ஔவையார் வரலாறு!

ஔவையார் வரலாறு!

ஔவையார் வரலாறு!

அவ்வையார் என்ற பெயரில் தமிழகத்தில் ஒரு பெண் பால் புலவர் இருந்துள்ளனர் என்பது வெளிப்படையான உண்மை. ஆனால் அவ்வையார் என்ற பெயரில் நான்கு புலவர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் இருந்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


முதலாவதாக வாழ்ந்தவர் சங்ககால அவ்வையார். இவர் தொண்டை நாட்டு மன்னர் அதியமானுக்கு நல்ல நண்பர். நீண்ட நாள் வாழ்வைத் தரும் நெல்லிக் கனியை மன்னர் அதியமான் தான் உண்ணாது அவ்வை நீண்ட நாள் வாழ வேண்டும் எனக் கருதி கொடுத்தார் என்பது வரலாற்றுக் கதை. இந்த அவ்வையார் சங்க இலக்கியத்தில் 59 பாடல்களை பாடியுள்ளார்.

பக்திக் கால இறுதியில் விநாயகர் அகவலைப் பாடியவர் இரண்டாவது அவ்வையார். இவர் பாடிய விநாயகர் அகவலைத்தான் விநாயகரை வழிபடுபவர்கள் முதல் நூலாகக் கொள்வர். இது மிகுந்த பக்திச் சுவையுடைய நூல். ஆழ்ந்த பொருளுடையது. அதற்குப் பலர் பல விளக்கங்கள் எழுதியுள்ளனர்.

மூன்றாவது அவ்வையார், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர். சங்ககால அவ்வையார் அரசர்களோடு பழகி வாழ்ந்தவர். இரண்டாம் அவ்வையார் பக்தர்களோடு வாழ்ந்தவர். மூன்றாம் அவ்வையார் குழந்தைகளோடு வாழ்ந்தவர். குழந்தைகளுக்காக நீதி நூல்களை எழுதியவர். சிறுவயதில் மனப்பாடம் செய்து கொண்டு, வயதான பின்பு பொருளைத் தெளிவாக உணரும் நிலையில் அமைந்தவை இவர் பாடல்கள்.

நான்காவது அவ்வையார் தனிப் பாடல்கள் மிகுதியாகப் பாடியவர். முருகன் குழந்தை நிலையில் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று அவ்வைப் பாட்டியிடம் கேட்க, அவன் மரத்தை உலுப்ப, பழங்கள் மண்ணில் விழ, பழத்திலுள்ள மண்ணை நீக்க அவ்வை ஊத, ‘பழம் சுடுகிறதா? பாட்டி, என்ற கதையுடன் தொடர்புடைய அவ்வையார். இவர் மிகச் சிறந்த கருத்துள்ள தனிப் பாடல்களைப் பாடியுள்ளார்.

அவ்வையாரின் நூல்களில் 7 மட்டுமே கிடைத்துள்ளன அவை :

 • ஆத்திசூடி (Atticcuti)
 • கொன்றை வேந்தன் (Konraiventan) 
 • நல்வழி (Nalvazhi) 
 • மூதுரை (Moodurai) 
 • ஞானக்குறள் (Gnanakural) 
 • விநாயகர் அகவல் (Vinayakar Akaval) 
 • நாலு கோடிப் பாடல்கள் (4 Kodi Padalkal)

ஔவையார் ஒரு சமயம் சில புலவர்களைக் காணச் சென்ற போது அப்புலவர்கள் கவலை தோய்ந்த முகத்தோடு காணப்படவே அதன் காரணத்தை வினவினார். “நாளைப் பொழுது விடிவதற்குள் நான்கு கோடிப் பாடல்கள்” இயற்ற வேண்டும் என மன்னவன் ஆணையிட்டுள்ளான். அதனால் தான் கவலையடைந்துள்ளோம்” என்று அவர்கள் கூறினராம். இதைக் கேட்ட ஔவையார், “இவ்வளவுதானா, இதற்காகவா கவலை கொண்டுள்ளீர்கள்” என்று கூறி கோடி என்ற வார்த்தையை அடக்கிய 4 பாடல்களைக் சொன்னார். இதுவே நாலு கோடிப் பாடல்கள் எனப்படும்.

நூல் :

“மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்”

“உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெரும்”

“கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்”

“கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்”

ஔவையார் நன்கு அறிமுகமான ஒரு பெண்பாற் புலவர். ஔவையார் என்னும் பெயர் பூண்ட புலவர்கள் பலர் இருந்தனர். நூலமைதி, தமிழ்நடை, தொடர்புடையோர் முதலானவற்றைக் கருத்தில் கொண்டு வரலாற்று நோக்கில் பார்க்கும் போது அவர்கள் வெவ்வேறு காலத்தில் வாழ்ந்தவர்கள் என்பது புலனாகும்.

காலந்தோறும் ஔவையார் :

 • ஔவையார் சங்ககாலப் புலவர்
 • ஔவையார் அங்கவை சங்கவை மணம் முடித்தவர்
 • ஔவையார் அறநூல் புலவர்
 • ஔவையார் சமயநூல் புலவர்
 • ஔவையார் கதையில் வரும் புலவர்
 • ஔவையார் சிற்றிலக்கியப் புலவர்

என்று பாகுபடுத்திக் காணமுடிகிறது. சங்க கால புலவர் அவ்வை அதியமான் காலத்தில் வாழ்ந்தவர், அக்காலத்தில் வாழ்ந்தவரே கபிலர், கபிலரின் நன்பனான பாரியின் மகள்களான அங்கவை, சங்கவை இருவரின் திருமணத்திற்கு முயற்ச்சி மேற்கொண்டவர்கள் அவ்வையும், கபிலரும் ஆவர்.

சங்ககால ஔவையார் :

சங்ககால ஔவையார் நம் கற்பனையில் உள்ளவர் போல முதுமைக் கோலத்தவர் அல்லர். இளமை ததும்பும் விறலி இவர் பாடிய 59 பாடல்கள் சங்க நூல்களில் இடம் பெற்றுள்ளன. அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு ஆகிய தொகுப்பு நூல்களில் அவை உள்ளன. சங்கப் புலவர் பாடல் தொகை வரிசையில் இவர் 9 ஆம் இடம் பெற்றுள்ளார்.

ஒளவை என்ற சொல்லின் பொருள் :

ஔவை அல்லது அவ்வை என்ற சொல் அவ்வா என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம் என்ற கருத்து பலரிடம் நிலவுகின்றது. ஔவை என்பது மூதாட்டி அல்லது தவப் பெண் என்ற கருத்தை உடையது என்று பழந்தமிழ் அகராதி கூறும். பிற்காலத்தில் ஒளவை என்ற சொல், ஆண்டு மற்றும் அறிவு என்பவற்றில் முதிர்ச்சி அடைந்தவர்களைக் குறிக்கும் சொல்லாக விளங்கிற்றுப் போலும்.

ஔவையார், சங்ககாலப் புலவர் :

காலந்தோறும் வாழ்ந்த ஔவையார் என்னும் புலவர்களில் இந்த ஔவையார் சங்ககாலப் புலவர். எட்டுத்தொகையில் உள்ள புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் இவரது பாடல்கள் 59 உள்ளன. அவற்றில் புறத்திணைப் பாடல்கள் 33. ஏனைய 26 அகத்திணைப் பாடல்கள்.

காலந்தோறும் வாழ்ந்த ஔவையார் என்னும் புலவர்களில் இந்த ஔவையார் சங்ககாலப் புலவர். அதிக பாடல்களைப் பாடிய புலவர் வரிசையில் இவர் 9 ஆம் நிலையில் உள்ளார். ஐங்குறுநூறு தொகுப்பில் 100 பாடல்கள் பாடிய புலவர்களை விட்டு விட்டுப் பார்த்தால், சங்க நூல்களில் அதிக பாடல்கள் பாடிய புலவர்கள் வரிசையில் இவர் கபிலர், பரணர் ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ளார். இவருக்கு அடுத்த நிலையில் உள்ள நல்லந்துவனார் 40 பாடல் பாடியவராகக் காணப்படுகிறார்.

ஔவையின் தோற்றப் பொலிவு :

பலரது உள்ளப் பதிவில் இருக்கும் கிழவிப் பருவம் சங்ககால ஔவைக்கு இல்லை. அதியமான் தன்னை அழைத்ததாக இவரது பாடலில் உள்ள தொடர் இவரது இளமை எழிலைக் காட்டுகிறது. ஔவை ஒரு விறலி. மடப்பத்தன்மை பொருந்திய மடவரல். மை தீட்டிய கண்களும், வாட்டமான நெற்றியும் கொண்டவள். எடுப்பான இடுப்பில் அழகிய அணிகலன்களை அணிந்திருந்தாள்.

ஔவையாரால் பாடப்பட்ட புலவர்கள் :

ஔவையார் அதியமான் போன்றோரைப் பாடியது மட்டுமன்றி, அவரது காலத்தில் அல்லது அவரது காலத்திக்கு முன் வாழ்ந்த இரண்டு புலவர்களைத் தம் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளி வீதியார் என்னும் பெண் புலவர் தன் காதலனைத் தேடிக் கொண்டு சென்றது போல, தலைவி ஒருத்தி தன் தலைவன் இருக்குமிடத்துக்கே செல்ல விரும்பினாளாம்.

அதியமான் அன்று ஒருநாள் எழுவரை வென்று அவர்களது ஏழு முடிகளை மார்பில் அணிந்து கொண்டதை ஔவையால் பாட முடியவில்லையாம். இன்று அதியமான் கோவலூரை அழித்ததை, பரணர் பாடினாராம்.

ஔவையாரால் பாடப்பட்ட அரசர்கள் :

 • சேரமான் மாரி வெண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய மூவரும் நண்பர்களாகக் கூடி மகிழ்ந்திருக்கக் கண்டு, வானத்து மீன்கள் போலவும், மழையின் திவலைகள் போலவும் உயர்ந்தோங்கிப் பொலிக என வாழ்த்தினார்.
 • வாய்மொழி முடியன் களிற்றில் உலா வருவானாம்.
 • அதியர் கோமான் என்று அதியமானையும், அவன் மகன் எழினியையும், ஔவை போற்றுகிறார்.
 • கோசர் பறை முழக்கியும், சங்கு ஊதியும் வரி தண்டுவது போல அலர் தூற்றினார்களாம்.
 • அதியமான் மழவர் பெருமகன்
ஔவையார் வரலாறு!

ஔவையார் வரலாறு!

ஔவையார் காட்டும் அதியமான் – அதியமானை ஔவையார் பலவாறாகப் போற்றிப் புகழ்ந்துள்ளார் :

 • அதியமானின் முன்னோர் தன் நாட்டுக்குக் கரும்பைக் கொண்டுவந்து பயிரிட்டனர்.
 • அதியர் பெருமகன்.
 • வேல்படை வீரர் மழவர் பெருமகன்.
 • அதியமான் கோட்டை அகழியில் முதலைகள் இருந்தன.
 • குதிரை, யானை, தோல் படைகள் பயிற்சி மிக்கவை.
 • தடியடிக்கு அஞ்சாத பாம்பு போன்றவன்.
 • பகைவர்களுக்கு வீர-மரணம் தந்தான்.
 • பிறந்த மகனைக் கண்டபோதும் இவனது சினக்கண் மாறவில்லை.
 • நண்பர்களிடம் குளிக்கும் யானை போல் அடங்குவான். பகைவர்களிடம் மதம் பிடித்த யானை ஆகிவிடுவான்.
 • வீட்டுக் கூரையில் செருகி வைக்கப்பட்டுள்ள தீக்கடைக்கோல் வீட்டை எரிக்காமல் உதவுவது போல் உதவுபவன்.
 • மான் கூட்டத்தில் மறப்புலி போன்றவன்.
 • ஒரு நாளைக்கு எட்டு தேர் செய்யும் தச்சன் ஒரு மாத காலம் செய்த தேர்போல் வலிமை மிக்கவன்.
 • அதியமான் நடுகல் ஆயினான்.

அதியமான் பண்புகள் :

 • குழந்தையின் மழலை போன்ற என் பாடலைப் போற்றியவன்.
 • என்றாலும் அவன் தீ. அதில் குளிர் காயலாம்.
 • அதியமான் பரிசில் தரக் காலம் கடத்தினான்.
 • அதியமான் பரிசில் தரக் காலம் கடத்தினாலும் யானைக் கையில் இருக்கும் சோற்றுக் கவளம் போல அது பயன்படும்.
 • விறலியரைப் போற்றுபவன்.
 • கள் கொஞ்சமாக இருந்தால் ஔவைக்குக் கொடுத்துவிடுவானாம். அதிகமாகக் கிடைத்தால் ஔவை பாடப் பாட உண்டு மகிழ்வானாம்.
 • வெள்ளி வட்டிலில் உணவு படைப்பான்.

ஔவையார், அங்கவை சங்கவை மணம் முடித்தவர் :

ஔவையார் பலரில் ஒருவர் பாரிமகளிர் அங்கவை, சங்கவை என்பவர்களை மலையரசனான தெய்வீகன் என்பவருக்குத் திருமணம் செய்துவைத்தவர். இத்திருமணம் பற்றிக் கூறும் பாடல்கள் சில உள்ளன.

பாரி சங்க கால அரசன். பாரிமகளிர் அவனது மக்கள். “அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவில்” எனத் தொடங்கும் பாரிமகளிரின் பாடல் ஒன்று சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ளது. அவர்களது பெயர் அங்கவை, சங்கவை என்னும் குறிப்பு சங்கப் பாடல்களில் இல்லை. பாரியிடம் வாழ்ந்த புலவர் கபிலர். போரில் பாரி மாண்டான். கபிலர் பாரி மகளிரை அழைத்துச் சென்றார். பார்ப்பாருக்கு மணம் முடித்து வைக்க அழைத்துச் செல்கிறார் விச்சிக்கோ பாரி மகளிரை மணம் செய்து கொள்ள மறுத்து விட்டான். இருங்கோவேள் என்பவனும் மறுத்துவிட்டான் எனவே கபிலர் பாரிமகளிரைப் பார்ப்பானுக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டுத் தான் வடக்கிருந்து உயிர் துறந்தார். இவை சங்கப்பாடல் தரும் செய்திகள்.

ஔவையார் (சமயநூல் புலவர்) :

ஔவையார் என்னும் பெயருடன் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் சமய நோக்கு உள்ளவராகக் காணப்படுகிறார்.

 1. விநாயகர் அகவல்,
 2. ஔவை குறள்

என்னும் இவரது நூல்கள் இதனைப் புலப்படுத்துகின்றன.

தமிழறியும் பெருமான் கதை :

தமிழறியும் பெருமான் கதை என்பது ஔவையாரோடு தொடர்புடைய கதைகளில் ஒன்று. தமிழறியும் பெருமான் என்பது ஒரு பெண்ணின் பெயர். அரசகுமரனும் அரசகுமரியும் காதலர்கள். வில்லன் ஒருவனால் இருவரும் கொல்லப்பட்டனர். அவர்கள் பேய் வடிவம் கொண்டு ஒரு சத்திரத்தில் தங்கி அங்கு வந்து தங்குவோரையெல்லாம் அச்சுறுத்தி முடுக்கிக் கொண்டிருந்தனர். ஒரு நாள் ஔவையார் அந்தச் சத்திரத்தில் தங்கினார். பேய்கள் வழக்கம் போல் அச்சுறுத்தத் தொடங்கின. பெண்பேய் கல்வியில் வல்ல பேய். இந்தப் பேய் “எற்றெற்று” என்று சொல்லிக் கொண்டு, காலால் எற்றி ஔவையாரை அறைய வந்தது. ஔவையார் அந்தப் பேயின் வரலாற்றை முன்பே அறிந்தவர். அந்தப் பேய் வரும் போது நான்கு பாடல்கள் பாடினார். அவற்றுள் ஒன்று

வெண்பா இருகாலில் கல்லாளை, வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதாளை – பெண்பாவி
பெற்றாளே பெற்றாள், பிறர்நகைக்கப் பெற்றாள்,என்(று)
எற்றோ,மற்(று) :எற்றோ,மற்(று) எற்று.

இப்படி நான்கு பாடல்கள். பேய் ஔவையை எற்ற வர, ஔவை பேயை எற்றப் போவதாகப் பாடினார். பேய் நடுங்கி ஔவையின் காலில் விழுந்து வணங்கியது. ஔவை அந்தப் பேயின் எதிர்கால வாழ்க்கையை எடுத்துரைத்தார். அவர் வாக்குப்படி பெண்பேய் தமிழறியும் பெருமான் எனப் போற்றப்படும் பெருமாட்டியாகப் பிறந்தது. அவளது முற்பிறவிக் காதலன் விறகு வெட்டியின் மகனாகப் பிறந்து விறகு வெட்டிக் கொண்டிருந்தவனைக் கண்டு காதல் கொண்டு திருமணம் நடந்தேறியது.

இங்குக் காட்டப்பட்டுள்ள பாடல் 16-17ஆம் நூற்றாண்டினது ஆகலாம். ஔவையார் (சிற்றிலக்கியப் புலவர்) ஔவையார் பாடிய நூல் என்னும் குறிப்போடு இரண்டு நூல்கள் உள்ளன.

அசதிக்கோவை :

அசதிக்கோவை என்னும் நூல் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையாரால் பாடப்பட்டது.

நூலின் பெயர் :

அசதி என்பது அசதி என்னும் ஊரில் வாழ்ந்த பெருமகனைக் குறிக்கும். ஔவைக்குக் கூழ் கொடுத்து அவரது அசதியைப் போக்கினானாம் ஒருவன். ஔவையார் அவனது பெயரைக் கேட்டாராம். அசதியாய் இருக்கிறது என்றானாம். அவன் தந்தை பெயரைக் கேட்டாராம். அசதியாய் இருக்கிறது என்றானாம். ஊர் எது என்றாராம். அசதியாய் இருக்கிறது என்றானாம். உன் குடிசை எங்கே இருக்கிறது என்றாராம். ஐவேல் இருக்கும் குடிசை என்றானாம். இந்தக் கற்பனைக் கதை வழியே வள்ளலின் பெயர் அசதி என்றும், அவனது ஊர் ஐவேல் என்றும், அசதியைப் பாடிய நூல் அசதிக்கோவை என்றும் கூறப்படுகிறது. இந்த நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. சில பாடல்கள் சிதைவாகக் கிடைத்துள்ளன. அகத்துறைப் பாடல்களாக அவை உள்ளன.

எடுத்துக்காட்டு :

அற்றாரைத் தாங்கிய ஐவேல் அசதி அணிவரைமேல்
முற்றா முகிழ்முலை எவ்வாறு சென்றாள்? முத்தமிழ்நூல்
கற்றார்ப் பிரிவும் கல்லாதவர் ஈட்டமும் கைப்பொருள்கள்
அற்றார் இளமையும் போலே கொதிக்கும் அருஞ்சுரமே

ஆய்ப்பாடி ஆயர்தம் ஐவேல் அசதி அணிவரையில்
கோப்பாம் இவள் எழில் கொங்கைக்குத் தோற்றிய காடிரண்டும்
சீப்பாய்ச், சிணுக்கிரியாய், சிமிழாய். சின்ன மோதிரமாய்
காப்பாய், சதுரங்கமாய், பல்லக்கு ஆகிக் கடைப்படவே.

பந்தன் அந்தாதி :

பந்தன் அந்தாதி என்னும் நூல் ஔவையாரால் பாடப்பட்டது என அந்த நூலின் குறிப்பு கூறுகிறது. அந்த நூலின் உள்ளே வரும் பாடல்களை எண்ணிப் பார்க்கும் போது இந்த நூல் எந்த ஔவையாராலும் பாடப்படவில்லை என்பது தெளிவாகும். இந்த நூலில் உள்ள ஒரு பாடல் ஔவையாரையே குறிப்பிடுகிறது. இதனால் ஔவையார் பெயரில் யாரோ ஒரு புலவர் இந்த நூலைச் செய்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.

 • இந்த நூலில் காப்புச் செய்யுள் ஒன்றும், 100 வெண்பாக்களும் உள்ளன.
 • இயல் வணிகன் பந்தனைப்போல் ஒப்பு ஆரே சொல்வீர் என ஔவை இவனைப் புகழ்ந்துள்ளார்.
 • துரை என்னும் ஆங்கிலேயர் காலச் சொல் இந்த நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கதை :

நாகன் காவிரிப்பூம்பட்டினத்து வணிகன். இவன் நாகன் பந்தன் எனவும் போற்றப்படுகிறான். இவனது தந்தை நாகந்தை. பந்தன் நாகலோகம் சென்று வாணிகம் செய்தான். அப்போது அவனுக்கு நாகராசன் பெருஞ் செல்வத்தோடு இரண்டு அரிய பொருள்களையும் அளித்தான். போர்த்திக் கொண்டால் இளமை மாறாதிருக்கும் பொன்னாடை ஒன்று. உண்டவர் நீடூழி காலம் வாழச் செய்யும் நெல்லிக்கனி மற்றொன்று. பொன்னாடையை ஔவைக்குக் கொடுத்ததுடன் நெல்லிக்கனியில் பாதியைத் தான் தின்று விட்டு, மீதிப் பாதியையும் ஔவைக்குக் கொடுத்தான். பெற்று மகிழ்ந்த ஔவை (பந்தனந்தாதி பந்தன் நவமணிமாலை) ஆகிய நூல்களைப் பாடினார்.

எண் குறியீடு காலம் பாடல் பாடல் பெற்றோர்
1 சங்க காலம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டுக்கு முன் அகம், புறம், நற்றிணை, குறுந்தொகை சேர சோழ பாண்டியர், நாஞ்சில் வள்ளுவன் முதலானோர்
2 இடைக்காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்கு முன் மூவேந்தர்
3 சோழர் காலம் 12-ஆம் நூற்றாண்டு ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, அசதிக்கோவை சோழர், அசதி
4 சமயப் புலவர் 14-ஆம் நூற்றாண்டு ஔவை குறள், விநாயகர் அகவல் விநாயகர்
5 பிற்காலம் – 1 16, 17-ஆம் நூற்றாண்டு
6 பிற்காலம் – 2 17, 18-ஆம் நூற்றாண்டு பந்தன் அந்தாதி பந்தன் என்னும் வணிகன்

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

அதியமான் கோட்டை வரலாறு!... அதியமான் கோட்டை வரலாறு! அதியமான் கோட்டை தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. இந்த பழைய கோட்டை தர்மபுரிக்கு 7 கிமீ தொலைவில் உள்ளது. தமிழ்நாட்டில் ...
வள்ளல் பாரி வேள் வரலாறு!... வள்ளல் பாரி வேள் வரலாறு! வேள்பாரி பறம்பு மலையை தலைமை இடமாய் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர். கடைச்சங்கக் காலத்தைச் சார்ந்தவர். வேளிர் குலத்தில் பி...
பாண்டிய மன்னன் வரலாறு !... பாண்டிய மன்னன் வரலாறு ! பாண்டியர்கள் பழந்தமிழ் நாட்டை ஆண்ட வேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு வேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுர...
சேர மன்னர்களின் வரலாறு!... சேர மன்னர்களின் வரலாறு! சங்ககாலச் சேரர் ஆட்சி - சேர மன்னர்களின் வரலாறு : தமிழ்நாடு சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப்பட்டு வந்தது....
Tags: 
%d bloggers like this: