ரேகைச் சட்டம் – குற்றப் பழங்குடிகள் சட்டம், பிரிட்டீஷ் இந்தியாவில் எதற்காக போடப்பட்டது?

ரேகைச் சட்டம் - குற்றப் பழங்குடிகள் சட்டம், பிரிட்டீஷ் இந்தியாவில் எதற்காக போடப்பட்டது?

ரேகைச் சட்டம் – குற்றப் பழங்குடிகள் சட்டம், பிரிட்டீஷ் இந்தியாவில் எதற்காக போடப்பட்டது?

1757 ஆம் ஆண்டு நடைபெற்ற பிளாசிப் போருக்குப் பின் வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி ஒரு அரசியல் சக்தியாக உருவெடுத்தது . தென்பகுதி பாளையக்காரர்களான பூலித்தேவர், கட்டபொம்மன்,விருப்பாட்சி கோபால நாயக்கர், வேலு நாச்சியார், மருதுபாண்டியர் போன்றோர் வீழ்த்தப்பட்ட பிறகு தென்னிந்தியப் புரட்சி முழுமையாக ஒடுக்கப்பட்டது. 1857ல் நடைபெற்ற போராட்டமும் நசுக்கப்பட்ட பின் 1858ல் பிரிட்டிஷ் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் இந்தியா கொண்டு வரப்பட்டது.

இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு போர்களின் மூலம் சில இனக்குழுக்களை தங்களுடைய நலன்களுக்கு ஆபத்தானவர்கள் என்று பிரித்தானியர்கள் சில இனக்குழுக்களை அடையாளம் கண்டு கொண்டனர் . இவர்கள் ஆங்கில நிர்வாகத்திற்கு அடங்க மறுத்ததோடு அச்சுறுத்தலாகவும் விளங்கினர். தொடர்ச்சியாக வலுவான ஆட்சியை நிலை நாட்ட வேண்டுமானால் இந்த வீரஞ்செறிந்த இனக்குழுக்களை அடக்கி ஒடுக்க வேண்டிய தேவை வெள்ளையர்களுக்கு ஏற்பட்டது. அதுமட்டுமல்ல பிரித்தானியர்களுக்கு உதவியாக இருந்து வந்த பெரும் நிலஉடைமையாளர்களின் சொத்துகளுக்கு ஆபத்தானவர்களாக கருதப்பட்ட நாடோடிகள்,அலைகுடி மாந்தர்கள்,வனவாசிகள்,பழங்குடிகள் போன்றோர்களைக் கட்டுப்படுத்தவேண்டிய தேவையும் அவர்களுக்கு இருந்தது. மிக முக்கியமாக நாட்டில் தடையின்றி வரி வசூல் செய்யவும், வணிகக் கொள்ளையை நடத்தவும் இது போன்ற இனக்குழுக்களை கண்காணிக்க வேண்டிய அவசியத்தைப் புரிந்து கொண்டால்தான் கை ரேகைச் சட்டத்தின் காலனியத் தேவையைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்தச் சட்டம் முதன் முதலில் எங்கு கொண்டு வரப்பட்டது? எதற்காகக் கொண்டு வரப்பட்டது?

1871ஆம் ஆண்டு இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணங்களிலும்,ஐக்கிய மாகாணத்திலும் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு 1876ல் வங்காளத்திற்கு நீட்டிக்கப்பட்டது. 1877 ல் ஆஜ்மீர், மேவார் பகுதிகளின் மீது பாய்ந்தது. ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் மீது இக்கொடிய சட்டம் பாய்ந்தது. 1911 ல் கைரேகைச் சட்டம் சென்னை மாகாணத்திற்கும் விரிவு படுத்தப்பட்டது. சென்னை மாகாணத்தில் உள்ளவர்கள் மீது இச்சட்டத்தை ஏவினர். யார் யாரெல்லாம் மீது ஏவப்பட்டது தெரியுமா?

“வேப்பூர் பறையர்கள்,வெள்ளையாங்குப்பம் படையாட்சிகள், வேட்டுவ கவுண்டர்கள், ஊராளிக் கவுண்டர்கள் உப்புக் குறவர்கள், மலைக்குறவர்கள், சுரமரை ஒட்டர்கள், தொட்டிய நாயக்கர்கள், காலாடிப் பள்ளர்கள்,கூத்தாப்பல் கள்ளர்கள், வலையர்கள், பிறமலைக் கள்ளர்கள், ஆப்பநாட்டு கொண்டையன் கோட்டை மறவர்கள், திருநெல்வேலி பூலம் மறவர்கள், கல் ஒட்டர்கள்” போன்றோர் மீது பல்வேறு காலகட்டங்களில் இக்கொடிய சட்டம் பாய்ந்தது.

நண்பர்களே! பழங்குடித் தன்மை வாய்ந்த வல்லாதிக்க எதிர்ப்புணர்வு கொண்டிருந்த பிரமலைக்கள்ளர்களைக் ஒடுக்கும் வகையிலும், காலனிய அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர்களின் மூலதனத்தைப் பாதுகாக்கும் வகையிலும் இக்கொடிய சட்டம் இம்மக்கள் மீது ஒட்டுமொத்தமாக ஏவப்பட்டது. இந்த சட்டம் இம்மக்கள் மீது ஏன் பாய்ந்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால் தமிழகத்தின் சில நூற்றாண்டு கால சமூக வரலாற்றை அறிந்திருக்க வேண்டும்.

தோழர்களே! 1801ல் தென்னிந்தியப் புரட்சி முழுமையாக ஒடுக்கப்பட்ட பின் 1802ல் கும்பினியார் ஆர்க்காட்டு நவாபுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர்.. அதன்படி சென்னை மாகாணம் உருவாக்கப்பட்டது.நீதி,நிர்வாகம், இராணுவ அதிகாரங்கள் எல்லாமும் கிழக்கிந்திய கும்பினியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. தென்னிந்தியாவின் பெரும் பகுதி கும்பினியாரின் முழு ஆதிக்கத்திற்கு வந்த பிறகும் கூட தமிழகத்தில் இருந்த காவல் முறையை பிரித்தானியர்களால் முழுமையாக ஒழிக்க முடியவில்லை. அப்பாரம்பரிய காவல் முறை பிரித்தானியர்களின் இறையாண்மைக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது. அவர்களால் நிலையான வரிவசூலைச் செய்ய முடியவில்லை. இதற்கு தடையாக இருந்த காவல் முறைதான் என்ன? இதைப் பற்றி சில குறிப்புகளை மட்டும் இங்கே சுட்ட விரும்புகிறேன் தோழர்களே! குடிகாவல் முறையிலே திசைக்காவல், தேசக்காவல், நாடுகாவல், ஊர்க்காவல் என காவல் முறைகள் இந்த மண்ணிலே காலங்காலமாக நிர்வகிக்கப்பட்டு வந்தன.இவ்வாறு காவல் காப்பதற்கு காவல் மானியமாக நிலங்கள் வழங்கப்படும்.மானிய நிலங்களிலிருந்து வரக்கூடிய வருமானத்தை காவல்காரர் முழுமையாக வைத்துக்கொள்வார்.மேலும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் அறுவடை செய்யப்படும் தானியங்களில் ஒரு பகுதியைக் காவல் கூலியாகத் தர வேண்டும்.இது நம் மண்ணிலே கடைப்பிடிக்கப்பட்டு வந்த மிக நீண்ட மரபு.பெரும்பாலும் தென் தமிழகத்தில் கள்ளர், மறவர், வலையர், குறவர், வல்லம்பர் போன்ற இனக்குழுக்களே காவலர்களாக இருந்தனர். வட தமிழகத்தில் வேப்பூர் பறையர்களும், வெள்ளிகுப்பம் படையாட்சிகளும் கொங்குப் பகுதியில் ஊராளிக் கவுண்டர்களும், வேட்டுவக் கவுண்டர்களும் காவல்காரர்களாய் இருந்தனர்.

பாளையக்கார்களின் தோல்விக்குப் பிறகு ‘காவல் உரிமை’ சட்ட விரோதம் என்று பிரித்தானியர்களால் அறிவிக்கப்பட்டது. குடியானவர்கள் ‘காவல் கூலி’ கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். 1803ல் நிரந்தர ஒப்பந்தச் சட்டம் இயற்றி காவல் மானியங்களை முற்றிலும் சட்ட விரோதமாக்கியது பிரித்தானிய அரசு..இதனால் பாரம்பரிய காவல்காரர்கள் தங்கள் வருமானத்தை இழக்கத் தொடங்கினர். மேலும் 1861ல் இந்தியக் காவல் சட்டம் இயற்றப்பட்டது.ஐரோப்பிய பாணியிலான நவீன காவல் அமைப்பு உருவாக்கப் பட்டது.இந்த நவீன காவல் அமைப்பிற்கும் பாரம்பரிய காவல் அமைப்பிற்கும் இடையே யார் காவல் வரி வசூலிப்பது என்று மோதல் உருவாகத் தொடங்கியது. யாருக்கு வரி செலுத்துவது என்று வேளாண் குடிகளும் தடுமாறின. இவ்வகை மோதல்களே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் காவல் குடிகளுக்கும், வேளாண் குடிகளுக்கும் இடையே ஏற்பட்ட பல கலவரங்களுக்கும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த காவல் குடிகள் மீது குற்றப் பரம்பரைச் சட்டம் பாய்வதற்கும் ஆணிவேராய் அமைந்தது.

நண்பர்களே! பிரித்தானிய காலனிய அரசாங்கத்தின் பொருளாதார அரசியல் கொள்கைகள் இந்தியச் சமூகத்தில் பலவகையான மாற்றங்களை ஏற்படுத்தின.நவீன சந்தைப்படுத்தல் முறையானது பாரம்பரியமாக ஊர் சுற்றி வந்து வணிகம் செய்து வந்த இனக்குழுக்களுக்கு எதிராக மாறியது. அவர்கள் ஊர் ஊராகச் சென்று பொருட்களைப் பண்ட மாற்று முறையில் விற்று வந்தனர். இது பிரித்தானியர்களின் நவீன சந்தை முறைக்கு எதிரானதாக இருந்தது.எனவே நவீன சந்தையைப் பலப்படுத்த வேண்டுமானால் இந்த நாடோடி வணிகர்களைக் கட்டுப்படுத்தி ஒரு இடத்தில் நிலையாக வைக்க வேண்டிய அவசியம் இவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் நாடோடி வணிகர்களும் சந்தை வணிகர்களும் பல இடங்களில் மோதிக் கொண்டதை வரலாற்றின் பக்கங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது. தங்களது தொழில் நசிந்து வருவதைக் கண்டு ஆத்திரமடைந்த நாடோடி வணிகர்கள் சந்தை வணிகர்களின் அங்காடிகளையும் கிடங்குகளையும் கொள்ளையிட ஆரம்பித்தனர். அதனால் அவர்கள் கொள்ளையிடும் சமூகமாக இங்கு அடையாளப்படுத்தப்பட்டனர்.
இதைப் போலவே பிரித்தானிய அரசு 1880 களில் உப்பு உற்பத்தியைத் தன்வசப்படுத்தியது. இதனால் பல ஆண்டு காலமாக பாரம்பரியமாக உப்பு உற்பத்தி செய்து வந்த சமூகத்தாரும் அவர்களிடம் உப்பை வாங்கி வணிகம் செய்து வந்த சமூகத்தாரும் தங்கள் தொழில்களை இழந்தனர். இதே காலகட்டத்தில் தொடர்வண்டி, சாலைப் போக்குவரத்துகள் விரிவு படுத்தப்பட்டன. இவைகள் மூலம் நவீன சந்தைகளுக்காக உப்பு, தானியங்கள் கொண்டு செல்வதைப் பார்த்து ஆத்திரமடைந்து, இந்தத் தொழில்களைச் செய்து வந்த பூர்வகுடிமக்கள் ரயில்களைக் கொள்ளையிட ஆரம்பித்தனர். இதனால் இவர்கள் ரயில் கொள்ளையர்களாக அடையாளப்படுத்தப்பட்டனர். இவர்களின் வாழ்வியல் முற்றிலும் முடக்கப்பட்டது. அழிக்கப்பட்டது.

மேலும் 1880களில் புதிய வனப் பாதுகாப்பு சட்டத்தை பிரித்தானியர் உருவாக்கினர். வேட்டையாடும் தொழில் சட்ட விரோதமாக்கப்பட்டது. வேட்டையாடியும், வனங்களில் கிடைக்கும் பொருட்களை எடுத்துச் சென்றும் மலைவாழ் மக்கள் வணிகம் செய்து வந்தனர். இதையே காரணம் காட்டி இவர்களும் குற்ற மரபினராக அறிவிக்கப்பட்டனர். வனம் கொள்ளையிடப்பட்டது. வணிக வனப் பயிர்களான காஃபி, தேயிலை போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டன. இதற்காக வனங்களிலிருந்து வனவாசிகள் விரட்டப்பட்டு அலை குடியாக்கப்பட்டனர். இதிலிருந்து நாம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும், தங்களுடைய சுரண்டல் கொள்ளைகளுக்கு எதிராக இருப்பவர்கள் மீதும் தங்களுடைய வணிக நலன்களுக்கு எதிராக இருப்பவர்கள் மீதும், காலனிய ஆட்சிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இனக் குழுக்கள் மீதும்தான் இவர்கள் குற்றப்பரம்பரைச் சட்டத்தை பிரயோகம் செய்தனர்.

1911ல் சென்னை மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் 1914ஆம் ஆண்டு மே 5ஆம் நாள் மதுரைக்கு மேற்கேயுள்ள கீழக்குடியில் வசித்து வந்த கள்ளர்கள் மீது முதன் முதலாக அமுல்படுத்தப்பட்டது. கீழக்குடியைத் தொடர்ந்து சொரிக்கான்பட்டி, உரப்பனூர்,பூசலப்பூரம் என பல ஊர்களில் இச்சட்டம் பிரயோகப்படுத்தப்பட்டது. இக்கொடுமையான சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது இதனை எதிர்த்து குரல் கொடுத்தவர் யார் தெரியுமா! ஜார்ஜ் ஜோசப் என்ற வழக்குரைஞர். அன்றைய மதுரை மாவட்டத்திலே காங்கிரசுப் பேரியக்கத்திலே தன்னை இணைத்துக் கொண்டு விடுதலைக்காய்ப் பாடுபட்டவர். பிறப்பால் இவர் ஒரு மலையாளி. கீழத்தஞ்சையிலே நண்டையும் நத்தையையும் தின்றுகொண்டு ஒடுக்கப்பட்ட விவசாயக் கூலி உழைப்பாளர்களின் மீது நிகழ்த்தப்பட்ட சவுக்கடி சாணிப்பால் கொடுமையை ஒழித்த தோழர் பி.சீனிவாச ராவ் ஒரு கன்னடர். அதைப்போல பிரமலைக் கள்ளர்களுக்காக போராடிய ஜார்ஜ் ஜோசப் ஒரு மலையாளி. இந்த மகத்தான மனிதரின் பெயரை உச்சரிக்கக் கூட தெரியாத கள்ள நாட்டு மக்கள் இவரை ‘ரோசாப்பூ துரை’ என்றே அழைத்தனர். இன்றும் இவர்கள் மத்தியிலே எத்தனையோ ரோசாப்பூ தேவர் இருப்பதை காணலாம். பெண் குழந்தைகளுக்கு ரோசாப்பூ என்று பெயர் சூட்டி வரும் வழக்கமும் இருந்து வருகிறது. இந்த ஜார்ஜ் ஜோசப் யார் தெரியமா நண்பர்களே! பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரின் வைக்கம் போராட்டத்தை நாம் அறிவோம். சாதி ஆதிக்கத்திற்கு எதிராக, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக போராட தந்தைப் பெரியாரை வைக்கத்திற்கு அழைத்தவர் இந்த ஜார்ஜ் ஜோசப் அவர்கள்தான் என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இவர்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சட்டரீதியாக பல்வேறு வகைகளில் போராடினார்.

நண்பர்களே! முதல் உலகப் போர் முடிந்த உடன் பிரித்தானிய அரசு 1918இல் ஒட்டு மொத்த பிரமலைக் கள்ளர் சமூகமும் குற்றப்பரம்பரை என்று அறிவித்தது. பிறகு கைரேகை பதிவு செய்வது தீவிரப்படுத்தப்பட்டது.கள்ளநாட்டுப் பெரியவர்கள் 24-03-1920இல் தும்மக்குண்டில் சுமார் பன்னிரண்டு ஊரைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி மிகக்கடுமையாக எதிர்ப்பது என முடிவு செய்தனர். இந்தப் போராட்டத்தில் பெருங்காமநல்லூரில் 16 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள்.இந்திய வரலாற்றில் குறிப்பாக தமிழக வரலாற்றில் வேலூர் கிளர்ச்சிக்குப் பின்பு ஏறத்தாழ 114 ஆண்டுகள் கழித்து பிரித்தானியரை எதிர்த்து நடந்த ஒரே ஆயுதக் கிளர்ச்சி பெருங்காம நல்லூர் கிளர்ச்சியே ஆகும். அந்த வகையில் தென்னிந்திய விடுதலைப் போராட்டத்தில் இதற்கென ஒரு முக்கிய இடம் உண்டு நண்பர்களே! இந்தப் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 16 பேரோடு இந்த கொடுமை முடியவில்லை தோழர்களே! அதன் பின்பு நூற்றுக்கணக்கானோர் கை,கால்களில் விலங்கிடப்பட்டுத் திருமங்கலம் வரை அடித்து இழுத்து செல்லப்பட்டனர். அவர்களில் 53 பேர் மீது கொடிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டனர். அத்துமீறித் துப்பாக்கிச் சூடு நடத்தி அப்பாவி மக்களைக் கொன்றதற்கு நடவடிக்கை எடுக்காமல் கொலைகாரர்களுக்கு வெள்ளை அரசாங்கம் சன்மானம் அளித்துப் பாராட்டியது. இந்தக் கொலை வெறித் தாக்குதலில் உயிரிழந்த ஈகியர்

1. ஓவாயன் என்ற முத்துகருப்பத் தேவர்
2. மாயாண்டி தேவர்
3. குள்ளன் பெரிய கருப்பத்தேவர்
4. விருமாண்டித்தேவர்
5. சிவன்காளைத்தேவர்
6. பெரியாண்டித்தேவர்
7. மோளையசின்னாத்தேவர்
8. மாயாண்டித்தேவர்
9. முனியாண்டி என்ற மாயாண்டித்தேவர்
10. கென்டியான் உடையாத்தேவர்
11. சின்னமாயத்தேவர்
12. பெரிய கருப்பத் தேவர்
13. வீரணத்தேவர்
14. பஞ்சாண்டி முத்தையத்தேவர்
15. கென்டியான் வீரத்தேவர்
16. நடையநேரி பெரியமாயத்தேவர் மகள் மாயக்காள்

இந்தப் படுகொலைகளைப் பற்றி 14-04-1920 நாளில் ‘தி இந்து’ நாளிதழ். Police shooting in the Madura district thirteen killed and several wounded, என்று விரிவான செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தக் கொடிய அடக்குமுறைச் சட்டத்தை எதிர்த்துத்தான் முத்துராமலிங்கத்தேவர் வெற்றி கண்டார். அவர் பிரித்தானிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திலே கம்யூனிஸ்ட்டுகளோடு சேர்ந்து காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலே அவர் அங்கம் வகித்தார். அப்பகுதி மக்களைத் திரட்டி குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராகப் போராடினார். இது வல்லாதிக்கத்திற்கு எதிரான போராட்டம். பிரித்தானியர்களுக்கு எதிரான போராட்டம். 1937ல் அவர் காங்கிரஸ் வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். 1937 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலேயே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குற்றப்பரம்பரைச் சட்டத்தை நீக்குவோம் என்று அறிவித்தார்கள்.ஆனால் 1937 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற இராசகோபாலாச்சாரியார் இச்சட்டத்தை நீக்கவில்லை. இந்தி திணிப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அதை எதிர்த்துதான் தந்தை பெரியார் தலைமையில் முதல் மொழிப்போராட்டம் வெடித்தது. அதன் அடிப்படையில்தான் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கம் எழுந்தது. 1937 ல் இராஜாஜி செய்த துரோகத்தை கடுமையாக எதிர்த்தார் தேவர். அன்றைக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து, ஊர் ஊராகச் சென்று அவர்களை அணி திரட்டி மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினார். நம்மால் குமுளி-கூடலூரில் இருந்து மதுரை வரை ஒரு மனிதச்சங்கிலியை வெற்றிகரமாக நடத்தமுடியுமா? முத்துராமலிங்கத்தேவர் தலைமையில் அப்படி ஒரு மாபெரும் மனிதச் சங்கிலியை நடத்தினார்கள். ஒரு மாபெரும் பேரணியையும் நடத்தினார்கள். எளிதிலே வரவில்லை அந்த வெற்றி. ஊர் ஊராகச் சென்று மக்களைத் திரட்டினார்கள். அவர்கள் கொடுத்த கூழைக் குடித்தார்கள். காங்கிரசின் துரோகத்தை எதிர்த்தவர்கள் நடத்திய போராட்டம் 1947 ஆம் ஆண்டு சுப்பராயன் முதலமைச்சராக இருந்த போது நீக்கப்பட்டது. குற்றப் பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்டது. இந்த கொடிய சட்டத்தை எதிர்த்து களமாடி உயிர் நீத்த மாயக்காள் உள்ளிட்ட ஈகியருக்கு வீரவணக்கம்.

குறிப்புதவி நூல்கள் :

1. பிரமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்
2 . குற்றப் பரம்பரை அரசியல்

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: