உத்திரமேரூரில் பலி வீரன் நவகண்டம் சிலை கண்டுபிடிப்பு!

உத்திரமேரூரில் பலி வீரன் நவகண்டம் சிலை கண்டுபிடிப்பு!

உத்திரமேரூரில் பலி வீரன் நவகண்டம் சிலை கண்டுபிடிப்பு!

உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனத்தில், தன் தலையை தானே அறுத்து காணிக்கைக் கொடுக்கும், சோழர் கால வீரனின், நவகண்ட சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர்- – காஞ்சிபுரம் சாலை, திருப்புலிவனத்தில், பழமை வாய்ந்த வேலாத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு முன், கற்சிலை நீண்ட காலமாக கிடக்கிறது.தன் கழுத்தில், தானே கத்தியால் அறுப்பது போன்ற ஆண் வீரன் உருவ, கல் சிலையின் வரலாறு தெரியாத அப்பகுதி வாசிகள், அம்மனை பூஜிக்கும் நேரங்களில், அச்சிலையையும் வணங்கி வருகின்றனர்.சிலை குறித்து அறிந்த, உத்திரமேரூர் தொல்லியல் ஆர்வலர் குழுவை சேர்ந்த பாலாஜி, ஆனந்தகுமார், கோகுலசூரியா உள்ளிட்டோர், சிலையை நேற்று ஆய்வு செய்தனர்.அப்போது, இந்த சிலை, 12ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர் கால சிலை எனவும், இச்சிலைக்கு, பலி வீரன், அவிபலி, களப்பலி மற்றும் சாவான் சாமி போன்ற பல பெயர்கள் உள்ளதாகவும் தெரிவித்தனர். தலையை பலி தரும் வீரனின் சிலை, 3 அடி உயரம், 2 அடி அகலம் கொண்டதாக உள்ளது. அந்த வீரனின் தலையில் கொண்டையும், மார்பு, கை, காது, இடை, கால்கள் ஆகிய இடங்களில் அழகிய அணிகலன்களும் உள்ளன.நவகண்டம் என்பது, உடல் உறுப்புகள் ஒன்பதை அறுத்து, பலி கொடுப்பது என பொருள். ஒன்பது உறுப்புகளில் எதை அறுத்து, தன்னை தானே பலி கொடுத்தாலும், அதற்கு நவகண்டம் என்பது தான் பெயர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


தொல்லியல் ஆர்வலர், பாலாஜி என்பவர் கூறியதாவது: சோழர் காலத்தில் எதிரிகளோடு போர் தொடுக்க, வீரர்கள் படையெடுத்து செல்லும் போது, தன் நாட்டு அரசனுக்கு வெற்றி கிடைக்க, படை வீரர்களில் துடிப்பான வீரனை தேர்வு செய்து, அந்த வீரன் தன் தலையை தானே அறுத்து பலி கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது.இவ்வாறு உயிர் துறத்தலை, அவிபலி என, தொல்காப்பியம் கூறுகிறது. இச்செய்திகள் சங்க இலக்கியங்களிலும் மணிமேகலை, கலிங்கத்துப்பரணி, சிலப்பதிகாரம் போன்ற நுால்களிலும் காணப்படுகின்றன.குறிப்பாக, கலிங்கத்துப்பரணி நுாலில் உள்ள பாடல் ஒன்றில், சோழ அரசனின் வெற்றிக்காக தன் தலையை அறுத்து, தானே பலி கொடுக்கும் வீரன் பற்றிய தகவல் இடம் பெற்றுள்ளது. மஹா பாரத போர் துவங்கும் முன், அர்ஜுனன், அரவான் களப்பலி கொடுப்பதும் இந்த வகையை சார்ந்ததே.உத்திரமேரூர் நகரம் சோழ மன்னர்களால் ஆளப்பட்ட போது, 12ம் நுாற்றாண்டில் திருப்புலிவனத்தை மையமாக கொண்டு, இயங்கியதாக வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. அச்சமயங்களில், இங்கு தலைபலி நவகண்டம் நடந்திருக்கலாம்.ஏனெனில், கொற்றவை, காளி போன்ற அம்மன் கோவில்கள் முன் தான், பலியிடுதல் நடைபெறும். திருப்புலிவனம் கிராமத்திற்கு பழைய பெயராக திருப்பலிவனம் என இருந்திருந்திருக்கலாம்.திருப்பலி என்பதும் உயிர் பலியை குறிப்பதாக தான் அறிய முடிகிறது. எனவே, இச்சிலை குறித்த முழு குறிப்புகள் அடங்கிய தகவல் பலகையை இங்கு வைத்து, தலை பலி வீரன் சிலையை பாதுகாக்க, தொல்லியல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: