கோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

கோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடி எனும் கிராமத்தில் கி.பி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. புலியுடன் சண்டையிட்டு இறந்து போன வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் என தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

சிஞ்சுவாடி கிராமத்துக்கு மேற்கே அமைந்துள்ள தென்னந்தோப்பில் இந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிஞ்சுவாடி கிராமத்துக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த புலியை கொன்று கிராம மக்களின் அச்சத்தைப் போக்கி வீர மரணமடைந்த வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் இது.

இந்த நடுகல் 17 – ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நடுகல்லில் கல்வெட்டு எதுவும் இல்லை. அதனால், வீரனைப் பற்றிய தகவல்கள் எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை. அணிகலன்கள் அணிந்த வீரன் புலியைக் குத்திக்கொள்ளும் காட்சி தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது.

தலையின் வலது புறம் கொண்டை அமைத்த வீரன் நெற்றிப் பட்டத்துடன் காணப்படுகிறான். எடுப்பான மீசையுடன் காதுகளில் தோடு அணிந்த நிலையில் கழுத்தில் சரப்பளி, கண்டிகை, ஆரம் ஆகியவற்றையும் அணிந்திருக்கிறான். சிற்ப வடிவமைப்பு, வீரன் ஊர்த் தலைவனாகவோ அல்லது ஊரில் முக்கியவனாகவோ இருக்கலாம் என்ற யூகத்தைக் கொடுக்கிறது. எனினும் கால்களில் வழக்கமாக காட்டப்படும் வீரக்கழல் இந்தச் சிற்பத்தில் இல்லை. வீரன் பயன்படுத்திய ஈட்டியானது மரத்தால் செய்யப்பட்டு ஈட்டியின் நுனி இரும்பாலான வேலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த நடுகல்லானது 67 செ.மீ உயரமும் 46 செ.மீ அகலமும் 113 செ.மீ சுற்றளவும் கொண்டதாக உள்ளது. நடுகல் வீரனுக்கு அருகிலேயே இடதுபுற கொண்டையுடன் கும்பிட்ட நிலையில் ஒரு சிற்பம் இருக்கிறது. சிற்ப வடிவியலில் அனுபவமில்லாத சிற்பி இந்தக் கும்பிட்ட சிலையை வடித்திருக்கிறான். நடுகல் வீரனின் வழி வந்தவர்கள் பிற்காலத்தில் இந்த சிலையை வடித்து நடுகல் சிற்பத்திற்கு அருகிலேயே அமைத்திருக்கலாம்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: