ஆதிச்சநல்லூரில் புதைந்து கிடக்கும் தமிழர் வரலாறு!

ஆதிச்சநல்லூரில் புதைந்து கிடக்கும் தமிழர் வரலாறு!

ஆதிச்சநல்லூரில் புதைந்து கிடக்கும் தமிழர் வரலாறு!

”ஆதிச்சநல்லுார், மறைந்து கிடக்கும் தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம்,” என, மானிடவியல் மற்றும் உயிர் படிவயியல் துறை அறிஞர், ப.ராகவன் கூறினார்.

திருநெல்வேலியில் இருந்து, 24 கி.மீ., தொலைவில், தாமிரபரணி ஆற்றின் வலது கரையில், துாத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது, ஆதிச்சநல்லுார் இடுகாடு. அங்கு, 1904ல், அலெக்சாண்டர் ரியா என்பவராலும், 2004ல், இந்திய தொல்லியல் துறையின் சார்பில், சத்தியமூர்த்தி என்பவராலும், இரண்டு முறை அகழாய்வுகள் செய்யப்பட்டு உள்ளன.

180 தாழிகள் : அலெக்சாண்டர் ரியாவின் ஆய்வு முடிவுகளும், தொல்பொருட்களும், சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 2004ல், ஆதிச்சநல்லுாரில், 16 சதுர மீட்டர் பரப்பளவில் செய்யப்பட்ட அகழாய்வில், 180 தாழிகள் கிடைத்தன. அவற்றில், இறந்த உடல்களின் முழு எலும்பு சட்டகங்களும், சில பாகங்களின் எலும்புகளும் வைக்கப்பட்டிருந்தன. அந்த தாழிகளில் இருந்த எலும்புக்கூடுகள், 2,500 ஆண்டுகளுக்கு முன், இறந்த தமிழர்களுடையதாக இருக்கலாம் என கருதப்பட்டது. இந்நிலையில், எலும்புகளை பல்வேறு அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்திய, மானிடவியல் அறிஞர் ராகவனின் முதல் கட்ட முடிவுகள், வேறு மாதிரியாக உள்ளன.

 ப.ராகவன்

ப.ராகவன்

அவர் கூறியதாவது: கடந்த, 2,500 ஆண்டுகளுக்கு முன், தமிழர்கள் கடல் வணிகத்தில் மிகச் சிறந்து விளங்கினர் என்பதை, ஆதிச்சநல்லுாரில் கிடைத்த எலும்புகள் தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றன. ஆதிச்சநல்லுாரின் நிலப்பரப்பு மிகப்பெரியது. அதில், அகழாய்வு செய்யப்பட்ட இடம், வெறும், 5 சதவீதத்திற்கும் குறைவு தான். தாமிரபரணி ஆற்றின் கரையில், பல நாடுகளைச் சேர்ந்த வணிகர்கள், மாலுமிகள், பயணிகள் இருந்துள்ளனர். அவர்களுக்காகவும், அவர்களுடன் திருமண உறவு வைத்த தமிழர்களுக்காகவும், தனி இடுகாடு இருந்துள்ளது. தொல்லியல் துறை அகழாய்வு செய்த இடம், வெளிநாட்டவர்களுக்கான இடுகாட்டுப் பகுதி என்பதை, ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அங்கு கிடைத்த மண்டை ஓடுகள் மற்றும் பற்களின் அமைப்பு, ‘கொக்கசாய்டு’ என்ற வெள்ளை நிறமுடைய ஐரோப்பியர் மற்றும் மத்திய ஆசியர்களுடையது. ‘நீக்ராய்டு’ என்ற கறுப்பு நிறமுடைய ஆப்ரிக்கர்; ‘மங்கோலாய்டு’ என்ற, மஞ்சள் நிறமுடைய சீனா, ஜப்பான், வியட்நாம், கம்போடியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தோர்; ‘ஆஸ்ட்ராலாய்டு’ எனும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்களுடையதாகவும் உள்ளன. மிகக் குறைந்த அளவில், கலப்பினத்தவர் உள்ளனர்.

ஊட்டச்சத்து குறைபாடு : கொக்கசாய்டு, 35 சதவீதம்; நீக்ராய்டு, 15; மங்கோலாய்டு, 30; ஆஸ்ட்ராலாய்டு, 6; கலப்பினத்தவர், 2 சதவீதம் பேரின் மண்டை ஓடுகள் கிடைத்தன. அவர்களில், பெண்களை விட ஆண்களே அதிகம். ஒரே தாழியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, ஆண், பெண், குழந்தையின் உடல்களும் புதைக்கப்பட்டுள்ளன. சில கர்ப்பிணிகளும், குறைமாத குழந்தைகளும் புதைக்கப்பட்டிருக்கின்றனர். அவற்றில், கருவாக 2 சதவீதம்; குழந்தைகளாக, 3; வளரிளம் பருவத்தினர், 7; வயது வந்தோர், 20; முதியோர், 37 சதவீதம் உள்ளனர். ஆக, சிறு வயது மரணம் குறைவாகவே இருந்துள்ளது. இறந்தவர்களில், 40 சதவீதம் பேர் நோயால் இறந்துள்ளது தெரிகிறது. அதிலும், தொற்றுநோயால், 50 சதவீதம், மரபியல் நோய்களால், 30; ஊட்டச்சத்து பற்றாக்குறையால், 20 சதவீதம் பேர் இறந்துள்ளனர். அந்த இடங்களில், வீரர்களின் ஈட்டி உள்ளிட்ட ஆயுதங்களும், வெளிநாட்டில் மட்டுமே வாழக்கூடிய உயிரினங்களின் எலும்புகளும், தாவர பாகங்களும் புதை படிவங்களாக கிடைத்துள்ளன.

ஆதிச்சநல்லுார், தாமிரபரணியின் நன்னீர் பகுதி. அந்த நதி கடலில் கலக்கும் புன்னைக்காயல் பகுதியில், 3 கி.மீ., வரை கடல் உள்வாங்கியதை, கடலுக்கடியில் கிடைக்கும் புதை படிவங்கள் நிரூபிக்கின்றன. பாண்டியர்களின் கொற்கை, மிகச் சிறந்த துறைமுகமாக இருந்திருக்கிறது.

வரலாற்று பொக்கிஷம் : தாமிரபரணி கரை, புன்னைக்காயல், ஆதிச்சநல்லுார் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு செய்து, ஒப்பீட்டு முடிவுகளை ஆராய்ந்தால், தமிழர்களின் மிக முக்கியமான அயல்நாட்டு வணிக, அரசியல் தொடர்புகள், சமூக அமைப்பு உள்ளிட்டவற்றுக்கான விளக்கம் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், தமிழகத்தில் கிடைத்த பட்டு, வாசனை திரவியங்கள், பவளம், முத்து, மூலிகைகள் உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றுள்ளனர். அவர்களும், பல பொருட்களை விற்றுள்ளனர். அந்த வகையில், ஆதிச்சநல்லுார் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டிய இடம். அது, அகழாய்வு மற்றும் ஒப்பீட்டு ஆய்வுகள் செய்யப்பட வேண்டிய, தமிழர்களின் தனித்துவமான வரலாற்று பொக்கிஷம். இவ்வாறு அவர் கூறினார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: