சோழர் மற்றும் விஜயநகர காலத்தைச் சேர்ந்த தூங்குதலை, வீரமறவன், சதிகல் என மூன்று நடுகற்கள் கண்டெடுப்பு!

சோழர் மற்றும் விஜயநகர காலத்தைச் சேர்ந்த தூங்குதலை, வீரமறவன், சதிகல் என மூன்று நடுகற்கள் கண்டெடுப்பு!

சோழர் மற்றும் விஜயநகர காலத்தைச் சேர்ந்த தூங்குதலை, வீரமறவன், சதிகல் என மூன்று நடுகற்கள் கண்டெடுப்பு!

வாணியம்பாடியை அடுத்த விண்ணமங்கலத்தில் சோழர் மற்றும் விஜயநகர காலத்தைச் சேர்ந்த தூங்குதலை, வீரமறவன், சதிகல் என மூன்று நடு கற்கள் அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த் துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தி தலைமையிலான ஆய்வுக் குழுவில், மருதர்கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த தமிழ்த் துறைப் பேராசிரியைகள் மகேஸ்வரி, ஜோதிலட்சுமி, காமினி மற்றும் சித்த வைத்தியர் சீனிவாசன், இமயம் கல்லூரியைச் சேர்ந்த சரவணன், ஆசிரியர் பாபு மற்றும் குமரேசன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


வாணியம்பாடியிலிருந்து ஆம்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க விண்ணமங்கலம் எனும் சிற்றூர். பேராசிரியர் மகேஸ்வரி அளித்த தகவலின் பேரில், இச்சிற்றூரில் கள ஆய்வினை மேற்கொண்டோம். இவ்வூரில் மூன்று நடுகற்கள் உள்ளன. ஊரிலுள்ள ஏரிக்கரை ஓரம் அப்பத்தீஸ்வரர் எனும் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள சிலை, தூங்குதலை நடுகல்லாகும். அதாவது வீரன் ஒருவன் வேண்டுதலுக்குத் தன் தலையையே வெட்டி பலி கொடுத்தலுக்கு தூங்குதலை நடுகல் என்று பெயர். இது பராந்தகச் சோழன் காலத்து நடுகல்லாகும். ஏற்கெனவே இந்த நடுக் கல்லை மேனாள் வேலூர் அருங்காட்சியகக் காப்பாட்சியர் ம.காந்தி மற்றும் வாலாஜாபேட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வெங்கடேசன் ஆகியோர் படியெடுத்துள்ளனர்.

இரண்டாவது நடுகல் ஊரின் நுழைவு வாயிலில் உள்ளது. திறந்த வெளியில் இந்த நடுகல் கேட்பாரற்றுக் கிடக்கிறது. இந்த நடுகல்லில் எழுத்துகள் ஏதும் இல்லை. இதுவும் பிற்காலச் சோழர் காலத்து நடுகல்லே ஆகும். வீரன் தலையை வாரி கொண்டையிட்டுள்ளார். வலது கையில் நீண்ட வாள் உள்ளது. இடது கையில் வில் உள்ளது. இடது தோள்பட்டையில் அம்பு பாய்ந்துள்ளது. இடது காலின் ஓரத்தில் பசு மாட்டின் சிற்பம் உள்ளது. வலது கையின் மேற்புறம் மூன்று மனிதர்களின் சிற்பம் தோன்றுகிறது. இது வீரனை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் காட்சியாக இருக்கலாம். பசு மாட்டின் உருவம் சொல்லும் செய்தியாவது, ஊரிலுள்ள பசு (அ) ஆநிரைகளை பகைவர்கள் கவர்ந்து செல்லும்போது, பகைவரை எதிர்த்துப் போரிட்டு அம்பு பாய்ந்து இறந்த வீர மறவனுக்காக இந்த நடுகல் வைக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது நடுகல் ஊரிலுள்ள பெருமாள் கோயிலின் வலது புறம் உள்ளது. இந்நடுகல் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. இந்நடுகல் சதிகல் ஆகும். கணவன் வீரமரணம் அடைந்த பிறகு, மனைவியும் கணவனுடன் சேர்ந்து உடன்கட்டை ஏறி உயிரை விட்டச் செய்தியைக் கூறுகிறது. பலகைக் கல்லை அழகாகக் குடைந்து 4 உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆண் உருவம் கும்பிட்ட நிலையில் நிற்க,பெண் உருவம் உடன்கட்டை ஏறியதற்கான அடையாளமாக வலது கையில் செண்டு போன்ற முத்திரையுடன் காட்சி தருகிறது. இவ்விரு உருவங்களுக்கும் அருகில் பணிப்பெண்கள் சேவகம் செய்வது போல் உள்ளது. இந்நடுகற்கள் விண்ணமங்கலத்தின் பழைமையைப் பறைசாற்றி நிற்கின்றன. இவற்றைத் தொல்லியல் துறைப் பாதுகாக்க வேண்டும் என்று பேராசிரியர் க.மோகன்காந்தி கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: