மதுரை அருகே 1,900 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

மதுரை அருகே 1,900 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

மதுரை அருகே 1,900 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு!

மதுரை அருகே 1,900 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி, தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய ஓடுகள், நடுகல் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகேயுள்ளது கவசக்கோட்டை. இந்த கிராமத்தில் உள்ள அக்ரஹாரமேடு, பண்ணைமேடு பகுதிகளில் சமீபத்தில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது மண்ணுக்கடியில் புதைந்திருந்த முதுமக்கள் தாழி ஓடுகள், தமிழ்பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஓடுகள், ஆசனகற்கள், நடுகல், சதிகல், பழங்கால அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மண் குடுவைகள், ஜாடி, மண்பாண்ட ஓடுகள், ராஜா, ராணி உருவம் பொறித்த சுடு பொம்மைகள், மீன் வடிவம் பொறித்த பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவை அனைத்தும் கிபி 1 மற்றும் 2ம் நூற்றாண்டு காலகட்டத்தை சேர்ந்தவை என கூறப்படுகிறது. இவற்றில் உள்ள தமிழ் பிராமி எழுத்துக்கள் தொடர்ச்சியின்றி உள்ளதால் படித்து அறிய முடியவில்லை. இப்பகுதியில் தொடர்ந்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து கல்லூரி உதவி வரலாறு பேராசிரியர் முனீஸ்வரன் கூறுகையில், ‘‘பண்டைய காலத்தில் குறுநில பகுதிகளான கவுசீலன் என்ற பகுதியை கவுசீல மன்னனும், தென்னந்தோப்பு பகுதியை முரசொலி மன்னனும் ஆண்டு வந்ததாக கருதப்படுகிறது. இவர்கள் இருவரும் அருகருகே ஆட்சி செய்தபோது, பல்வேறு காரணங்களால் போர் மூண்டது. இதில் முரசொலி மன்னன் தோற்கடிக்கப்பட்டு போரில் கொல்லப்படுகிறார். அதனால் அவரது மனைவி கண்டமரத்தி உடன்கட்டை ஏறி உயிர் விடுகிறார்.

இதற்கான வரலாற்று சான்றுகள் கவசக்கோட்டையில் நடந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் நினைவாக காரைக்கேணி, கவசக்கோட்டை பகுதிகளில் மன்னர்களின் வாரிசுகளால் இன்றும் ‘படுகள திருவிழா’ கொண்டாடப்படுகிறது. மதுரை பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கனகராஜ், லெட்சுமணமூர்த்தி ஆகியோருடன் இணைந்து இந்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறோம். ஆய்வின் மூலம் குறுநில மன்னர்களின் பல வரலாறு கண்டறியப்படும். இப்பகுதியில் தொல்லியல் துறையினர் விரிவான ஆய்வு மேற்கொண்டால் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறையையும், பண்பாடுகளையும் வெளிக் கொணர முடியும்’’ என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: