2000 ஆண்டுகளுக்கு முன் இத்தாலி – தமிழக உறவு !

2000 ஆண்டுகளுக்கு முன் இத்தாலி - தமிழக உறவு !

2000 ஆண்டுகளுக்கு முன் இத்தாலி – தமிழக உறவு !

(இந்திய அரசியலில் திருமதி சோனியா காந்தி குதித்தவுடன் இத்தாலி நாடு பற்றி புதிய ஆர்வம் பிறந்துள்ளது. ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இத்தாலியர்கள் தமிழ்நாட்டில் வசித்தது பற்றி தமிழ் இலக்கியத்தில் ஏராளமான குறிப்புகள் உள்ளன!)

இத்தாலி நாடு ஐரோப்பாவில் உள்ளது. அதன் தலைநகரம் ரோம். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரோமாபுரி வணிகர்கள் தமிழ்நாட்டிற்குக் கப்பல்களில் வந்தனர். அவர்கள் ஏராளமான தங்கத்தைக் கொண்டு வந்து பாண்டிய நாட்டு முத்துக்களையும் சேர நாட்டு மிளகையும் ஏற்றிச் சென்றனர். சங்க இலக்கியத்தில் ரோமானியர்களையும் கிரேக்கர்களையும் “யவனர்” என்ற சொல்லால் புலவர்கள் குறித்தனர். சங்கத் தமிழ் நூல்களில் ‘யவனர்’ பற்றி ஆறு இடங்களிலும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி பெருங்கதை ஆகிய நூல்களில் ஏராளமான இடங்களிலும் குறிப்புகள் வருகின்றன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


”யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” – அகநானூறு 149

எருக்காட்டூர் தாயங்க்கண்ணனார் பாடிய இப்பாடலில் ரோமானிய கப்பல்கள் தங்கம் கொண்டு வந்து மிளகு (கறி) ஏற்றிச் சென்ற அரிய செய்தி உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரோமானிய தங்க, வெள்ளி நாணயங்கள் கிடைத்து வருகின்றன.

யவனர் கொண்டு வந்த மதுவை (wine) தங்கக் கிண்ணங்களில் பாண்டிய மன்னன் நன்மாறன் குடித்த காட்சியை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் அழகாக வருணிக்கிறார் :

”யவனர் நன்கலம் தந்த தண்மகழ் தேறல்
பொன்செய் புனை கலத்து ஏந்தி நாளும்
ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து” -புறநானூறு 56

தமிழகத்தில் அழகன் குளம், அரிக்கமேடு, காவேரிப்பூம்பட்டினம் ஆகிய இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சியில் நிறைய ரோமானிய மது ஜாடிகள் கிடைத்தது மேற்கண்ட பாடல் செய்தியை உறுதிப்படுத்துகிறது.

ஸ்டிராபோ, பிளினி, தாலமி ஆகிய மேலை நாட்டு எழுத்தாளர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய நூல்களில் தமிழக – இத்தாலிய உறவு பற்றியும் ரோம் நகரிலிருந்த ஆறு லட்சம் பவுன் தங்கம் தமிழ்நாட்டிற்குச் சென்றதால் ரோமாபுரியில் ஏற்பட்ட கொந்தளிப்பு பற்றியும் கூறியிருக்கிறார்கள். பெரிப்புளுசு என்னும் யாத்திரை நூலிலும் இது பற்றி விவரங்கள் உள்ளன.

நெடுநல்வாடையில் (வரி 101-102) ரோமானிய பாவை விளக்குகள் பற்றியும் முல்லைப்பாட்டு (வரி 59-63) என்னும் நூலில் யவனர்கள் மெய்க்காவலர்களாக (Bodyguard) பணியாற்றியது குறித்தும் சுவையான செய்திகள் உள்ளன.

பதிற்றுப்பத்து :

பதிற்றுப்பத்து (பதிகம்2) என்னும் நூலில் யவனர்களை சேர மன்னன் இம்யவரம்பன் நெடுஞ்சேரலாதன் தண்டித்த ஒரு செய்தியும் உள்ளது. யவனர்களை அவன் பிடித்து வந்து தலையை மொட்டையடித்து எண்ணையை ஊற்றி அவமானப்படுத்திய தகவலை குமட்டூர் கண்ணனார் என்ற புலவர் தருகிறார். கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றுப்படையில், பார்ப்பனர்கள் வேள்வி செய்து நிறுவிய வேள்வித்தூணில் உச்சியில் யவனர்கள் விளக்கு ஏற்றி வைத்த செய்தி கிடைக்கிறது.

”கேள்வி அந்தணர் அருங்கடன் கிறுத்த
வேள்வித்தூணத்து அசைஇ யவனர்
ஒதிம விளக்கின் உயர்மிசைக்கொண்ட” -பெரும்பாணாற்றுப்படை 315-317

சங்க காலத்திற்குப் பின் இயற்றப்பட்ட நூல்களில் யவனத் தச்சர்களின் கலை வேலைப்பாடு மிக்க கட்டிடங்கள் அணிகலன்கள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. யவனர் செய்த தானியங்கி ஆயுதங்கள் குறித்து சீவக சிந்தாமணி பல சுவையான செய்திகளைத் தருகின்றது. படையெடுத்து வரும் எதிரிகள் மீது ஈட்டிகளையும் அம்புகளையும் எறிவதற்கு கோட்டை உச்சியில் யவனப் பொறிகள் இருந்ததாம். எதிரிகள் தலையில் கொதிக்கும் உலோகத்தை ஊற்றவும் பலவகை உருவம் படைத்த ஆயுதங்களை ஏவவும் யவனர்கள் எந்திரங்களை அமைத்தனராம்.
(சீவக சிந்தாமணி பாடல்கள் 104,114,537,1146, 1475)

திருத்தக்க தேவர் ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதிய சீவக சிந்தாமணியில் இவ்வளவு விவரங்களைக் காணும்போது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு இத்தாலிய செல்வாக்கு தமிழகத்தில் நிலவியது தெரிகிறது. நாணயங்கள் முதல் அமராவதி சிற்பங்கள் வரை பல இடங்களில் ரோமானிய தாக்கம் புலப்படுகிறது. இதே போல தமிழர்களின் பண்பாடும் ரோம் வரை பரவியதற்கு அந்நாட்டு இலக்கியங்களில் எண்ணற்ற சான்றுகள் உள்ளன.

Tags: ,

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: