காரையூர் கோயிலில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த சடையவர்மன் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

காரையூர் கோயிலில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த சடையவர்மன் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

காரையூர் கோயிலில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த சடையவர்மன் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் காரையூர் கிராமத்தில் உள்ள அழகிய மணவாளப்பெருமாள் கோயில் கருவறை சுற்றுப்பிரகாரம் முழுவதும் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்துக் கல்வெட்டுக்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியர் வேலாயுதராஜா மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் வியாழக்கிழமை மேற்கொண்ட களஆய்வில் இதனைக்கண்டு படியெடுத்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சிங்கம்புணரி செல்லும் சாலையில் 5 கி.மீ., தொலைவில் உள்ளது காரையூர் கிராமம். இங்குள்ள அழகிய மணவாளப்பெருமாள் கோயிலின் கருவறையின் மூன்று பக்கங்களிலும் மற்றும் மகா மண்டபத்தின் தெற்குப் பகுதியில் உள்ள முப்பட்டை குமுதப் பகுதியில் கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

கருவறையின் மேற்குப் பகுதியில் முப்பட்டை குமுதத்தில் காணப்படும் கல்வெட்டு ஒரு அடி உயரத்திலும், 18 அடி நீளத்திலும் மூன்று வரிகளை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. மகா மண்டபத்தின் தெற்குப் பகுதியின் முப்பட்டை குமுதக் கல்வெட்டு 45 அடி நீளத்தில் மூன்று வரிகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது.

இவை அனைத்தும் கி.பி. 1251 முதல் 1268 வரை பாண்டிய நாட்டை ஆண்ட சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்பவனால் வெட்டப்பட்ட கல்வெட்டுகளாகும். இரண்டாம் பாண்டிய வம்சத்து மன்னர்களிலேயே தலை சிறந்தவன் எனக் கருதப்படுபவன் இம்மன்னன். இவனது ஆட்சிக் காலத்தில்தான் சிதம்பரம் மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய கோயில்களுக்கு பொன்னால் ஆன கூரை வேய்ந்து கொடுக்கப்பட்டது. அதனால் இவன் பொன் வேய்ந்த பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறான்.

இவனது மூன்றாம் ஆட்சி ஆண்டைக் குறிக்கும் காரையூர் கோயில் கல்வெட்டுக்கள், இம்மன்னனின் அரசு அதிகாரி சந்திராதித்தவர் என்பவரின் சொல் படி பனைவயல் என்னும் கிராமத்தில் எட்டு முக்காணி புரவு நிலம் இங்குள்ள அழகிய மணவாளப்பெருமாள் கோயிலின் திருவாராதனத்துக்கும் திருப்பணிக்கும் இறையிலியாக கொடுத்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. மேலும் சோழபாண்டிய வளநாட்டு திருவிடையாட்டம் காரையூர் எனக் கல்வெட்டு கூறுகிறது. பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தர பாண்டியன் சோழ நாட்டை கைப்பற்றி வெற்றிகொண்டதால் இப்பகுதி சோழ பாண்டிய வள நாடு என அழைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக மன்னர்களால் சிவன் கோயிலுக்கு அளிக்கப்படும் நிலக்கொடைகள் தேவதானம் என்றும், பெருமாள் கோயிலுக்கு அளிக்கப்படும் நிலக்கொடைகள் திருவிடையாட்டம் எனவும் அழைக்கப்படும். மகா மண்டபத்தில் காணப்படும் கல்வெட்டிலும் இம்மன்னனின் பட்டப் பெயர்களான அவனி வேந்த மாறன், கோச்சடை வன்மரான திரிபுவனச் சக்கரவர்த்தி என்ற பெயர்களும் காணப்படுகிறது. அவனி முழுவதற்கும் இவன் அதிபதியாக இருந்ததால் இவன் அவனிவேந்த மாறன் என்று அழைக்கப்படுகிறான்.

மேலும் சுந்தர பாண்டிய மன்னனின் திரு நாமத்தால் சந்திராதித்தர் சொல்வதாக அழகிய மணவாளப்பெருமாள் கோயில் திருப்பணிக்காக அவனிவேந்த ராமன் சந்திக்கு (வழிபாட்டிற்கு) இருபத்தைந்து அச்சு (பழங்காசு) கொடுத்ததாகவும் இக்கல்வெட்டு கூறுகிறது. மணக்குடி, உகளூர், பனைவயல் மற்றும் முருகனேரி ஆகிய கிராமங்களிலும் இக்கோயிலுக்கான திருவிடையாட்டம் எனப்படும் இறையிலி நிலங்கள் இருந்ததாக இக்கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. ஆய்வாளர்கள் மேலும் இங்கு மேற்கொண்ட களஆய்வில் பாதி கட்டப்பட்டு கைவிடப்பட்ட ஒரு கோயில் தளமும் அதன் அருகே விநாயகர் மற்றும் நந்தி சிற்பங்களும் காணப்படுகின்றன.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: