யாழ்ப்பாணப் பொது மருத்துவமனையில் இந்திய இராணுவம் நடத்திய படுகொலைகள்!

யாழ்ப்பாணப் பொது மருத்துவமனையில் இந்திய இராணுவம் நடத்திய படுகொலைகள்!

யாழ்ப்பாணப் பொது மருத்துவமனையில் இந்திய இராணுவம் நடத்திய படுகொலைகள்!

யாழ்ப்பாண மருத்துவமனைப் படுகொலைகள் ஈழப்போரின் போது 1987 அக்டோபர் 21-22 ஆம் நாட்களில் இடம் பெற்றது. இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பொது மருத்துவமனையில் நுழைந்த இந்திய அமைதிப் படை இராணுவத்தினர் சரமாரியாகச் சுட்டதில் நோயாளிகள், தாதிகள், மருத்துவர்கள், மற்றும் பணியாளர்கள் 68 முதல் 70 பேர் வரையில் கொல்லப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கை அரசு, மற்றும் மனித உரிமைக் குழுக்கள் போன்றவை இப்படுகொலைகளை இனப்படுகொலை எனக் கூறியுள்ளன. அதே நேரத்தில் புலிகளுக்கும், இந்திய இராணுவத்தினருக்கும் இடையில் இடம் பெற்ற சண்டைகளில் இடையில் அகப்பட்ட பொதுமக்களே கொல்லப்பட்டனர் என இந்திய இராணுவத்துக்குப் பொறுப்பான லெப். செனரல் டுப்பேந்தர் சிங் தெரிவித்தார். இத்தாக்குதலை மேற்கொண்ட இந்திய இராணுவத்தினர் எவரும் இந்திய அரசால் கைது செய்யப்படவில்லை.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


யாழ்ப்பாண மருத்துவமனை (யாழ்ப்பாண போதனா மருத்துவமனை, அல்லது யாழ்ப்பாணப் பொது மருத்துவமனை) இலங்கையின் வட மாகாணத்தில் மக்கள் அடர்ந்தியாக வாழும் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களுக்கு அடிப்படை மற்றும் உயர்தர மருத்துவ வசதிகளை வழங்கும் ஒரேயொரு மருத்துவமனை ஆகும். இது யாழ்ப்பாண நகர மத்தியில் அமைந்துள்ளது. ஈழப்போர்க் காலம் முழுவதும் இப்பகுதி போரில் ஈடுபடுபவர்கள் அணுகாத வண்ணம் பாதுகாக்கப்பட்ட ஒரு மருத்துவமனையாக இயங்கி வந்தது. விடுதலைப் புலிகளுக்கும், இந்திய அமைதிப் படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதை அடுத்து, யாழ் நகரை இந்திய இராணுவம் கைப்பற்றும் என்ற அச்சம் நிலவியது. இதனால் மருத்துவமனையின் ஊழியர்கள் சிலர் அச்சத்தில் பணிக்குச் செல்லத் தயக்கமடைந்த நிலையிலும் பலர் தமது கடமைகளுக்குச் சென்றிருந்தனர். 1987 அக்டோபர் 21 தீபாவளி விடுமுறை நாளாகும். அன்றும் முதல் நாட்களிலும் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம் பெற்ற இந்திய இராணுவத்தினரின் ஏவுகணை வீச்சுகளில் இறந்த 70-கும் அதிகமான பொதுமக்களின் இறந்த உடல்கள் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தன.

அக்டோபர் 21, 1987:

முப 11 : 00 மணி – யாழ் கோட்டைப் பகுதியில் இருந்து மருத்துவமனைப் பகுதியை நோக்கி பீரங்கிக் குண்டுத் தாக்குதல்களும், உலங்கு வானூர்திகளில் இருந்து குண்டுத் தாக்க்குதல்களும் ஆரம்பமாயின.

முப 11 : 30 மணி – மருத்துவமனையின் வெளிமருத்துவ பீடத்தின் மீது ஏவுகணை ஒன்று வந்து வீழ்ந்தது.

பிப 13 : 00 மணி – அருகில் உள்ள சாந்தி தியேட்டர் பக்கத்தில் இந்திய இராணுவத்தினரின் நடமாட்டம் இருப்பதாக மருத்துவமனையில் கடமையில் இருந்த மருத்துவ அதிகாரிக்குத் தகவல் வந்தது.

பிப 13 : 30 மணி – 8ம் இலக்க கூடத்தில் ஏவுகணை ஒன்று வீழ்ந்ததில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். நிலைமையை அறிவதற்காக தலைமை மருத்துவ அதிகாரி வேறொரு மருத்துவருடன் வெளியே சென்ற போது மருத்துவமனையின் உள்ளே சில வெற்றுத் தோட்டாக்கள் இருந்தமையைக் கண்டுள்ளனர். மருத்துவமனையின் உள்ளேயிருந்து துப்பாக்கிகளால் சுட்டமை அறியப்பட்டது.

பிப 14 : 00 மணி – ஆயுதம் தரித்த விடுதலைப் புலிகள் சிலர் மருத்துவமனையில் நடமாடியது தொடர்பாக மருத்துவ அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டது. தலைமை மருத்துவ அதிகாரி மற்றொரு மருத்துவருடன் (மரு. கணேசலிங்கம்) சென்று அவர்களை வெளியேறும் படி கேட்டுக் கொண்டார். அவர்களும் வெளியேறினர்.

பிப 14 : 05 மணி – மேலும் சில விடுதலைப் புலிகள் உள்ளே இருப்பது தெரிய வந்தது. அவர்களையும் வெளியேற மரு. கணேசரத்தினம் கேட்டுக் கொண்டார். ஆனாலும், அவர்கள் முழுமையாக வெளியேறினரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

பிப 15 : 00 மணி – சில ஊழியர்கள் பின்பக்க வழியாக மதிய உணவுக்காக மருத்துவமனையில் இருந்து வெளியேறினர்.

பிப 16 : 00 மணி – ஆசுபத்திரி வீதியில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையத்தின் பக்கமாக 15 – 20 நிமிடங்களுக்கு துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றதை ஊழியர்கள் கேட்டனர். மருத்துவமனையில் இருந்து எவ்வித துவக்குச் சூடுகள் எதுவும் ஏவப்படவில்லை.

மாலை 16 : 20 மணி முதல் – இந்திய இராணுவத்தினர் மருத்துவமனையின் முன்பக்கமாக உள்ளே வந்தனர். நடைபாதை வழியாக உள்ளே வந்த அவர்கள் அங்கிருந்த அனைவரையும் உள்ளே செல்லுமாறு பணித்தனர். அதன் பின்னர் மேற்பார்வையாளரின் அலுவலகத்தினுள்ளும் ஏனைய அறைகளுள்ளும் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். நேரில் கண்டவர்களின் கூற்றுப்படி, பல பணியாளர்கள் இறந்து வீழ்ந்தனர். இவர்களில் மேற்பார்வையாளர், மற்றும் முதலுதவி வண்டி சாரதியும் அடங்குவர். ஒரு படையினன் பணியாளர் ஒருவரை நோக்கி கிரனேட்டு எறிந்ததில் பலர் கொல்லப்பட்டனர். இன்னும் ஒருவரின் கூற்றுப்படி, இந்திய இராணுவத்தினர் ஊடுகதிரியல் அறைக்குள் நுழைந்து அங்கிருந்த பலரைச் சுட்டுக் கொன்றனர். 8, இலக்க வார்டில் இருந்து நோயாளிகள் பலர் இங்கு பாதுகாப்புக்காக தங்கியிருந்தனர். இறந்து விட்டதாகத் தரையில் படுத்திருந்த சிலர் உயிர் தப்பினர்.

இரவு முழுவதும் துப்பாக்கிச் சூடுகளும் எறிகணை வீச்சுகளும் இடம்பெற்றன.

அக்டோபர் 22, 1987:

காலை 08 : 30 மணி – மரு. சிவபாதசுந்தரம் மேலும் மூன்று தாதிகளுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறினர். அவர்கள் தமது கைகளை மேலே தூக்கியவாறு “நாம் சாதாரண மருத்துவர்களும் தாதிகளும். நாம் சரணடைகிறோம்,” எனக் கத்தியபடி சென்றனர். துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. மரு. சிவபாதசுந்தரம் கொல்லப்பட்டார், தாதிகள் மூவரும் கடும் காயங்களுக்குள்ளானார்கள்.

முப 11 : 00 மணி – இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் வார்டு ஒன்றினுள் நுழைந்தார். ஒரு பெண் மருத்தவர் எதிரில் எதிர்ப்பட்டார். அவர் இராணுவ அதிகாரிக்கு நிலைமையை விளக்கிய பின்னர் அவர் ஏனைய பணியாளர்களை கைகளைத் தூக்கியவாறு வெளியேறி வருமாறு கூறினார். அங்கு உயிருடன் இருந்த 10 பேர் வெளியேறினர். வெளியேறும் போது அவர்கள் மரு. கணேச ரத்தினம் இறந்து கிடப்பதைக் கண்டனர். அன்று மாலை இறந்தவர்கள் அனைவரினதும் உடல்கள் சேகரிக்கப்பட்டுத் தகனம் செய்யப்பட்டன.

தாக்கங்கள்:

மருத்துவமனை வளாகத்தினுள் இருந்து தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இடையில் அகப்பட்ட பொதுமக்களே கொல்லப்பட்டனர் என்றும் இந்திய இராணுவம் தெரிவித்து வருகிறது. லெப். ஜெனரல் டுப்பேந்தர் சிங் இதனை மீண்டும் வலியுறுத்தினார். ஆனால், இத்தாக்குதல் தூண்டுதல் அற்ற பொதுமக்கள் படுகொலைகள் என விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் தெரிவித்துள்ளன. இலங்கை அரசு இத்தாக்குதலை மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என 2008 ஆம் ஆண்டில் கூறியது. யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு, மற்றும் ஜோன் ரிச்சார்ட்சன் போன்ற மேற்குலகக் கண்காணிப்பாளர்கள் மற்றும் பலர் இது ஒரு மனிதப் படுகொலைகள் எனக் கூறியுள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: