தொன்மையான கல்வெட்டுகள் அழிவிலிருந்து காக்கப்படுமா?

தொன்மையான கல்வெட்டுகள் அழிவிலிருந்து காக்கப்படுமா?

தொன்மையான கல்வெட்டுகள் அழிவிலிருந்து காக்கப்படுமா?

செஞ்சி வட்டத்தில் உள்ள தொன்மையான கல்வெட்டுகளை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ் மொழியின் தொன்மையை விளக்கும் பிராமி கல்வெட்டுகள் விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் வட்டத்தில் ஒன்றும், செஞ்சி வட்டத்தில் நான்கும் உள்ளன. தமிழகத்திலேயே ஒரே வட்டத்தில் 4 இடங்களில் பிராமி கல்வெட்டுகள் இருப்பது செஞ்சியில் மட்டுமே. இங்குள்ள சிறுகடம்பூர், நெகனூர்பட்டி, தொண்டூர், பரையம்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள மலைகளில் இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் காலத்தால் மிகவும் முற்பட்டதாக விளங்குவது தொண்டூர் பஞ்சனார்படி மலையில் உள்ள கல்வெட்டாகும்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


இந்தக் கல்வெட்டு, சமணத் துறவிகள் மலையில் உறங்க கல்லிலேயே படுக்கை போன்ற வடிவமைப்பை செய்து தரும்படி இளங்காயிபன் என்பவர் அறிவுறுத்தியதை ஏற்று, அகலூரில் உள்ள அறம் மோசி என்பவர் செய்து கொடுத்த தகவலை கூறுகிறது.

இந்தக் கல்வெட்டு கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என தொல்லியலாளர்கள் கூறுகின்றனர். சுமார் 2,300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கல்வெட்டு தற்போது அழியும் நிலையில் உள்ளது. மலையில் நடந்து செல்லும் பாதையில் உள்ள இந்த கல்வெட்டை பாதுகாக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.

செஞ்சி வட்டத்தில் சுமார் 18 கிராமங்களைச் சேர்ந்த மலைகளிலும் சமண முனிவர்கள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறப் பள்ளிகளை நடத்தி வந்துள்ளனர். இங்குள்ள தமிழ் பிராமி கல்வெட்டுகள் அனைத்தும் சமணத் துறவிகள் குறித்தவையாக உள்ளன.

சிறுகடம்பூரில் உள்ள திருநாதர் குன்றில் 24 சமண தீர்த்தங்கரர் திருமேனிகள் புடைப்புச் சிற்பங்களாக மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன. 57 நாள்கள் உண்ணா நோன்பிருந்து, வடக்கிருத்தல் எனும் தன் உயிரை உடலை விட்டு நீக்கும் செயலை சந்திரநந்தி என்ற தலைமை சமணத் துறவி இங்கே செய்தது குறித்த கல்வெட்டு உள்ளது. தமிழகத்திலேயே முதன் முதலாக “ஐ’ என்ற தமிழ் எழுத்து உபயோகப்படுத்தப்பட்டது இந்த மலையில்தான் என்பது பெருமைக்குரியது.

பரையம்பட்டு கல்வெட்டு வடக்கிருத்தல் குறித்தும், நெகனூர்பட்டி கல்வெட்டானது சமணத் துறவிகளுக்கு கல்லில் படுக்கை வெட்டிக் கொடுத்த ஒரு பெண்மணி குறித்த செய்தியையும் குறிப்பிடுகின்றன. இவை சுமார் 1,600 ஆண்டுகள் பழைமையானவை. அன்னதானம், கல்வி தானம், மருத்துவ தானம், புகலிட தானம் உள்ளிட்டவற்றை சமணத் துறவிகள் இப்பகுதி மக்களுக்கு வழங்கி வந்துள்ளனர். கல்விக் கூடங்களாக, சமூக நிறுவனங்களாக இந்த மலைகளைப் பயன்படுத்தி உள்ளனர்.

ஆனால், இந்த மலைகள் தற்போது சமூக விரோதிகளின் கூடங்களாக மாறியுள்ளன. கல்வெட்டின் அருகிலுள்ள பகுதிகளை சிலர் சுத்தியல், உளி மூலம் சேதப்படுத்தி வருகின்றனர். எனவே, தமிழ் வளர்ச்சித் துறை, தொல்லியல் துறையினர் இந்த கல்வெட்டுகளை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும் என புதுச்சேரியை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொன்மை வாய்ந்த இந்தக் கல்வெட்டுகளைப் பாதுகாப்பது குறித்து செஞ்சி வட்ட பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வெளியூர்களில் இருந்து கல்வெட்டுகளைப் பார்வையிட வருவோர் சிரமமின்றி செல்ல வழிகாட்டி பலகைகள் அமைக்க வேண்டும். கல்வெட்டுகளில் உள்ள செய்திகளை அறிவிப்பு பலகைகள் மூலம் தெரிவிக்க வேண்டும். தமிழர் நாகரிகத்தின் சின்னங்களாக விளங்கும் சமணக் கல்வெட்டுகளைப் பாதுகாப்பதும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதும் நமது கடமையாகும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: