திருப்பத்தூர் அருகே ஒரே கல்லில் 8 நிகழ்வுகளைக் குறிக்கும் 30 சிற்பங்களுடைய, 1,300 ஆண்டுகள் பழமையான நடுகல் கோட்டம்!

திருப்பத்தூர் அருகே ஏரிக்கோடியூர் கிராமத்தில் கண்டறியப்பட்ட 1,300 ஆண்டுகள் பழமையான நடுகல்!

திருப்பத்தூர் அருகே ஏரிக்கோடியூர் கிராமத்தில் கண்டறியப்பட்ட 1,300 ஆண்டுகள் பழமையான நடுகல்!

திருப்பத்தூர் அருகே 1,300 ஆண்டுகள் பழமையான நடுகல் கோட்டம் கண்டறியப்பட்டுள்ளது. ஒரே கல்லில் 8 நிகழ்வுகளைக் குறிக்கும் 30 சிற்பங்கள் இடம் பெற்றிருக்கும் இந்த நடுகல், வரலாற்று சிறப்புமிக்கதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

திருப்பத்தூர் அடுத்துள்ள சந்திரபுரம் கிராமத்தில் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் பிரபு, சிவசந்திரகுமார் மற்றும் தொல்லியல் ஆர்வலர் முத்தமிழ் ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு கள ஆய்வில் ஈடுபட்டனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


அப்போது, சந்திரபுரம் ஏரியின் தென்பகுதியில் உள்ள ஏரிக்கோடி என்ற குக்கிராமத்தில் ஜெயக்குமார் என்பவரது விவசாய நிலத்தில் மிகப்பெரிய நடுகல் கோட்டம் கண்டறியப்பட்டது. தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள நடுகல் கோட்டத்திலேயே இது மிகவும் பெரியதாகக் கருதப்படுகிறது. 10 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட இந்த நடுகல் பல சிறப்புகள் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த நடுகல் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘‘இந்த நடுகல்லில் மொத்தம் 8 நிகழ்வுகளைக் குறிக்கும் விதமாக 25 மனித உருவங்கள், 5 குதிரைகளின் உருவங்கள் இடம் பெற்றுள்ளன. நடுகல்லின் மையத்தில் தலைவனின் உருவம் பெரிதாக உள்ளது.

தலையில் கொண்டை, இடையில் கச்சையுடன் வாளின் உறையும் கழுத்தில் சங்கிலி, காலில் வீரக்கழல், கைகளில் மணிக்கட்டிலும் அதற்கு சற்று மேலும் பூண் அணிந்துள்ளார். நீண்ட காதுகளில் காதணியும் அணிந்துள்ளார். அவர் போர்க் களத்தில் எவ்வாறு இறந்தார் என்பதை இந்த நடுகல்லில் விவரமாக குறிப்பிட்டுள்ளனர். அவரது தலை, மார்பு மற்றும் வலது காலில் அம்பு குத்திய காட்சிகள் உள்ளன. சிற்பக் கலை நுட்பத்துடன் உள்ள நடுகல்லில் உள்ள தலைவன் வலது கையில் பெரிய போர்வாளை ஏந்தியுள்ளார்.

நடுகல்லின் வலதுபுறம் மேல் பகுதியில் நான்கு குதிரைகள் வரிசையாக உள்ளன. அதற்குக் கீழே காவடியும் சாமரமும் வீசக்கூடிய இரண்டு பெண்கள், அதற்குக் கீழே பல்லக்கு தூக்கியவாறு இரண்டு ஆண்கள், அதற்கும் கீழே குடைகள் ஏந்தியவாறு மூன்று பெண்களும், அருகில் வீரனது குதிரையும் உள்ளது.

கல்லின் இடதுபுறத்தில் அமர்ந்த நிலையில் ஆணும், பக்கவாட்டில் இரண்டு பெண்களும் சாமரம் வீசும் நிலையிலும் அதற்குக் கீழே கைகளில் வில்லுடன் எதிரெதிராகப் போரிடும் வீரர்களின் உருவங்களும் உள்ளன. நான்கு பெண்கள் காற்றுக் கருவிகளை இசைப்பதும், அதற்குக் கீழே மேலும் நான்கு பெண்கள் தோல் கருவிகளை வாசிக்கும் சிற்பங்களும் உள்ளன.

நடுக்கல்லின் பக்கவாட்டில் கற்பலகைகளை நட்டுள்ளனர். இதில் இடப் பக்க கல் உடைந்து கீழே விழுந்துள்ளது. அதில் சிதைந்த நிலையில் எழுத்துருக்கள் காணப்படுகின்றன. இந்த எழுத்துகள் கி.பி 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கின்றன. இந்த நடுகல்லுக்கு நேர் எதிரே மற்றொரு நடுகல் கண்டறியப்பட்டது. அதில், கையில் வாளுடன் வீரன் ஒருவர் நிற்கிறார். அவரது வயிற்றுப் பகுதியில் அம்பு பாய்ந்துள்ளது.

இது தலைவனுடன் உயிரிழந்த தளபதியாக இருக்கலாம். இந்த நடுகல்லை கோடியூரப்பன், முனீஸ்வரன் என்று அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். நடுகல்லில் உள்ள கல்வெட்டை நுணுக்கமாக ஆராய்ந்தால், மேலும் பல தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது’’ இவ்வாறு பிரபு, சிவசந்திரகுமார், முத்தமிழ் ஆகியோர் கூறினர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: