தேன்கனி கோட்டையில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு!

தேன்கனி கோட்டையில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டுகண்டுபிடிப்பு!

தேன்கனி கோட்டையில் 13ம் நூற்றாண்டு கல்வெட்டுகண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனி கோட்டையில், பழங்கால வரலாற்று சான்றுகளை விவரிக்கும், 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, நடுகல், கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


தமிழகத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனி கோட்டையில் இருந்து, 15 கி.மீ., துாரத்தில் உள்ளது, சாலிவரம் கிராமம். சமீபத்தில் இங்கு, கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று தேடல் குழுவினர், கள ஆய்வு நடத்தினர். அப்போது, 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, சோழர் கால கல்வெட்டு மற்றும் நடுகல் தொகுப்பை கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக, வரலாற்று ஆய்வாளர் கூறியதாவது :

சாலிவரம் கிராம கள ஆய்வில், 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, சோழர் கால, தமிழ் பிராமி கல்வெட்டு, பிரம்மாண்டமான மூன்று நடுகற்களை கண்டுபிடித்தோம். மூன்று நடுகற்களும், ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு குப்பை போல கிடந்தன. உடைக்கப்பட்டுள்ள கல்வெட்டில், ‘சுப…’ என துவங்கி, ‘புஜபு…’ என, முடியும் வகையில், ஒன்பது வரியில், தமிழ் பிராமி எழுத்துக்கள் உள்ளன. ஒன்பதாவது வரி சிதைந்துள்ளது. முதல் மூன்று வரிகள், குறுநில மன்னர்களாக விளங்கிய ஹோய்சாளர்களின் மெய்கீர்த்தி போல துவங்குவதால், இது, அவர்களின் கல்வெட்டு என, அறிய முடிகிறது.

சோழ மண்டலம் :

கல்வெட்டில், ‘முடிகொண்ட சோழ மண்டலத்து ராஜேந்திர சோழ வளநாடு’ என்ற குறிப்பு உள்ளது. அதனால், ராஜேந்திர சோழன் காலத்தில் தான் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய தகடூர் நாட்டிற்கு, ‘முடிகொண்ட சோழ மண்டலம்’ என, பெயர் சூட்டி இருக்கலாம் என, தெரிகிறது. பின் வந்த சோழ அரசர்கள், மண்டலங்களை வளநாடுகளாக பிரித்தனர். அப்படி உருவானதே, ராஜேந்திர சோழ வளநாடு.

சொர்க்க வகை நடுகல் :

சாலிவரம் கிராமத்தில் உள்ள நடுகல், குறுநில மன்னனுக்காக எடுக்கப்பட்டதாக இருக்கலாம். இது, 5 அடி அகலமும், 10 அடி உயரமும் உடையது. அதில் உள்ள ஆண் உருவம், இரு கால்களையும் மடித்து, சம்மணமிட்டு அமர்ந்த நிலையில், கீழ் நோக்கிய வாளை, வலது கையில் பிடித்தபடி உள்ளது. வாளின் கூர்முனை, மடித்த குதிகாலை தொட்டபடி உள்ளது. கழுத்தின் இடது புறத்தில், நிறைய அணிகலன்கள் உள்ளன. ஆண் சிற்பத்திற்கு, வலது பக்கம், இடை முதல் குதிகால் வரை, வரி வரியாக ஆடை அணிந்த பெண் உருவம் செதுக்கப்பட்டு உள்ளது. அது, அரசியாக இருக்கலாம். அச்சிற்பங்களை சுற்றி, நிறைய சிற்பங்கள் உள்ளன. கீழ் பகுதியில், ஏழு வாத்திய கலைஞர்கள் நிற்கின்றனர். அவர்களின் அருகில், குதிரையுடன் ஒரு போர்வீரன் நிற்கிறான். இடது, மேல் பக்கங்களில், நிறைய சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த வகை சிற்பங்கள், சொர்க்க அமைப்பை குறிப்பவை. நடுகல்லில் இருக்கும் வீரன், இறந்தவுடன் நேரடியாக சொர்க்கம் சென்றதாகவும், அங்கே தேவலோக பெண்கள் வரவேற்பது போன்ற சிற்பம் உள்ளது.

அரசனா; அதிகாரியா?

அடுத்த நடுகல்லில், மார்புக்கு மேல் பகுதி முழுவதும், பாறை கல்லால் மூடப்பட்டு உள்ளது; கீழ் பகுதி வெளியில் தெரிகிறது. இந்த நடுகல்லில், வீரன் அமர்ந்த நிலையில் இருந்தாலும், வலது கையில், வாளுக்கு பதில், வேறு கருவி காணப்படுகிறது. அது, எதிரில் உள்ள மற்றொரு சிற்பத்தை நோக்கி உள்ளது. எதிர் சிற்பம், வலது கையை மடக்கி தடுப்பது போல் உள்ளது. வீரனின், கழுத்தணிகள் வயிற்று பகுதி வரை நீண்டுள்ளன. மேலும், உடம்பு முழுவதும் ஆரம், கண்டிகை, காற்சிலம்பு, குண்டலம் ஆகிய ஆபரணங்களும், இடுப்பில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட ஆடையும் உள்ளன. உடை, நகைகளை வைத்து பார்க்கையில், இது குறுநில மன்னனா அல்லது மண்டல அதிகாரியா என்பதை, முழுமையாக ஆராய்ந்தால் அறியலாம். தற்போது, கண்டுபிடிக்கப்பட்டுள்ள நடுகல் மற்றும் கல்வெட்டுகள், 1,000 ஆண்டு வரலாற்று சான்றுகளாக இருக்கலாம். அவற்றை பாதுகாக்கவும், ஆராய தொல்லியல் துறை கவனம் செலுத்த வேண்டும்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: