75-ம் ஆண்டு பவளவிழா காணும் தினத்தந்தி!

75-ம் ஆண்டு பவளவிழா காணும் தினத்தந்தி!

75-ம் ஆண்டு பவளவிழா காணும் தினத்தந்தி!

சாமான்ய மக்களுக்கும் செய்தி மீதான ஈர்ப்பை ஏற்படுத்தி, உலக அறிவோடு தமிழறிவையும் சேர்த்தே ஊட்டிவரும் ‘தினத்தந்தி’க்கு இது 75-ம் ஆண்டுவிழா… பவள விழா!

இந்திய அளவில், விற்பனையிலும் வாசகர் எண்ணிக்கையிலும் முதல் வரிசையைப் பிடித்திருக்கும் தினத்தந்தியின் இந்த இமாலய சாதனை, மாநில மொழியான தமிழுக்கும் சேர்த்தே பெருமை செய்திருக்கிறது. வணிகம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிராமல், பாமரனுக்கும் எழுத்தறிவித்து, அவனது பொது அறிவுப் பார்வையை விசாலமாக்குகிற சீரிய பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது தினத்தந்தி!


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


ஆம்… தமிழகச் சூழலில், மக்களின் கல்வி அறியாமையைப் போக்குவதற்காக ‘அறிவொளி இயக்கம்’ ‘முறை சாரா கல்வி இயக்கம்’ என அரசு செயல்படுத்திவரும் திட்டங்களுக்கு ஈடாக ‘தினத்தந்தி’யும் தனது கல்விச் சேவையைத் தமிழுலகுக்கு அளித்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை!

சி.பா.ஆதித்தனாரால், 01-11-1942-ல் மதுரையில் முதல் பதிப்பாகத் தொடங்கப்பட்டது தினத்தந்தி நாளிதழ்! அந்த விழாவின்போது, ”ஒவ்வொரு மாவட்டத் தலைநகரத்திலும் பத்திரிகையைத் தொடங்கி செய்திகளை விரைவாகத் தரவேண்டும்” என்ற தனது லட்சியக் கனவை வெளிப்படுத்திப் பேசினார் ஆதித்தனார். பின்னாளில் தந்தையின் கனவை நனவாக்கினார் தனயன்; ஆம்… இன்று உலகம் முழுக்க 17 பதிப்புகளாக கிளை விரிந்து, ஆழ வேரூன்றி பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது தினத்தந்தி!

தந்தையின் சாதனை மகுடத்தில் மற்றுமொரு வைரக் கல்லாக, வெளிநாட்டிலும் (துபாய்) தினத்தந்தி பதிப்பினைத் தொடங்கி ‘சரித்திர சாதனை’ படைத்திருக்கிறார் சிவந்தி ஆதித்தனாரின் புதல்வனான பாலசுப்பிரமணியன் ஆதித்தன்! காட்சி ஊடகமும், சமூக வலைதளங்களும் கடுமையான சவால் விடுக்கும் சூழலிலும் தினத்தந்தியின் இந்தச் சாதனை யாரும் எட்டிப் பிடிக்கமுடியாதது!

தடைகள் பல தகர்த்தெறிந்து தனது சாதனைப் பயணத்தில் 75-ம் ஆண்டைத் தொட்டிருக்கும் தினத்தந்தியின் பயணப் பாதையை இந்நேரத்தில் நாம் சற்று பின்னோக்கிப் பார்ப்பதும் அவசியம்!

‘பாமரனுக்கான பத்திரிகை’ என்று ஆரம்பத்தில், எள்ளி நகையாடியவர்களே அதிகம். ஆனால், கல்வி அறிவில் கடைநிலையில் இருந்த அந்தப் பாமரனையும் எழுத்துக்கூட்டிப் படிக்கவைத்து அறிவுலகின் உச்சிக்குக் கைப்பிடித்து அழைத்துச் சென்ற தினத்தந்தியின் வளர்ச்சி, நகையாடியவர்களையே நாளடைவில், வாயடைக்கச் செய்ததுதான் கடந்தகால வரலாறு!

‘ஆளும் கட்சிக்கு அடிபணிந்துபோகிறது’ என்றதொரு குற்றச்சாட்டு எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்களால் எப்போதும் வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு தினத்தந்தி நாளிதழின் மூத்த ஆசிரியர் அளித்த பதிலில், ”ஆளும் அரசின் செய்திகளை வெளியிடுவது பத்திரிகைகளின் கடமை! அதை ஆளும் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாடு என்று விமர்சிப்பதில் எங்கு இருக்கிறது உண்மை?” என்றக் கேள்வியை முன்வைத்தார். கூடவே, ”அதே எதிர்க்கட்சியினர் ஆளும்கட்சியினராக வரும்போது இந்த வசைச்சொல் வந்ததில்லை. மாறாக, ஆளும் கட்சியாக இருந்தவர்களேகூட, தனிப்பட்ட பழிவாங்குதலுக்காக அரசு விளம்பரங்களை நிறுத்திவைத்துப் பழிவாங்கிய வரலாறையும் தினத்தந்தி கடந்தே வந்திருக்கிறது” என்கிறார்.

ஆரம்ப காலங்களில், பத்திரிகையின் முதல் பக்கச் செய்தி தயாரானதும், அதனை அலுவலக வாயில் காப்பாளரிடம் வாசிக்கச் சொல்லிக் கேட்டு தலைப்பில், திருத்தங்கள் செய்வாராம் சி.பா.ஆதித்தனார்.

மெத்தப் படித்த மேட்டுக்குடி மக்களுக்கான பத்திரிகையாக அல்லாமல், அதிகார மையங்களுக்கு அசைந்துகொடுக்காமல், எளிய மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் உயர்த்திப் பிடிக்கும் பத்திரிகையாக தினத்தந்தியை வளர்த்தெடுத்த ஆதித்தனாரின் உயரிய பணி போற்றுதலுக்குரியது!

தமிழகத்தில் நிறைய வாசகர்களை கொண்ட நாளிதழ் தினத்தந்தியாகும்.

எளிய தமிழ்ச் சொற்களை பயன்படுத்துதல், ஒவ்வொரு பத்திக்கும் தலைப்பு இடுதல்.

சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, வேலூர், கடலூர், ஈரோடு, நாகர்கோவில், தஞ்சை, திண்டுக்கல்,திருப்பூர் புதுச்சேரி, பெங்களூர், மும்பை , துபாய் ஆகிய இடங்களில் இருந்து தினத்தந்தி பதிப்பிக்கப்படுகிறது.

வருடத்தின் இரண்டாம் பகுதியில் ஒவ்வொரு புதன்கிழமையும் தினத்தந்தி ‘பத்து, பன்னிரண்டாம் வகுப்பு கேள்வி வினா விடை’ புத்தகத்தை வெளியிடுகிறது. இதில் அனைத்து பாடங்களிலிருந்தும் விடைகளுடன் மாதிரி கேள்வித்தாள் தரப்படுகின்றது. மேலும் ஆண்டுக்கு ஒரு முறை ‘வெற்றி நிச்சயம்’ என்ற நிகழ்ச்சி தினத்தந்தியால் நடத்தப்படுகின்றது. இதில் மாணவர்கள் வருங்காலத்தில் என்ன துறையை தேர்ந்தெடுக்கலாம் என்பதைப் பற்றி ஒவ்வொரு துறையிலிருந்தும் வல்லுனர்கள் வந்து மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்குகின்றார்கள்.

பள்ளிப்பகல் உணவுத் திட்டம், சீருடைத்திட்டம், பள்ளிச்சீரமைப்புத் திட்டம் முதலான பல கல்வித்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் அவை குறித்த செய்திகளுக்கு முன்னுரிமையும் முழு அளவு இடமும் தாராளமாகத் தொடர்ந்து தந்த நாளிதழ்களில் முதலிடம் பெற்ற நாளிதழாக தினத்தந்தியைத் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார் கல்வித்துறை இயக்குநராகப் பணியாற்றிய பத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு.

ஏழை, எளிய மக்கள் கல்வி கற்பதற்கு சிறப்பாக பணி புரிந்ததற்காக தினத்தந்தி நிர்வாக இயக்குநர் சிவந்தி ஆதித்தனாருக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு வழங்கி கவரவித்தது.

ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் பத்தாம் வகுப்பு பிளஸ்-2 வகுப்புகளில் முதல் 3 இடங்களை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி மானியத்தொகை தினத்தந்தி வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் சி.பா ஆதித்தனார் பிறந்த நாள் விழாவில் தமிழக அறிஞர்களுக்கு பரிசு தொகையும் பொற்கிழியும் வழங்கி கவுரவித்து வருகிறது.

Tags: 
Subscribe to Comments RSS Feed in this post

One Response

  1. Pingback: Venkatesh Devi

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: