குத்தூசி குருசாமி

குத்தூசி குருசாமி

குத்தூசி குருசாமி

குத்தூசி குருசாமி என அழைக்கப்படும் சா. குருசாமி (23 ஏப்பிரல் 1906 – 11அக்டோபர் 1965) விடுதலை இதழில் குத்தூசி என்ற புனைபெயரில் பல அறிவார்ந்த கூர்மையான கட்டுரைகளை எழுதி வந்தவர். 1927 முதல் 1965 வரை பெரியார் ஈ. வே. ராவின் சுயமரியாதை இயக்கத்தில் முன்னணியில் இருந்து செயல்பட்டார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


தஞ்சாவூர் மாவட்டம் குருவிக்கரம்பையில் சைவக் குடும்பத்தில் சாமிநாதன், குப்பு அம்மையார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். 1923 இல் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் இடைநிலைப் படிப்பில் சேர்ந்தார். தேசியக் கல்லூரி சூழ்நிலை குருசாமிக்கு அறிவுப் பசியைத் தூண்டியது. 1925 இல் காந்தி அடிகளைக் கல்லூரிக்கு அழைத்து பணமுடிப்பு அளித்து சிறப்புச் செய்தார். இளங்கலை வரை தேசியக் கல்லூரியில் பயின்றார். சைமன் குழு புறக்கணிப்புக்குத் தலைமைத் தாங்கி கல்லூரி மாணவர்களைத் திரட்டி ஊர்வலம் நடத்தினார்.

பெரியார் ஈ.வெ.ரா தொடங்கிய சுயமரியாதை சங்கத்தின் பத்திரிகையான குடியரசு இதழைப் படித்து சமயம், சாதி முதலிய பாகுபாடுகளையும் மூடப் பழக்க வழக்கங்களையும் எதிர்த்தார். 1927 இல் ஈரோட்டில் பெரியாரைச் சந்தித்து சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். குடியரசு ஏட்டில் கட்டுரைகளும் அவ்வப்போது தலையங்கங்களும் எழுதினார். பகுத்தறிவுப் பரப்புரையும் செய்தார். அவருடைய எழுத்திலும் பேச்சிலும் கிண்டல் கேலி இருக்கும். அவருடைய கருத்துகள் தெளிவாகவும் தக்கச் சான்றுகளுடன் விளங்கும். அவர் ஒரு பகுத்தறிவாளர் மட்டும் அல்லாமல் பொதுவுடைமைவாதியாகவும் இருந்தார்.

படைப்புகள், சாதனைகள் :

“நான் ஏன் கிறித்தவன் அல்லன்” என்னும் பெர்ட்ரண்டு ரசல் எழுதிய நூலைத் தமிழில் எழுதினார். ஜீன் மெஸ்லியர் என்பவர் எழுதிய மரண சாசனம் என்னும் தலைப்பில் மொழி பெயர்ப்புக் கட்டுரைகள் எழுதினார். விடுதலை ஏட்டில் ‘பல சரக்கு மூட்டை’ என்னும் தலைப்பில் குத்தூசி என்னும் புனைபெயரில் 16 ஆண்டுகள் சுமார் 5000 கேலிக் கட்டுரைகள் எழுதினார்.

முதன்முதலாக பெரியாரைச் சந்தித்தபோது அவருக்கு வயது 23. பெரியாரின் குடியரசு இதழில் ‘குத்தூசி’ என்ற பெயரில் சமூக சீர்திருத்த, பகுத்தறிவு சார்ந்த கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். 1929-ல் தன்னைப் போன்றே பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட குஞ்சிதம் அம்மையாரை பெரியாரின் தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார். தமிழகத்தில் முதன் முதலில் சுயமரியாதைத் திருமணம் செய்து சாதி மறுப்புத் திருமணத்திற்கும் வழிகாட்டியவர். வேறு எவ்வித சடங்கும் இல்லாமல் தாலி மட்டும் கட்டி திருமணம் நடைபெற்றது. அவருடைய மனைவி குஞ்சிதம் குருசாமி கொள்கை வழியிலும், இல்லறத்திலும் சிறந்தவராக விளங்கினார். தாலி பெண்களை அடிமைப் படுத்துவதன் அடையாளம் என்ற தன்மான இயக்கக் கருத்தினைக் கேட்டு திருமணமாகி சில ஆண்டுகளுக்குள் தாலியைக் கழற்றிவிட்டார். தமிழ்நாட்டில் பெரியார் நடத்தி வைத்த முதல் சீர்திருத்தத் திருமணம் குத்தூசி குருசாமி – குஞ்சிதம் அம்மையார் திருமணம்தான். அக்காலத்தில் பல எதிர்ப்புகளுக்கு இடையேதான் அது நடைபெற்றது.

பெரியார் தலைமையில் சுயமரியாதை இயக்கம் வேர்விட்ட காலத்தில், அவருடன் அறிமுகமாகி, இறுதி வரையில் அவரோடு இணைந்து பயணித்தவர் குத்தூசி குருசாமி.

எழுத்துச் சீர்திருத்தத்தின் முன்னோடி :

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து முதன்முதலாகப் பேசியவர் குருசாமி. பெரியாருடன் இதுபற்றி விவாதித்து, புதிய தமிழ் எழுத்து வடிவங்களைக் குடியரசில் முதன்முதலாகப் பயன்படுத்தவும் செய்தார். “இது தமிழ் மொழியின் எழுத்து வடிவத்தை மேலும் செழுமைப்படுத்துவதுடன், தமிழை அடுத்த கட்டத் துக்கு எடுத்துச் செல்லும்” என்றார். கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடியான சிங்காரவேலர் 1923-ல் விவசாயத் தொழிலாளர் இயக்கத்தைக் கட்டமைத்து, இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் மே தினத்தை நடத்தியபோது அதில் குருசாமியும் பங்கேற்றார். அப்போது அவர் பதின்பருவ இளைஞர். இடதுசாரி இயக்கத் தலைவர்களுடன் குருசாமி தனது கடைசிக் காலம் வரையில், நெருக்கமான உறவைப் பேணினார்.

1949-ல் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்ட காலத்தில், பல தலைவர்களுக்குத் தன் வீட்டில் அடைக்கலம் அளித்தார். கைது செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலரைச் சிறைக்குச் சென்று சந்தித்தார் குருசாமி. அதற்கு நன்றி தெரிவித்து அவர்கள் எழுதிய கடிதங்களே, கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் மீது அவர் வைத்திருந்த அன்புக்குச் சான்று.

கொல்லைப்புற வழியில்..

1952-ல் முதன்முதலாக நடந்த பொதுத் தேர்தலில், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார் பெரியார். அந்தத் தேர்தலில் இடதுசாரிகள் வெற்றி பெற்ற போதும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ராஜாஜி ஆட்சியமைத்தார். இதனைக் கண்டித்து ‘கொல்லைப்புற வழியில் ஆச்சாரியார்’ என்று விடுதலையில் எழுதினார் குருசாமி. இன்று அரசியல்வாதிகள் சரளமாகப் பயன்படுத்துகிற இந்தச் சொல், முதன்முதலாக அப்போதுதான் அச்சில் பயன்படுத்தப்பட்டது.

‘குடியரசு’, ‘விடுதலை’ ,‘அறிவுப் பாதை’ மற்றும் ‘புதுவை முரசு’ பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதினார் குருசாமி. பாரதிதாசனுடனான நட்பின் காரணமாக அவரின் முதல் கவிதைத் தொகுதியைப் பிரசுரிக்கும் பொறுப்பையும் ஏற்றார். குருசாமியின் மனைவி குஞ்சிதம் தான் பாரதிதாசனின் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்டவர். குருசாமி, ஆங்கிலத்தில் இருந்து பல்வேறு நூல்களையும், கட்டுரைகளையும் தமிழில் மொழி பெயர்த்தார். ஐரோப்பிய அறிஞரான பெட்ரண்ட் ரஸ்ஸலின் புகழ்பெற்ற நூலான ‘நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல’ என்பது அவரது முக்கியமான மொழி பெயர்ப்பு. தேர்தல் அரசியலில் ஈடுபடுவது குறித்து பெரியாருடன் கருத்து வேறுபாடு கொண்ட அண்ணா, 1949-ல் பெரியார் – மணியம்மைத் திருமணத்தை முன்வைத்து தனி இயக்கத்தைத் தொடங்க முடிவுசெய்தார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது, பிரிவைத் தடுக்க சமரச முயற்சிகளை மேற்கொண்டவர் குருசாமி.

குத்தூசி குருசாமி முன் வைத்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை, அவரது மறைவுக்குப் பிறகு 1978-ல் எம்.ஜி.ஆர் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியது. தன் வாழ்நாளில் எழுத்துகளிலும், பேச்சுகளிலும் பகுத்தறிவுக் கருத்தியல் சார்ந்து குருசாமி எந்தச் சமரசமும் செய்துகொண்டதில்லை. சுயமரியாதை இயக்கத்தின் அடையாளமாக இருந்த குருசாமி 1965 அக்டோபர் 11-ல் மரணமடைந்தார். இவரின் நூல்களையும், வாழ்க்கை வரலாற்றையும் அவரின் நண்பரான குருவிக்கரம்பை வேலு வெளியிட்டிருக்கிறார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: