின்றன. இந்தக் கட்டுரைகளை நூலகர் செல்வராஜா பல்வேறு சஞ்சிகைகளில் இருந்தும் பத்திரிகைகளில் இருந்தும் அன்புடனே தேடித் தொகுத்துள்ளார். இத்தொகுப்பில் 45 கட்டுரைகள் காணப்படுகின்றன. அவற்றிலே 14 ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. எச்.ஏ.ஐ.குணத்திலக்கா, நடேசன் சத்தியேந்திரா, பேராசிரியர் நேசையா, வீ.எஸ்.துரைராஜா என்பவர்களின் ஆங்கிலக் கட்டுரைகள் இந்நூலுக்கு அணி செய்கின்றன. நூலுக்கு ஆசியுரையை மாநகர ஆணையாளர் வே.பொ.பாலசிங்கம் வழங்கியுள்ளார்.

1894-ம் ஆண்டு சிலோன் ஒப்சேவர் பத்திரிகையில் யாழ். பொதுநூலகம் பற்றிய குறிப்பை முதலிலே வைத்திருக்கின்றார் ஆசிரியர். யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய பிரிட்டிஷ் அதிகாரிகளும், யாழ்ப்பாணத்து அறிஞர்களும் சேர்ந்து இந்த நூலகத்தை அமைக்க முற்பட்டதனை சிலோன் ஒப்சேர்வர் குறிப்பிடுகின்றது. இக்குறிப்பிலே அரசாங்கத்திடமிருந்து மேலும் 50 ரூபா மானியமாகப் பெறப்பட வேண்டும் என்ற பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது என்ற செய்தி காணப்படுகின்றது. 1954-ம் ஆண்டு புதிய நூலகத்திற்கு அத்திவாரக்கல் நாட்டப்பட்ட செய்தியை தினகரன் வெளியிட்டுள்ளது. இதற்குப் பின்னர் எரியூட்டலும் அதனைப் பற்றிய செய்திகளும் காணப்படுகின்றன.

இந்த நூலகம் பற்பல கிடைத்தற்கரிய பழம் பெரும் நூல்கள் மற்றும் தமிழ் ஓலைச் சுவடிகள் நாழிதழ்கள், வார மாத இதழ்கள் துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றைத் தன்னகத்தே கொண்டு விளங்கியது. அவரவருக்குரிய நூல்களை, நூலக வரையறையை மீறாமல் தேர்ந்தெடுத்து வழங்குவதிலே யாழ், பொதுமக்கள் நூலகத்தினர் காட்டியுள்ள ஈடுபாட்டுணர்வு போற்றுதற்குரியது. இது போன்ற பல செய்திகளையும் தகவல்களையும் அக்கால நூலகச் செயற்பாடுகளையும் எரியுண்ட நூலகத்தின் புனர்நிர்மாணச் செயற்பாடுகளையும் தெளிவாகவும் சுருக்கமாகவும் நுணுக்கமாகவும் விபரிக்கின்றது இத்தொகுப்பு நூல்.

இந்நூலகத்தின் அதிதீவிர வாசகனும் படிப்பாளியுமாகிய எஸ். எம்.கமால்தீன் என்பவர் “நான் கண்ட யாழ்ப்பாணப் பொது நூலகம்” என்ற தலைப்பிலே எழுதியுள்ள கட்டுரையில்..

“எனது கண்களையே நம்ப முடியவில்லை. அந்த விசாலமான மண்டபத்தின் தரை முழுவதுமே சாந்தும் சாம்பலுமேயன்றி வேறெதுவுமே காணப்படவில்லை. ஓர் இடுகாட்டின் மத்தியில் நிற்பது போன்ற உணர்ச்சியே எனக்குள் மேலிட்டது. எமக்கு ஏன் இந்தக் கொடுமையைச் செய்தார்கள்? கலங்கிய கண்களோடு என் முன் நின்ற யாழ். பொது நூலகர் திருமதி ரூபவதி நடராஜா விடுத்த உருக்கமான கேள்வி இது. நாட்டின் அனைத்துத் திசைகளில் இருந்தும் ஏன் உலக நாடுகள் எங்கணுமிருந்தும் ஆயிரமாயிரம் நல்லிதயங்களிலிருந்து எழும் கேள்வியும் இதுவே. யாழ்ப்பாணப் பொது மக்கள் நூலகத்தின் இரவல் வழங்கும் பகுதியின் நடுவே வெறுமையின் கோரத்தில் சிந்தையைச் செலத்தியவனாக நிற்கின்றேன் நான். முன்னர் எத்தனையோ தடவைகள் எனது சிந்தைக்கு விருந்தளித்த அந்த அறிவுக் களஞ்சியம் சிதைந்து சூனியமாகி விட்டிருந்தது. இதயமே அற்றோர் கடந்த ஜுன் மாதம் முதல் நாள் அதிகாலையில் மூட்டிய தீயினால்” என மிகுந்த கவலயுடன் கொதிப்பாகக் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரை 19.7.1981 தேதியிட்ட வீரகேசரி வார வெளியீட்டிலே பிரசுரமாயிற்று.

நீலவண்ணன் எழுதி வரதர் வெளியீடாக 1981 ஜுனில் பிரசுரமான “மீண்டும் யாழ்ப்பாணம் எரிகின்றது” என்ற சிறு நூல் யாழ் நூலகப் படுகொலை பற்றிக் குறிப்பிடுவதாவது :

“அன்று இரவு 10 மணி போல நூலகத்திற்குள் நுழைந்த கொடியவர்கள் காவலாளியைத் துரத்தியடித்து விட்டு நூலகப் பெருங்கதவைக் கொத்தித் திறந்து உள்ளே புகுந்து அட்டூழியங்கள் புரிந்தனர். 97ஆயிரம் கிடைத்தற்கரிய நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளுக்குப் பெற்றோல் ஊற்றிக் கொழுத்தி எரித்தழித்தனர். நூலகத்தினுள் சாம்பல் குவியல்களே எஞ்சிக் கிடந்தன. அந்தச் சாம்பல் குவியல்களுக்குள்ளே எரியாத நூல்கள் ஏதேனும் எஞ்சிக் கிடக்குமோ என்ற நப்பாசையில் நூலக உதவியாளர்கள் சு.யோ.இமானுவேலும் அ.டொன் பொஸ்கோவும் ச.கந்தையாவும் சாம்பல் குவியல்களைக் கிளறிக் கொண்டிருந்த நிலையைக் காண முடிந்தது. நூலகம் கருகிக் காரை பெயர்ந்து கிடந்தது… கயவர்கள் நூலகத்தையே புகைத்து விட்டார்கள்.” அனேகமாக 1981 மே மாதம் 31-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் வெளியான 1981-ம் ஆண்டு நாழிதழ்கள், வார இதழ்கள் யவுமே (உலகம் முழுவதும்) யாழ்ப்பாண பொது நூலகத்தின் “படுகொலை”யைப் பற்றி விலாவாரியாக எழுதியிருந்தன. அவற்றைப் பற்றிய செய்திப்பதிவுகளும் அனுதாப அறிக்கைகளும் நூலகப் புனர்நிர்மாணத்திற்கான நன்கொடைகள், அன்பளிப்புகள் பற்றிய தகவல்களும் 1984-ம் ஆண்டு ஜுன் மாதம் நான்காம் தேதி வெளியிடப்பெற்ற புனர்நிர்மாணஞ் செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பொதுநூலகத் திறப்பு விழா மலரில் பிரசுரமான மிக முக்கியமான ஓரிரு கட்டுரைகளும், பழம் பெரும் நூலகர்கள் பற்பல துறைகளைச் சார்ந்தோர் எழுதிய கட்டுரைகளும் எரிமலை, நம்நாடு, புதமைப் பெண், புதினம் போன்ற பிறநாட்டுத் தமிழ் ஏடுகளில் பிரசுரமான கட்டுரைகளும் தமிழ் நேஷன், தமிழ் நெற், போன்ற இணையத்தளங்களின் செய்தி மற்றும் தகவல்களும் அடங்கிய ஆவணக் கருவூலப் பெட்டகமாக வெளி வந்திருக்கும் இந்த வரலாற்றுத் தொகுப்பு நூல் நூலகர் என். செல்வராஜாவின் பெயரைக் காலமெல்லாம் எடுத்துரைத்துக் கொண்டேயிருக்கும். ஏனெனில் புலம் பெயர்ந்து மேலை நாடுகளுக்குப் போன ஈழத் தமிழர்களிலேயே பெரும்பான்மையினர் தமிழனுக்கேயுரிய புறத்தையும் அகத்தையும் தொலைத்துவிட்டு சுயமுகம் இழந்து இரவல் முகம் வாங்கிவரும் இன்றைய சூழலிலே என். செல்வராஜா போன்றவர்களின் இத்தகைய செயற்பாடுகள் மனப்பூர்வமான போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கு உரியவையே.

மகத்தான வரலாற்றுத் தொகுப்பு நூலுக்கான இந்தத் திறனாய்வுக் கட்டுரையை பேரறிஞர் அண்ணா அமெரிக்க யேல் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மண்டபத்தின் வாயில் முகப்பிலே கண்டு சொன்ன மகுட வாசகம் : “வரலாற்றிடமிருந்து யாரும் பாடம் படிப்பதே இல்லை.”

தீக்கரையாக்கப்பட்ட தமிழரின் அறிவுப் புதையலான யாழ்ப்பாணப் பொது நூலகம் ஒரு வரலாற்றுத் தொகுப்பு!

தீக்கரையாக்கப்பட்ட தமிழரின் அறிவுப் புதையலான யாழ்ப்பாணப் பொது நூலகம் ஒரு வரலாற்றுத் தொகுப்பு!

இத்தகைய ஓர் பண்பாட்டுப் படுகொலை இத்தீவின் வரலாற்றில் இது முதல் நிகழ்வும் அல்ல! இறுதி நிகழ்வும் அல்ல! கோட்டை இராசதானியின் சேனாதிபதி சப்புமல் குமாரயா யாழ்ப்பாணம் இராசதானி மீது படையெடுத்து வந்த போது நல்லூர் நாயன்மார்க் கட்டில் இருந்த யாழ்ப்பாண இராசதானியின் தேசிய சரஸ்வதி நூலகம் அது உள்ளடக்கியிருந்த அரும் பெரும் சித்த வைத்திய நூல்களுடன் தீயினால் முற்றாகப் பொசுக்கப்பட்டது. யாழ்ப்பாண இராசதானியின் வேந்தர்கள் சிறந்த சித்த வைத்திய நிபுணர்களாக விளங்கியதுடன், தாமே பல மருத்துவ நூல்களை எழுதியிருந்ததும் தெரிந்ததே சரஸ்வதி நூலகம் அவற்றையும் உள்ளடக்கியிருந்தது. அது வரலாற்றில் முற்பட்ட நிகழ்வாக இருந்தால், யாழ் பொது நூலகம் அழிக்கப்பட்டதன் பின் காஸா நகரில் சுவிடிஸ் மக்களால் அன்பளிப்பாகத் தரப்பட்டிருந்த “குளோப்’ நூலகமும் அவ்வாறே அழிக்கப்பட்டிருந்தது. மேலும், பருத்தித் துறை ஹாட்லி கல்லூரி நூலகம் 1984 ஆம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் முதல் நாளில் அதன் நூற்று ஐம்பது வருடகால புத்தகச் சேர்வுகளுடன் பாதுகாப்புப் படையினரால் தீயினால் அழிக்கப்பட்டது. சென்னை “இந்து’ பத்திரிகையின் சிறப்பு நிருபர் ஜி. பார்த்தசாரதி தமது யாழ்ப்பாணச் சுற்றுப் பயணத்தின் பின் இதனை அதன் செப்டெம்பர் 28 ஆம் தேதி இதழில் அம்பலப்படுத்தியிருந்தார்.

யாழ்ப்பாணப் பொது நூல் நிலையம் தீயில் பொசுங்குவதை யாழ் சம்பத்திரிசியார் கல்லூரி மேல் மாடியில் இருந்து காண நேர்ந்த யாழ்ப்பாணத்தின் நடமாடும் நூலகமாகப் போற்றப்பட்டு வந்தவரான பன்மொழிப் புலவர் வண. பிதா தாவீதடிகள் பேரதிர்ச்சியடைந்தவராக மூர்ச்சித்து மரணமானார். இந்த ஜூன் முதல் நாள் அடிகளாரின் இருபத்தேழாவது நினைவு தினமாகும்.

யாழ் அரசாங்க முகவராக அப்போது பதவியில் இருந்த யோகேந்திரா துரைச்சாமி தமது உத்தியோகபூர்வ வதிவிடத்தில் வாழாது யாழ் மாணிக்கூட்டுக் கோபுரத்தை அடுத்துள்ள தமது தந்தையின் “மகேந்திரா’ இல்லத்திலேயே வசித்து வந்தார். யாழ் பொது நூலகம் எரிந்து கொண்டிருப்பதை யாழ் மாநகர ஆணையாளருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்திருந்தவர் யாழ் அரசாங்க முகவரே. தகவல் தெரிந்ததும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த காவல் துறையினரின் உத்தியோகப்பற்றற்ற ஊரடங்கு சட்டத்தையும் பொருட்படுத்தாது மாநகர ஆணையாளர் சி.வி.கே. சிவஞானம் மாநகரசபை ஊழியர் சிலரையும் உதவிக்கு உடன் அழைத்துக் கொண்டு இடத்திற்க்கு விரைந்தவர் அங்கு நகர மண்டபம், சுப்பிரமணிய பூங்கா, நூலகம் மற்றும் திறந்த வெளியரங்கு காவலர்களின் ஒத்துழைப்புடன் தீயை அணைப்பதற்குப் பெரிதும் முயன்றார். ஆயினும் காவல் துறையினரோ அதனை அனுமதியாது அவர்களை அங்கிருந்து விரட்டிவிட்டனர்.

ஊர் வாயை உலை மூடியால் மூடும் ஓர் எத்தனம் போன்றே யாழ்ப்பாணத்தில் தாம் நிகழ்ந்தவிருந்த பண்பாட்டுப் படுகொலை குறித்த தகவல் செய்தி ஊடகங்களுக்கு எட்டாதிருக்கச் செய்யும் முற்காப்பு நடவடிக்கையாகவே “ஈழநாடு’ பணிமனை முன்கூட்டியே தீக்கிரயாக்கப்பட்டிருந்தது.
ஆகவே, யாழ் பொது நூலகம் அழிக்கப்பட்டிருந்த காட்சியை நேரில் சென்று கண்டிருந்தோர் புறநீங்கலாக யாழ் குடா நாட்டினுள் வசித்தவர்களுக்குத்தானும் அச்சம்பவம் செய்தியாக அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. தலைநகர் கொழும்பில் இருந்து வெளியிடப்பட்ட ஊடகங்களுக்கோ அச்சம்பவம் வெறும் தகவலாகத்தானும் எட்டியிருக்கவில்லை. எனவே, தலைநகர் கொழும்பில் வெளியிடப்பட்ட பத்திரிகைகளோ இலத்திரனியல் ஊடகங்களோ யாழ் பொது நூலகத்துக்குச் சம்பவித்திருந்த பேரழிவு குறித்து ஒரு வார்த்தைதானும் பிரஸ்தாபியாதிருந்தமை புரிந்து கொள்ளக் கூடியதே.

நூலக வரலாறு ;

இந்த நிறுவனத்துக்கான கருப்பொருள் க.மு. செல்லப்பா என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது. இந்த செல்லப்பா அச்சுவேலியை சேர்ந்தவர், யாழ்ப்பான நீதிமன்றத்தில் கரியதரிசியாக இருந்தவர். அதாவது சக்கடத்தார். நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்தி வந்த நூல் நிலையமே இன்று விசாலமாக வளந்துள்ளது. இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், 1934ஆம் ஆண்டு ஆனி மாதம் 9ஆம் தேதி ஐசாக் தம்பையா அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றே பொது நூலகத்தின் தோற்றத்திற்கு அடிகோலியது. இக்கூட்டக் காரியதரிசி திரு. க. மு. செல்லப்பா அவர்கள் சிரமப்பட்டுத் திரட்டிய 184 ரூபா 22சதம் தான் முன்னோடியான பொது நூலகம் ஒன்றிற்கான மூலதனமாய் அமைந்தது. அன்றைய காலத்தில் அது ஒரு பெரிய மூலதனம் தான்.

இதன் வழி ஆஸ்பத்திரி வீதியில் வாடக அறை ஒன்றில் 844 நூல்களுடனும் 36 பருவ வெளியீடுகளுடனும், 1934 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 1ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட சிறிய தொரு பொது நூலகம் வசதியின்றி இடர்ப்பட்ட போது அதனை யாழ்ப்பாணப் பட்டின சபை பொறுப்பேற்று 1-1-1935 இல் வாடி வீட்டிற்குத் தெர்கிலுள்ள மேல் மாடிக்கு இடமாற்றஞ் செய்யப்பட்டு, அங்கே இயங்கி வந்தது.

சகல வசதிகளையும் கொண்ட நவீன பொது நூலகக் கட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகள் 1952ஆம் ஆண்டு ஆனி மாதம் 14ஆம் தேதி சாம் ஏ. சபாபதி அவர்களின் தலைமையில், நடைபெற்ற ஒரு மகாநாட்டினை அடுத்து ஆரம்பிக்கப்பட்டன. புதிய நூலகக் கட்டிடடத்தை அமைப்பதில் அதி வண பிதா லோங் அவர்கள் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். அவர்களது முயற்சியின் மூலம் நூலகத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த கலாநிதி எஸ். ஆர். ரங்கநாதன் அவர்களின் ஆதரவும் கிடைத்தது.

நூலகத்தின் அமைப்பிற்கான திட்டங்களை வகுத்துக் கொடுக்க சென்னை அரசின் கட்டிடக் கலை நிபுணர் கே. எஸ். நரசிம்மன் அவர்கள் வந்து வரைபடங்களைத் தயாரித்து உதவினார். கட்டிட அடிக்கல் நாட்டு விழா 1953ஆம் ஆண்டு பங்குனி மாதம் 29ஆம் தேதி நடைபெற்றது. திராவிடக் கலயம்சம் பொருந்திய எழில் மிகு அறிவுக் கோயில் ஒன்று வெகு பொது மக்களின் நிறைவான ஆதரவுடன் உருப்பெற ஆரம்பித்தது.

பொது நூலகத்தின் முதற்கட்டம் பூர்த்தி செய்யப்பட்டு 11.10.59இல் அதிவிமரிசையாக அப்போது யாழ் முதல்வராக இருந்த முதல்வர் அ.த.துரையப்பா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நூலகத்தின் ஏனைய கட்டடடங்களும் பூர்த்தி செய்யப்பட்டன. பூரணத்துவம் பெற்று இயங்கி வந்த இந்நூலகத்தில் நூலகர் நூலகர் உட்பட 33 பேர் கடமையாற்றி வந்தார்கள்.

பொது நூலகம் எரிப்பு :

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப் பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி நள்ளிரவுக்கு பின்னர் வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது.

நூலகம் எரிக்கப்பட்டது தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி விட்டது. நூலகம் எரியும் செய்தியை கேட்டு சென் பற்றிக்ஸ் ஆசிரியரும் புலவருமான சங். பித கலாநிதி டேவிட் அவர்கள் மனவதிர்ச்சியில் தம் உயிரை நீத்தார்.

1981 ஆம் ஆண்டு அழிக்கப்பட்ட பொது நூலகத்தை திருத்தாது யாழ் மாநகரசபை அதை ஒரு அழிப்பின் சின்னமாக வைத்திருந்தது. அதன் பின் பக்கத்தில் ஒரு புதுக்கட்டிடத்தை முன்னிருந்த கட்டிடத்தைப் போல் கட்டுவதற்கு தீர்மானித்தது. இப்பணிக்க முழு நேர பொறியிலராக நியமிக்கப்பட்டவர் பொறியியலாளர் திரு ந. நடேசன் ஆவார்.

அக்கட்டிடத்தின் கட்டிடக் கலைஞராக நியமிக்கப்பட்டவர் திரு.வி.எஸ்.துரைராஜா ஆவார்.1984 ஆம் ஆண்டு யூன் மாதம் அக்கட்டிட வேலைகள் முடிந்தன. குறைந்தளவான நூற்தொகுதிகளுடன் நூலகம் மீள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 1988 ஆம் ஆண்டு ஆரம்பித்த யுத்தத்தில் புதிய கட்டிடமும், ஏற்கனவே எரிக்கப்பட்ட கட்டிடமும் பாரிய சேதத்துக்குள்ளாயின. பதின்னான்கு ஆண்டுகளின் பின் 1999 ஆம் ஆண்டு கட்டிடத்தைப் புனரமைக்கத் தீர்மானிக்கப்பட்டு மீண்டும் வி.எஸ்.துரைராஜா அவர்களை நியமித்து. முன்பிருந்த கட்டிடம் போல அமைக்க இடிந்த பாகங்களைத் தேடி அவைகளைப் படமெடுத்து, வரைந்து கட்டிடத் தோற்றத்தை அமைத்தார் இவர்.

புத்தரின் படுகொலை :

நேற்று என் கனவில்
புத்தபெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக்கொன்றனர்.
யாழ் நுலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது !
இரவின் இருளில் அமைச்சர்கள் வந்தனர்.
“எங்கள் பட்டியலில் இவர் பெயர் இல்லை
பின் ஏன் கொன்றீர்?”
என்று சினந்தனர்
“இல்லை ஐயா
தவறுகள் எவையும் நிகழவே இல்லை
இவரைச்சுடாமல்
ஓர் ஈயினைக்கூடச்
சுடமுயாது போயிற்று எம்மால்
ஆகையால்த்தான்”
என்றனர் அவர்கள்
“சரி சரி
உடனே மறையுங்கள் பிணத்தை”
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்.
சிவில் உடையாளர்
பிணத்தை உள்ளே இழுத்துச்சென்றனர்
தொண்ணுறாயிறம் புத்தகங்களினால்
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்.
சிகாலோகவாத சூத்திரத்தினைக் கொழுத்தி
எரித்தனர்
புத்தரின் சடலம் அஸ்த்தியானது
தம்ம பதமும்தான் சாம்பரானது – கவிஞர் எம்.ஏ.நுஃமான்யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட போது..

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: