திருச்சி அருகே 17ம் நூற்றாண்டு பாளையக்காரர்களின் கோட்டை தடயங்கள் கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே 17ம் நூற்றாண்டு பாளையக்காரர்களின் கோட்டை தடயங்கள் கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே 17ம் நூற்றாண்டு பாளையக்காரர்களின் கோட்டை தடயங்கள் கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே 17ம் நூற்றாண்டு பாளையக்காரர்களின் கோட்டை தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த கல்வெட்டு மற்றும் தொல்லியல்துறை ஆய்வாளர் பாபு துறையூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது 17ம் நூற்றாண்டை சேர்ந்த பாளையக்காரர்களின் கோட்டைகள் இருந்த தடயங்களை கண்டறிந்துள்ளார். இது குறித்து ஆய்வாளர் பாபு கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கிபி 17ம் நூற்றாண்டில் பாளையக்காரர்களின் ஆட்சி பரவலாக காணப்பட்டது. பாளையக்காரர்கள் மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சை பகுதிகளில் பாளையங்கள் எனப்படும் நிலப்பரப்பினை ஆட்சி புரிந்த குறுநில மன்னர்களாவர். பாளையக்காரர் ஆட்சி முறை பாளையப்பட்டி எனப்பட்டது என வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.

பாளையக்காரர்கள் வரலாற்றை ஆராய்ந்தோமானால் தமிழகத்தில் நாயக்கராட்சி, தஞ்சை மராட்டியர் ஆட்சி, ஆற்காட்டு நவாபின் ஆட்சி காலத்தில் இங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பம் மற்றும் போர்கள் நடைபெற்ற சூழலில் பாளையக்காரர்கள் மதுரை மண்டலத்தில் குறுநில மன்னர்களாக உருவாயினர் எனக்கூறலாம். இவர்கள் தமக்கென தனிஆட்சி, நீதிமுறைகளை உருவாக்கியிருந்தனர். இவர்கள் பேரரசுகளுக்கு வரி செலுத்தியும், படை உதவிகளும் செய்து வந்தனர். நீதிவழுவா ஆட்சி செய்துள்ளனர். கிபி 1801ம் ஆண்டு சென்னை ஆங்கிலேயே கவர்னர் எட்வர்ட் கிளைவ் ஆணையின்படி தமிழகத்தில் பாளையக்காரர் முறை ஒழிக்கப்பட்டு ஜமீன்தார்கள் ஆட்சி உருவானது.

அந்த வகையில் திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் உப்பிலியபுரத்தில் ஊரின் மேற்கு பகுதியில் ஆற்றின் கரையோரமாக சிதைந்த நிலையில் கோட்டையின் இடிபாடுகளும் மற்றும் நீண்ட மதிற்சுவர் போன்றவையும் காணப்படுகிறது. தற்போது இந்த இடம் இப்பகுதி மக்களால் கோட்டைமேடு என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் களஆய்வு மேற்கொண்டபோது பெரிய அளவிலான செங்கற்கல், மண்பாண்ட ஓடுகள் மற்றும் சந்தனம் அரைக்கும் வட்டக்கல் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன. மேலும் இங்கிருந்த முட்புதர்களை அகற்றியபோது நீண்ட அகலமான மதிற்சுவர் ஒன்று காணப்பட்டது. அது செங்கல் மற்றும் காரையால் கட்டப்பட்டு மண்ணில் புதைந்த நிலையில் உள்ளது.

இது இங்கு ஆட்சி புரிந்த பாளையக்காரர்களர்ல் கட்டப்பட்ட கோட்டையாகும். அக்காலத்தில் நடைபெற்ற போரினாலோ அல்லது இயற்கை சீற்றத்தினாலோ இது
அழிக்கப்பட்டிருக்கலாம். மேலும் இவ்விடத்தின் சற்று தொலைவில் கோட்டப்பாளையம் என்ற கிராமம் காணப்படுகிறது. இது இப்பகுதியில் அக்காலத்தில் கோட்டை இருந்துள்ளது என்பதை உணர்த்தும் சான்றாகும். மேலும் இங்கு அக்கால மக்களின் வாழ்விடங்களும் இருந்துள்ளதை இங்கு கிடைத்துள்ள தொன்மை தடயங்கள் உறுதி செய்கின்றன. வரலாற்று ஆய்வாளர்கள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு தமிழரின் வரலாற்றினை வெளிக்கொண்டு வரவேண்டும். இவ்வாறு தஞ்சை தமிழ்பல்கலைக்கழக தொல்லியல் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: