எப்படி தயாரித்தனர் சுவடிகளை?

ஓலைச்சுவடிகள் செய்ய பனை மர ஓலைகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், தமிழகத்தில், குறிப்பாக மூன்று வகை பனை மரங்களான, தாளைப்பனை, கூந்தல் பனை, இலாந்தர் பனை போன்ற மரங்களின் ஓலைகளையே ‘ஓலைச்சுவடிகள்’ செய்ய பயன்படுத்தியுள்ளனர்.

இவ்வகை பனைமரங்களின் குருத்து ஓலைகளை எடுத்து, அதில் மஞ்சள் தடவி, நன்கு பதப்படுத்திய பின்பு, சரியான அளவில் வெட்டப்பட்ட பிறகு, அதில் எழுத்தாணியைக் கொண்டு எழுதி, அதன் மேல் சுடர்க்கரி அல்லது மீண்டும் மஞ்சள் தடவ, ஓலைச்சுவடி தயாராகிறது. மேலும் அது பூச்சிகளின் அரிப்பிற்கு உள்ளாகாமலிருக்கும் பொருட்டு, அதன்மேல் வேம்பு அல்லது வசம்பு போன்ற, திரவியங்கள் அல்லது எண்ணெய்கள் தடவப்படுவதும் உண்டு. மேலும் எலுமிச்சை புல் எண்ணெய் அல்லது கற்பூர எண்ணெய் ஓலையின் நெகிழ்வுத்தன்மைக்காக தடவப்படும்.

நவீன காலங்களில், ஓலைகளை பூஞ்சை அரிக்காமல் பாதுகாக்க, ‘தைமோல் நீராவி புகையூட்டம்’ கொண்டு பதனிடப்படுகிறது.

தயார் செய்யப்பட்ட ஓலைகள், இளம் பழுப்பு நிறத்தை அடைந்ததும், எழுதப்பட தயாராக உள்ளதென்று பொருள். ஓலைகள் எழுதி முடித்ததும், அந்த கட்டின் மேலும் கீழும் ஓலையின் அளவைவிட சற்று பெரிய மரத்தாலான பலகைகள் கொண்டு பாதுகாப்பு உறை போன்று மூடப்படுகிறது. சிறிய நூல் நுழையும் வண்ணம், துளையிடப்பட்டு, ஒட்டு மொத்தமாக கோர்க்கப்படுகிறது. கோர்க்கப்பட்ட பின், அஃது ஒரு துணியினால் சுற்றப்பட்டு, தூசு படியாமல் பாதுகாக்கப்படுகிறது.

ஓலை காலப்போக்கில் வறட்சியடைந்தால், மீண்டும் அதன்மீது எண்ணெய் தடவப்படும். அப்போது, மெல்ல ஓலையின் நிறம் கருமையை தழுவ ஆரம்பித்திருக்கும்.

ஓலைச்சுவடிகள், பொதுவாக 15-60 செ.மீ நீளமும், 3-12 செ.மீ அகலமும் கொண்டதாக இருக்கும். உலகிலேயே பெரிய ஓலைச்சுவடி ஒன்றை மைசூரு கண்காட்சியில், ‘ஓரியண்டல் ரிஸர்ச் இன்ஸ்டிடியூட்’ காட்சிப்படுத்தியிருந்தது. அந்த சுவடி சுமார் 90 செ.மீ நீளமும், 4-5 செ.மீ. அகலமும் இருந்தது. விரமஹேஸ்வராச்சார சங்க்ரஹா(Viramahesvarachara Sangraha) எனும் அந்த ஓலைச்சுவடியை, நீலகந்த நாகமாதாச்சாரியா(Nilakantha Nagamathacharya) என்பவர் எழுதியிருந்தார்.

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: