சிவகங்கை அருகே 300 ஆண்டுகள் பழமையான நீர் மேலாண்மை கல்வெட்டு!

சிவகங்கை அருகே 300 ஆண்டுகள் பழமையான நீர் மேலாண்மை கல்வெட்டு!

சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட மதுரை அருகே கீழடியில் கடந்த 5 ஆண்டுகளாகத் தொல்லியல்துறை ஆய்வு நடத்தியதில் 2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் நாகரிக வாழ்க்கையை எடுத்துக்காட்டும் ஆயிரக்கணக்கான பொருள்கள் எடுக்கப்பட்டன.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்திலும் 7 முறை அகழாய்வு செய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படாமல் உள்ளது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் வைகை நதிக்கரையின் சுற்றுப்பகுதியில் பல்வேறு பழைமையான பொருள்கள் கிடைக்கலாம் எனத் தொல்லியல் ஆர்வலர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் தெல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது கோவானூரில் அருகே 300 ஆண்டு பழைமையான கலுங்குமடை கல்வெட்டு ஒன்றை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இப்பகுதியில் பாண்டியர் காலத்து கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர். தற்போது 300 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கலுங்குமடையில் 5 கல்வெட்டுகளைக் காண முடிகிறது. இதில் மூன்று கல்வெட்டுகள்தான் நல்ல நிலையில் உள்ளன. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால காணியாட்சி மற்றும் வரி செலுத்துவது தொடர்பான செய்தியை உள்ளடக்கிய கல்வெட்டு தலைகீழாகக் காணப்படுகிறது. இது கோவானூரில் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பெற்று இடிந்துபோன சிவன் கோயிலில் இருந்து கற்கள் எடுத்து வந்து இந்தக் கலுங்கு மடை கட்டப்பெற்றிருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. “வீரபத்திர பிள்ளை வள மணியத்தில் காத்து தனக்கு காணியாட்சியின் படியால் இந்தக் கலுங்கு கட்டி வச்சது” என எழுதப்பெற்றுள்ளது.

இதன்படி முத்தப்பன் சேருவைக்காரன் இப்பகுதியில் சேதுபதி காலத்தைய அரசப்பிரதிநிதியாக இருந்திருக்கலாம். வீரபத்திர பிள்ளை மணியத்தில் இம்மடை கட்டப் பெற்றிருக்கலாம். மேலும், மற்றொரு கல்வெட்டில் குடும்பன் மகன் குடும்பன். குடும்பன் மகன் குடும்பன் என அடுக்கி வருகிறது. ஆகவே குடும்பர் இன மக்கள் இம்மடையில் நீர் திறத்தல், அடைத்தல் போன்ற பணிகளைச் செய்து தொடர்ந்து பராமரித்து வர நியமிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது.

மிகப்பழைமையான கோவானூரில் இக்கலுங்கு மடை நீர் வடியும் பகுதியிலிருந்து தொடர்ந்து 500, 600 மீட்டர் பரப்பளவில் முதுமக்கள் தாழி புதைந்து இருந்தமைக்கான எச்சங்கள் தென்படுகின்றன. கோவானூரில் உள்ள ஐயன் கோயில் கற்களும், சிவன் கோயிலிலிருந்து எடுத்து வரப்பெற்றிருக்கலாம். அதில் உள்ள கல்வெட்டு வரைபடம் பழைமையான சிவன் கோயில் வடிவமைப்பைச் சுட்டுவதாக இருக்கலாம். மேலும் சமையன் கோவிலை அடுத்து காணப்பெறும் சிதைவுடைய ஆவுடை மற்றும் நந்தி பாண்டியர்; கால சிவன் கோயிலில் வழிபாட்டில் இருந்திருக்கலாம். ஆக இப்பகுதி வளமுடைய பதியாக விளங்கியுள்ளது என்று அறிய முடிகிறது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: