நெல்லையில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வாமனக்கல் கண்டுபிடிப்பு!

நெல்லையில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வாமனக்கல் கண்டுபிடிப்பு!

பழங்காலங்களில் கோயில்களுக்கு நிலங்களைத் தானமாக வழங்கும் பழக்கம் இருந்துள்ளது. பெருமாள் கோயில்களுக்கு, தானமாகக் கொடுக்கப்படும் நிலங்களின் எல்லையைக் குறிக்க வாமனம் உருவம் பொறிக்கப்பட்ட கல் நடப்படுவது வழக்கம். வைணவர்களின் முழுமுதற்கடவுளான விஷ்ணுவின் ஐந்தாம் அவதாரம் மூலம் மூன்றடி மண் கேட்டு மகாபலி சக்கரவர்த்தியின் அகந்தையை அழித்தார்.

அதனால் வைணவக் கோயில்களுக்குத் தானமாகக் கொடுக்கப்படும் நிலத்தின் எல்லையைக் குறிக்க நடப்படும் கற்களில் வாமனன் உருவம் பொறிக்கப்படுவது வழக்கமாக இருந்துள்ளது. நிலத்தை அபகரிப்பவர்கள் வாமனனால் தண்டிக்கப்படுவர் என்பதைக் குறிக்க இவ்வாறு வாமனக்கல் நடப்பட்டுள்ளதாக சமய அறிஞர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், நெல்லை அருகே உள்ள காட்டாம்புளி என்னும் கிராமத்தில் வாமனக்கல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அங்கு சுமார் 10 அடி ஆழத்துக்குத் தோண்டியபோது கல் ஒன்று கிடந்துள்ளது. அப்போது அதில் இருப்பது வாமனன் உருவம் என்பது தெரிய வந்திருக்கிறது.

அக்கல் மூன்றரை அடி உயரத்துக்கு இருக்கிறது. அதில் வரையப்பட்டுள்ள ஓவியத்தில் உள்ளவரின் இடது கையில், ஒரு கலசம் இருக்கிறது. வலது கையில் வாமனக் குடையும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில், தாமிரபரணி ஆற்றில் ஜடாயு தீர்த்தம் அமைந்திருக்கிறது. அதனால் வைணவக் கோயிலின் எல்லையாக இது இருந்திருக்கலாம். அதனால் தொல்லியல்துறை அதிகாரிகள் இக்கல் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: