கன்னியாகுமரியில் அமைந்திருக்கும் சிதறால் குகைக் கோயில்!

கன்னியாகுமரியில் அமைந்திருக்கும் சிதறால் குகைக் கோயில்!

கன்னியாகுமரியில் அமைந்திருக்கும் சிதறால் குகைக் கோயில்!

தமிழகத்தின் பாரம்பரியத்தை, கலாசாரத்தைப் பறைசாற்றும் பல கோயில்களும், வரலாற்றுச் சின்னங்களும் பராமரிப்புகள் இன்றி வெளி உலகத்துக்கு தெரியாமலே அழிந்துவிடும் சூழ்நிலை சமீபகாலமாக உருவாகியிருப்பது வேதனையளிக்கிறது. அப்படியொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம்தான் சிதறால் மலை குடைவரைக் கோயில்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


சிதறால் சமணக் கோயில், இதனை உள்ளூர் மக்கள் சிதறால் குகைக் கோயில் என்றும், சிதறால் பகவதியம்மன் கோயில் என்றும் அழைப்பர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், குழித்துறைக்கு வடகிழக்கில் 4 கி.மீ. தொலைவிலும், நாகர்கோவிலில் இருந்து 45 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது சிதறால் என்னும் ஊர். அங்குள்ள திருச்சாணத்து மலை மீது அமைந்திருக்கும் குடைவரைக் கோயில், பல்வேறு வரலாற்று அதிசயங்களைத் தன்னுள்ளே தாங்கிக் கொண்டிருந்த போதிலும், எந்தவொரு பராமரிப்பும் இன்றிக் காட்சியளிப்பது நம் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது.

தூரத்தில் இருந்து பார்க்கும்போது, மலை உச்சியில் சிறிய புள்ளி போன்று இது அழகாகத் தெரியும். சுற்றிலும் உயர்ந்தோங்கிய பாறைக்கூட்டங்கள். மலையிலிருந்து பார்க்கும் திசை அனைத்தும் பரவசமூட்டும் விதமாய், பூமி பச்சைப் போர்வை போர்த்திக் கொண்டு கிடக்கும். மலை அடிவாரத்தில் இருந்து அரை கி.மீட்டர் வரை படிகள் வழியே மேலே நடந்து சென்றால், குகைக் கோயிலை அடைந்து விடலாம். 7 – ஆம் நூற்றாண்டு வரை, இந்த சிதறால் கல் குகைகளை முனிவர்கள் தங்களின் வசிப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர்.

திருச்சாணத்து மலையில் இன்று காணப்படும் பகவதிக் கோயில், அக்காலத்தில் தென்னாட்டில் வாழ்ந்த சமணர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாக விளங்கியிருக்கிறது. இவ்விடத்தில் சமணப் பள்ளி ஒன்று இருந்ததாகவும், அதில் பல நூறு மாணவர்கள் படித்ததாகவும், அவர்களுக்கு குறத்தியறையார் என்ற மகாராணி, நிவந்தமாக சொத்துக்களை அளித்தது பற்றிய தமிழ் – பிராமி மொழிக் கல்வெட்டும் இங்கே காணக் கிடைக்கிறது.

கி.பி. 8 – ஆம் நூற்றாண்டில் சைவ, வைணவ மதங்கள் வலுப்பெற்றதும், சமண மதம் வலிமை இழந்து போய்விட்டது. சைவ, வைணவ சமயங்களின் எழுச்சியால் இந்தியாவில், குறிப்பாக தென் பகுதிகளில் சமண, புத்த மதங்கள் வீழ்ச்சியடைந்தன. சமண சமயத்தின் வீழ்ச்சிக்குப்பின் பல நூற்றாண்டுகள் பராமரிப்பின்றிக் கிடந்த இக்கோயில், இரண்டாம் ராஜராஜன் காலத்தில்தான் சற்றுப் புதுப்பொலிவு அடைந்திருக்கிறது. அவர்கள் இங்கிருந்த பத்மாவதி சிலையை பகவதி சிலையாக மாற்றி, இந்துக் கோயிலாக எடுத்துக் கட்டியிருக்கிறார்கள்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்டு வந்த ஸ்ரீமூலம் திருநாள் மகாராஜா காலத்தில் சிதறால் குகையில் ‘சிதறாலம்மா’ என்ற பகவதி பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

ஒரு பாறையின் மீது தொங்கும் நிலையில் உள்ள மற்றொரு பாறை அமைப்பில் இயற்கையாக அமைந்த குகைத் தளத்தில் பகவதி கோயில் அமைந்திருக்கிறது. குகை மேற்குப் பார்த்து உள்ளது. இயற்கையான குகையில் உள்ள தீர்த்தங்கரர்கள் மற்றும் இயக்கியர் சிற்பங்கள் இப்பகுதியின் முக்கிய சமணத் தலமாக இதைக் கருத வைக்கின்றன. இந்தத் தொகுதிகளில் ஐந்து தலை நாகம் காக்கும் பார்சுவநாதர் மற்றும் பத்மாவதி இயக்கியின் உருவங்கள் கருணை பொழியும் வகையில் வடிக்கப்பட்டுள்ளன.

மற்ற சிறு உருவங்கள் அர்த்த பரியங்க ஆசனத்தில் அமர்ந்து, முக்குடைகள் தலைக்கு மேல் விளங்கும் வகையில் இருக்கின்றன. முக்குடைகள் அலங்கரிக்க, சைத்ய மரத்துடன் இரண்டு உதவியாளர்கள் சூழ்ந்து காணப்படுகிறது மகாவீரர் உருவம். அம்பிகா இயக்கி உருவம் இரண்டு குழந்தைகளுடன், யானை முத்திரை அருகில் இருக்க, திரிபங்க வளைவுகளுடன் மிக எழிலாகவும் நேர்த்தியாகவும் வடிக்கப்பட்டுள்ளது. அனைத்து முக்கியச் சிற்பங்களும், பறக்கும் வித்யாதாரர் மற்றும் அடியவர் உருவங்களுடன் காணப்படுகின்றன. ஒவ்வொரு உருவத்தின் கீழும் அதைச் செய்தளித்தவர்களின் பெயர், ஊர் பற்றிய விவரங்கள் வட்டெழுத்தில் குறிக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் உள்ளும், புறமும் சமணச் சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. சிதறால் மலையில் அமைந்திருக்கும் குளம், இதய வடிவத்தில் இருப்பது இன்னும் கூடுதல் அழகைக் கொடுக்கிறது.

இக்கோயில் மூன்று அறைகளாகப் பிரிக்கப்பட்டு, நடுவில் தீர்த்தங்கரர் சிற்பமும், வலப்பக்கத்தில் தேவி, இடப்பக்கம் பார்சுவநாதர் உருவங்களும் வைக்கப்பட்டுள்ளன. சிற்பக் கலையின் மீது ஆர்வம் கொண்டவர்கள் நிச்சயம் சென்று பார்க்க வேண்டிய இடம் இது. 2009 – ம் ஆண்டு முதல், சிதறால் மலைக்கோயிலில் அரசு சார்பாக சுற்றுலா விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வந்தது.

முன்னர் இக்குடைவரைக் கோயில் சமண சமயத் துறவிகளின் சமயக் கல்விக் கூடமாக விளங்கியதென இங்குள்ள தமிழ் வட்டெழுத்து கல்வெட்டுகள் கூறுகிறது. தற்போது இக்குடைவரைக் கோயில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பராமரிப்பில் உள்ளது.

Tags: 
Subscribe to Comments RSS Feed in this post

One Response

  1. Pingback: Pavithran

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: