இலந்தைக்கரையில் 2500 ஆண்டுகள் பழைமையான மகதநாட்டு நாணயம் கண்டுபிடிப்பு!

இலந்தைக்கரையில் 2500 ஆண்டுகள் பழைமையான மகதநாட்டு நாணயம் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த கீழடியில், கடந்த 5 ஆண்டுகளாகத் தொல்லியல்துறை ஆய்வு நடத்தியதில் 2,600 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன.

மதுரையில் அமைந்துள்ள உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் க‌ண்காட்சிக்காக அப்பொருள்களை வைத்துள்ளனர். இதில் சுடுமண் பானைகள், எலும்பு முனைகள், உலோக ஆயுதம், தங்கத்தில் செய்யப்பட்ட அணிகலன்கள், விளையாட்டுப் பொருள்கள், தாயக்கட்டைகள், தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஓடுகள் எனப் பல பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலை அடுத்துள்ள இலந்தைக்கரையில் தொடர்ச்சியாக பல தொல்லியல் பொருள்கள் கிடைத்து வருகின்றன. தற்போது பழைமையான வெள்ளி நாணயம் ஒன்றும் கிடைத்துள்ளது. இது 2,500 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இலந்தைக்கரையில் காசுகள், ஓடுகள் என பல தொல்லியல் பொருள்கள் கிடைக்கின்றன. ராஜராஜ சோழன் காலத்து நாணயமும், சுந்தரபாண்டியன் காலத்து தங்க நாணயமும் ஏற்கெனவே கிடைத்துள்ளன. அவை 1,000 ஆண்டுகள் பழைமையானவை. ஆனால், தற்போது கிடைத்துள்ள வெள்ளி நாணயம் 2300 – 2500 ஆண்டுகள் பழைமையானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோன்ற நாணயம் கொடுமணலில் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. தற்போது இலந்தைக்கரையில் கிடைத்துள்ளது. ஏற்கெனவே கிடைத்த தங்க நாணயத்தை விட இந்த வெள்ளிக் காசு மிக முக்கியமானது. இது மகத பேரரசு காலத்து நாணயமாக இருக்கலாம்.

மகத பேரரசு தமிழகத்துக்கு வரவில்லை என்று இதுவரை நாம் வாசிக்கிற வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால், இப்போது மகத நாணயம் கிடைத்திருக்கிறது. இதை சிவகங்கை மாவட்ட தொல்லியல் ஆய்வாளர் பாஸ்கரன் உறுதி செய்துள்ளார்.

சூரியன், காளைமாடு, மலைத்தொடர், பவுத்த குறி போன்ற அடையாளங்கள் நாணயத்தில் உள்ளன. வெள்ளி நாணயத்தில் உள்ள பூ வடிவமும் இலந்தைக்கரையில் ஏற்கெனவே கிடைத்த மகாவீரர் சிலையில் உள்ள மார்புப் பகுதியும் ஒத்துப்போகிறது. எனவே, இதன் முக்கியத்துவம் கருதி நாணயத்தை தமிழக தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க போவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: