தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை தாவூத் ஷா!

தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை தாவூத் ஷா!

தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை தாவூத் ஷா!

ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய நவீனக் கல்வி முறையின் மீதான ஒவ்வாமை முஸ்லிம் மத அறிஞர்கள் மத்தியில் ஏற்பட்ட காலத்தில், வட இந்தியாவில் அதை எதிர்த்து சர் சையது அகமது கான் நின்றார். அதற்குச் சற்றுப் பிந்தைய காலகட்டத்தில் தமிழக இஸ்லாமியர்கள் மத்தியில் கல்வி, சமூக பொருளாதாரம் குறித்த நுண்ணுணர்வை ஏற்படுத்தியவர் தாவூத் ஷா. இவ்வகையில் தாவூத் ஷாவை தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை எனலாம்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


கும்பகோணம் நாச்சியார்கோயிலை அடுத்த கீழ்மாந்தூர் என்னும் சிற்றூரில் 1885-ஆம் ஆண்டு மார்ச் 29-ஆம் தேதி, பாப்பு ராவுத்தர்-குல்சும் பீவி இணையருக்கு மகனாகப் பிறந்தவர் அல்ஹாஜ் பா.தாவூத்ஷா. அந்தக் காலத்தில் கிழ்மாந்தூர் “நறையூர்’ என்று அழைக்கப்பட்டது. எனவே இவர் “நறையூர் தாவூத்ஷா’ என அழைக்கப்பட்டார். நாச்சியார் கோயிலில் இருந்த ஒரு திண்ணைப் பள்ளியில் படிப்பைத் தொடங்கி, பின்னர் கும்பகோணம் “நேடிவ்’ உயர்நிலைப் பள்ளியில் உயர் கல்வியை முடித்தார். உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது கணித மேதை ராமானுஜம் உற்ற நண்பரானார். ராமானுஜத்துக்குத் தமிழ் வராது. தாவூத் ஷாவுக்குக் கணிதத்தின் மேல் ஒவ்வாமை. இருவரின் நட்பு பரஸ்பரக் குறைகளை நிவர்த்தி செய்தது. சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பின் போது அவருக்குத் தத்துவப் பாடம் கற்பித்தவர் முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். அப்போது அவருக்குத் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர் உ. வே. சாமிநாதையர். கல்லூரியில் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வென்று பரிசுகளைக் குவித்தார். தமிழ்ச் சங்கத் தேர்வில் முதல்நிலை பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார் அவர். உ.வே.சா அவர்களின் அன்புச் சீடராக இருந்ததால் பா. தாவூத் ஷாவின் உரைநடையில் தமிழ் தாத்தாவின் சாயலைக் காணலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து. மதுரைத் தமிழ்ச் சங்க பொன்விழா மலரில் ‘இஸ்லாம்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரை பரவலான வரவேற்பைப் பெற்றது.

1909-ஆம் ஆண்டு “சபுரா’ என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். 1912-ஆம் ஆண்டில் நாச்சியார் கோயிலிலேயே முதன் முதலில் பி.ஏ. பட்டம் பெற்றவர் இவர்தான். மதுரை தமிழ்ச் சங்கத்தில் தேர்வு எழுதி முதல் மாணவனாகத் தங்கப் பரிசும் பெற்றார். 1915-இல் இவருடைய மனைவியை இழந்தார். ஆட்சியர் பணிக்குத் தேவையான துறைத் தேர்வெழுதி 1917-ல் துணை நீதிபதியாக பணியாற்றினார். பின்பு மைமூன் பீவி என்பவரை மறுமணம் செய்து கொண்டார் ஒன்பது ஆண்டுகள் வரை அரசுப் பணியில் இருந்தார். கிலாபத் இயக்கத்தில் ஈடுபட வேண்டிய காரணத்தால் பணியை விட்டு வெளியேறினார்.

மத அறிஞர்கள் கல்வியை உலகக் கல்வி மற்றும் மார்க்கக் கல்வி என்று இரண்டாகப் பிரித்து மார்க்கக் கல்வியை மட்டுமே முன்னிலைப் படுத்தியதையும் முஸ்லிம் பெண் கல்வி கற்க இருந்த தடையையும் தாவூத் ஷா எதிர்த்தார். அவருக்கு எதிராக பத்வா என்னும் மதத் தீர்ப்புகள் பிறப்பிக்கப்பட்டன.

1921-ல் ‘தத்துவ இஸ்லாம்’ என்ற மாத இதழைத் தொடங்கினார். லண்டனிலிருந்து அதை நடத்தினார். அதற்கும் பல நெருக்கடிகள் ஏற்பட்டன. பின்னர் இந்த இதழின் பெயரை ‘தாருல் இஸ்லாம்’ என்று மாற்றினார். இதற்கு ‘இஸ்லாமிய வீடு’ என்று அர்த்தம்.

காங்கிரஸில் இருந்த தாவூத் ஷா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றினார். தஞ்சையின் வீதிகளில் கதர் விற்றார். 1940-ல் அதிலிருந்து விலகி முஸ்லிம் லீக்கில் இணைந்தார். ஜின்னா தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் அவரின் மேடைப்பேச்சை மொழிபெயர்த்து வழங்கினார். ஆங்கிலம், அரபு மொழி யில் இருந்தும் தமிழுக்குப் பல நூல்களை மொழிபெயர்த்தார். புகழ்பெற்ற அரபு காவியமான ‘ஆயிரத்தோர் இரவுக’ளின் சில தொகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்தார். கம்ப ராமாயணத்தை ஆழ்ந்து கற்று அது பற்றி உரையாடும் திறனைப் பெற்றார்.

இதனால் கும்பகோணம் வட்டாரத்தில் இவரை கம்ப ராமாயண சாகிபு என்றழைத்தனர். அவரது முக்கியப் பங்களிப்பு குர்ஆனைத் தமிழில் மொழிபெயர்த்ததாகும். தமிழ்நாட்டின் வரலாற்றில் குர் ஆனை முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்து அதற்கு விளக்க உரை எழுதியவர் தாவூத் ஷா தான். இஸ்லாமிய வரலாற்றில் குர்ஆனை அரபு அல்லாத மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு மத அறிஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. அதன் புனிதத்தன்மை கெட்டுவிடும் என்று அவர் கள் கருதியதே அதற்குக் காரணம். அதையும் மீறி கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையி லும் தாவூத் ஷா அதனை வெளிக்கொண்டு வந்தார்.

பெரியாருடன் பல சந்தர்ப்பங்களில் இணைந்து செயல்பட்டிருக்கிறார். ‘‘தாருல் இஸ்லாம் பத்திரிகையும், அதன் ஆசிரியரும் நமது கூட்டத்தைச் சார்ந்தவர்கள்” என்றார் பெரியார். “என் பள்ளிப்பருவத்தில் ஒரு கையில் குடியரசுப் பத்திரிகையும், மறுகையில் தாருல் இஸ்லாம் இதழும் இருக்கும்” என்று கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.

திரைப்படங்கள் மத விரோதமான ஒன்று (இன்றளவும் அது நீடிக்கிறது) எனக் கருதப்பட்ட காலத் தில் திரைப்படங்களுக்கு ஆதரவாக இருந்தார் தாவூத் ஷா. எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களில் முஸ்லிம் வாழ்வியல் சார்ந்த காட்சிப் பதிவுகளுக்கு இயக்குநர்கள் இவரைப் பயன்படுத்திக் கொண்டனர்.

பெண் கல்வி கூடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்த காலத்தில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பஷீர் அகமது, பெண்களுக்காக எஸ்.ஐ.இ.டி கல்லூரியை ஆரம்பித்தபோது, அவருக்கு உறு துணையாக இருந்தார். தமிழ் இஸ்லாமிய சமூகத் தில் முக்கிய சீர்திருத்த ஆளுமையாக மிளிர்ந்த தாவூத் ஷா, தனது 84-வது வயதில் 1969 பிப்ரவரி 24-ல் மரணமடைந்தார். தாவூத் ஷா பற்றிய நூல்களை மூத்த பத்திரிகையாளர் அ.மா.சாமி வெளியிட்டிருக்கிறார். இன்றைக்கும் தேவைப்படும் ஒரு இஸ்லாமிய ஆளுமை தாவூத் ஷா.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்த நாள் (டிசம்பர்... பெரும்பாவலர் சுப்பிரமணிய பாரதியார் பிறந்த நாள் (டிசம்பர் 11, 1882)! சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவி...
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!... பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்! முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) தென் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் எ...
சுதந்திர போரின் முதல் பெண்மணி, சிவகங்கைச் சீமையின்... சுதந்திர போரின் முதல் பெண்மணி, சிவகங்கைச் சீமையின் ராணி வேலு நாச்சியார்! தன் வீரத்தால் ஆங்கிலேயரை வெற்றிகொண்டு, சிவகங்கைச் சீமையின் ராணியாக முடிசூட...
தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதர் – “இசைத்தமிழ்ச் ... தமிழறிஞர் ஆபிரகாம் பண்டிதர் - “இசைத்தமிழ்ச் சிகரம்”! ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் (ஆகஸ்ட் 2, 1859 - 1919) புகழ்பெற்ற தமிழிசை கலைஞர், சித்த மருத்துவ...
Tags: 
%d bloggers like this: