பழந்தமிழர்களின் வீர விளையாட்டுக்கள்!

தமிழரின் வீர விளையாட்டுக்கள்!

தமிழரின் வீர விளையாட்டுக்கள்!

காதலும் வீரமும் தமிழர் வாழ்வின் அடிப்படை. மல்லராகவும் மறப்பண்பு உடையோராகவும் வீரப் பற்று மிக்கோராகவும் தமிழர்கள் விளங்கியதைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டும். இத்தகைய மறப்பண்பை வளர்த்தெடுக்கும் வகையிலேயே இன்றும் வீர விளையாட்டுகள் மரபாகவும், பண்பாட்டுச் செயல்பாடாகவும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


சிலம்பம்
வழுக்கு மரம்
சல்லிக் கட்டு
கபடி விளையாட்டு
வில்வித்தை
ஆகியனவாகும்.

சிலம்பம்

சிலம்பம் என்பது ஒரு தடியடி தமிழர் தற்காப்புக் கலை மற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இது தடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப் பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடு புள்ளி) போன்றன அடிப்படையாகக் கொள்ளப்படுகிறது. சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன. சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர், தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர். திருவிழா, கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும்.[1] இக்கலை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமளவு நடக்கிறது.

வரலாறு

மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப் பயன்படுதினர். தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் ‘சிலம்பு’ ஆகும். முற்காலத்தில் இக்கலையை வீர மறவர்கள் பயன்படுத்தினர். தற்போது இது ஒரு சில பள்ளிகளிலும், தனியார் அமைப்புகளாலும் கற்றுத் தரப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் வீர விளையாட்டாகவும் இடம்பெறுகிறது. சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடி வரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் கால மாற்றத்தால் அதன் பெயர்களும் ஆடும் முறைகளும் சிறு மாற்றமடைந்தன. வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன.

சிலம்பாட்ட வகைகள்
சிலம்பத்தில் பல வகைகள் உண்டு. அவையாவன
துடுக்காண்டம்
குறவஞ்சி
மறக்காணம்
அலங்காரச் சிலம்பம்
போர்ச் சிலம்பம்
பனையேறி மல்லு
நாகதாளி,
நாகசீறல்,
கள்ளன்கம்பு
ஆகியனவாகும்.

வழுக்கு மரம்

ஆடவரின் உடல் திறனைச் சோதிப்பது வழுக்கு மரம் விளையாட்டு ஆகும். நன்கு வழுவழுப்பாகச் செதுக்கப்பட்ட உயரமான மரம் நடப்படும். அதனை மேலும் வழுவழுப்பாக்கப் பலவிதமான எண்ணெய்கள் திரும்பத் திரும்பத் தடவப்படும். மரத்தின் உச்சியில் பண முடிப்பு வைக்கப்படும். வழுக்கு மரத்தில் ஏறி அந்தப் பண முடிப்பை எடுக்கும் திறன் உள்ளவர் யார் என்பதைக் கண்டறிவதுதான் போட்டி. அவ்வளவு எளிதாக அந்தப் பண முடிப்பை எடுத்துவிட முடியாது. இளைஞர்கள் முண்டியடித்துக் கொண்டு இப்போட்டியில் கலந்து கொள்வார்கள். ஊர் மக்கள் அனைவரும் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரத்தோடு இவ்விளையாட்டைக் கண்டு களிப்பார்கள். வழுக்கு மரத்தில் ஏறிப் பண முடிப்பை எடுக்கும் இளைஞர் சிறந்த வீரராகக் கருதப்படுவார். அவருக்கு மேலும் பணமும் பாராட்டுகளும் கிடைக்கும். தெய்வ வழிபாட்டின் ஒரு பகுதியாகக் கிராமப் புறங்களில் இவ்விளையாட்டு நடத்தப்படும்.

சல்லிக் கட்டு

நாட்டுப்புற மரபில் வீர விளையாட்டாகக் கருதிப் போற்றப்படுவது சல்லிக் கட்டு ஆகும். தமிழர் திருநாளாம் தைத்திருநாளின் ஓர் அங்கமாக ஊர்கள் தோறும் சல்லிக் கட்டு வெகு விமரிசையாக நடத்தப்படுவதுண்டு. எருது கட்டு, மஞ்சு விரட்டு, ஏறு தழுவுதல், மாடு பிடித்தல் என்று பல பெயர்களில் வழங்கப் பெறும் இவ்விளையாட்டினைப் பார்ப்போம். முரட்டுக் காளைகளை விரட்டிப் பிடித்து வீரத்தை வெளிப்படுத்தும் போட்டி விளையாட்டாக, சல்லிக் கட்டு நிகழ்த்தப் படுகின்றது. சல்லிக் கட்டில் பயன்படுத்துவதற்கு என்றே காளைகள் வளர்க்கப்பட்டு, அவற்றிற்குப் பயிற்சி அளிக்கப் படுகின்றது. இவ்வாறு பயிற்சி பெற்ற காளைகள் சல்லிக் கட்டு நடைபெறும் இடங்களுக்கு அழைத்து வரப்பட்டு, போட்டிக்கு விடப்படுகின்றன. காளைகள் வாடி வாசல் என்ற பகுதியிலிருந்து வெளிக்கிளம்பி எதிர்ப்பட்டோரை எல்லாம் முட்டித் தள்ளியும் மிதித்தும் ஓடிவரும். காளைகளின் போக்கை அறிந்த, காளைகளைப் பிடிக்கப் பயிற்சி பெற்ற, காளைகளின் சாகசம் அறிந்த இளைஞர்கள் சீறிவரும் காளைகளின் மீது துணிச்சலாகப் பாய்ந்து திமிலை இறுகப் பற்றியோ, கொம்பைப் பிடித்து மடக்கியோ அடக்குவர். அனுபவமில்லாத சிலர் காளைகளால் காயப்படுவதுமுண்டு. காளைகளைப் பிடித்து அடக்கியோருக்குப் பலவிதமான பரிசுகள் வழங்கப் பெறும். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சல்லிக் கட்டு மிகவும் பிரபலம். பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்திலுள்ள அலங்கா நல்லூரில் ஆண்டு தோறும் சல்லிக் கட்டு விழாவைத் தமிழக அரசே ஏற்று நடத்துகிறது. உலகின் பல நாடுகளிலும் காளைகளோடு தொடர்புடைய விளையாட்டுகள் நிகழ்த்தப்பட்டு வந்தாலும், தமிழரின் மறப் பண்பாட்டைப் பறை சாற்றும் சல்லிக் கட்டு தனிச் சிறப்புடையது என்பதைப் பார்த்தோர் அறிவர்.

கபடி

சடுகுடு, பலிஞ்சடுகுடு, கபடி என்றெல்லாம் கபடி விளையாட்டு அழைக்கப்படுகிறது. இது இளைஞர்களும், சிறுவர்களும் விரும்பி ஆடும் போட்டி விளையாட்டு ஆகும். கிராமத்து மந்தைகளிலும் ஆற்று மணலிலும் இவ்விளையாட்டு ஆடப்படும். இது விதிமுறைகளுடன் கூடிய விளையாட்டு ஆகும். ஆடுவோர் இரு அணியினராகப் பிரிந்து அணிக்கு ஏழு பேராகவோ, ஒன்பது பேராகவோ, சேர்ந்து ஆடுவர். பாடிச் செல்வது கபடி விளையாட்டின் அடிப்படையாகும். முதல் அணியைச் சேர்ந்தவர் பாடிக் கொண்டே இரண்டாம் அணியினர் இருக்கும் பகுதிக்குச் சென்று, ஒருவரையோ, இருவரையோ தொட்டு வெளியேற்றி வரவேண்டும். அதேபோல் இரண்டாம் அணியினரும் செய்ய வேண்டும். எந்த அணி அதிகப் புள்ளிகள் எடுக்கின்றதோ அது வெற்றி பெற்றதாகக் கருதப்படும். கபடி விளையாட்டு இன்று உலகம் முழுவதும் பரவி ஒலிம்பிக்கில் இடம்பெறும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது.

கபடிப் பாடல்கள்

நாந்தான் வீரன்டா
நல்லமுத்து பேரன்டா
வெள்ளிச் சிலம்பெடுத்து
விளையாட வாரன்டா
தங்கச் சிலம்பெடுத்துத்
தாலிகட்ட வாரன்டா
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு.
கீத்து கீத்துடா
கீரைத் தண்டுடா
நட்டு வச்சன்டா
பட்டுப் போச்சுடா
போச்சுடா போச்சுடா.

வில் விளையாட்டு

வில் விளையாட்டு என்பது அம்பினைச் செறித்துக் குறிபார்த்து எய்தல். வில்வித்தையினைக் கற்றுத்தரக் கை தேர்ந்த ஆசிரியர்கள் இருந்துள்ளனர். சேக்கிழாரின் பெரிய புராணத்தில் விற்போர், வாட்போர் ஆகிய வற்றைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. தஞ்சையில் உள்ள கல்வெட்டில் இராஜ இராஜ சோழனின் காலத்தில் நடந்த விற்போர் பற்றிய செய்தி இருக்கிறது. ஆங்கிலத்தில் ‘அதஇஏஉதவ’ (வில்வித்தை) என்று அழைக்கப்படும். இவ்விளையாட்டு, நவீனப் படுத்தப்பட்டு ‘ஒலிம்பிக்’ வரை வந்துவிட்டது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: