புதையுண்ட தமிழகம்!

புதையுண்ட தமிழகம்

புதையுண்ட தமிழகம்

அண்மைக்கால அகழாய்வுகள் (2015 –16) :

தமிழகத்தில் அண்மைக் காலத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பட்டறைப் பெரும்புதூர் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி ஆகியவை ஆகும். சிறப்பு பெற்ற இவ்விரண்டு அகழாய்வுகளைக் குறிப்பிட்டால் சிறப்பாக அமையும் என்ற கருத்தின் பின்புலத்தில், அகழாய்வுகளின் அடிப்படையில் செய்திகள் தொகுத்து வழங்கப்படுகின்றன.

பட்டறைப் பெரும்புதூர் :

திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டறைப் பெரும்புதூர் எனும் சிறிய ஊர், சென்னையிலிருந்து சுமார் 58 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தெனிந்தியாவில் முதன் முதலில் மக்கள் வாழ்ந்த இடம் கொற்றலை ஆற்றுப் படுகையில் தான் என்பது தொல்லியல் வல்லுநர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. இக்கொற்றலையாறு, திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி அருகே ஓடுகிறது. கொற்றலையாற்றின் வட கரையில் அமைந்த சிறப்பு பெற்ற இடங்கள் தான் அத்திரம்பாக்கம் மற்றும் பரிக்குளம் போன்ற வரலாற்றுக்கு முற்பட்ட பழைய கற்கால மக்கள் வாழ்ந்த பகுதிகளாகும். இவ்விடங்களில் நடைபெற்ற அகழாய்வுகள் மூலம், இப்பகுதியில் சுமார் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மக்கள் இங்கு வாழ்ந்துள்ளனர் என்பது சான்றாதாரங்களுடன் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் மேலும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பழைய கற்கால மக்களின் வாழ்விடங்கள் உள்ளன என்பதை தகுந்த தொல்லியல் தடயங்களைக் கொண்டு திரு. து. துளசிராமன் (உதவி இயக்குநர், தொல்லியல் துறை) அவர்கள் உறுதி செய்து அதனை முறைப்படி பதிவு செய்துள்ளார்.

சென்னைத் தொழிற்பட்டறை (Madras Industry):

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில், இந்தியாவில் இரண்டு பழைய கற்கால தொழிற்பட்டறைகள் இருந்துள்ளன என்பதை தொல்லியில் ஆய்வாளர்கள் ஆங்காங்கே காணப்பட்ட கற்கால மக்கள் பயன்படுத்திய கைக்கோடாரிகளின் அமைப்பைக் கொண்டு பகுத்துள்ளனர். இக்கைக்கோடாரிகள் எந்தத் தொழிற் பட்டறையில், எந்தத் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டன என அதன் தொழில் நுட்ப அடிப்படையில் பிரித்துள்ளனர். அவற்றில் ஒன்று சென்னைத் தொழிற்பட்டறை. மற்றொன்று, சோன் தொழிற்பட்டறை. கொற்றலையாற்றுப் படுகைகளில் காணப்பட்ட கைக்கோடாரிகள் சென்னைத் தொழிற்பட்டறைகளில் தயாரிக்கப்பட்டவை அல்லது சென்னைத் தொழிற்பட்டறையின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை என்றும், இதுபோன்ற கைக்கோடாரிகள் பெரும்பாலும் சென்னைப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. சோன் பள்ளத்தாக்கில் அமைந்தது சோன் தொழிற்பட்டறை. இங்கு தயாரிக்கப்பட்ட கைக்கோடாரிகள் இப்பகுதியில் மட்டுமே காணப்பட்டன. எனவே, சோன் ஆற்றங்கரையில் உள்ள பட்டறை சோன் தொழிற்பட்டறை என்றும், கொற்றலை ஆற்றுப் பகுதியில் அமைந்த பட்டறை சென்னைத் தொழிற்பட்டறை என்றும் அழைக்கப்பட்டன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


அத்தகைய சிறப்பு பெற்ற பண்டைய சென்னைத் தொழிற்பட்டறைக்கு அருகே அமைந்தது தான் இந்த பட்டறைப் பெரும்புதூர். இங்கு தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டு பல சிறப்புச் செய்திகளைத் தமிழகத்துக்கு வழங்கியுள்ளது. மேற்பரப்பு ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட தொல் பொருட்களின் அடிப்படையில், பட்டறைப் பெரும்புதூர் பழைய கற்கால மக்கள் வாழ்ந்த பகுதிதான் என்பதில் ஐயமில்லை. இருப்பினும், அகழாய்வுச் சான்றுகள் வாயிலாக அறிந்து கொள்வதே சிறப்பு. மேலும், அவ்வூரின் தொன்மையை அறியும் பொருட்டும் இப்பகுதியை அகழாய்வுக்கு தேர்ந்தெடுத்தனர்.

அகழாய்வு :

நத்தமேடு, ஆனைமேடு, இருளர் தோப்பு போன்ற மூன்று மேட்டுப் பகுதிகளைத் தேர்வு செய்து, அங்கு அகழ்வுக் குழிகள் போட்டு ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 200-க்கும் மேற்பட்ட தொல் பொருட்கள் அகழாய்வில் சேகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பிடத்தக்க தொல் பொருள் உறைகிணறு. தமிழக அகழாய்வுகளில் கிடைத்த உறைகிணறுகளில் இதுவே அதிக எண்ணிக்கையில் சுடுமண் வளையங்களைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

உறைகிணறுகள் :

உறைகிணறுகள், அப்பகுதியில் வாழும் மக்களின் அடிப்படையான நீர்த் தேவையை நிறைவு செய்யப் பயன்பட்டுள்ளன. தமிழகத்தில் கொற்கை, பூம்புகார், மாமல்லபுரம், மாளிகைமேடு, வசவசமுத்திரம், அரிக்கமேடு, செங்கமேடு, பல்லவமேடு, படைவீடு போன்ற இடங்களில் எல்லாம் அகழாய்வுகளில் உறைகிணறுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அகழ்ந்தெடுக்கப்பட்டவற்றுள், செங்கமேடு அகழாய்வில்தான் உறைகிணற்றுக்கு அதிக அளவில் சுமார் 16 சுடுமண் வளையங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது காண முடிந்துள்ளது. ஆனால், பட்டறைப் பெரும்புதூர் அகழாய்வில் வெளிக் கொணரப்பட்ட உறைகிணற்றில், சுமார் 20-க்கும் மேற்பட்ட சுடுமண் வளையங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இங்கு ஏரளாமான மக்கள் வாழ்ந்திருத்தல் வேண்டும் என்பதும், இவர்கள் சங்க காலத்தைச் சார்ந்த மக்கள் என்பதும் தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ள இவ்வுறை கிணறு நமக்குச் சான்றாக அமைகிறது. பட்டறைப் பெரும்புதூர் அகழாய்வு 50 ச.மீ. அளவில் மேற்கொள்ளப்பட்ட சிறிய அளவிலான ஆய்வு. இந்தச் சிறிய இடத்திலேயே இத்தனை தொல் பொருட்களும், உறைகிணறும் காணப்படுகின்றன என்றால், அதிகப் பரப்பளவில் அதிகப் பொருட் செலவில் அகழாய்வை இங்கு மேற்கொண்டால், மேலும் பல புதிய தகவல்கள் கிடைக்கலாம்.

தொல் பொருட்கள் :

நுண் கற்கருவிகள், இருமுனை கூர்தீட்டிய அறுப்பான், சுரண்டிகள், புதிய கற்காலக் கைக்கோடாரிகள், சங்கு வளையல்கள், வட்டச் சில்லுகள், விளையாட்டுக் காய்கள், சுடுமண் மணிகள், கண்ணாடி மணிகள், மான் கொம்புகள், அம்பு முனைகள், நறுமணப் புகைக்கலன் போன்ற குறிப்பிடத்தக்க தொல் பொருட்கள் இங்கு சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மிகவும் இன்றியமையாத தொல் பொருளாக நறுமணப் புகைக்கலத்தை குறிப்பிடலாம்.

நறுமணப் புகைக்கலன் :

தமிழக அகழாய்வுகளில், முழுமையாக முதன் முதலில் கிடைத்துள்ள சிறப்பான தொல் பொருள் இந்த நறுமணப் புகைக்கலன். இதன் வாயிலாக, சங்க கால மக்கள் வாசனைத் திரவியங்களையும் வாசனைக் குச்சிகளையும் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாகிறது. கூம்பு வடிவில் அமைந்தள்ள இச்சுடுமண் கலம் அழகிய வடிவில் அமைக்கப்பட்ட ஒன்று. அடிப்பகுதி தட்டையாகவும் மேல் பகுதி கூர்மையாகவும், பார்ப்பதற்கு அடிப்பகுதி ஆம்போரா ஜாடியைப் போன்று காணப்படுகிறது. இதனைக் கவிழ்த்துவைத்தால், அசையாமல் நின்றுக் கொள்ளும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டு, அதன் உடல் பகுதிகளில் பெரிய பெரிய துளைகள் இடப்பட்டுள்ளன. மட்கலனில் துளைகள் காணப்படுவதால், இதனையும் துளையிடப்பட்ட மட்கலன் (Perforated Jar) என்ற வகையில் கொண்டு வரலாம். இதன் பயன்பாடு என்று கவனிக்கும் போது வாசனைத் திரவியங்கள் பூசப்பட்ட குச்சிகளை இத்துவாரத்தில் செருகி, அறையின் ஒரு பகுதியில் பொருத்துவர். இவை சிறிது சிறிதாக எரிந்து வாசனைப் புகையை அறை முழுவதும் பரவச் செய்யும். இப்பயன்பாட்டின் காரணமாகத்தான், இம்மட்கலனை நறும்புகைக் கலன் என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

தமிழக அகழாய்வுகளில், மாங்குடியில் ஒரு மட்கலனில் விளிம்புக்குக் கீழ்ப் பகுதியில் துளையிடப்பட்ட நிலையில் கிடைத்தது. அது உடைந்த நிலையில் சேகரிக்கப்பட்டது. இம்மட்கலனில் காணப்படும் துவாரத்தின் வழியாக நூலைக்கட்டி தொங்கவிட்டு அதில் நறுமணப் புகை தரும் பொருட்களைப் போட்டு பற்றவைத்து புகையை வரவழைப்பார்கள். இவ்வகையில், இவ்வகைக் கலன்கள் அறையை நறுமணம் கமழச் செய்ய பயன்படுத்தப்பட்ட ஒன்று. பட்டறைப் பெரும்புதூர் அகழாய்வில் நறுமணப் புகைக்கலம் முழுமையாகக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது இன்றைக்கு நாம் ஊதுபத்தி பொருத்தப் பயன்படுத்தப்படும் தாங்கி போன்றது என்றால் அது மிகையில்லை. இதுபோன்ற தனிச் சிறப்பு வாய்ந்த தொல் பொருட்கள் நகரப் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. மேலும் உயர்குடியோர், பெருவணிகர்கள் மட்டுமே இந்நறுமணப் புகைக்கலனைப் பயன்படுத்துவர். இது போன்ற தொல் பொருள்கள் ராஜஸ்தான் மாநிலம் சம்பார், பைரட் போன்ற இடங்களிலும், பிகாரில் வைசாலி என்ற இடத்திலும் கிடைத்துள்ளன. தமிழகத்தில் பட்டறைப் பெரும்புதூர் அகழாய்வில்தான் முதன் முதலில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது சிறப்பானது.

ரோமானியர் வருகை :

தமிழகத்தில் சிறப்பு பெற்ற வணிகத் தலங்களுக்கும், தொழிற்பட்டறைகள் நிறைந்த பகுதிகளுக்கு தூரக் கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து அயல்நாட்டினர் வணிகம் பொருட்டு வருகை புரிந்துள்ளனர். அதன் அடிப்படையில், பட்டறைப் பெரும்புதூர் பகுதிக்கு ரோமானியர்கள் வருகை புரிந்துள்ளனர் என்பதற்கு அங்கு அகழாய்வில் கிடைத்த ரௌலட்டட் மட்கலன்கள் சான்று பகர்கின்றன.

மணிகள் :

சுடுமண் மணிகள், கண்ணாடி மணிகள், கல்மணிகள் போன்றவையும், இவற்றுடன் நன்கு அலங்கரிக்கப்பட்ட கார்னீலியன் வகை மணிகளும் கிடைத்துள்ளன.

மட்கலன்கள் :

தொல்லியல் அகழாய்வுக்கு காலக்கண்ணாடியாகவும், பண்பாட்டுக் கூறுகளை வெளிச்சம் போட்டுக் காட்டவும் பெரிதும் துணை நிற்பது, அகழாய்வில் மண்ணடுக்குகளில் சேகரிக்கப்படும் மட்கலன்களே என்றால் அது மிகையல்ல. பட்டறைப் பெரும்புதூரில் கருப்பு சிவப்பு, சிவப்பு, பளபளப்பான சிவப்பு நிற மட்கலன்கள், சாம்பல் நிற மட்கலன்கள், வண்ணம் தீட்டப்பட்ட மட்கலன்கள், குறியீடுகள் கீறப்பட்டவை, எழுத்துப் பொறித்தவை என நுண் கற்காலம் முதல் புதிய கற்காலம், பெருங் கற்காலம் மற்றும் வரலாற்றுக் காலம் வரை பயன்படுத்தப்பட்ட மட்கலன்களும் சங்க காலக் கூரை ஓடுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக புதிய கற்காலத்திலிருந்து பெருங் கற்காலம், வரலாற்றக் காலம் வரை தொடர்ச்சியாக இங்கு மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

கூரை ஓடுகள் :

சங்க காலத்தில் கூரை வேயப் பயன்படுத்தப்பட்ட ஓடுகள், தனிப்பட்ட வகையில் வடிவமைக்கப்பட்ட ஒன்று. அதனை பள்ளம்பதித்த கூரை ஓடுகள் என்றும் குறிக்கலாம். ஏனெனில், இவ்வோட்டின் இரண்டு பக்கங்களிலும் பள்ளம் பதிக்கப்பட்டிருக்கும். எனவேதான் இவ்வோடுகளை பள்ளம் பதித்த ஓடுகள் என்றழைத்தனர். இவை கூரை வேய்வதற்கு ஏற்ப வைக்கப்பட்டுள்ள குச்சிகளில் பொருத்தி அதன் மேல் காணப்படும் இரண்டு துளைகளைப் பயன்படுத்தி கயிற்றால் கட்டி வைப்பர். இதனால் மழை, வெய்யில் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். இவ்வோடுகள், சங்க காலத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இதன் பயன்பாடு காலப்போக்கில் மாற்றம்பெற்று, சோழர்கள் காலத்தில் நீள்செவ்வக வடிவில் தட்டையாகவும் மேல் பகுதியில் கொக்கி ‘ட’ போன்ற அமைப்பில் வடிமைத்துப் பயன்படுத்தத் துவங்கினர் என அறியமுடிகிறது.

காலக்கணிப்பு :

அகழாய்வில், கீழிருந்து மேலாக மண்ணடுக்குகளை ஆய்வு செய்யும் போது, கீழே நுண் கற்கருவிகளும், மூலக்கற்களும் கிடைத்துள்ளன. இவை பழைய கற்காலத்தில் கடைநிலைப் பழைய கற்காலத்தைச் சார்ந்த மக்கள் பயன்படுத்தியவையே என்பதும், இந்த நுண் கற்கருவிகள் கொண்டு இவர்களது காலத்தை சுமார் 30,000 ஆண்டுகள் முற்பட்டது எனவும் தொல்லியல் ஆய்வாளர்கள் பகுத்துள்ளனர். அதன் அடிப்படையில், இப்பகுதியில் நுண் கற்காலம் முதல் மக்கள் வாழ்க்கை முறை துவங்குகிறது என்பதையே உணர்த்துகிறது.

அடுத்து, சாம்பல் நிற மட்கலன்களும், வண்ணம் தீட்டிய மட்கலன்களும், அவற்றுடன் பளபளப்பாகத் தீட்டப்பட்ட கூர்மையான கைக்கோடாரிகளும் மண்ணடுக்கில் சேகரிக்கப்பட்டுள்ளன. இத்தொல்பொருட்கள் புதிய கற்காலத்தைச் சார்ந்தவை என்பதில் சிறிதும் ஐயமில்லை. அடுத்து, இரும்புக் கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களும், குறியீடுகள் கீறப்பட்ட மட்கலன் ஓடுகள், உறை கிணறு ஆகியவையும் சங்க காலத்தின், அதாவது எழுத்து கீறப்பட்ட மட்கலன்களும், சங்கு வளையல்களும், சுடுமண் மணிகளும் பிற தொல்பொருட்களும் வரலாற்றின் துவக்க நிலைக்கு அழைத்துச் செல்கின்றன. இவ்வாறு, நுண் கற்காலம் முதல் இன்று வரை தொடர்ச்சியானதொரு வாழ்விடமாகப் பட்டறைப் பெரும்புதூர் அமைந்துள்ளது என்பதை அகழாய்வுச் சான்றுகள் தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்துகிறது.

கீழடி அகழாய்வு :

இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை, கீழடி பள்ளிச்சந்தைத்திடல் என்ற இடத்தில் அகழாய்வு மேற்கொண்டுள்ளனர். இங்கு பல அகழ்வுக்குழிகள் போடப்பட்டு அரிய தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. இவற்றுடன், மட்கலன் ஓடுகளும், சுடுமண் பொருட்களும், குறிப்பாக கட்டடப் பகுதிகளும் அதிக அளவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பெரிய பெரிய தொட்டிகள் போன்ற மட்கலன்களும், செவ்வக வடிவத் தொட்டிகளும், கட்டடப் பகுதிகளுக்கு அருகிலே வைக்கப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றன.

தொல்பொருட்கள் :

கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், சுடுமண் காதணிகள். கல்மணிகள், அகேட், கார்னீலியன், கிரிஸ்டல், பெரில் போன்ற மணிகளும் கிடைத்துள்ளன. பள்ளம் பதித்த கூறை ஓடுகள், விளையாட்டுக் காய்கள், குறிப்பாக தந்தத்தால் ஆன தாயக்கட்டை, பகடைக் காய் மற்றும் சதுரங்கக் காய் ஒன்றும், சுடுமண் அடுப்பு, சங்கு வளையல்கள், அம்பு முனைகள், தந்தத்தால் ஆன காதணிகள் எனப் பல்வேறு தொல்பொருட்களை இவ்வகழாய்வில் சேகரிக்கப்பட்டுள்ளன.

பகடைக் காய் :

மகாபாரதத்தில் பயன்படுத்தப்பட்டது போன்ற பகடைக் காய். இதுவும் தாயக்கட்டையைப் போன்றதே. தமிழக அகழாய்வுகளில் இதுவரை சதுரமான பகடைக் காய்கள் கிடைத்ததில்லை. சதுரங்கக் காய்கள் பல அகழாய்வுகளில் கிடைத்துள்ளன. சதுரங்க விளையாட்டை, தமிழர்களின் பண்டைய விளையாட்டுகளில் ஒன்றாகவே குறிப்பர். தமிழர் வாழவில் இவ்விளையாட்டு தனிச் சிறப்பிடம் பெற்றது என்பதற்குச் சான்று, பெரும்பான்மையான தமிழக அகழாய்வுகளில் சுடுமண் சதுரங்கக் காய்கள் கிடைத்து வருவதைக் கூறலாம். சதுரங்க விளையாட்டுக்குப் பயன்படுத்தப்படும் காய்களுடன் குதிரை, யானை, அரசன், அரசி, போர் வீரர்கள் என, சுடுமண்ணால் செய்யப்பட்ட பல உருவங்களும் சேகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கீழடி அகழாய்விலும் இதுபோன்ற சுடுமண் சதுரங்கக் காய்கள் கிடைத்துள்ளன. ஆனால், தாயம் விளையாடுதல் என்பது பெண்கள் விளையாடும் விளையாட்டாக இருந்து, பின்னர் இருபாலரும் விளையாடும் விளையாட்டாக மாறியது. அதற்குப் பயன்படுத்தப்படும் காய்தான் தாயக் கட்டை ஆகும். இதுபோன்ற தாயக் கட்டைகள் தந்தத்தாலும், எலும்பாலும் செய்தவை தமிழக அகழாய்வுகளில் பல இடங்களில் கிடைத்துள்ளன. அவற்றுள் அழகன்குளம், மாங்குடி, பேரூர், படைவீடு போன்ற பல அகழாய்வுகளில் தந்தத்தால் ஆன தாயக் கட்டைகள், ஒருபுறம் மூன்று வட்டங்கள் போடப்பட்ட நிலையில் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் ஒரே அளவினதாகவே காணப்படுகின்றன.

கீழடி அகழாய்வில் காணப்படும் தாயக் கட்டையை பகடை உருட்டுக் காய், பகடைக் காய் என்பர். அரச குடும்பத்தினர், உயர்குடி மக்கள், பெரு வணிகர்கள் மட்டுமே விளையாடப் பயன்படுத்தப்பட்டதுதான், இந்தப் பகடைக் காய். இதன் மேல் பகுதியில் நான்கு வட்டங்களும் இன்னொரு பகுதியில் ஆறு வட்டங்களும் போடப்பட்டுள்ளதைக் காணலாம். இவை முறையே இரண்டு நான்கு ஆறு என்றும்; அடுத்த பக்கங்களில் ஒன்று, மூன்று, ஐந்து என்ற எண்களுக்கான வட்டங்கள் போடப்பட்டிருக்கும். எனவே, இது பகடைக்காய் என்பதும் பகடை உருட்டும் விளையாட்டை இப்பகுதியில் இருந்தவர்கள் விளையாடி இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். எவ்வாறாயினும், பகடைக் காய் வகையொன்று தமிழகத்தில் முதன்முதலாகக் கீழடி அகழாய்வில்தான் கிடைத்துள்ளது என்பதும், இதனை மகாபாரத இதிகாசத்துடனும் ஒப்பிட்டுச் சொல்லவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. இத்தொல்பொருள், தமிழனின் தனிப்பெருமையை நிலைநிறுத்தவதாக உள்ளது. பெரும்பான்மையான பண்டைத் தமிழர்களின் வீர விளையாட்டுகளையும், அறிவு நுணுக்கமான விளையாட்டுகளையும், தந்திரமான விளையாட்டுகளையும் கண்டறிந்தவர்கள் என்பதற்குச் சான்றாக இத்தொல்பொருள் விளங்குகிறது.

புதையுண்ட தமிழகம்!

புதையுண்ட தமிழகம்!

கீழடி – பள்ளிச்சந்தைத் திடல் :

தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் மிகப்பெரிய அளவிலான அகழாய்வு கீழடி அகழாய்வு ஆகும். இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வகழாய்வு, தமிழக வரலாற்றில் புதிய தகவல்களைப் பதிவு செய்து வருகிறது.

இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை, தமிழகத்தில் பல இடங்களில் அகழாய்வுகளை மேற்கொண்டு பல அரிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. அவற்றில், அகன்ற பரப்பளவில் மேற்கொண்ட அகழாய்வில் திருநெல்வேலி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகிறது. சுமார் 9,000 தொல்பொருட்களை வழங்கிய அகழாய்வு என்ற பெருமையையும், தமிழகத்தில் பண்டைய காலத்தில் சிறந்த நாகரிக வாழ்க்கை முறை இருந்ததற்கான தடயங்களையும் வெளிப்படுத்திய அகழாய்வு இதுவாகும். அடுத்து, அகன்ற பரப்பளவில் மேற்கொண்ட பெரிய அளவிலான அகழாய்வாக, சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வைக் குறிப்பிடலாம்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


கீழடி அமைவிடம் :

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்தில், வைகைக் கரையில் அமைந்துள்ளது கீழடி கிராமம். சிவகங்கையிலிருந்து 38 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 491 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. (வைகை நதி, ராமநாதபுரம் வழியாக ஆற்றங்கரை என்ற இடத்தில் வங்கக் கடலில் கலக்கிறது. ஆற்றங்கரைக்கு அருகில் அமைந்ததுதான் அழகன்குளம் எனும் சங்க காலப் பாண்டிய நாட்டுத் துறைமுகப்பட்டினம். இப்பகுதியில் தமிழ்நாடு அரசுத் தொல்லியில் துறை அகழாய்வு மேற்கொண்டு, பல அரிய தொல்பொருட்களையும், பல்வேறுவகையான அரிய மட்கலன்களையும், நாணயங்களையும், உரோமானிய மட்கலன்களையும் வெளிப்படுத்தியுள்ளது. இவ்வகழாய்வு, தமிழக வரலாற்றுக்குப் பண்டைய துறைமுகப்பட்டினத்தையும் வணிக நகரத்தையும் வெளிக் கொணர்ந்து சுட்டிக்காட்டிய அகழாய்வு என்ற பெருமையைப் பெற்றது. அதேபோல், வைகை நதிக்கரையில் அமைந்துள்ள இந்தக் கீழடி அகழாய்வும், பல அரிய தொல்பொருட்களை வழங்கிக் கொண்டு உள்ளது.

தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையினர், தமிழகத்தில் சிறப்பு பெற்ற சங்க கால ஊர்கள் என 300-க்கும் மேற்பட்ட ஊர்களை, மேற்பரப்பு ஆய்வின் வாயிலாகக் கண்டறிந்து குறித்துள்ளனர். இத்துறையினர், 1976-ம் ஆண்டு கீழடிப் பகுதியை மேற்பரப்பு ஆய்வு மேற்கொண்டு அங்கு சேகரித்த தொல்பொருட்களின் அடிப்படையில், கீழடி ஒரு சிறப்பு பெற்ற வணிகத்தலம் என்பதையும், இங்கு ரோமானியர்கள் வருகை புரிந்துள்ளதையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

வரலாற்றில் கீழடி :

அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வரும் கீழடியைச் சுற்றிலும், மணலூர், குந்தகை போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன. இவற்றுள், குந்தகை என்பது குந்திதேவி சதுர்வேதிமங்கலம் என்பதைக் குறிப்பதாகும். இவ்வூர் பாண்டிய நாட்டு மன்னனின் அரசியார் பெயரால் அமைந்ததே என்பதை, இவ்வூரில் அமைந்துள்ள அர்ஜுனேஸ்வரர் கோயில் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன.

மட்கலன் ஓடுகள் :

கருப்பு சிவப்பு, சிவப்பு, வண்ணம் தீட்டிய மட்கலன், குறியீடுகள் கீறப்பட்ட மட்கலன் ஓடுகள், எழுத்துப் பொறித்த மட்கலன் ஓடுகள் என சங்க காலத்தைச் சார்ந்த மட்கலன்கள் அனைத்தும் கிடைத்துள்ளன. மட்கலன்களில் திசன், எதிரன், ஆதன் போன்ற தமிழ் எழுத்துகள் காணப்படுவதாகக் குறித்துள்ளனர். இவை அனைத்தும் சங்க காலப் பெயர்களாகும். கொடுமணல் அகழாய்விலும், அழகன்குளம் அகழாய்விலும் இப்பெயர்கள் குறித்த மட்கலன்கள் கிடைத்துள்ளன. ரோமானிய மட்கலன்களாகிய ரௌலட்டட், அரிடைன் போன்ற மட்கலன்களும் கிடைத்துள்ளன. அரிட்டைன் மட்கலன் ஆரஞ்சு-சிவப்பு நிறத்தில் காணப்படும். மேல்பகுதி மிகவும் மென்மைத்தன்மை உடையதாக இருக்கும். இதன்பெயர்க் காரணம், இம்மட்கலன் செய்யப்பட்ட இடத்தைக்கொண்டே அழைக்கப்படுகிறது. இத்தாலி நாட்டில் அரிட்டியம் (Arretium) என்றழைக்கப்படும் இடம் தற்போது அரிஸோ (Arrezzo) என்று குறிக்கப்படும் பகுதியில்தான் அரிடைன் மட்கலன் தயாரிக்கப்படுகிறது. எனவே, இதனை அரிடைன் என்று அழைக்கின்றனர். இம்மட்கலன் டெர்ரா சிக்லெட்டா (Terra Sigletta) என்ற வகையைச் சார்ந்தது. இம்மட்கலனை அடையாளம் காண்பதற்கு இதன் அடிப்பகுதியில் முத்திரைகள் இடப்பட்டுள்ளதைக் கொண்டு கண்டறியலாம். அழகன்குளம் அகழாய்வில் பல ஓடுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அரிடைன், வடஇந்திய பளபளப்பான கருப்பு நிற மட்கலன் (NBPW) போன்ற மட்கலன்கள் ஒரே இடத்தின் தன்மையையும், தரத்தையும் வெளிப்படுத்த உதவும் மட்கலன்களாகும்.

கட்டடப் பகுதிகள் :

தமிழகத்தில் சங்க கால வாழ்விடங்களாகக் கருதப்பட்ட பல இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த அகழாய்வுகளில் சிறிய அளவிலான கட்டடப் பகுதிகள் மட்டுமே வெளிப்படுத்தப்பட்டன. சான்றாக கொற்கை, மாங்குளம் போன்ற அகழாய்வுகளைக் குறிப்பிடலாம். ஆனால், கீழடி அகழாய்வில் நீண்ட தொடர்ச்சியான கட்டடப் பகுதிகளும், கால்வாய்களும், நீர்நிலைத் தொட்டிகளும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்கள் அளவில் 36X22X5 செ.மீ., 38X21X6 செ.மீ., 34X21X5 செ.மீ. என்ற மூன்று வகையான அளவிலானவை பயன்படுத்தப்பட்டுள்ளன. செங்கற்கற்கள் பாவப்பட்டுள்ள பகுதிகளில் மூலிகைச் சாறுகளையே இணைப்புச் சாந்தாக பயன்படுத்தியுள்ளதைக் காணமுடிகிறது. மேலும், கட்டடப் பகுதிகள் தொடர்ந்து காணப்பட்டாலும் ஒரு முழுமையான அமைப்பைக் காண இயலவில்லை.

இங்கு காணும் கட்டுமான அமைப்பை ஆய்வு செய்யும்போது, கீழடி அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட கட்டடங்களின் கட்டுமான முறையும், இதற்கு முன் இந்தியப் தொல்லியல் பரப்பாய்வுத் துறை மேற்கொண்ட அரிக்கமேடு அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட கட்டடப் பகுதிகளில் காணப்படும் கட்டுமான அமைப்பும், தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை கொற்கை அகழாய்வில் வெளிப்படுத்திய கட்டடப் பகுதியில் காணப்படும் கட்டுமானமும் ஒரே தொழில்நுட்பத்தைச் சார்ந்தவையாகத் தோன்றுகிறது. மேற்குறிப்பிட்டவற்றில், செங்கற்களை ஒன்றன் மீது ஒன்றாக வரிசையாக அடுக்கி வைத்துக் கட்டப்பட்டுள்ளதையே காணமுடிகிறது. இக்கட்டடப் பகுதிகளை சாயத் தொட்டிகள் என்று கருதுகின்றனர். கீழடி அகழாய்வில் காணப்படுவதும் சாயத் தொட்டியாக இருக்கலாம்.

கீழடி அகழாய்வில் காணப்படும் கட்டுமானத்தில் இணைப்புச்சாந்து மெல்லியதாகவே பூசப்பட்டுள்ளது. இக்கட்டுமானத்தில் செங்கற்கள் நேராக வைத்து அடுக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டுச் சொல்லலாம். கட்டடப் பகுதிகள் பல அகழ்வுக்குழிகளில் காணப்பட்டாலும், அவை ஒன்றின் தொடர்ச்சியா என்பதை அறிய இயலவில்லை; அதன் பயனையும் தெளிவாக உணர முடியவில்லை. இவை குளியல் அறையாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது. முழுமையான அகழாய்வும், இடைப்பட்ட மண்தடுப்புகளை அகற்றி பின்னர் ஆய்வு மேற்கொண்டால், இதன் கட்டுமானத்தையும் பயன்பாட்டையும் அறிந்துகொள்ள இயலும். கட்டடப் பகுதிகளுக்கு அருகில் ஐந்து தொட்டிகள் காணப்படுகின்றன. இவை சாயத்தொட்டிகளாக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இதேபோல் மற்றொரு இடத்திலும் கட்டடப் பகுதிக்கு அருகே ஒரு பெரிய தொட்டியும், அதனுள்ளே ஒரு தொட்டியும் காணப்படுகிறது. சாயம் ஏற்றுவதற்கு மட்டும்தான் அதிகத் தொட்டிகள் தேவைப்படும் என்ற கருத்தின் அடிப்படையில், இவற்றை சாயத் தொட்டிகளா என்று கவனித்தல் வேண்டும். கட்டடப் பகுதிகளுக்கு அருகில் உறைகிணறுகள் அமைந்துள்ளதையும் காணமுடிகிறது. சாயத் தொழிற்பட்டறை இருந்த இடமாகவும் இதனைக் கருதலாம்.இங்கு காணப்படும் தொட்டிகள் சாயம் நனைக்கப் பயன்படுத்தப்பட்ட தொட்டிகள்போல் காணப்படுகிறது.

சுடுமண் குழாய்கள் :

சங்க கால மக்கள் சுடுமண் குழாய்களை அமைத்து நீர் போக்குவரத்தை ஏற்படுத்திப் பயன்படுத்தியுள்ளனர். இதுபோன்ற சுடுமண் குழாய்கள் தமிழகத்தில் சங்க கால வாழ்விடங்கள் என்று குறிக்கப்பட்ட திருக்கோயிலூர் (விழுப்புரம் மாவட்டம்), அரூர் (தருமபுரி மாவட்டம்) உலகடம் (பவானி வட்டம், ஈரோடு மாவட்டம்) போன்ற இடங்களில் சுடுமண் குழாய்கள் கிடைத்துள்ளன. இவற்றில், உலகடம் பகுதியில் கிடைத்த சுடுமண் குழாய்களில் தமிழிலேயே எண்கள் இடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை ஒத்த நிலையில் நீண்ட சுடுமண் குழாய்களைப் பதித்து நீர் போக்குவரத்தை (வாய்க்கால்) அமைத்துள்ளதை கீழடி அகழாய்வில் வெளிப்படுத்தியுள்ளனர். இவை அனைத்தும், சங்க கால வாழ்விடம் என்பதை உறுதிப்படுத்தக்கூடிய சான்றாக அமைகின்றன. செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கால்வாய் ஒன்றும் இந்த அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

ரோமானியர் வருகை :

தமிழக அகழாய்வுகளில் ரோமானியார் வருகை புரிந்துள்ள இடங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், அவர்கள் நமது கலைப்பொருட்களையும்; பாண்டி நாட்டு முத்துகளையும் பெற்றுக்கொள்ளவே வருகை புரிந்துள்ளனர் என்பதை நன்கு உணரமுடியும். மேலும், தமிழகத்தில் அகேட், கார்னீலியன், பெரில், கிரிஸ்டல் போன்ற கல்மணிகள் செய்யப்படும் தொழிற்பட்டறைகள் பல இடங்களில் இருந்துள்ளதை தமிழக அகழாய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக, கொடுமணல், பொருந்தல், அழகன்குளம் போன்ற அகழாய்வுகளைக் குறிப்பிடலாம். எனவே, கீழடி அகழாய்வில் காணப்படும் தொல்பொருட்கள் அனைத்தும் தமிழக மக்களால் தயாரிக்கப்பட்டு அயல்நாட்டினருக்கு வணிகம் செய்துள்ளனர் என்ற கருத்தே ஏற்புடையது. தமிழகத்தில் பெரும்பான்மையான வணிக நகரங்களுக்கு ரோமானியர்கள் வருகை புரிந்துள்ளனர்.

சந்தைத் திடல் :

கீழடியில் காணப்படும் கட்டடப் பகுதிகள், பள்ளிச்சந்தைத் திடல் கிராமம் அருகே வெளிப்படுத்தப்பட்ட ஒன்று. இப்பகுதி சங்க காலத்தில் ஒரு பெரும் வணிக நகரமாகத் திகழ்ந்திருக்கலாம் என்பதும், அவ்விடம் பெருவணிகர்களும் சிறு வணிகர்களும் கலந்து சந்தை புரிந்த இடம் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். பள்ளிச்சந்தைத் திடல் என்பதே வணிகம் செய்யும் பொது இடம் என்ற பொருளில் அமைந்ததுதான். சந்தை என்பது பழைய சொல். இச்சொல் காலப்போக்கில் அழிந்து வருகிறது. ஒரு பொருளைத் தயாரித்து அவற்றை சந்தைப்படுத்துதல் என்பது இன்றைக்கும் வழக்கில் உள்ள ஒன்று. எனவே, கீழடி – பள்ளிச்சந்தைத் திடல் என்பது வணிகப் பெருமன்றம் அமைந்த இடம் என்று கருதுதல் வேண்டும். இன்றைக்கு அழைக்கப்படும் வணிக வளாகம்தான் சந்தை என்பதன் நேரடிப்பொருள் ஆகும்.

திடல் என்பது திட்டு அல்லது மேடு என பொது இடத்தைக் குறிக்கும் சொல். சங்க காலப் பெருநகரங்கள், தனி ஊர்கள் போன்ற கிராமங்களில் இத்திடல் அமைப்பு உண்டு. இன்றும் பல கிராமங்களில், திடலில் மக்கள் கூடும் பழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. பண்டைய கிராமங்களில், வாரத்தில் ஒருநாள் சந்தை கூடுவதை தமிழக மக்கள் நன்கு அறிவர். எனவே, இங்கு பல இடங்களில் இருந்து தயாரிக்கப்பட்டுவரும் பொருட்கள் அனைத்தும் ஒன்று கூடி வணிகம் செய்யும் பொது இடம் ஆகும். இங்கு உள்நாட்டோரும், பல அயல்நாட்டோரும் வருகை புரிந்து வணிகம் புரிந்துள்ளதால்தான், பல அயல்நாட்டுத் தடயங்களும் கீழடி அகழாய்வில் கிடைத்து வருகின்றன. இதுபோன்ற சிறப்புமிக்க சந்தைத் திடல்களை பெருநகரங்களுக்கு அருகே சற்று வெளிப்புறத்தில் அமைத்துக் கொள்வர். இங்கு வரும் வணிகர்களுக்குத் தேவையான வசதிகளையும் தங்குவதற்குரிய இடங்களையும், அவர்களது பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் வசதி செய்து கொடுக்க ஊரின் ஒதுக்குப்புறமே சிறந்தது என்பது எப்பொழுதும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்தாகும். இதன் அடிப்படையில் அமைந்த ஒரு சிறப்பு பெற்ற சங்க கால பெருவணிக நகரமே கீழடி சந்தைத் திடல் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

காலக்கணிப்பு :

அகழாய்வில் காணப்படும் தொல்பொருட்களின் அடிப்படையிலும், கட்டடப் பகுதிகளையும் பிற அகழாய்வுகளோடு ஒப்புநோக்கும்போது இவையும், கொற்கை, அரிக்கமேடு போன்றவற்றின் சமகாலத்தைச் சார்ந்ததாகவே இருக்கலாம் என்று கருதத் தோன்றுகிறது. கொற்கை அகழாய்வு, தனது காலக் கணிப்பை கரிப்பகுப்பாய்வு வாயிலாக பொ.ஆ.மு. 8-ம் நூற்றாண்டு என வெளிப்படுத்தியுள்ளது. இவையும், அக்காலத்துக்கு இணையாக பொ.ஆ.மு. 7 – 8-ம் நூற்றாண்டைச் சார்ந்தது என்றே கொள்ளலாம். பரந்த அளவில் காணப்படும் கட்டடப் பகுதிகளும் தொல்பொருட்களும் மீண்டும் தமிழகத்தில் வைகைக் கரையில் அடையாளம் காணப்பட்ட ஒரு பெரிய வணிக நகரமாகக் கொள்ளலாம். அழகன் குளம் அகழாய்வு தொல்பொருட்களை ஏராளமாகத் தந்தது என்றால், கீழடி அகழாய்வு சங்க காலச் சிறப்பை வெளிப்படுத்தும் கட்டடங்களை நமக்குத் தந்துள்ளது. ஹரப்பா, மொகஞ்சதாரோ என்று ஒப்பிடாமல், தமிழகத்தின் பெருமையை வெளிப்படுத்தும் சான்றுகளையும், தமிழகத்தில் நடைபெற்ற பிற அகழாய்வுகளுடன் ஒப்பிட்டு, தமிழகத்தின் தனிப்பெருமையை 3000 ஆண்டுகளுக்கு முன்பே தன்னிகரில்லா சிறப்பைப் பெற்று விளங்கியுள்ளது என்ற பெருமையை இவ்வகழாய்கள் கொண்டு, தக்க சான்றுகளுடன் எடுத்துக்கூறி, நமது தொன்மையான பண்பாட்டினை நிலைநாட்டலாம்.

புதையுண்ட தமிழகம்!

புதையுண்ட தமிழகம்!

வரலாற்றின் இடைக் காலத்தில் மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை (பொ.ஆ. 500 – 1500 வரை) :

தமிழகத்தில், வரலாற்றின் துவக்கக் காலத்தில் இருந்த அரசியல் நிலை பின்னர் மாற்றம் பெற்று தனி அரசுகளாக உருவெடுத்தன. இவ்வரசுகள் ஒரு குறிப்பிட்ட பகுதியை தன் கீழ் கொண்டுவந்து ஆட்சி புரிந்துள்ளனர். பூலாங்குறிச்சி கல்வெட்டு, வரலாற்றில் பொ.ஆ. 200 முதல் 400 வரை உள்ள காலகட்டத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைத் தெளிவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அங்கு கிடைத்த கல்வெட்டின் காலம் பொ.ஆ. 2-ம் நூற்றாண்டு என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்*1. பூலாங்குறிச்சி பகுதியில் இதுவரை அகழாய்வு மேற்கொள்ளப்படவில்லை.

இதுபோன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுகள் காணப்படும் இடங்களைச் சுற்றிலும் பல அகழாய்வுகளை மேற்கொண்டால் நமக்கு உண்மை வரலாற்றை அறிய ஏதுவாக அமையும். ஆனால், களப்பிரர் பற்றிய செய்திகளும் அக்கல்வெட்டோடு நிறுத்திக்கொள்ளப்பட்டது. அடுத்து வந்த பேரரசர்கள் பல்லவர், பாண்டியர், சோழர்களைப் பற்றி காண்போம். இவர்கள் காஞ்சி, தஞ்சை, மதுரை ஆகிய இடங்களைத் தலைமையிடங்களாக கொண்டு ஆட்சி புரிந்தனர். தற்பொழுது இம்மூன்று நகரங்களும் பெரிதும் வளர்ச்சி அடைந்திருப்பதால், ஊரின் மையப் பகுதிகளிலோ, அன்றி தேவைப்படும் பகுதிகளிலோ, அகழாய்வு மேற்கொள்வது இயலாத ஒன்று. இருப்பினும், இங்கு காணப்படும் கோயில்களும், அவற்றில் காணப்படும் கல்வெட்டுகளும் அக்கால மக்களின் சமூக, பொருளாதாரத்தையும், பண்பாட்டையும் அறிந்து கொள்ள உதவுகின்றன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


பல்லவர் கால மக்கள் செங்கற்களைக் கொண்டும், கருங்கற்களைக் கொண்டும் அடுக்கிக் கட்டும் கட்டுமானத்தை (Structural temple) அறிந்திருந்தனர் என்பதற்கு அகழாய்வில் வெளிக்கொணர்ந்த கோயிலின் அடித்தளம் சான்றாக அமைகின்றது*2. இவர்கள் பௌத்த மதத்தை ஆதரித்துள்ளதையும் உணர முடிகிறது. கோயில்களின் எண்ணிக்கைகள் அம்மக்களின் தொழில் சிறப்பையும், வாழ்வாதாரத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

சங்க காலச் சோழர்கள் உறையூரை தலைநகராகவும், முற்காலச் சோழர்கள் பழையாறையை தலைமையிடமாகவும் கொண்டனர். அடுத்து தஞ்சையும், கங்கைகொண்ட சோழபுரமும் தலைமையிடமாக அமையப்பெற்றன. ஆனால், கங்கைகொண்ட சோழபுரம் மட்டுமே சுமார் 250 ஆண்டுகள் தலை நகரமாக சிறப்புற்றுத் திகழ்ந்துள்ளது. சோழர்கள் பொ.ஆ. 9-ம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் சிறப்பானதோர் ஆட்சியைச் செலுத்தியுள்ளனர்*3. சோழ மன்னன் விஜயாலயன் துவக்கிய இப்பேரரசு, தஞ்சையை தலைமையிடமாகக் கொண்டு பல சிறப்புகளைப் பெற்றுள்ளது. சோழர்கள் காலத்தில் கோயில் கட்டடக் கலையும், அரச மரபினர் தங்குமிடங்களும் மிகவும் சிறப்பாகவும், வலிமையாகவும், தொழில்நுட்பத் திறனுடனும் அமைத்துள்ளனர் என்பதை அகழாய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.

முற்காலச் சோழர்கள் பழையாறையில் சிறிது காலம் தங்கி இருந்துள்ளனர். அகழாய்வில் கூறை ஓடுகள், சிறிய அளவிலான சுடுமண் விளக்குகள் தவிர, வேறு குறிப்பிடும்படியான தொல் பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை*4. தஞ்சையில் குறும்பன்மேடு அகழ்விலும் கூறை ஓடுகளும், கெண்டிமூக்குப் பகுதிகளும் மட்டுமே காணப்பட்டன*5. குறிப்பிடும்படியான கட்டடப் பகுதிகளோ அன்றி அரண்மனை இருந்தமைக்கான தடயங்களோ கிடைக்கவில்லை. தமிழகத்தில் போசளர்களும், சம்புவராயர்களும் குறுநில மன்னர்களாக ஆட்சிபுரிந்துள்ளனர். இவர்களது தலைநகரங்களாகக் கண்ணனூர், தேவர்குந்தாணி (இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம்) போன்ற இடங்கள் இருந்துள்ளன. தேவர்குந்தாணியில் மேற்பரப்பு ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. கண்ணனூர் அகழ்வில் கட்டடப் பகுதி ஏதும் கிடைக்கவில்லை*6.

தமிழகத்திலேயே, முதன் முதலாக மன்னர்கள் அரசு புரிந்து வாழ்ந்த அரண்மனைப் பகுதிகளை ஓர் அகழாய்வு மூலம் வெளிக் கொணர்ந்துள்ளது கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாய்வு, சுமார் 600 ச.மீ. அகன்ற பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட பெரிய அகழாய்வு எனலாம்*7. இதன்மூலம் சோழர்களின் கட்டடக் கலை கட்டுமானம், தொழில் நுட்பம் என பல தகவல்கள் நமக்கு தெளிவுபட்டுள்ளது. குலோத்துங்கச் சோழன் உலாவில் விண்ணைத் தொடும் முற்றங்கள் என்ற குறிப்பு காணமுடிகிறது. அதனை உறுதி செய்யும் வகையில், அகழாய்வில் 1.10 மீட்டர் அகலமுள்ள சுவற்றின் பகுதியும், அதனையொட்டியே இணையாக 1.10 மீட்டர் அகலமுள்ள மற்றும் ஒரு சுவர் 55 செ.மீ. இடைவெளியில் காணப்படுவது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த சுவற்றின் அளவு 2.20. மீட்டர் (இடைவெளியையும் சேர்த்து 2.75. மீட்டர் தடிப்பு கொண்டது) என்பதை அறிந்து கொள்ள முடிந்துள்ளது.

சோழன் மாளிகை மிகவும் உயர்ந்த பல அடுக்குகளைக் கொண்ட அரண்மனை என்பதில் ஐயமில்லை. மேலும், அகழாய்வில் ஏராளமான இரும்பு ஆணிகள் சிறியதும் பெரியதுமாக (சுமார் 3 செ.மீ. முதல் 55 செ.மீ. வரை நீளமுள்ள ஆணிகள்) கிடைத்துள்ளன. எனவே, இங்கு மரங்களை அதிக அளவில் பயன் படுத்தப்பட்டுள்ளதையும் அறியமுடிகிறது. அடித்தளத்திலும், இரண்டு சுவர்களுக்கும், இடைப்பட்ட பகுதியிலும் மணலை நிரப்பியுள்ளனர். இவை கட்டடப் பகுதிகள் குளிர்ச்சியாக அமைய இவ்வாறு அடித்தளத்தில் மணலிட்டு நிரப்பியுள்ளனர் என்பதை பொறியியல் வல்லுனர்கள் தெறிவிக்கின்றனர்*8.

சோழர்கள், தூய்மையான களிமண் கொண்டு தயாரித்த சுட்ட செங்கற்களைப் பயன் படுத்தியுள்ளதையும், அதனை தலைப் பகுதியையும், உடல் பகுதியையும் மாற்றி மாற்றி அமைத்த (Header and Structure Method of Construction) கட்டுமான முறையைப் பயன்படுத்தியுள்ளதையும் அறிய முடிகிறது. கட்டுமானத்துக்கு ஒரு பிடிப்பை ஏற்படுத்தும் வகையில், இந்தத் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. மேலும், மூலிகைச் சாற்றை பயன்படுத்தியதும் நன்கு தெளிவாக உணர முடிகிறது*9. ஏனெனில், ஒரு செங்கல்லுக்கும் மற்றொரு செங்கற்கல்லுக்கும் இடைவெளியின்றி கட்டுமானம் அமைந்துள்ளதாலும், மேற்பரப்பில் காணப்படும் பச்சை நிறச் சாந்தும் (pasting meterials) இவற்றை உறுதி செய்கின்றன.

வெளிப்பூச்சில் சுண்ணாம்பு காரை பூசப்பட்டதும், அப்பூச்சில் வண்ணங்கள் கொண்டு அழகு செய்துள்ளதும் அகழாய்வில் கிடைத்த வண்ணக் காரைப்பூச்சுகளைக் கொண்டு உணரலாம். மேலும், இங்கு கிடைத்த அலங்கார வட்டுகள், தந்தத்தால் ஆன அலங்காரப் பொருட்கள், கல்மணிகள், சங்கு வளையல்கள், கண்ணாடி வளையல்கள், சுடுமண் பொருட்கள், கெண்டிமூக்குப் பகுதிகள் போன்ற ஏராளமான தொல் பொருட்கள் சோழர் கால மக்களின் செழிப்பையும், வாழ்க்கை முறையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன*10. சோழர்கள், அரண்மனை மட்டுமின்றி அதனைப் பாதுகாக்க அரண்மனையைச் சுற்றி கோட்டை மதில் சுவர்களையும் அமைத்துள்ளதையும், குறுவாலப்பர் கோயிலில் மேற்கொண்ட அகழாய்வின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு மேற்கொண்ட சுற்றுப்புற அகழ்விலும் இதே போன்ற அமைப்புடைய செங்கல் கட்டடங்கள் வெளிக் கொணரப்பட்டன.

இவ்வகழாய்வில், சோழர் மாளிகை பல அடுக்குகளைக் கொண்டு அமைந்த மிக உயரமான மாளிகை என்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. ஒரு தளத்துக்கும் அடுத்த தளத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்த தரைத்தளம் அகழாய்வில் வெளிப் படுத்தப்பட்டுள்ளது. மேலும், இதன் மேல்தளத்தில் கூறை ஓடுகள் கொண்டு வேயப்பட்ட நிலையிலேயே உடைந்த மேற்கூறைப் பகுதியின் எச்சங்கள் அகழாய்வில் கிடைத்துள்ளதால், இக்கருத்தை வலியுறுத்திக் கூற முடிகிறது. எனவே, கங்கைகொண்ட சோழபுரம் பரந்துபட்ட நகரமாகச் செயல்பட்டுள்ளது என்பதையும், இன்றைக்கும் அவ்வூரைச் சுற்றிலும் உட்கோட்டை, ஆயுதக்களம், இடைக்கட்டு, கொல்லாபுரம், வீரசோழபுரம், மெய்க்காவல்புத்தூர், வானவநல்லூர் மற்றும் ஜெயங்கொண்டநல்லூர் என பல பகுதிகள் பண்டைய சோழ நாட்டை நினைவு படுத்துவதாகவே அமைந்துள்ளன.

கோட்டை மதில் சுவர்களை செம்புராங் கற்களைக் (Laterite) கொண்டு எழுப்பியுள்ளனர்*11. அரண்மனை மதில் சுவர்களை நன்கு தடித்த அளவில் செங்கல், சுண்ணாம்பு, மணல், ஜல்லி, கூழாங்கற்கள் ஆகியவற்றைக் கலந்து நன்கு கடினமாக அமைத்துள்ளதை அகழாய்வில் கிடைத்த உடைந்த கட்டடப் பகுதிகள் தெரிவிக்கின்றன. மேல்பகுதியை மூடுவதற்குத் தட்டையாக நீள் செவ்வக வடிவ அமைப்பில் தலைப் பகுதியில் கொக்கி போன்ற வடிவுடைய கூறை ஓடுகளைப் பயன்படுத்தியுள்ளனர். அகழாய்வில் கூறை ஓடுகளும் சுண்ணாம்புக்காரையும் கலந்த நிலையிலேயே சேகரிக்கப்பட்டுள்ளது. எனவே, சங்க காலத்தில் தட்டையான கூறை (Grooved Tiles) ஓடுகளுக்கு பதிலாக, தட்டையான, நீண்ட, தலைப்பகுதியில் கொக்கி போன்று வளைந்த, நன்கு வார்க்கப்பட்ட ‘ட’ வடிவ ஓடுகளைப் பயன்படுத்தியள்ளனர். இதுபோன்ற ஓடுகள் குறும்பன்மேடு, பழையாறை, கங்கைகொண்ட சோழபுரம், பெரியபட்டினம், மாங்குடி போன்ற பல அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்டுள்ளன. இது சோழர்கள் காலத்திய கூறை ஓடுகள் வகையைச் சார்ந்தது எனக் குறிக்கலாம்*12.

சோழர்கள் காலத்தில்தான் ஏராளமான கற்றளிகள் கட்டப்பட்டுள்ளன. எனவே, கோயில்களின் வளர்ச்சி, தொழில் வளர்ச்சிக்கும், சமய வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைந்தது எனலாம். கோயில்கள் அமைப்பது மட்டுமே இல்லாமல், சமயப் பணிகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை விவசாயத்தை முன்னேற்றுவதற்கும் வழங்கினர். கோயில் கட்டுமானப் பணிகள், மக்களுக்கு ஒரு சிறந்த வாழ்வாதாரமாக அமைந்தது எனலாம். பல இடங்களில் ஏரிகள் வெட்டினர். குளங்களை அமைத்தனர்*13. பெரிய ஏரிகளில் (சோழகங்கம் போன்றவற்றில்) மதகுகளை அமைத்து நீர்ப்பாசன வசதியை பெருக்கியமையும், தேவைக்கு ஏற்ப நீரைச் சேமித்து, அவை தேவை ஏற்படும்போது, அதனை மதகுகளைத் திறந்து நீர்ப்பாசனத்தை முறைப் படுத்தியமையும், சோழகங்கம் ஏரியில் மேற்கொண்ட அகழாய்வு தெளிவுபடுத்துகிறது.

சோழகங்கம் ஏரியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மதகு, வேகமாக வரும் நீரைக் கட்டுப்படுத்தி பின்னர் அந்த நீரைத் தேக்கி, அதனை சிறிது சிறிதாக வெளியேற்றம் செய்யும் வகையில் சிறந்த தொழில் நுட்ப அறிவுடன் வடிவமைக்கப்பட்டிருப்பது வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது*14. எனவே, சோழர்கள் விவசாயத்துக்கும் முக்கியத்துவத்தை அளித்து அதற்கேற்ப வசதிகளையும் பெருக்கினர் எனலாம். காட்டு மன்னார்குடியில் அமைந்த வீரநாராயணப் பெருமாள் ஏரி, அதாவது வீராணம் ஏரி போன்ற பல ஏரிகளை அமைத்தமை, ஏரி வாரியம் அமைத்து பராமரித்தது கல்வெட்டில் காணப்படுகிறது. அதற்கேற்ப, அகழாய்வில் குடிநீர்க் குழாய்கள் அமைத்தல், கழிவுநீர்க் குழாய்கள் அமைத்தல் போன்ற பல சிறப்பான அமைப்புகள் அகழாய்வில் வெளிக் கொணரப்பட்டுள்ளன. திருக்கோயிலூர் அகழாய்வில் சுடுமண் குழாய்கள் அமைத்து குடிநீர் கொண்டு செல்லப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன*15.

படைவீடு, சம்புவராயர்களின் தலைநகரம். இங்கும் அரண்மனையின் பகுதிகள் அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டது*16. அவற்றில், நான்குவிதமான குழாய்கள் வெளிக்கொணரப்பட்டது*17. அவற்றில் ஒன்று கருங்கல்லால் ஆன கால்வாய்ப் பகுதி. இந்தக் கால்வாய் தேவையற்ற கழிவு நீரை வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஒன்று. ஏனெனில், இது திறந்த நிலையில் கற்பலகையின் மையத்தில் குழி அமைப்பை ஏற்படுத்தி நீர் எளிதில் வெளியேறுவதற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது, செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டு அந்தக் குழாயின் ஒருமுனை நீர்த் தொட்டியில் முடிவதுபோல அமைக்கப்பட்டுள்ளது. இது, இப்பகுதிகளுக்குத் தேவையான நீரை ஏற்றி தொட்டியில் சேகரித்துவைக்க அமைக்கப்பட்ட ஒன்று எனலாம். மூன்றாவது வகைக் குழாய்கள், குடிமக்கள் அனைவருக்கும் தண்ணீர் சென்று சேர்வதற்கு ஏற்ப அமைந்த ஒன்று. அடுத்து, நான்காவதாக அமைத்த கால்வாய், முதலில் கற்பலகைகளை செவ்வகப் பெட்டிபோல அமைத்து, அதனை வெளிப்புறம் சுண்ணாம்பு ஜல்லி, மணல் இவற்றைக் கொண்டு நன்கு கடினமாக காற்று புகாவண்ணம் அமைத்து, அரண்மனையின் உட்பகுதிக்கு நீரைச் செலுத்தும்படி அமைத்துள்ளனர். இது, குடிநீர்க் குழாயாக இருத்தல் வேண்டும். உயர்குடி மக்கள் பயன்படுத்த அமைத்த ஒன்றாகவும் இருக்கலாம். இதுபோன்ற நான்கு விதமான கால்வாய்கள், படைவீடு அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டது*18.

குடிநீர் அமைப்பை சோழர்களும் அமைத்துள்ளனர் என்பதை கல்குளம் பகுதியில் கற்களைக் கொண்டு அடுக்கியே கால்வாய்களை அமைத்ததில் இருந்து அறியமுடிகிறது. கண்ணனூரில் போசளர்கள் அமைத்த கால்வாயும் கருங்கற்களைக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளது. புள்ளம்பாடி வாய்க்காலில் இருந்து பிரித்து தனியாக ஒரு கால்வாய் அமைத்து, அதிலிருந்து கட்டுத்தொட்டி (Sump) ஒன்றை ஏற்படுத்தி, இடையில் அந்நீரை எடுத்துக் கொள்வதற்கு ஏற்ப அதனை சிறிய கிணறு போன்று அமைத்துள்ளனர்*19. கண்ணனூர் அகழாய்வில் 2.30 மீட்டர் ஆழம் உள்ள (50 செ.மீ. X 50 செ.மீ.) வாய்ப்பகுதி கொண்ட கட்டுத்தொட்டி ஒன்று வெளிக்கொணரப்பட்டது. இது, பொ.ஆ. 13-ம் நூற்றாண்டில் போசளர்களால் அமைத்ததாக இருக்கலாம். நீரைச் சுத்தமாகவும், குளிர்ச்சியாகவும், வைத்திருக்க உதவும் என்ற அடிப்படையில் இந்த முறையைப் பின்பற்றியுள்ளனர். இம்முறை தொடர்ந்து பொ.ஆ. 13-ம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்துள்ளது என்பதை அகழாய்வுகள் நிரூபித்துள்ளன*20. சுடுமண் குழாய்களை ஒன்றோடு ஒன்றாக இணைத்து குடிநீர்க் கால்வாய்களை அமைத்துள்ளனர்.

சுடுமண் பொருட்கள், மட்கலன்கள் :

சோழர்கள் காலத்தில் சிவப்பு நிற மட்கலன்களே அதிகம். மேலும், சிறிய அளவிலான குடம், தட்டு, வட்டு, கைப்பிடி அகன்று விரிந்தது போலுள்ளது முதல் நன்கு அலங்காரம் செய்த நிலையுள்ளவை வரை மட்கலன்களே அதிக அளவில் பயன்படுத்தப் பட்டுள்ளதை இவ்வகழ்வாய்வுகள் வெளிப்படுத்தியுள்ளதைக் காண்கின்றோம்.

கெண்டி (Spoutted Vessal):

கெண்டி*21, அதாவது மூக்கு கொண்ட செம்பு அமைப்பிலான மட்கலன். புதிய கற்காலம் முதல் கெண்டி காணப்பட்டாலும், பொ.ஆ. 9-ம் நூற்றாண்டு முதல் கெண்டியின் வரவு அதிகரித்தது. கெண்டி மூக்கு பலவிதமானவை ஆய்வில் சேகரிக்கப்பட்டுள்ளன. முதன் முதலில் கெண்டியின் வடிவம் பெரிய தொட்டிகளில் பயன் படுத்தப்பட்டன எனலாம். தொட்டியின் விளிம்பில் பெரிய துளையை அமைத்து நீரை அதிலிருந்து வெளியெற்றுவர். பின்னர் மூக்குப் பகுதியை பானையின் தோள் பட்டையில் அமைத்தனர். அடுத்து, மூக்குப் பகுதியை (Knob) தனியாகச் செய்து அதனைத் தோள் பட்டையில் பொருத்தினர். அடுத்து பானை வனைபவர்கள் தங்களது கலைத் திறனால் தேவையான வடிவில் பல்வேறு அலங்காரங்களைப் புகுத்தி, கெண்டியின் மூக்குப் பகுதியில் தனிப்பட்ட முறையில் அனைவரையும் கவரும் விதத்தில் அமைத்து அளித்துள்ளனர். முதலில் ஒன்று வைத்தனர். பிறகு நான்கு வைத்தனர் என்பதையும் அறிய முடிகிறது. சடங்குகள் குறித்த மட்கலன்களுக்குத் தனியாக தயார் செய்து தேவைக்கு ஏற்ப பல மூக்குகளைப் பொருத்திக் கொண்டு பயன்படுத்தத் துவங்கினர். இவ்வாறு சுடுமண் கெண்டி பல்வேறுவிதமான பரிணாம வளர்ச்சியை சோழர் காலத்தில் பெற்றது எனலாம்.

பொ.ஆ. 9 – 14-ம் நூற்றாண்டு வரை மேற்கொண்ட அகழாய்வுகளில், பிற மட்கலன்களுடன் போர்சலைன் மற்றும் செலடைன் வகை மட்கல ஓடுகளும் கிடைத்துள்ளன. இவை சீன தேசத்து மட்கலன் வகையைச் சார்ந்தவை. எனவே, சீன நாட்டோடு பொ.ஆ. 12 – 13 நூற்றாண்டில் சோழர்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்தள்ளனர் என்பது புலனாகிறது*22. பெரியபட்டினம் அகழாய்வில் சீனக் காசு ஒன்றும் கிடைத்துள்ளது. கங்கைகொண்ட சோழபுரம், பெரியபட்டணம், நாகப்பட்டனம் போன்ற அகழாய்வுகளைக் சான்றாகக் குறிப்பிடலாம்.

ராஜராஜ சோழன், முதன் முதலாக சீன நாட்டுக்கு பொ.ஆ.1015-ல் தூதர்களை அனுப்பியுள்ளார். பின்னர் ராசேந்திர சோழன் மற்றும் முதலாம் குலோத்துங்கன் காலத்திலும் (பொ.ஆ.1077-ல்) சீன நாட்டுக்கு தூதர்கள் சென்றுள்ளனர். அதன் பின் தமிழகத்துடனான தன் வணிகத் தொடர்பை சீனம் மிக நெருக்கமாக வளர்த்துக் கொண்டது. சோழர்கள் பின்னர் கிழக்கிந்தியத் தீவு நாடுகளுடனும் தங்களது தொடர்பை விரிவுபடுத்திக் கொண்டனர்*23. சோழர்கள் காலத்தில் தான், அரசன் இருக்கும் இடத்துக்கு அருகிலேயே அமைச்சர்களுக்கும், தங்களது குடிகளுக்கும் இடம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வில் எங்கு தோண்டினாலும் செங்கற்கள் குவியல் குவியலாகக் காணப்படுவதையே சான்றாகக் கொள்ளலாம். உட்கோட்டை, மண்மலை, குறுவாலப்பர்கோயில், சின்ன மாளிகைமேடு போன்ற பல பகுதிகளில் மேற்கொண்ட அகழாய்வுகளில் சோழர் காலக் கட்டடங்கள் வெளிப்படுத்தப்பட்டதும் கூடுதல் சான்றுகளாகும்*24. அரண்மனையை, தற்போதுள்ள கங்கைகொண்ட சோழபுரம் தென்மேற்கே அமைத்துக் கொண்டுள்ளனர்.

இடைக் காலத்தில் சைவ சமயமும், வைணவமும் ஆதரிக்கப்பட்டன. இவற்றுடன் பௌத்தமும் ஆதரிக்கப் பட்டுள்ளது என்பதற்கு தஞ்சை பெரிய கோயில் சிற்பங்களைக் குறிப்பிடலாம்*25. அவற்றோடு பௌத்தத்துக்கு வழங்கிய கொடைகளையும் கருத்தில் கொள்ளலாம். அனைத்து சமயங்களும் போற்றிப் பாதுகாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றின் இடைக்காலத்தில் வாணிகமும், மக்களின் சமய வாழ்வும் நன்கு செழிப்புடன் காணப்பட்டாலும் உயர்குடி மக்களுக் கென்ற ஓர் அமைப்பும், அடித்தட்டு மக்களுக் கென்ற ஓர் அமைப்பும் அக்காலத்திலும் இருந்துள்ளதையே அகழாய்வுகள் காட்டுகின்றன. வணிகர்களும், அரசு உயர் பதவிகளில் இருப்பவர்கள் மட்டுமே செங்கற் கட்டடங்களைக் கட்டி வாழ்ந்துள்ளனர். பிற மக்கள் (கைவினைஞர்கள், தொழில்முனைவோர், ஏனையோர்) அனைவரும் குடிசைப் பகுதிகளிலும், அரண்மனையைச் சுற்றி அமைந்த பகுதிகளிலுமே வாழ்ந்துள்ளனர் என்பது புலனாகிறது.

தமிழகத்தில் நடைபெற்ற இரண்டு அண்மைக் கால அகழாய்வுகள் பல வரலாற்றுச் செய்திகளை நமக்கு வழங்கியுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்த பட்டறைப் பெரும்புதூர் அகழாய்வு, பண்டைய தொழிற்பட்டறைகள் இருந்த இடங்களில் தொடர் வரலாற்று நிகழ்வுகள் காணப்படுவதால், இதுபோன்ற தொன்மையான ஊர்கள் ஒரு தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டுள்ளதையும், அங்கு மக்கள் தொடர்ந்து தொழிற்பட்டறை நிறுவி தொழிலை மேம்படுத்தியுள்ளனர் என்பதையும் அகழாய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வகழாய்வில் கிடைத்த கடைநிலைப் பழைய கற்காலக் கற்கருவிகள், புதிய கற்காலக் கைக்கோடாரிகள், பெருங் கற்கால மணிகள், மட்கலன்கள் என சங்க கால மக்கள் வாழ்ந்தமைக்கான சிறப்பான தொல் பொருட்கள் பலவும் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் நறுமணப் புகைக்கலன் ஒன்றும் உறைகிணறும் குறிப்பிடத்தக்கவை. எனவே, இவ்வகழாய்வின் வழியாக சங்க கால வாழ்விடம் ஒன்று அடையாளம் காட்டப்பட்டுள்ளதை தெளிவாக உணரமுடிகிறது.

கீழடி அகழாய்வு :

இது தமிழகத்தில் பெரிய அளவிளான குடியிருப்புகள் அதிகம் கொண்ட பகுதியை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியள்ளது. இவ்வகழாய்வு, மகாபாரதக் கதைகளில் மூலக்கருவாக உள்ள பகடை உருட்டுதல் விளையாட்டைச் சுட்டிக் காட்டுகிறது. கீழடி அகழாய்வில் தான், முதன் முதலாக பகடைக்காய் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் சிறப்புக்குரியது. இங்கு பல்வேறு தூரதேசத்து பெரும் வணிகர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பதும், அவர்கள் தங்களது பொழுது போக்குக்காகவும், கேளிக்கை விளையாட்டாகவும் பகடை உருட்டுதல் விளையாட்டை விளையாடி உள்ளனர் என்பதையும் இவ்வகழாய்வு தெளிவு படுத்தியுள்ளது எனலாம். மேலும், இவ்வகழாய்வில் கட்டடப் பகுதிகள், கால்வாய் அமைப்புகள், சுடுமண் பொம்மைகள், சுடுமண் மணிகள், சங்கு வளையல்கள், ரோமானியர் வருகை எனப் பல்லாற்றானும் சிறப்பு பெற்ற அகழாய்வாகவும் தமிழகத்தின் மிகவும் பழமையான வணிக நகரத்தையும் இவ்வகழாய்வு வெளிப்படுத்தியுள்ளது என்பதே சிறப்புக்கு உரியது.


சான்றாதாரங்கள் :

1. நடன. காசிநாதன், கல்லெழுத்துக் கலை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
2. இரா. நாகசாமி, மாமல்லபுரம், தமிழ்நாடு அரசுத் தொல்பொருள் ஆய்வுத் துறை, சென்னை.
3. K.A. Nilkanta Sastri, The Chola, Madras University, 1984, Madras Historical Series No. 9.
4. D. Thulasiraman, Excavations at Palaiyarai, Tamil Civilization, Quarterly Research Journal, Tamil University, Thanjavur, 1987.
5. T.S. Sridhar, Excavations of Archaeological sites in Tamil Nadu (1969-1995) Govt. of Tamil Nadu, Dept. of Archaeology, Kurumbanmedu Excavation.
6. S. Selvaraj, Excavations at Kannanur, Excavations of Archaeological Sites in Tamil Nadu, Govt. of Tamil Nadu, Dept. of Archaeology, Chennai 8.
7. S. Selvaraj, Excavations at Gangaikondacholapuram, Tamil Civilization, Quarterly Research Journal, Tamil University, Thanjavur, 1987.
8. Ibid,.
9. தி.ஸ்ரீ. ஸ்ரீதார், கங்கைகொண்டசோழபுரம், அகழாய்வு அறிக்கை, தமிழ்நாடு அரசு, தொல்லியல் துறை, சென்னை, 2009.
10. ச. செல்வராஜ், கங்கைகொண்டசோழபுரம் அகழாய்வில் கட்டடங்களும் கட்டுமானமும், கருத்தரங்கக் கட்டுரை, கங்கைகொண்டசோழபுரம்,
11. S. Selvaraj, op.cit.,
12. ச. செல்வராஜ், அகழாய்வுகளில் காணப்படும் கூறை ஓடுகள், கருத்தரங்கக் கட்டுரை, சென்னை.
13. K.A. Nilakanda Sastry, The Chola, Madras University, Historical Series No 9, 1984.
14. T.S. Sridhar, Op. cit.,
15. S. Selvaraj & others, Excavations at Thirukoilur, Dept. of Archaeology, Govt. of Tamil Nadu, Chennai.
16 Natana. Kasinathan & others, Excavation at Padaiveedu.
17. Ibid.,
18. Ibid.,
19. S. Selvaraj, Excavations at Kannanur, Excavations of Archaeological Sites in Tamil Nadu, (1969 – 1995), Chennai, 2008.
20. Ibid.,
21. ச. செல்வராஜ், கெண்டி, கருத்தரங்கக் கட்டுரை, தஞ்சாவூர்.
22. ச. செல்வராஜ், சீன தேசத்து மட்கலன்கள், (போர்சலைன் / செலடைன்), கல்வெட்டு காலாண்டு இதழ் – 83, 2013, சென்னை.
23. K.A. Nilkanta Sastry, Op.cit.,
24. தி.ஸ்ரீ. ஸ்ரீதர், கங்கைகொண்டசோழபுரம் அகழாய்வு அறிக்கை, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, சென்னை, 2009.
25. ச. செல்வராஜ் – அர்ஜுனன், ராஜராஜன் அகழ்வைப்பக கையேடு, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, சென்னை 8, 2010.


வரலாற்றில் நவீன கால மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை (பொ.ஆ.1500 – 1900) :

சோழர்களின் ஆட்சி மறையத் தொடங்கிய போது, பொ.ஆ.1336 முதல் விஜயநகரப் பேரரசு தலை தூக்கியது. பொ.ஆ. 14-ம் நூற்றாண்டு முதல் தென்னிந்தியாவை விஜயநகரர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். இவர்கள், தங்களது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் தளபதிகளை நியமித்து ஆட்சியை நடத்தினர். இவர்களை நாயக்கர் என்று குறிப்பிட்டு அழைத்தனர். முழு அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதுவே நாளடைவில், தமிழகத்தில் முழுமையான நாயக்கர்களின் ஆட்சியாக மாறியது.

பொ.ஆ 16-ம் நூற்றாண்டின் இடைக் காலத்தில், மதுரை நாயக்கர்களும், தஞ்சை நாயக்கர்களும், அவர்களைத் தொடர்ந்து மராட்டியர்களும், தங்களது ஆட்சியைத் துவக்கினர். இருப்பினும், இவர்கள் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டுமே தமது ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தனர். இக்காலகட்டத்தை தொடர்ந்து, ஒரு புறம் டச்சு அரசும், ஆங்கிலேயர் அரசும் தமிழகத்தில் பரவலாக ஏற்படலாயிற்று. அதனை எதிர்த்து பாளையக்காரர்களும், ஜமீன்களும் செயல்பட்டனர். அவ்வாறு செயல்பட்டவர்களில் சற்று வலிமை படைத்தவர்களாக, தமிழகத்தின் வடக்கே செஞ்சியை ஆண்ட செஞ்சி நாயக்கர்களும், சென்னைக்கு அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் மற்றும் தரங்கம்பாடியை ஆட்சி புரிந்த டச்சு அரசும், தமிழகத்தின் தென் கோடியில், சிவகங்கை மாவட்டத்தில் மருது சகோதரர்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் பாஞ்சாலங்குறிச்சியில் அரண்மனை கட்டி ஆட்சி புரிந்த வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


நவீன காலத்தில் ஆட்சி புரிந்த குறுநில மன்னர்கள், பாளையக்காரர்கள் மற்றும் டச்சு ஆட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் :

தமிழகத்தில் செஞ்சி, சதுரங்கப்பட்டினம், தரங்கம்பாடி, பாஞ்சாலங்குறிச்சி ஆகிய குறுநில மன்னர்கள், பாளையக்காரர்கள் மற்றும் டச்சு ஆட்சிப் பகுதிகளில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. வரலாற்றின் இடைக் காலத்திய மற்றும் நவீன காலத்திய இடங்களிலும் நடைபெற்ற அகழாய்வுகள் குறைவே. ஏனெனில், தமிழக வரலாற்றை பதிவு செய்யும் முறைகள் பெருகிவிட்டன. அதாவது, பண்டைக்காலம் போன்று கல்வெட்டுகளையோ, கட்டடங்களையோ கருத்தில் கொண்டு வரலாற்றை கணிக்கும் முறை மாற்றம் பெற்று, அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யும் முறைகள் பெற்ற வளர்ச்சியால், நவீன கால அகழாய்வுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இருப்பினும், மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் நாம் அறிந்து கொண்ட அக்காலத் தமிழக மக்களின் வாழ்க்கை முறைகளைக் காண்போம்.

பாஞ்சாலங்குறிச்சி அமைவிடம் :

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாஞ்சாலங்குறிச்சி, வீரபாண்டிய கட்டபொம்மன் அரண்மனை கட்டி அங்கே செழிப்புடன் வாழ்ந்த இடம். இவனது சமய காலத்தில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் தலை தூக்கியது. இவன் ஆங்கிலேயருக்குப் பணிந்து போகாமல், அந்நியர்கள் எங்களை ஆள நினைப்பதா என்று எதிர்த்து நின்றான். இவன் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் பலமுறை போரிட்டுள்ளான். இம்மாவீரன் மறைவுக்குப் பின் பாஞ்சாலங்குறிச்சியை வெள்ளையர்கள் தங்கள் ஆதிக்கத்துக்குக் கொண்டு வந்து, அங்கிருந்த அரண்மனையை அடையாளம் தெரியாமல் சிதைத்துவிட்டனர்.

அகழாய்வு :

வீரம் மிக்க தமிழ் மன்னன் வாழ்ந்த அரண்மனையின் கட்டடப் பகுதிகளான நாளோலக்க மாளிகையும், கல்யாண மண்டபமும், அடுக்களையும், வசிக்கும் அறைகளும் மற்றும் அரண்மனையின் அடித்தளப் பகுதிகளும் அகழாய்வின் மூலம் வெளிக் கொணரப்பட்டன. அழகிய வேலைப்பாடு கொண்ட கற்பீடங்களும், செங்கற்கள் பாவப்பட்டு, அவற்றில் சுண்ணாம்பு சாந்து பூசப்பட்ட நிலையையும் அறிய முடிந்தது. ஆங்கிலேயர்களால் பீரங்கியால் தாக்கிய போது அப்பீரங்கி குண்டுகள் பதிந்த நிலையும் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வண்ணக் கலவை பூசப்பட்ட காரைத் துண்டுகள் காணப்பட்டதால், அரண்மனைப் பகுதியில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தது என்பதை அவை தெளிவுபடுத்துகின்றன. ஆங்காங்கே காணப்படும் கருங்கல் பீடங்களும், கருங்கல் படிக்கட்டுகளும் அரண்மனைத் தோற்றத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. இங்கு பீரங்கிக் குண்டுகள், சுதை உருவ பொம்மைகள், பீங்கான் தட்டுகள், சுடுமண் பாவைகள், அகல் விளக்குகள் கிடைத்துள்ளன.*1

அரண்மனைக்குரிய அனைத்துப் பகுதிகளும் அகழ்ந்து வெளிக் கொணர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்கு குறிப்பிடத்தக்க தொல் பொருட்களாக, பீங்கான் தட்டுகள், உடைந்த பீங்கான் கிண்ணங்களின் பகுதிகள், டம்ளர் மற்றும் பிற பீங்கான் வகைப் பொருட்கள் அதிக அளவில் சேகரிக்கப்பட்டன.*2 தற்பொழுது இப்பகுதி தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுகாத்து வரப்படுகிறது.

இங்கு குறிப்பிடப்படும் பீங்கான் வகை மட்கலன்கள் போர்ஸலைன் மட்கலன்களைப் போன்றே காணப்படும். இம்மட்கலன்களில் அதிக அளவில் பூ வேலைப்பாடுகளும், நீலநிற வண்ணமும் காணப்படும். இம்மட்கலன் அதிக வேலைப்பாடு கொண்டதாலும், எளிதில் உடைவதாலும் இம்மட்கலன்கள் நீண்ட நாள்கள் மக்களால் ஆதரிக்கப் படவில்லை. இருப்பினும், பொ.ஆ.10 – 13-ம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் காணப்பட்ட பீங்கான் வகையைச் சர்ந்த மட்கலனான போர்ஸலைன் சீன தேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். இவை சில நூற்றாண்டுகள் தமிழகத்தில் மக்களைக் கவர்ந்ததால், நீண்ட நாட்கள் பழக்கத்தில் இருந்துள்ளன. ஆனால், பொ.ஆ.18 – 19-ம் நூற்றாண்டுகளில் காணப்பட்ட பீங்கான்கள் வித்தியாசமானவை. இவை மக்களின் வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம் மாவட்டத்தில், சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் சாலையில் சுமார் 160 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது செஞ்சி. இது, மலைகளால் சூழப்பட்ட பகுதியாகும். இதன் கிழக்கே சாரங்கபாணி ஆறு உள்ளது.

சிங்கபுரம் என்று அழைக்கப்பட்ட செஞ்சி, தொன்மைச் சிறப்புகள் பல நிறைந்தது. பெருங் கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் பல இங்கு உள்ளன. செஞ்சிக்குள் பல சிறப்பு பெற்ற ஊர்கள் காணப்படுகின்றன. தொண்டூர், திருநாதர்குன்று, பனமலை போன்றவை குறிப்பிடத்தக்கவை. பொ.ஆ. 13-ம் நூற்றாண்டில், செஞ்சியர்கோன் என்ற அரசன், இவ்வூரில் உள்ள ராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திரகிரி எனும் மூன்று மலைகளையும் சேர்த்து கோட்டை ஒன்றை எழுப்பத் திட்டமிட்டான்.*3 செஞ்சிக் கோட்டையும் இக்காலத்தில் அமைக்கப்பட்டதுதான்.

செஞ்சிக்கோட்டையின் தோற்றங்கள் :

விஜயநகரப் பேரரசு வீழ்ச்சிக்குப் பின், செஞ்சி நாயக்கர்கள் செஞ்சியைத் தலைமையிடமாகக் கொண்டு, பொ.ஆ. 16-ம் நூற்றாண்டில் தங்களது ஆட்சியை ஏற்படுத்தினர். பின்னர், செஞ்சிக்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. முக்கியத்துவம் பெற்ற இக்கோட்டையானது, பொ.ஆ. 1677-ல் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியால் கைப்பற்றப்பட்டது. இக்கோட்டை தமிழகத்திலேயே தலை சிறந்த கோட்டை ஆகும். தமிழகத்தில் இன்றைக்கும் முழமையான அமைப்பில் காணப்படக்கூடிய ஒரு கோட்டையாகத் திகழ்கிறது. இக்கோட்டைக்குள் ஏழுநிலை மாடங்கள் நிறைந்த கல்யாண மகால், வெங்கட்ரமணர் கோயில், தர்பார், களஞ்சியங்கள், யானைக்குளம், அரச குடும்பத்தினர் குடியிருப்புகள், சதத்துல்லாகான் மசூதி, தேசிங்குராஜன் சமாதி என பல பகுதிகள் உள்ளன.*4

பீரங்கி மேடையும், அதன்மேல் காணப்படும் பீரங்கியும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கோட்டை வாயில்களும், அதன் படிக்கட்டுகளும், அதன் உள் கட்டமைப்புகளும் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அரை வட்ட வடிவில், வளைவு வளைவாக கருங்கற்களைக் கொண்டு கோட்டையின் அரண் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிரிகளை மறைந்திருந்து தாக்கவும், உள்ளே இருப்பவர்கள் தக்க பாதுகாப்புடன் இருக்கவும் மிகுந்த கவனத்துடன் இக்கட்டுமானம் அமைத்துள்ளது காண்போர் அனைவராலும் வியக்கவைக்கும் வகையில் உள்ளது.

புதியதாக எவரேனும் கோட்டைக்குள் நுழைந்து விட்டால், அவர்களால் எளிதில் வெளியே வர இயலாது. அத்தகைய வடிவில் பல நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் புறப்பட்ட இடத்துக்கே திரும்பக் கொண்டு வந்து விட்டு விடும். அதிகமாகப் பழக்கம் உள்ளவர்கள் அல்லது கோட்டைக்குள் அடிக்கடி சென்று வந்தவர்கள் மட்டுமே இக்கோட்டைக்குள் எளிதில் சென்று வெளியே திரும்பலாம். அத்தகைய சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டது.

அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட பகுதிகள் – கொலுமேடை :

இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையால், இக்கோட்டையை செப்பனிடும் பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1973 – 74-ல் மேற்கொண்ட அகழாய்வில் கொலுவறை ஒன்றும், 12.5 X 10 மீ. அளவுள்ள ஒரு பெருவறையின் சான்றுகளும் கண்டறியப்பட்டது. இவற்றுடன், கொலு மேடை மற்றும் குடியிருப்புப் பகுதிகளும் வெளிக் கொணரப்பட்டது. இவ்வகழாய்வில் செம்பினால் ஆன முத்திரையும், நவாப் காசுகளும், இரும்பு குறுவாள், கதவு, வலையல்கள், ஆணிகள் என பல தொல் பொருட்களும் சேகரிக்கப்பட்டன.*5 இங்கு வடிவமைக்கப்பட்டுள்ள கோபுர அமைப்பானது, மராட்டியர் கலைப்பாணியையும், முகலாயர்கள் கலைப்பாணியையும் இணைத்து ஏற்படுத்தியது போல் உள்ளது. இவை பொ.ஆ. 17-ம் நூற்றாண்டில் அமைந்த ஆட்சி மாற்றங்களையும், அவர்களின் கட்டடக் கலையையும், மக்களின் வாழ்க்கை முறையையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

தரங்கம்பாடி :

நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்தில், கிழக்குக் கடற்கரையை யொட்டி அமைந்துள்ள ஊர் தரங்கம்பாடி. கடற்கரையையொட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை அமைந்த ஊர் இது. இக்கோட்டை, பொ.ஆ. 1620-ல் டச்சு ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது.*6

தரங்கம் பாடியில் டச்சு (டேனிஷ்) கிழக்கிந்திய கம்பெனி வணிகர்கள், இந்தியாவில் கொள்முதல் செய்த பொருட்களை மலேயா தீவுகளுக்கு ஏற்றிச் சென்று விற்பனை செய்தனர். அவற்றுக்கு ஈடாக பிற பண்டங்களை வாங்கி வந்தனர். இங்கு காணப்படும் கோட்டையின் பல பகுதிகள், பல முறை, பல காலங்களில் புணரமைப்பு செய்யப்பட்டள்ளது. தரங்கம்பாடி கோட்டை இரண்டு பெரிய கட்டடப் பகுதியைக் கொண்டது. ஒன்று, வெளிப்புற மதில் சுவர், அடுத்து, மைய கட்டடப் பகுதி. மேலும், உயரமான நான்கு பக்கங்களைக் கொண்ட சதுரமான கட்டட அமைப்பு, நான்கு மூலையிலும் கண்காணிப்பதற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது.*7

தரங்கம்பாடி கோட்டைக்குள் அமைந்துள்ள அருங்காட்சியகம் :

தரங்கம்பாடி கோட்டையின் கட்டுமானத்தையும், காலத்தையும் அறிதல் பொருட்டு, 2001-ல் இங்கு மாதிரி அகழ்வுக்குழி போடப்பட்டது. ஆய்வில், செங்கற்கள் பாவப்பட்ட அடித்தளம் வெளிக் கொணரப்பட்டது.*8 அதன் மேல், செம்மண் அமைப்பும் காரைப் பூச்சும் இருந்தது. அதனை அடுத்து, ஒரு மண் அடுக்கு 30 செ.மீ. தடிப்பில் காண முடிந்தது. இதன் மேல்தான் பாதுகாப்புச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சேந்தமங்கலம், கங்கைகொண்ட சோழபுரம் போன்ற அகழ்விலும் இதேபோன்ற அடித்தளம் காணப்பட்டது. இவ்வகைக் கட்டடங்கள், உறுதித் தன்மையை கருத்தில்கொண்டு அமைக்கப்படுபவை. பாதுகாப்புச் சுவர் இரண்டு சுவர்களைக் கொண்ட கட்டுமான அமைப்பாக உள்ளது. இதுபோன்ற கட்டுமானம், கங்கைகொண்ட சோழபுரம் அரண்மனைப் பகுதி அகழாய்வில் காணப்படுகிறது. அதேபோல், ஒரு சுவருக்கும் மற்றொரு சுவருக்கும் 9 செ.மீ. இடைவெளி உள்ளது. ஒவ்வொரு சுவரும் 75 செ.மீ. தடிப்பு உள்ளது. இடைப்பட்ட பகுதியில் செங்கற்தூளை இட்டு நிரப்பியுள்ளனர். தமிழக கோயில்களின் வெளிப்புறச் சுவர்கள் இதுபோல் அமைக்கப்படுவது. வழக்கம். அதன் அடிப்படையிலேயே தரங்கம்பாடி கோட்டை பாதுகாப்புச் சுவரும் அமைக்கப்பட்டுள்ளது. 4 மீட்டர் உயரம் உள்ள இந்தச் சுவருக்கு 20 செ.மீ. X 13 செ.மீ. X 4 செ.மீ. அளவுடைய செங்கற்கள் பயன் படுத்தப்பட்டுள்ளதை இந்த அகழாய்வு வெளிப்படுத்தியுள்ளது.*9 கூம்பு வடிவ அமைப்பில், பாதுகாப்புச் சுவரின் மேல் பகுதியை அமைத்ததால், மழை நீர் பாதிப்பிலிருந்து கட்டடம் பாதுகாக்கப்படுகிறது. பல தரைப் பகுதிகள் செங்கற்களைக் கொண்டு பாவப்பட்டுள்ளதை கண்டறிய முடிகிறது. டச்சு நாட்டினர் எழுப்பிய கட்டடத்தின் பழைய அடிப்பகுதியும் இவ்வாய்வில் கண்டறியப்பட்டது. இங்கு சீனதேசத்து போர்ஸலைன் பானை ஓடுகளும், சீனப் பெண் உருவங்களும், இரண்டு அடித்தளங்களும் கண்டறியப்பட்டன.*10


சான்றாதாரங்கள் :

1. R. Nagasamy, Damilica, opp.cit.pp.
2. Ibid.
3. ச. கிருஷ்ணமூர்த்தி, செஞ்சி வரலாறு, நாயக்கர் சமுதாய மலர், திருச்சி.
4. மேலது.
5. மேலது.
6. R. Nagasamy, Tharangambadi, Govt. of Tamil Nadu Published Brought out in Honour of the visit his excellency Mr. Pout Schluetor, the Prime Minister of Denmark on the occasion of their visit to Danisburg Museum, Tarangambadi on 17.1.1987.
7. T. Subramani, Excavations at Tharangambadi, Dept. of Archaeology, Govt. of Tamil Nadu, Chennai.
8. Ibid.
9. தி. சுப்பிரமணியன், தரங்கம்பாடி நகரமயமாதல் – நாவாய், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 2010, பக்.169.
10. மேலது.


வரலாற்றில் நவீன கால மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை (பொ.ஆ. 1500 – 1900) :

மனோரா :

தமிழகத்தின் நெற் களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர், கலைகளின் இருப்பிடமாகவும் திகழ்ந்து வருகிறது. வளம் பல கொழிக்கும் தஞ்சைப் பகுதியை பொ.ஆ. 7-ம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 9-ம் நூற்றாண்டு வரை முத்தரையர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். இவர்களுக்குப் பின் சோழர்கள் பொ.ஆ. 850 முதல் 1256 வரையிலும், அவர்களைத் தொடர்ந்து பாண்டியர்களும், விஜயநகர மன்னர்களும், பொ.ஆ 13 – 14-ம் நூற்றாண்டில் ஆட்சி செலுத்தியுள்ளனர். இவர்களை அடுத்து, தஞ்சை நாயக்கர்கள் பொ.ஆ. 1541-1674 வரையிலும் ஆட்சி புரிந்து பல வகையிலும் தஞ்சைக்குப் புகழ் சேர்த்துள்ளனர். கட்டடக் கலைக்கும், கலை இலக்கிய வரலாற்றுக்கும் இந்த அரச மரபினர் செய்துள்ள தொண்டு, இன்றும் உலக மக்களை வியக்கச் செய்கிறது. இவர்கள் தஞ்சை பெரிய கோயிலைப் புதுப்பித்தும், சில புதிய கட்டடங்களைக் கட்டுவித்தும் கட்டடக் கலைக்குத் தங்களது பங்கை ஆற்றியுள்ளனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


மனோரா அமைவிடம் :

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சரபேந்திரராஜன் பட்டினம் என்னும் ஊரின் அருகில் காணப்படும் கடற்கரையில் மனோரா கட்டப்பட்டுள்ளது. இப்பகுதி, வங்கக் கடலோரம் இயற்கை எழிலோடு திகழ்கிறது. மனோரா என்பது மினார் என்ற சொல்லில் இருந்து வந்தது. மினார் என்பது ரோம் நாட்டிலுள்ள டிராகனைப் போன்றது என்று கட்டடக் கலை நிபுணர் பெர்குசன் கூறுகிறார். தூண் போன்ற உயரமான கட்டட அமைப்பைக் கொண்டது இவ்வகைச் சின்னம். குறுநில மன்னர்களைப் போன்ற மினார் அரச மரபைச் சார்ந்த ஏம்பா என்ற மன்னரால், இரண்டு மினார்கள் (பொ.ஆ. 1425-64), அவர்களின் வெற்றியின் நினைவாகக் கட்டப்பட்டது. இதனை வெற்றித் தூண் என்று அழைத்தனர். மினார் அரச பரம்பரையினரால் கட்டப்பட்டதால், அவற்றை அவர்களது பெயராலேயே அக்கட்டடக் கலைக்குப் பெயர் வைத்து அழைத்துள்ளனர். அதைப் போன்றது தான் தஞ்சை மனோராவும். மினாரைப் போன்றும், அவர்கள் எழுப்பிய வெற்றித் தூண் அமைப்பிலும் இங்கு இந்த நினைவுச் சின்னம் கட்டப்பட்டுள்ளது. இதுவும் ஒரு வெற்றித் தூணாகவும் அக்காலத்திய கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்துள்ளது.

பட்டுக்கோட்டை அருகே, ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிச் சின்னமாக இருப்பது இந்த மனோரா. இது கடற்கரை ஓரம் அமைந்த ஒரு சிறிய கோட்டையாகும். மதில்களால் சூழப்பட்ட நிலையில் அமைக்கப்பட்டது. மராட்டியர்களின் கலைப் பாணிக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள இது ஒரு நினைவுச் சின்னம் ஆகும். 22.30 மீட்டர் உயரம் உடைய இக்கட்டடம் ஒன்பது அடுக்குகளைக் கொண்டதாகவும், அறுகோண அமைப்பிலும் கட்டப்பட்டுள்ளது. இதைச் சுற்றிலும் பெரிய அகழி ஒன்றும், அதையடுத்து மதில்சுவரும் காணப்படுகிறது.

இந்தப் புகழ்வாய்ந்த நினைவுச் சின்னத்தை இரண்டாம் சரபோஜி மன்னர் கட்டியுள்ளார். இதனை எதற்காக கட்டினார் என்ற காரணத்தை அவர் கல்வெட்டாகப் பதிவு செய்துள்ளார். தமிழகத்தில் மராட்டிய மன்னர்கள் ஆட்சி புரிந்த போது தமிழர், தெலுங்கர், இஸ்லாமியர், மராட்டியர், ஆங்கிலேயர் என பலரும் இங்கு கலந்து வாழ்ந்ததால், அவரகள் அனைவரும் நன்கு அறியும் வண்ணம் இந்த ஐந்து மொழிகளிலும் கல்வெட்டை வெட்டி, கோட்டையின் நான்கு பக்கங்களிலும் பதித்து வைத்துள்ளார். இரண்டாம் சரபோஜி பல மொழிகளைக் கற்ற பன்மொழி வித்தகர். ஐந்து மொழிகளிலும் தன் நேரடிப் பார்வையில் இந்தக் கல்வெட்டுகளை அவர் பதித்துள்ளார்.

தமிழ் கல்வெட்டின் வாசகம் :

“இங்கிலீசு சாதியர் தங்கள் ஆயுதங்களினாலமைந்த

நேய சந்தோஷங்களையும் போனபாற்தெயின்

தாழ்த்தப்படுதலையும் நினைவுகூரத்தக்கதாக

இங்கிலீசு துரைத்தனத்தின் சினேகிதரும்

படைத்தலைவருமாகிய தஞ்சாவூர் சீமை மகாராசா

சத்ரபதி சரபோசி மகாராசா அவர்கள் இந்

உப்பரிகையைக் கட்டிவைத்தார் – சகம் 1736”

இவ்வாறு, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும், ஏதோ ஒரு குறுநில மன்னர்களும் பாளையங்களும் ஆட்சி புரிந்தாலும், மக்கள் நிம்மதியாக இருந்தனர் என்றால், அதுவே சிறந்த ஆட்சி என மக்களும் சமுதாயமும் கருதின. இருப்பினும், சிறு சிறு மன்னர்கள் ஆட்சி செய்யும் போது பல இடையூறுகளை மக்களும் அரசும் சந்திக்க நேரிடுகிறது. இதன் வாயிலாக பிரிவினையும், ஆட்சி மாற்றமும் ஏற்பட்டு தகுதியற்றவர்கள் ஆட்சியை பிடிப்பதற்கும் வழி வகுக்கிறது. இதன் விளைவு, மக்களும் அவர்கள் சார்ந்த சமுதாயத்தையும் பாதிக்கிறது. இவ்வாறு ஆங்கிலேயர்களுக்கு முன்னர் ஏற்பட்ட வளர்ச்சியும், சமுதாய அமைப்பும், இங்கு மேற்கொண்ட அகழாய்வுகள் வாயிலாக வெளிப்படுத்துகின்றது.

வரலாற்றின் நவீன காலத்தில் அகழாய்வுகள் காட்டும் மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை :

சோழர்கள் ஆட்சிக்குப் பின் வந்த தஞ்சை நாயக்கர்களும், மராட்டியர்களும், சோழ மன்னர்கள் விட்டுச் சென்ற இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டு, அதனைப் புதுப்பித்தும் மாற்றியும் தங்களது அரசை நடத்திச் சென்றுள்ளனர். ஏனெனில், தஞ்சையிலும், மதுரையிலும் புதியதாக அரண்மனைப் பகுதிகளோ, வேறு குறிப்பிடும் படியான சான்றுகள் ஏதும் கிடைக்காததாலேயே இம்முடிவை எடுக்க வேண்டியதாகிறது. தஞ்சை பெரிய கோயிலில் சோழர் ஓவியத்தின் மேல் விஜயநகர காலத்து ஓவியம் இருப்பதை கண்டறிந்ததை மறுக்க முடியாது.*1 இது எதைக் காட்டுகிறது எனில், ஒரு ஆட்சி முடிவுற்ற போது அதனைக் கைப்பற்றிய அரசு அப்பகுதிகளில் தனது ஆதிக்கத்தை செலுத்துகிறது என்பதையும், முன்னர் நடை பெற்ற ஆட்சியின் சுவடுகளை மறைக்கப் பார்க்கிறது என்பது தான்.

மராட்டா தர்பார் மண்டபத்தில் காணப்படும் சுவற்றில் நாயக்கர் கால ஓவியம் இருப்பதை தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை வெளிக் கொணர்ந்ததை சான்றாகக் கூறலாம். தொல்லியல் துறை சார்பாக அப்போதைய மாவட்டத் தொல்லியல் அலுவலரும் தற்போதைய ஆசிரியருமான செல்வராஜ் அவர்கள் இப்பணியை 1979-ல் மேற்கொண்டார். இப்பணியில் விஜய நகர ஓவியங்களின் மேலேயே மராட்டியர் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததை சிறிது சிறிதாக நவீன அறிவியல் முறைப்படி வெளிக் கொணரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதையும் ஆட்சி மாற்றங்களின் போது நிகழ்வனவற்றுக்குச் சான்றாகக் கொள்ளலாம்.

மேலும், அரண்மனைப் பகுதிகளை கலைக்கூடம், நாயக்கர் மண்டபம் என்றே இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறது கவனத்தில் கொள்ளத்தக்கது. ஏனெனில், இம்மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டது. அதில் காணப்படும் சுதை உருவங்களும், கட்டட அமைப்பும், மதுரை நாயக்கர் மகாலை ஒத்துக் காணப்படுவதையும் இங்கு குறிப்பிடலாம். ஒருவருக்குப் பின் ஒருவராக ஆட்சி மாறினாலும், அரண்மனைப் பகுதிகள் மாறவில்லை. அதற்குப் பதிலாக, அரண்மனைப் பகுதிகளில் மட்டுமே மாற்றங்கள் செய்யப்பட்டன என்பதே உண்மை.

பொ.ஆ. 14 – 19 வரை தமிழகத்தை ஆட்சி புரிந்த ஜமீன்களும், பாளையக்காரர்களும் தங்களுக்கென ஒரு அரண்மனையைக் கட்டிக் கொண்டனர். இவர்கள் உள்நாட்டுக் கட்டடக் கலைஞர்களையும், அயல் நாட்டுக் கட்டட நிபுணர்களையும் வரவழைத்து, தனக்கென ஒரு தனி அமைப்பில் அனைத்து வசதிகளுடன் தங்களது அரண்மனையை அமைத்துள்ளனர். குறிப்பாக செஞ்சி, பாஞ்சாலங் குறிச்சி ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அடுத்து, தஞ்சையில் மராட்டியர்கள் எழுப்பிய சார்ஜா மாடி, மனோரா போன்றவை குறிப்பிடத்தக்கவை.

முதலில் உள்ள சார்ஜா மாடி, ஏழு அடுக்குகளைக் கொண்ட அரண்மனை ஆகும். அடுத்துள்ளது, அவர்கள் காலத்திய ஆயுத கோபுரம். பெயருக்கு ஏற்ப, ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காக நன்கு திட்ட மிட்டு வட்ட வடிவமாக இது அமைக்கப்பட்டுள்ளது.*2 இது எளிதில் யாரும் நுழைந்துவிடமுடியாத அளவுக்குப் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மனோரா, வெற்றியின் நினைவுச் சின்னமாக சரபோஜி மன்னரால் எழுப்பப்பட்டது. இவை மராட்டியர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டு.*3

தமிழகத்தில் இது போன்று (பொ.அ. 14-ம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 19-ம் ஆண்டுவரை) தனித் தனி அரசுகள் ஆட்சி புரிந்தன. அவர்கள் பின் பற்றிய சமயத்தையே மக்களையும் பின்பற்றச் செய்தனர். இதன் விளைவாக, கிராம தெய்வங்கள் பல தோன்றின. சைவமும், வைணவமும் பெரிய அளவில் பின்பற்றப்பட்டாலும், ஆங்காங்கே சிறுசிறு கோயில்களும் எழுப்பப்பட்டன. அவற்றில் ஆஞ்சநேயர் உருவச் சிலை குறிப்பிடத்தக்கது. இத்தெய்வத்தை காவல் தெய்வம் என்றும், கிராமத்தைக் காக்கும் கடவுள் என்றும், ஊரின் நான்கு எல்லையிலும், பெரிய அளவிலான ஆஞ்சநேயர் சிற்பத்தை வடித்து அதன் வழியாக வைணவத்தை பரவச் செய்தனர்.*4தமிழகத்தில் பொ.ஆ. 14-ம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 19-ம் நூற்றாண்டு வரை, பகுதிக்கு ஒருவராக பல்வேறு அரசுகள் ஆட்சி புரியத் துவங்கினர் என முன்னர் குறிப்பிடப்பட்டது. தெற்கே பாஞ்சாலங்குறிச்சியை வீர பாண்டிய கட்டபொம்மனும், ராமநாதபுரத்தை சேதுபதிகளும், மதுரையை ராணி மங்கம்மாளும், புதுக்கோட்டையை திருவிதாங்கூர் ஜமீன்களும், சிவகங்கையை மருது சகோதரர்களும், வடக்கே செஞ்சியை செஞ்சி மன்னர்கள், ஆர்க்காடு நவாபு, அடுத்து போர்த்துகீசியர், டச்சுக்காரர்கள், தரங்கம்பாடியில் டேனிஷ்கள், இப்படித் தனித்தனியான வெவ்வேறுபட்ட இனமக்களின் ஆளுமையால், மக்கள், பல இன்னல்களைச் சந்திக்க நேரிட்டது.

இந்தக் காலக்கட்டத்தில், வணிக நோக்கத்துடன் ஆங்கிலேயரின் வருகை ஆரம்பித்தது. இவர்கள் கிழக்கிந்தியக் கம்பெனி என்ற பெயரில் வணிக நோக்கத்தில் காலடி வைத்தவர்கள். தமிழகத்தை பொ.ஆ.18 – 19-ம் நூற்றாண்டு அளவில் முழுமையாக ஆதிக்கம் செய்தனர்.*5 இவ்வாறு, விஜயநகர மன்னர்கள் காலம் தொட்டு ஐரோப்பியர்களின் வருகை அதிகரித்தது. வணிகம் பொருட்டு இதனை அப்பொழுது ஆட்சிபுரிந்த மன்னர்களும் ஆதரித்தனர். இதற்குச் சான்றாகத்தான், தஞ்சை பெரியகோயில் விமானத்தில் மகரதோரணம் ஒன்றில் ஐரோப்பியரின் தலையைப் பதித்துள்ளனர். அவர்களுக்கு மரியாதை செய்யும் நிமித்தமாகவே அவ்வாறு செய்திருக்கின்றனர் எனலாம்.

மதுரை நாயக்கர்கள் ஆட்சியில் அரசரும், மக்களும், சமய வாழ்க்கையில் பெரிதும் ஆர்வம் காட்டினர். ஒவ்வொரு நாடும் பல மாகாணங்களாகவும், மாகாணம் பல ஊர்களையும் கொண்டு இருந்தது. நாயக்க மன்னர்கள் குடிநலத்தை உண்மையாகவே பேணி வந்தனர் எனலாம். மராட்டியர் காலத்தில், சைவ, வைணவத்தில் அதிக ஈடுபாடு கொண்டு மக்கள் திகழ்ந்துள்ளனர்.

அகழாய்வுகளில் கிடைத்த தொல் பொருட்களின் அடிப்படையில் மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை :

விஜயநகர, நாயக்க மன்னர்களுக்குப் பின் மராட்டியர், ஆர்க்காடு நவாபு போன்ற மன்னர்கள் தமிழகத்துக்கு வந்ததால், அவர்களுடன் சில பழக்க வழக்கங்களும் இடம் பெறலாயின. அகழாய்வில் சுடுமண் புகைப்பான்கள், நவாப் காசுகள், வளையல்கள். இரும்புக் குண்டுகள், கல் குண்டுகள், வெடி மருந்துப் பெட்டி, ஈயக்கட்டிகள், பணியாரச் சட்டி, சிவப்பு நிற மட்கலன்கள், கண்ணாடிப் பொருட்கள், கண்ணாடி மதுக் குடுவைகள் என பல தொல் பொருட்கள் சேகரிக்கப்பட்டன.*6 அவரவர் அச்சிட்ட காசுகள் வாணிபத்தில் கையாளப்பட்டது என்பதற்கு இக்காசுகள் சான்றாகின்றன.

சுடுமண் புகைப்பான்கள் தமிழகத்தில் பொ.ஆ. 14-ம் நூற்றாண்டுக்குப் பின்னரே அகழாய்வுகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. புகைப் பழக்கம், புகையிலை போன்றவற்றை ராணுவத்தில் பணிபரியும் போர் வீரர்கள், பாளையக்காரர்கள் அதிகஅளவில் பயன்படுத்தியுள்ளதை கோட்டைகளிலும், துருகம் போன்ற இடங்களில், மேற்பரப்பு ஆய்விலும், அகழாய்விலும் கிடைத்துள்ளதைக் குறிப்பிடலாம். குறிப்பாக, வட தமிழகத்தில் சுடுமண் புகைப்பான்கள் அதிக அளவில் அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், புகைப்பான்களைக் கொண்டு புகைப்பிடிக்கும் சிற்பங்களை ரெட்டியார் பாளையம் குளத்தில் காணப்படும் சிற்பத்தில் காணலாம்.*7 பொ.ஆ.17-ம் நூற்றாண்டில் இப்பழக்கம் அதிகரித்துள்ளது. இதனை வீரபத்ரதுர்க்கம், திருக்கோயிலூர், செஞ்சி, பாஞ்சாலங்குறிச்சி, மோதூர், தரங்கம்பாடி போன்ற பல அகழாய்வுகளிலும் கிடைத்துள்ளதைக் கொண்டு உணரலாம். இப்பகுதி குளிர்ப்பகுதி ஆனதால், இப்பழக்கம் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன போலும்.

தரங்கம்பாடி அருகே வானகிரியிலும், தரங்கம்பாடியிலும் மேற்கொண்ட ஆழ்கடல் அகழாய்வில், அதிக அளவில் கடலில் மூழ்கிய கப்பல்களின் உடைந்த பகுதிகள் பலவும் வெளிக் கொணரப்பட்டது. ஈயக்கட்டி (Lead Ingot), வெடிமருந்துப் பெட்டி (Gun Powder Box), ஆங்கில எழுத்துகள் அச்சு குத்திய ஈயக்கட்டிகள் (Inscribed Lead Ingots) பல சேகரிக்கப்பட்டன. அவற்றில் W.BLAKETT 1972 என்ற வாசகம் காணப்படுகிறது.*8 இதனைப் பார்க்கும் போது, தரங்கம்பாடிக்கு இறக்குமதிக்காக வந்த கப்பலில் இவை இருந்துள்ளதை உணர முடிகிறது. எனவே, இங்கு கண்டறியப்பட்ட தொல் பொருட்கள் வழியாக, தரங்கம்பாடிக்கு வெடிப் பொருட்கள் வந்ததைக் கொண்டு இங்கு பல வெடி பொருட்கள் தயாரித்திருக்கலாம் என்ற கருத்து தெளிவாகிறது. மேலும் வெடிமருந்துப் பெட்டி ஒன்று காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அங்கு கிடைத்த கண்ணாடி மதுக்குடுவைகள், இவர்கள் மதுப்பழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதையும், மது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவிக்கின்றன.*9 மக்கள் அன்றாட உணவில் மாவுப் பொருட்களைப் பயன்படுத்தி உட்கொண்டுள்ளனர் என்பதை, பணியாரச் சட்டி, பீங்கான் தட்டுகள், பீங்கான் கோப்பைகள், பீங்கான் கெண்டி போன்றவற்றைக் கொண்டு குறிப்பிடலாம். நாகப்பட்டினம் அகழாய்வில் டேனிஷ் நாட்டு பீங்கான் புகைப்பான்களும், பீங்கான் தட்டுகளும், கிடைத்துள்ளன.*10 மக்கள் தம் உணவை மிகவும் உயர்தரமாகச் சமைத்து தட்டில் பரிமாறி உட்கொண்டுள்ளனர் என்பதும் இதன்மூலம் புலனாகிறது. தரங்கம்பாடி, பாஞ்சாலங்குறிச்சி அகழ்வுகளில் அதிக அளவில் காணப்பட்டது சீன தேசத்துப் பானை ஓடுகள்தான். எனவே, மக்கள் எவரையும் ஐரோப்பியரின் தாக்கத்தை விட்டு வைக்கவில்லை என்பதை அறிய முடிகிறது.

இக்காலத்தில், தமிழகத்தில் கிறிஸ்தவம் அதிக அளவில் பரவத் தொடங்கியது. ஐரோப்பியர் அளித்த இலவசப் பொருட்கள், வறுமையில் வாடிய மக்களை வெகுவாக ஈர்த்தன. எனவே, அச்சமயம் தமிழகத்தில் எளிதாக அம் மதம் வளரத் துவங்கியது. ஆங்கிலேயருடன் போராட்டம் துவங்கியது. பாஞ்சாலங்குறிச்சியில் வாழ்ந்த வீர பாண்டிய கட்டபொம்மன் தனது தனித்துவத்தை நிலை நிறுத்திப் போராடினான். அவன் தனிமைப்படுத்தப்பட்டான். அவனது தலைநகரமான பாஞ்சாலங்குறிச்சியும் தகர்க்கப்பட்டது. அதன் அடித்தளங்களே அகழாய்வில் வெளிக் கொணரப்பட்டது.*11

தமிழகத்தில் பல தன்னாட்சிகள் தோன்றியதும், தன்னாட்சி பெற்ற நாட்டுடைமைக்காரார்களுக்கு இடையே ஒற்றுமை குறைந்தது. எனவே, தனித்து நின்று அயல் நாட்டாரை மையமாக கொண்ட அரசை வெல்ல முடியாமல், தமிழகத்தின் நவீன காலத்தில் அனைத்திலும் முன்னேற்றம் கொண்ட நேரத்திலும், ஒற்றுமையின்மையால் பாஞ்சாலங்குறிச்சி போன்ற பல சிறு பகுதிகள் இருந்த தடம் தெரியாமல் அழிந்துபோயின.

சமயங்களும், இனங்களும் பெருகின. சைவ, வைணவ தலங்கள் அதிகரித்தன. மக்களின் வாழ்வாதாரம் பெருகிய போதிலும், மன நிறைவை எட்டவில்லை என்றே கூறலாம். தனி மனிதனின் வருவாய் பெருகியது. தொழில் வளம், பன்னாட்டாரோடு போட்டி போட்டு வளர்ந்தது. பொ.ஆ. 14-ம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 19-ம் நூற்றாண்டு வரை, மண்டல (Regional) ஆதிக்கங்களும், அதை ஒட்டிய சமயங்களுமே பெருகின எனலாம். கிராம தெய்வங்களும் மூடநம்பிக்கைகளும் கூடவே வளர்ந்தன.

மேலும் பல நகரங்களில், தொடர் அகழாய்வுகளை மேற்கொண்டால், இன்னும் பல புதிய தகவல்களைப் பெறலாம். இங்கு கூறப்பட்ட தகவல்கள் அனைத்தும், அகழாய்வுகளில் சேகரிக்கப்பட்ட தொல் பொருட்களின் அடிப்படையில், நம் முன்னோடிகள் விட்டுச் சென்ற சான்றுகளின் எச்சங்களைக் கொண்டும் வழங்கப்பட்ட தகவல்கள் என்பதை அனைவரும் அறிதல் வேண்டும். மேலும் பல அகழாய்வுகள் மேற்கொண்டால், இன்னும் பல உண்மைகள் நமது பாரம்பரிய கலாசாரத்தின் வெளிப்பாடுகள் தெள்ளத் தெளிவாக வெளிப்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.


சான்றாதாரங்கள் :

1. அ. கிருஷ்ணமூர்த்தி, இமயமும் குமரியும், ‘‘S. Govindasamy, The Frescos of Paintings from Brahadeswarer temple at Tanjore” – “Round the central Shrine of this Temple runs a narrow prakara immediately under the Vimana. Curiously enough it is in this part of the temple that the paintings under consideration are found. So far, the west and north walls of the prakara have yielded many intensive panels, busts and torsos, while the south and west walls continue to be a sealed book. I belive that a further exploration of those walls will certainly bring many more painting to light”.
2. ச. செல்வராஜ், மனோரா, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, 2013.
3. மேலது.
4. ச. செல்வராஜ், ஆஞ்சநேயர் வழிபாடு, பாப்பாரப்பட்டி.
5. கே.கே. பிள்ளை, தமிழக வரலாறும் மக்களும், பண்பாடும், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை. “இந்தியாவுக்குள் நுழைந்த முதல் ஐரோப்பியர்கள் போர்த்துகீசியராவர். வணிகம் பொருட்டே இந்திய நாட்டுக்கு வந்தவர்கள். தரங்கம்பாடியில் டேனிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி வணிகர்கள் கோட்டை ஒன்றைக் கட்டிக்கொண்டு தம் வணிகத்தை தொடங்கினர். இந்தியாவில் கொள்முதல் செய்த சரக்குகளை அவர்கள் மலேயா தீவுகளுக்கு ஏற்றிச் சென்று விற்பனை செய்தனர்”. பக். 442, 446.
6. ச. செல்வராஜ் மற்றும் பரணன், மராட்டியர் அகழ்வைப்பகம், தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, சென்னை, பக். 14-15.
7. வீரபத்திரதுருகம், தினத்தந்தி, நாள் 4.12.1990.
8. S. Selvaraj, “Underwater Excavations at Poompuhar” Seminar on Recent Trends in Archaeology, on 7.2.2013 at Meenakshi College for Women (Autonomous) Chennai.
9. Ibid, pp. 3.
10. பா. ஜெயக்குமார், நாகப்பட்டினம் அகழாய்வு, ஆவணம் இதழ் – 20, 2009. பக். 118-119.
11. R. Nagasamy, Damilica, Department of Archaeology, Govt. of Tamil Nadu, Chennai.


நிறைவு பகுதி :

தமிழகத்தில் மட்டுமின்றி பாண்டிச்சேரி பகுதியில் செய்யப்பட்ட அகழாய்வுகளையும், ஆந்திரா, கர்நாடக மாநிலத்தில் மேற்கொண்ட அகழாய்வுகளையும் ஒப்பாய்வுக்காகக் கையாளப்பட்டுள்ளது.

இன்று நம்மிடையே உள்ள தமிழக வரலாற்று நூல்கள், தமிழகத்தில் காணப்பட்ட கல்வெட்டுகள், இலக்கியங்கள், நாணயங்கள் போன்ற சான்றாதாரங்களைக் கொண்டு கூறப்பட்டுள்ளபோதிலும், அனைத்தும் ஓர் அனுமானத்தின் அடிப்படையில் மட்டுமே கூறப்பட்டதுபோலத் தோன்றுகின்றது. அகழாய்வுச் சான்றுகள் கொண்டு அதனை வலுப்படுத்தவும், புதுப்பிக்கவும் வேண்டியுள்ளது.

தமிழக வரலாற்றில் களப்பிரர் ஆட்சிக்காலம் ஒன்று இருந்தது என்றும் அதனை இருண்ட காலம் என்றும் கூறிவந்தனர். பின்னர், பூலாங்குறிச்சி பாறைக் கல்வெட்டு கண்டு பிடிக்கப்பட்ட பிறகு களப்பிரர் காலம் நன்கு செழிப்புடன் இருந்தது என அக்கல்வெட்டு கூறுவதைக் கொண்டு வரலாற்றுச் செய்திகள் வெளிவந்தன. இருப்பினும், இதனை அக்காலத்தின் முழுமையாக வரலாறாக ஆய்வாளர்கள் ஏற்கவில்லை. ஏற்காமைக்குக் காரணம், அங்கு ஒரு தொல்லியல் அகழாய்வை நடத்தி அதன் வழியாக கல்வெட்டின் செய்திகள் உறுதிசெய்யப்படவில்லை என்பதுதான்.

உண்மையில், வரலாற்றுத் தடயங்கள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்து அதன்வழியாகப் பெறப்படும் சான்றுகளே அங்கு எத்தகைய மக்கள் வாழ்ந்தனர், அவர்களது பண்பாட்டு நிலை என்ன? என அனைத்தும் அறிய வழிவகுக்கின்றது. அகழாய்வு ஒன்றினை பூலாங்குறிச்சி பகுதியில் மேற்கொண்டிருந்தால், களப்பிரர்கள் என்று கூறப்பட்டு வரும் மக்கள் எத்தகையத் தன்மையினர் என்பதையும் அவர்களது தொழில், உணவு வகைகள், விளையாட்டுகள், பயன்படுத்திய மட்கலன்கள், அவர்கள் பயன்படுத்திய எழுத்துகள் போன்றவற்றை அறிந்துகொள்ள ஏதுவாக அமைந்திருந்திருக்கும். இப்பகுதி, வருங்கால ஆய்வாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மனத்தில் கொள்வோம்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


அகழாய்வுகள், தமிழக வரலாற்றுக்கு உதவும் வலிமையான சான்றுகளை வழங்குவதில் முதன்மையாகத் திகழ்வதற்குச் சான்றாக, கொடுமணல் மற்றும் அழகன்குளம் அகழாய்வுகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இலக்கியங்களில் கொடுமணல் குறித்து சிறு குறிப்பும், அழகன்குளம் பற்றி ஒன்றும் இல்லாமையைக் காண்கிறோம். ஆனால், கொடுமணலில் இரும்பு உருக்குத் தொழிலும், இரும்புப் பட்டறையும் இருந்துள்ளது என்பதையும், மணிகள் தயாரிக்கும் தொழிற்பட்டறைகள் இருந்த பகுதி அது என்பதையும் மிகவும் தெளிவாக உரிய சான்றுகளுடன் அகழாய்வு தெளிவுபடுத்தியுள்ளது. அதைப்போன்றே, அழகன்குளம் அகழாய்வும் ரோமானியர்கள் அதிக அளவில் அங்கு வருகை புரிந்துள்ளதையும், மணிகள் தயாரிக்கும் தொழிற்பட்டறை இருந்ததையும் போதிய சான்றுகளுடன் வெளிப்படுத்தியுள்ளது.

இந்த வகையில், அகழாய்வுச் சான்றுகள்தான் ஒரு வரலாற்றை இறுதி முடிவுக்குக் கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை. அதன் அடிப்படையில்தான், புதையுண்ட தமிழகத்தின் அத்தியாயங்கள் எழுதப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் நடைபெற்ற பெரும்பான்மையான அகழாய்வுகளில் பெறப்பட்ட தொல்லியல் தடயங்களைக் கொண்டு தமிழக மக்களின் வாழ்க்கை முறை, பண்பாட்டு நிலை, வளர்ச்சி நிலைகள் எவ்வாறு இருந்துள்ளன என்றும் விளக்கப்பட்டுள்ளது. இந்த வகையில், தமிழக வரலாற்றுக்கு அகழாய்வுச் சான்றுகள் வழங்கும் பல புதிய தகவல்கள் இந்த அத்தியாயங்களின் வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு அவற்றின் கருத்துத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

1. மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கிழக்கே ஓடும் ஆறுகளும், நதிகளும், வங்காள விரிகுடா கடலில் சென்று கலக்கின்றன. இடைப்பட்ட ஆற்றங்கரைகளிலும், கடற்கரை ஓரத்திலும் காணப்படும் பட்டினங்களின் செய்திகள், அகழாய்வுகள் வழியாக வெளிக்கொணரப்பட்டுள்ளன.

2. பழைய கற்கால மக்கள் கொற்றலை ஆற்றுப்படுகைகளில் அதிக அளவில் வசித்து வந்தனர் என்பது ஆய்வுச் செய்தியாகும். ஆய்வின் நிறைவாக, பழைய கற்கால மக்களில் ஒரு குழுவினர் அத்திரம்பாக்கம், பரிகுளம் போன்ற இடங்களில் வாழ்ந்துள்ளனர் என்பது தொல்லியல் அகழாய்வின் வழியாக வெளிப்படுத்தப்பட்ட செய்தியாகும். இதன்மூலம், உலகில் முதன்முதலில் தோன்றிய மனிதர்கள், கொற்றலை ஆற்றுப் பகுதியிலும் இருந்துள்ளனர் என்பது தெள்ளத்தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது. பழைய கற்கால மக்களுக்குத் தேவையான கற்கருவிகளை இங்கு தொழிற்பட்டறை அமைத்து தயார் செய்துள்ளனர் என்பது இவ்வாய்வின் முடிவில் பெறப்பட்ட கூடுதல் சான்றாகும்.

3. புதிய கற்கால மக்களின் வாழ்விடங்கள் பையம்பள்ளி, மோதூர் அகழாய்விலும், மயிலாடும்பாறை அகழாய்விலும் கண்டறியப்பட்டன. இந்த மூன்று இடங்களிலும் புதிய கற்கால மக்கள் தமிழகத்தில் வாழ்ந்துள்ளனர் என்பது அகழாய்வுச் சான்றுகள் வழியாக பெறப்பட்ட புதிய செய்தியாகும். புதையுண்ட தமிழகத்தில், மேலும் பல இடங்களில் களஆய்வு மேற்கொண்டு, புதிய கற்கால மக்களின் வாழ்விடங்களைக் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய கற்கால மக்களின் வாழ்விடங்கள் இல்லை என்ற முன்னர் நிலவிய கருத்துக்கு எதிராக, இவ்வாய்வுகளில் சரியான தொல்லியல் சான்றுகளுடன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


 

ச. செல்வராஜ் – கட்டுரை ஆசிரியரின் குறிப்பு :

ச.செல்வராஜ், தொல்லியல் துறையில், மண்டல உதவி இயக்குநராக (ப.நி.) பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டத்தில் அமைந்துள்ள கே.ஆர்.தோப்பூர் என்ற கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். 1953-ல் பிறந்த இவர், இளங்கலை பட்டமும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் ‘பண்டைய வரலாறும் தொல்லியலும்’ என்ற பாடப்பிரிவில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். 1979 முதல், தமிழ்நாடு அரசுத் தொல்பொருள் ஆய்வுத் துறையில் மாவட்டத் தொல்லியல் அலுவலராகப் பணியில் சேர்ந்து, 2011-ல் பணிஓய்வு பெற்றார். 32 ஆண்டுகள் தொல்லியல், கல்வெட்டு, அகழாய்வு, கட்டடக் கலை, சிற்பக் கலை ஆகியவற்றில் திறம்படப் பணியாற்றியவர். இவரது குறிப்பிடத்தக்க சிறப்புப் பணி, அகழாய்வுதான். இவர் காஞ்சிபுரம், கரூர், கங்கை கொண்ட சோழபுரம், பூம்புகார், படைவீடு, கண்ணனூர் (சமயபுரம்), அழகன்குளம், செம்பியன்கண்டியூர், தலைச்செங்காடு, மாங்குளம், மாங்குடி, பரிக்குளம், மோதூர் போன்ற பல நில அகழாய்வுகளில் பணியாற்றியுள்ளார். ஆழ்கடல் அகழாய்வில் அகழாய்வாளராகவும், மூழ்குநராகவும் பணிபுரிந்து, பல அரிய சங்ககால வாழ்விடப் பகுதிகளை வெளிக் கொணர்ந்துள்ளார். வானகிரிப் பகுதியில் மூழ்கிய கப்பல் ஒன்றை, மூழ்கிக் கண்டுபிடித்து, அவற்றில் இருந்த தொல்பொருட்களைச் சேகரித்துள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும் 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். தருமபுரி அகழ்வைப்பகம், தருமபுரி மாவட்டத் தொல்லியல் கையேடு, மராட்டியர் அகழ்வைப்பகம் போன்ற மாவட்ட வரலாற்று நூல்களும், கோயில்களைப் பற்றிய ‘தகடூர் நாட்டுக் கோயில்கள் தொகுதி – 1’, ‘தகடூர் நாட்டில் சமணமும் பௌத்தமும்’ என்ற நூல்களும், ‘மனோரா கையேடு’ என்ற நூலையும் எழுதியுள்ளார். வரலாறு, தொல்லியல் இவற்றில் மிகுந்த ஈடுபாட்டோடு தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: