உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் பற்றி கோயிலுக்குள் அதிர்ச்சியூட்டும் சர்ச்சைகள்!

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் பற்றி கோயிலுக்குள் அதிர்ச்சியூட்டும் சர்ச்சைகள்!

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் பற்றி கோயிலுக்குள் அதிர்ச்சியூட்டும் சர்ச்சைகள்!

மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் வருமானத்தை வாரி வழங்குகிறது தஞ்சை பெரிய கோயில். ஆனால், இது முறையான பராமரிப்பும் பாதுகாப்பும் இன்றி பல வகைகளிலும் சீரழிந்துகொண்டிருப்பதாகப் பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

‘உலகப் புகழ்பெற்ற கோயிலாகத் தஞ்சை பெரிய கோயில் போற்றப்படுகிறது. ஆனால், இக்கோயிலின் நிர்வாகம், இதன் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் கொஞ்சம் கூட அக்கறை செலுத்துவதில்லை. இக்கோயிலில் உள்ள இடிதாங்கி பழுதாகிக் கிடக்கிறது. இதனால்தான் லேசான இடியைக் கூட எதிர்கொள்ள முடியாமல், இக்கோயிலின் இரண்டாவது நுழைவாயிலான கேரளாந்தகன் நுழைவாயில் கோபுரம் சேதமடைந்தது. இடிதாங்கி நல்ல நிலையில் இருக்கிறதா என அவ்வப்போது சோதனை செய்திருக்க வேண்டும். ஆங்காங்கே இன்னும் கூடுதலான எண்ணிக்கையில் இடிதாங்கி வைக்க முடியுமா என ஆய்வு செய்ய வேண்டும். சாதாரண இடிக்கே இந்த சேதம் ஏற்பட்டுள்ளதென்றால் பெரிய அளவிலான இடி ஏற்பட்டால் கோயில் கருவறையின் பிரதான கோபுரத்தின் எதிர்காலம் குறித்து கவலை ஏற்படுகிறது.

கோயிலுக்குள் உள்ள கண்காணிப்புக் கேமராக்களும் ஒழுங்காகச் செயல்படவில்லை. ஏற்கெனவே இங்கிருந்து 60-க்கும் மேற்பட்ட சிலைகள் திருடப்பட்டுள்ளன. மீண்டும் திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. சமூக விரோதிகளால் கோயிலுக்கு வேறு ஆபத்துகள் நிகழக்கூடும். கோயிலின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாகக் கண்காணிப்புக் கேமராக்கள் வைக்க வேண்டும். தற்போது இக்கோயில் தஞ்சை அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ்தான் அரண்மனை தேவஸ்தானம் உள்ளது. பெரிய கோயில் உண்டியலில் ஒவ்வொரு மாதமும் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் வருகிறது. இதுமட்டுமல்லாமல் இக்கோயிலுக்குச் சொந்தமான கடைகள், விவசாய நிலங்கள் மூலமாகப் பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனால், இவற்றில் ஒரு சிறு பகுதி கூட, கோயிலின் பராமரிப்புக்கோ, பாதுகாப்புக்கோ செலவிடப்படுவதில்லை. ஊழல் முறைகேடுகள் மலிந்துள்ளன. இங்கிருந்த யானைக்கு ஒழுங்காக உணவு கொடுக்காமல் பட்டினிப் போட்டு பொய் கணக்கு எழுதப்பட்டதாக இங்கு பணியாற்றும் ஊழியர்கள் சொல்கிறார்கள். அந்த யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தே போய்விட்டது” என்று தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்த பழ.ராஜேந்திரன் கூறினார்.

“கருவறையின் வெளிப்புறம் உள்ள தட்டு ஓடுகளைப் பல அடி ஆழத்துக்கு பெயர்த்து எடுத்து, புதிய தட்டு ஓடு பதிப்பதற்கான முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது மிகவும் ஆபத்தான செயல். இது கருவறை கோபுரத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும். இதன் எடை ஒன்றரை லட்சம் டன். கருங்கற்களால் இவை அடுக்கப்பட்டுள்ளன. கருவறை கோபுரத்தின் உறுதித்தன்மை என்பது, தரைத்தளத்தையும் சார்ந்துள்ளது. தரைத்தளத்துக்கு கீழே 350 அடி ஆழம் வரை மணல் மட்டுமே உள்ளது. இதன் மீது 6 அடி உயரத்துக்கு செங்கல் பொடி உள்ளது. இதற்கும் மேல் ஒன்றரை அடி உயரத்துக்கு சுண்ணாம்புக் கட்டு உள்ளது. இவை பல அடி ஆழத்துக்கு பெயர்த்து எடுக்கப்பட்டு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் வெளியற்றப்படுகின்றன.

புதிதாகப் போடப்படும் தட்டு ஓடுகள் பாதுகாப்பானவையாக இருக்காது. மழைநீர் கசிந்து தரையின் அடியில் உள்ள மணலை சேறாக்கிவிடும். இதனால் தரை தளம் உறுதித்தன்மையை இழந்துவிடும். கருவறை கோபுரத்தில் அசைவுகள் ஏற்படுவதற்கான ஆபத்துகள் அதிகம். ஏற்கெனவே உள்ள தட்டு ஓடுகள் பழுதானால், இதைப் பெயர்த்து எடுக்காமல், இதன் மீதுதான் புதிதாகத் தட்டு ஓடுகள் பதிக்க வேண்டும். பெரிய கோயிலின் பாதுகாப்பு நலன் கருதி தற்போது நடைபெற்று வரும் முறையற்ற பணிகளைத் தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். கோயில் நிர்வாகம்
10 ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு போர்வெல் அமைக்கும் முயற்சியில் இறங்கியது. தண்ணீர் எடுக்கப்பட்டால் சேறு கிளம்பி அடித்தளம் ஆட்டம் காணும். இதனால் கருவறை கோபுரத்துக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் நீதிமன்றம் மூலம் தடைவிதிக்கப்பட்டது. அந்தப் போர்வெல் இன்று வரையிலும் முழுமையாக மூடப்படவில்லை. இது ஏன் எனத் தெரியவில்லை. கோயில் நிர்வாகம் எப்போதுமே பொறுப்புடன் நடந்துகொண்டதில்லை. பெரியகோயிலின் மீது உண்மையான அக்கறை கொண்ட வல்லுநர்கள் அடங்கிய ஒரு குழுவை உருவாக்கி, அவர்களின் ஆலோசனையின்படிதான் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் தென்னன் மெய்ம்மன், தெரிவித்துள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: